கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி 111 (சொல்-49    சொல்லித்தான் ஆகவேண்டும்)                            

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி 111 (சொல்-49    சொல்லித்தான் ஆகவேண்டும்)                            

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)

 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

(பக்கம்-07):

========

 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வடமாகாணத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினதும் தமிழரசுக் கட்சியினதும் பெரும் தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவினர்.

 யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி ஜி பொன்னம்பலம் தோல்வியுற்று தமிழரசுக் கட்சி வேட்பாளர் சி எக்ஸ் மார்டின் வெற்றி பெற்றார். 

 உடுப்பிட்டித் தொகுதியில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் மு சிவசிதம்பரம் தோல்வியுற்று தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஜெயகொடி வெற்றியீட்டினார்.

 வவுனியாத் தொகுதியில் தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளர் தா. சிவசிதம்பரத்தைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எக்ஸ். எம். செல்லத்தம்பு தோற்கடித்தார்.

 வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் தியாகராஜா தமிழரசுக் கட்சி வேட்பாளர் ‘தளபதி’ அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்தார்.

 நல்லூர்த் தொகுதியில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ‘இரும்பு மனிதன்’ டாக்டர் ஈ எம் வி நாகநாதன் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் அருளம்பலத்திடம் தோல்வியைத் தழுவினார்.

 கிளிநொச்சித் தொகுதியில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் வீ ஆனந்தசங்கரியிடம் தமிழரசுக் கட்சியின் ‘பிரச்சார பீரங்கி’ ஆலாலசுந்தரம் தோல்வியுற்றார்.

 இந்தப் பின்னணியில், 1972 ஆம் ஆண்டு பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிய நிலையில் தமிழர்களின் அரசியல் ஐக்கியம் எனும் பெயரில் தமிழ்க் காங்கிரஸும் தமிழரசுக் கட்சியும் இணைந்து 1972ல் ‘தமிழர் கூட்டணி’யாகிப் பின் 1976 இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றது.

 மேலோட்டமாகப் பார்க்கும்போது இது தமிழர்களின் அரசியல் ஐக்கியமாகத் தோற்றமளித்தாலும்கூட உண்மையிலேயே இது 1970 இல் தோல்வியடைந்த இரு கட்சிகளினதும் உயர்மட்ட தலைவர்கள் அடுத்து வரும் தேர்தலில் தங்கள் வெற்றிகளை உறுதி செய்து கொள்ளும் தேர்தல் ஒப்பந்தமே என்பது தமிழர் அரசியலை நுணுகி நோக்குவோருக்குப் புரியும்.

 1976 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் நடைபெற்றது. இதன் அடிப்படையிலேயே 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் நடைபெற்றது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சித் தலைவர்களான எஸ் ஜே வி செல்வநாயகமும் டாக்டர் நாகநாதனும் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி ஜி பொன்னம்பலமும் மரணமாகியிருந்தனர்.

 1977 இல் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. 

 1970 தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வியுற்றிருந்த அமிர்தலிங்கம் தந்தை செல்வாவின் தேர்தல் தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியைச் சுவீகரித்துக்கொண்டார்.

 1970 தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் தோல்வியுற்றிருந்த மு சிவசிதம்பரம் டாக்டர் நாகநாதனின் தொகுதியான நல்லூரைத் தேர்ந்தெடுத்தார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் வேட்பாளர் நியமனம் தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழ் காங்கிரசையும் தமிழரசுக் கட்சியையும் சேர்த்துவைக்கும் (தேர்தல்) ஒட்டு வேலைகள் நடைபெற்றன.

 வவுனியாவைப் பொறுத்தவரை அடுத்த தேர்தலான 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் அத்தொகுதியின் வேட்பாளர் நியமனத்தை 1970 இல் வென்று ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ள தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செல்லத்தம்புவுக்கு வழங்குவதா? அல்லது 1970 இல் தோல்வியுற்றிருந்தாலும்கூட இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துள்ள தமிழ் காங்கிரசைச் சேர்ந்த தா சிவசிதம்பரத்திற்கு வழங்குவதா? என்ற பிரச்சினை தமிழர் விடுதலை கூட்டணிக்குள் எழுந்தது.

 பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வன்னிப்பகுதியில் ‘முல்லைத்தீவு’ எனும் புதிய தேர்தல் தொகுதி ஒன்றை (அப்போது வன்னியில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இரு தேர்தல் தொகுதிகளே நடைமுறையிலிருந்தன) உருவாக்கும் கோரிக்கையை 1976 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயக் குழுவின்முன் தமிழரசு கட்சி முன்வைத்தது. அதன் அடிப்படை நோக்கம் என்னவெனில் வவுனியாத் தொகுதியைத் தா சிவசிதம்பரத்திற்கும் (புதிய) முல்லைத்தீவு தொகுதியைச் செல்லத்தம்புவுக்கும் கொடுத்துவிட்டால் கட்சிக்குள் எழக்கூடிய பிரச்சினையைச் சிக்கலின்றித் தீர்த்துவிடலாமென்பதே. இக்கோரிக்கையில் மக்கள் நலன் எதுவும் நோக்கமாகவிருக்கவில்லை. கட்சி நலனும் தனிநபர்களான செல்லத்தம்புவையும் தா. சிவசிதம்பரத்தையும் ‘தாஜா’ பண்ணுவதும்தான் முன்னுரிமை நோக்கமாகவிருந்தது.

 வடமாகாணத்தில் ‘முல்லைத்தீவு’ எனும் பெயரில் புதிய தேர்தல் தொகுதி “ஒன்றினை உருவாக்குவதற்காகக் கிழக்கிலே திருகோணமலை மாவட்டத்திலே முன்பு தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாறு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக விளங்கிய ‘மூதூர்’த் தொகுதியை ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றிப் புதிய ‘சேருவில’ தொகுதி சிங்களப் பெரும்பான்மைத் தொகுதியாக உருவாவதற்கு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயக் குழு முன்னிலையில் தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கி விட்டுக்கொடுத்தது. தனது கட்சி நலன்களுக்காகக் கிழக்கைப் பலிகொடுக்கத் தமிழரசுக்கட்சி தயங்கப் போவதில்லை என்பதே இந்நிகழ்வின் எடுத்துக்காட்டாகிறது.

 தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் 1970ஆம் ஆண்டுப் பொதுத் தோதலில் முன்னைய மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவருமான காலஞ்சென்ற அ. தங்கத்துரை அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள்ளே இருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் பற்றுக்கொண்டு யாழ் மேலாதிக்க சிந்தனைக்கு எதிராக கட்சிக்குளளேயே அமைதியாகவும் ஆரவாரமில்லாமலும் உறுதியாக உட்கட்சிப் போராட்டங்களை நடத்தியவர். அதனால் தமிழரசுக் கட்சித் தலைமைப் பீடம் அவரை ஓரம்கட்டும் வகையில் அவர் மீது ஒரு கண் வைத்திருந்தது. அதை அவரும் உணர்ந்துதான் இருந்தார். எனினும் கட்சி விசுவாசம் காரணமாக அமைதி காத்தார். 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டுப் புதிதாக சேருவில என்ற சிங்களப் பெரும்பானமைத் தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முதல் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைத் தொகுதியில் இருந்தும் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இருந்தும் மொத்தம் இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் வாய்ப்பு இருந்தது. அதன் படி 1970 ஆம் ஆண்டு தேரதலில் திருகோணமலைத் தொகுதியில் இருந்து காலஞ்சென்ற பா நேமிநாதன் அவர்களும் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து காலஞ்சென்ற அ தங்கத்துரை அவர்களும், தெரிவாகியிருந்தனர். 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதிகள் எல்லைகள் மீள் நிரணயத்தின்போது திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெற்ற 1977ம் ஆண்டுப் பொதுத் தோதலின்போது திருகோணமலை மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு தமிழ்ப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியான திருகோணமலைத் தொகுதிக்கான தமிழா் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் நியமனம் முறைப்படி ஏற்கெனவே மூதூர்த்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தங்கத்துரை அவர்களுக்கு வழங்கப்படாமல் யாழ் மேலாதிக்க அரசியல் தலைமைக்கு வால் பிடிக்கும் தமிழரசுக் கட்சிக்குப் புதியவரான இரா சம்பந்தன் அவர்களுக்குத் தமிழா் விடுதலைக் கூட்டணியின் யாழ் மேலாதிக்க தோதல் நடவடிக்கைக் குழுவால் வழங்கப்பட்டது.

 உண்மையும் நேர்மையும் வெளிப்படை தன்மையும் செயற்பாட்டுத் திறனுமிக்க கிழக்கின் அரசியல் ஆளுமையான தங்கத்துரையைத் தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) ஓரங்கட்டியதுகூட யாழ் மேலாதிக்க அரசியலின் வெளிப்பாடுதான்.

(தொடரும்…)