— அழகு குணசீலன் —
அது என்ன புதுக்கதை….!
21ம் நூற்றாண்டின் சோஷலிசம் என்று நீங்கள் புறுபுறுப்பது கேட்கிறது.
கார்ள் மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் அல்ல இன்றைய முதலாளித்துவம்.
அது தன்னை வளைத்தும், நெளித்தும், சுருக்கியும், விரித்தும், உள்ளடக்கத்தை உருமாற்றம் செய்தும் மார்க்ஸ் கூறிய “முதலாளித்துவ முடிவில்” இருந்து தன்னை தப்பித்துக் கொண்டுள்ளது.
எனவே அதனை பழைய அணுகுமுறையினூடாக மட்டும் எதிர்கொள்ள முடியாது. அதற்கு பொருத்தமான மாற்று சமூக, பொருளாதார, அரசியல் தந்திரோபாயங்களை கொண்ட சோஷலிச அணுகுமுறை தேவை. அதனையே நவீன அரசியல் ஆய்வாளர்கள் 21ம் நூற்றாண்டின் சோஷலிசம் என்று அழைக்கின்றனர்.
“அமெரிக்க ஏகாதிபத்தியமும், பல்தேசிய கம்பனிகளும் மனித குலத்திற்கு பெரும் சவால் விடுகின்ற இக்காலத்தில் சோஷலிசத்தின் கடமையும், பொறுப்பும், செயற்றிறனும் புதிய வடிவில் பங்காற்ற வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது” என்ற 21ம் நூற்றாண்டின் சோஷலிசத்தின் தேவை குறித்த அறிஞர்களின் கருத்துக்கு வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோவின் கடத்தல் வலுச்சேர்திருக்கிறது.
21 ம் நூற்றாண்டின் சோஷலிசம் பற்றி பேசுவதால், 20ம் நூற்றாண்டின் சோஷலிச தத்துவங்கள் தோற்றுவிட்டனவா? அல்லது செயலிழந்த விட்டனவா? என்று யாரும் தயவு செய்து சண்டைக்கு வரவேண்டாம்.
முதலாளித்துவம் சமூக நலன் சார்ந்த பல சோஷலிசக் கருத்துக்களை திருடி, அவற்றை முதலாளித்துவ கருத்தியலாக சோடித்து கொண்டு, காலனித்துவ, கைத்தொழில் புரட்சி காலத்தையும் விடவும் வீறு கொண்டு எழுகிறது.
சர்வதேச, தேசிய, பிராந்திய பூகோள, சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளுக்காக வறிய -அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பலவும் இதற்கு பின்னால் ஓடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது .
டிஜிட்டல் உலகம், உலகமயமாக்கல், தாராள வர்தகம் என்ற மயக்கத்தில் இந்த நாடுகள் உள்ளன.
இந்த நிலையில் 21 ம் நூற்றாண்டின் சமகால தேவைகளுக்காக மார்க்சிய அடிப்படைகளை மேலும் வலுவாக்க சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை ஆகின்றன.
நாம் இன்று பேசுகின்ற பின்நவீனத்துவ அணுகுமுறை கூட இந்த மாற்றத்தின் ஒரு விரிவு- விளைவு.
இன்னொரு வகையில் சொல்வதானால் 21ம் நூற்றாண்டின் சோஷலிசம் என்பது நவீன உலகில் முதலாளித்துவம் ஏற்படுத்துகின்ற சவால்களுக்கு எதிரான செயற்றிட்டம்.
முதலாளித்துவம் தனது இலாப இலக்கை அடைய தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டும் வழிமுறைகளை மாற்றியுள்ளது.
இதை தொழிலாளர்களின் கூலிமட்டம், முதலாளிகளின் மிகை இலாபம் என்பனவற்றிற்கு அப்பால் நோக்க வேண்டிய தேவை உள்ளது.
முதலாளித்துவத்தின் நெருக்கடியாக காலநிலை மாற்றம், சுற்றாடல் பாதுகாப்பு, சமூக ஏற்றத்தாழ்வு, உலகமயமயமாக்கம்….. போன்றவை விரிவடைந்துள்ளன. இதனால் இவற்றை 20ம் நூற்றாண்டு சோஷலிசம் முற்றாக பேசவில்லை என்பதல்ல. இன்றைய பூகோள சமூக, பொருளாதார, அரசியலில் இவற்றை மேலும் செதுக்க வேண்டிய தேவையுள்ளது.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என்பனவற்றிற்கு எதிராக இந்த புதிய பாதையில் முதல் பயணத்தை 21ம் நூற்றாண்டில் தென்னமெரிக்கா ஆரம்பித்தது. அதற்கு வெனிசுவேலா அதிபர் HUGO CHAVEZ தலைமைத்துவம் வழங்கினார். NICOLAS MADURO அதை தொடர்ந்தார். இரு முரண்பட்ட சக்திகளான முதலாளித்துவமும், 21ம்நூற்றாண்டின் சோஷலிசமும் சந்தித்த இந்த மோதல் புள்ளியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் மதுரோ கடத்தப்பட்டார். இந்த காட்சியைத்தான் உலகம் இன்று தரிசிக்கின்றது.
சுயாதிக்கமும், இறைமையும் கொண்ட வெனிசுவேலாவின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை அனைத்து சர்வதேச சட்டங்களையும், நியாதிக்கங்களையும் மீறி – துஷ்பிரயோகம் செய்து மதுரோவை அமெரிக்கா கடத்தியுள்ளது.
போதைப்பொருள் ஏற்றுமதியாளர், சர்வாதிகாரி, மனித உரிமைகளை மீறியவர், தேர்தலில் குளறுபடி செய்தவர் ….. என்று சர்வதேச குற்றவாளியாக உலகிற்கு காட்டி ஒரு இறைமையுள்ள நாட்டின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பை- அத்துமீறல் இராணுவ நடவடிக்கைகையை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.
இந்த இடத்தில் அமெரிக்க குடியரசுக்கட்சியினரும், ஜனாதிபதி ட்ரம்ப்பும் அவர்களின் கடந்த இரண்டு ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் செய்ததை விடவும் மதுரோ ஒப்பீட்டளவில் எதையும் அதிகமாகச் செய்யவில்லை.
அப்படி செய்திருந்தாலும் அதற்கு ஜனநாயக ரீதியாக தண்டனை வழங்கவேண்டியவர்கள் வெனிசுவேலா மக்களே.
அத்துடன் அமெரிக்க மக்களின் ஜனநாயக ரீதியான தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து கப்பிட்டலை எரித்தவர்களுக்கு வெனிசுவேலாவின் ஜனநாயகம் பற்றி பேச இருக்கின்ற யோக்கியதை என்ன?.
போதைப்பொருள் நெருக்கடி, பொருளாதாரப்பிரச்சினைகள், அமெரிக்க கல்வி, சுகாதாரத்துறைகளில் ஏற்படும் வீழ்ச்சி, இராணுவத்தை தவிர வேறு இடங்களில் வேலைவாய்ப்பு இன்மை, நியூயோர்க் வீதிகளில் பிச்சை எடுத்தல், பாலியல் தொழில், வீதியோரங்களில். வசிக்கும் குடியேற்றவாசிகள் …..என்பன எல்லாம் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தோல்விகள். சமூக, பொருளாதார, அரசியலை மதிப்பிடும் குறிகாட்டிகள்.
இவற்றுக்கு எல்லாம் தென்னமெரிக்க இடதுசாரி தலைமைகளை குற்றம் சாட்டி தப்பிக்கொள்ள முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனம்தான் மதுரோவின் கடத்தல்.
வெனிசுவேலா ஜனாதிபதிகளான குகோ சவேர்ஸ், மதுரோ ஆகியோர், கியூபாத்தலைவர் பிடல் காஸ்ட்ரோவிற்கு பிறகு அமெரிக்கத் தலைவர்களுக்கு சிம்ம சொற்பனமாக இருந்தார்கள். பொலிவியா, மெக்சிக்கோ, பிறேசிலிலும் அமெரிக்காவுக்கு எதிரான இந்த நிலைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
இந்த நிலையில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சாவேர்ஸ்க்கு பின்னர் ஒரு தலைமைத்துவத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், மேற்குலகிற்கும் எதிரான கூட்டுக்களை அமைப்பிலும், பூகோள அரசியலில் இராஜதந்திர அணுகுமுறைகளை வகுப்பதிலும் மதுரோவின் பங்களிப்பு அபாரமானது. இதனை ஜனநாயக அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத அமெரிக்கத்தலைமை மதுரோவை கடத்தியுள்ளது.
அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் சட்டங்கள், வரைவிலக்கணங்களுக்கு அப்பால் மதுரோ மீதான அமெரிக்க நடவடிக்கை ஒரு கடத்தல். ஊடகங்கள் பலவும் மதுரோவின் கடத்தலை கைது (ARREST), கைப்பற்றல் (CAPTURE), நாடுகடத்தல் (DEPORTATION) .—என வாய்க்கு வந்த மாதிரி சொல்லியும், எழுதியும் தமது ஏகாதிபத்திய -மேற்குலக விசுவாசத்தை வெளிப்படுத்திவருகின்றன.
சர்வதேச வரைவிலக்கணங்கள் எதுவாக இருப்பினும் இறைமையுள்ள நாடொன்றுக்குள், அத்துமீறி நுழைந்து அமெரிக்க இராணுவம் மதுரோவை கடத்தியது (KIDNAPP) ஒரு சர்வதேச குற்றச்செயல் என்பதே மூன்றாவது கண்ணின் நிலைப்பாடு.
வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோ ஏன் கடத்தப்பட்டார்? ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று 21ம் நூற்றாண்டின் சோஷலிச வளர்சியை எதிர்கொள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை.
அமெரிக்காவோடு கைகோர்த்துள்ள மேற்கு, மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சமூக ஜனநாயகக்கட்சிடமும், பசுமைக்கட்சியிடமும் மக்கள் அரசியல் அதிகாரத்தை வழங்கிவருகின்றனர்.
இது கூட 21 ம் நூற்றாண்டின் சோஷலிச வளர்ச்சி வேகத்தை குறைப்பதற்கான ஒரு முதலாளித்துவ சார்பு மாற்று மாதிரிதான். எனினும் 21ம் நூற்றாண்டின் சோஷலிசம் இந்த மிதவாதத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். அடுத்த கட்டத்தில் இது தீவிர இடதுசாரி போக்காக மாறமுடியும் சில ஐரோப்பிய நாடுளில் சமூக ஜனநாயக கட்சிகளுக்குள்ளே இந்த முரண்பாடு ஆரம்பித்தும் விட்டது.
சோஷலிச கருத்தியல்களை திருடி இந்த கட்சிகள் தங்களை இடதுசாரிகளாக காட்டி அரசியல் செய்கின்றன. அமெரிக்க ஜனநாயகக்கட்சியையே கம்யூனிஸ்ட்டுக்கள் என்று கூறும் டோனால்ட் ரம்ப்புக்கு ஐரோப்பிய சமூக ஜனநாயக, பசுமை அரசியல் வளர்ச்சி நிச்சயம் ஒரு அலர்ஜி தான். ஆனால் முதல் எதிரி அல்ல.
தனது 24 வயதில் கியூபாவின் அரசியல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பின்னர் , கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் பொலிட்பீரோவின் உறுப்பினராக செயற்பட்டவர் மதுரோ. வெனிசுவேலா திரும்பிய பின்னர் அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அப்போது இருந்து அமெரிக்க கழுகுப்பார்வை சாவேர்ஸையும், மதுரோவையும் குறிவைக்கத்தொடங்கியது. மதுரோ என்னசெய்தார்…? ஏன் கடத்தப்பட்டார்….?
1. வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக இருந்த பாடுகளுடன் வெனிசுவேலா வெளியுறவுக்கொள்கையை விரிவுபடுத்தினார்.
2.சீன- தைவான் விவகாரத்தில் சீனச்சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.
3. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக இருந்த லிபியத்தலைவர் கடாபியை ஆதரித்தார்.
4. 2008-2009 காசா போரின்போது இஸ்ரேல் உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டார்.
5. பாலஸ்தீன அரசுடன் இராஜதந்திர உறவுகளை பேணினார்.
6. சிரியாவில் அசாத் நிர்வாகத்திற்கு ஆதரவளித்தார்.
இந்த அமெரிக்க எதிர்ப்பு வரலாற்றுப் பின்னணியில் சார்வேர்ஸ்க்கு பின்னர் வெனிசுவேலா தலைவரான மதுரோ 21 ம்நூற்றாண்டின் சோஷலிசம் நோக்கிய பயணத்தில் செயற்பட்டார். செப்டம்பர் 2008 இல் ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய சாவேர்ஸ் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து நீ ஒரு “பிசாசு” என அழைத்தார். இந்த இடத்தில்தான் அமெரிக்க தலைமைகளை வெனிசுவேலா வைத்திருந்தது. இதற்கு மதுரோவும் விலக்கல்ல.
.
7. மதுரோ ரஷ்ய -உக்ரைன் விரிசலில் இராஜதந்திர ரீதியான சமாதான தீர்வை வலியுறுத்தினார்.
8. BRICS அமைப்பின் ஊடாக சீன முதலீடுகளை பெற்று வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு தேடினார். அமெரிக்க டொலருக்கு எதிராக ஒரு BRICS நாணயத்தின் ஊடான கொடுக்கல் வாங்கலை இலக்காக கொண்டு செயற்பட்டார்.
9. சமகால இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் மேற்கொண்ட போரை இனவழிப்பு என்று உரத்துப்பேசியதுடன், இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல்களையும் கண்டித்தார். இதற்கு பின்னால் டொனால்ட் ரம்ப்பின் அரசியலை, இஸ்ரேலுக்கான ஒரு தலைப்பட்ச சார்புத்தன்மையை கண்டித்தார்..
இது விடயமாக மதுரோ நினைவூட்டிய இந்த கூற்று முக்கியமானது.
” JESUS CHRIST WAS A YOUNG PALESTINIAN UNJUSTLY CRUCIFIED BY SPANISCH EMPIRE …..” .
10. உலகில் அதிக எண்ணெய்வள இருப்பைக்கொண்ட வெனிசுவேலாவை அமெரிக்காவுக்கும், அமெரிக்க கம்பனிகளுக்கும் விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை.
இந்த பட்டியல் மதுரோவின் அரசியல் பாதையை எமக்கு காட்டும். அமெரிக்காவினதும், அதன் கூட்டாளிகளினதும் பொருளாதாரத் தடைகளால் வெனிசுவேலா மக்கள் பெரிதும் பாதிப்புக்களை சந்தித்தனர்.
21 ம்நூற்றாண்டின் சோஷலிசம் பேசுகின்ற முதலாளித்துவத்திற்கு எதிரான மாற்றுத்திட்டத் தேடலில் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஊடாக இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் , பங்கிடுதல் என்பது முக்கியமானது. இதனூடாக ஜனநாயகத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்க முயற்சிக்கப்படுகிறது.
ஆனால்…..
.
19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் காலனித்துவத்தின் ஊடாகவும், முதலாளித்துவத்தின் ஊடாகவும் ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்கக நாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுடன், காலனித்துவமும், அதைத்தொடர்ந்து முதலாளித்துவம், உலகமயமாக்கம், தாராளவர்த்தகம் என்பன வறிய நாடுகளில் ஏற்படுத்தியுள்ள நுகர்வு பழக்க கலாச்சார சமூகக்கட்டமைப்பில் இருந்து மக்களை விடுவிப்பது வெனிசுவேலாவுக்கு மட்டும் அல்ல உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
இந்த சமூக, பொருளாதார, அரசியல் பலவீனத்தை மேற்குலகம் சார்பான நாடுகளை அணைத்தும் மறுத்தால் அடித்தும் தனது ஏகாதிபத்திய இலக்கை நிறைவேற்றிக்கொள்கிறது அமெரிக்கா. இதற்கு இன்றைய பலியெடுப்பு வெனிசுவேலா. இதன் அர்த்தம் ஏகாதிபத்திய அரவணைப்புக்குள் உள்ள நாடுகள் தப்பிவிட்டன என்பதல்ல. அவையும் சிக்கியே உள்ளன.
தென்னமெரிக்க – கரீபிக் பிராந்தியத்தில் சி.ஐ.ஏ. யின் அத்துமீறல் களுக்கு நீண்ட பட்டியல் உண்டு.
1954 இல் குவாட்டமாலா.
1964 இல் பிரேசில்.
1973 இல் சிலி.
1989 இல் பனாமா.
2026 இல் வெனிசுவேலா… !
இனி……?
