மண்டூர் அசோகாவின் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு:    ஒரு பார்வை

மண்டூர் அசோகாவின் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு:  ஒரு பார்வை

 — சின்னத்தம்பி குருபரன் —

உரைநடை இலக்கியத்தின் மறு வடிவமாக அமைந்தவை நாவல், சிறுகதை இலக்கியங்களாகும். இவை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலைத்தேய  ஆங்கில இலக்கியத்தில் இருந்து தமிழுக்கு வந்தவையாகும். இதற்குக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வரைவிலக்கணமொன்று கூறுவது சிரமம். “சிறுகதை” என்ற புனைகதை வடிவத்தை ஆசிரியரின் மனநிலை, சமூகத்தையும் கதை மாந்தர்களையும், அவர்களோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், துன்ப, துயரங்களைப் பார்த்து சமூகப் பிரக்ஞைகள் சமூக, வாழ்வியலஅம்சங்களோடு அதற்கு எற்றவாறு உருவம், உள்ளடக்கம், உத்தி, வடிவம், உயிரோட்டம் கொடுத்துக் கதைகளை ஆக்குகியுள்ளனர் என்பதிலே அதன் போக்குத் தங்கியுள்ளது.

சிறுகதையை ஒருவர் ஒரே மூச்சில் அல்லது குறைந்த நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தேவையற்ற விவரணங்கள் இன்றி, கதை செறிவாக அமைந்திருக்க வேண்டும். 

Screenshot

ஒற்றைக்கரு அல்லது ஒற்றை உணர்வு (Single Theme or Emotion): பெரும்பாலும், சிறுகதை ஒரே ஒரு மையக் கருவை (Theme) அல்லது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியின் அனுபவத்தை (Single Incident) மட்டுமே விவரிக்கும். ஒரு மனிதரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை மட்டும் எடுத்துச் சித்தரிப்பது. இறுதியில் வாசகர் மனதில் ஒரு தனிப்பட்ட வலுவான விளைவை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மொழியில் முதல் முதல் தமிழிலில் பரிச்சார்த்தமாகச் சிறுகதை எழுதியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாராவார். 1905 காலப்பகுதியில் அவர் எழுதிய ஐந்து சிறுகதைகள் ‘சக்கரவர்த்தினி’ இதழில் வெளிவந்தன. அதன்பின்னர் ‘ஞானரதம்’ என்ற அவரின் உரைநடைத் தொகுப்பு நூலிலும் சில சிறுகதைகள் வெளிவந்தன. பின்னர் 1915 இல் வா.வே.சு. ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதைத் தொகுப்புவெளிவந்தது. பாரதியர் சிறுகதைகளை எழுதி இருந்தாலும் அதற்குரிய பண்புகளைக் கொண்டிராமையினால் ‘குளத்தங்கரை அரசமரம்’ முதலாவது சிறுகதை நூலாகக் கொள்ளப்பட்டது. இக்காலப்பகுதியில் மாதவையாவும் சில சிறுகதைகளை எழுதி இருக்கின்றார். ‘மணிக் கொடி’ (1930-1940) காலத்தில் புதுமைப்பித்தன்,  மௌனி, பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதினர். 1940-1960 களில் கல்கி, தி. ஜானகிராமன், லா. ச. ராமாமிர்தம், மு. வரதராசனார், அகிலன் போன்றோர் ஜனரஞ்சகமான சிறுகதைகளை எழுதினர். அக்காலப் பகுதியில் இலங்கையர்கோன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதினார். 

1960 களின் பின்னர் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, அம்பை, பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரும் ஈழத்தில் எஸ்.பொன்னுத்துரை, வ.அ.இராசரெத்தினம். செ.கணேசலிங்கன், கனக.செந்திநாதன், டொமினிக் ஜீவா, டானியல், சகிதேவி தியாகராசா, தெளிவத்தை ஜோசப், தெணியான், தி.ஞானசேகரன், உடுவை தில்லை. நடராசா, மாத்தளை சோமு, செங்கை ஆழியான், அங்கையன் கைலாயநாதன், கருணை யோகன், மண்டூர் அசோகா, ரஞ்சகுமார் போன்றோரையும் குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் விதந்து குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர்களாவர்.

இருபதாம் நுற்றாண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகளில் பெரும்பாலானவை பெண்ணிய விடுதலை, சாதி மறுப்பு, அடிமைத்தனம், சீதனக் கொடுமை, அடக்குமுறை, சமூக சமத்துவம் போன்ற விடயங்களை எடுத்துக் கூறுவனவாக அமைந்திருந்தன.

மண்டூர் அசோகா (திருமதி.அசோகாம்பிகை யோகராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பாலுள்ள பழம்பெரும் பதியான மண்டூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் தற்பொழுது மட்டக்களப்பு கல்லடியில் வசித்து வருகிறார். 1970 முதல் எழுத்துத் துறையில் கால் பதித்த இவர் முதலில் இலங்கை வானொலிக்கு மெல்லிசைப் பாடல்களை எழுதி வந்தார். அக்காலப் பகுதியில் இவரின் மெல்லிசைப் பாடல்களை வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது இலங்கை வானொலியில் கேட்டிருக்கலாம். அக்காலத்தில் அத்தனை பிரபலமானவர் மண்டூர் அசோகா. கவிதை, மெல்லிசைப் பாடல்கள், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்புச் செய்த பல்துறை சார்ந்த பெண் எழுத்தாளராவார். 

தமிழ் இலக்கியத் தளத்தில் 1976 இல் இவரது ‘கொன்றைப் பூக்கள்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அத்தொகுப்புக்கு தேசிய சாகித்திய மண்டல விருது பெற்ற இலங்கையில் முதலாவது பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர் இவர். இலங்கையில் இவரில் இருந்துதான் பெண் எழுத்தாளர்களுக்கான சாகித்திய விருது வழங்கல் ஆரம்பமாகியது. இலங்கை வானொலி மூலம் மெல்லிசைப் பாடல்களால் தமிழ் கூறும் உலகெங்கிலும் அறியப்பட்ட மண்டூர் அசோகா இவ்விருதின் மூலம் மேலும் பிரபலமானார். இவரின் ‘பாதை மாறிய பயணங்கள்’ நாவல் (1992) கிழக்கு மாகாண சாகித்திய விருதினைப் பெற்றது. ‘சிறகொடிந்த பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பு (1993), உறவைத் தேடி… சிறுகதைத் தொகுப்பு (2002), ‘மண்டூர் முருகன் பாமாலை’ (2014), எழுதப்படாத கவிதைகள் சிறுகதைத் தொகுப்பு (2022) ஆகிய ஆறு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவற்றுடன் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றினையும் வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளில் 50 க்கு மேற்பட்டவை தொகுப்பாக வெளிவராதிருக்கின்றன. ஈழத்து இலக்கிய வரலாற்று வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர் வரிசையில் மண்டூர் அசோகாவுக்குத் தனியான இடமுண்டு என்பது மறுப்பதற்கில்லை.

தேசிய சாகித்திய விருது, கிழக்கு மாகாண சாகித்திய விருது என்ற உயர் விருதுகளுடன் இலங்கை இந்தியாவிலும் பல்வுறுபட்ட விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுப் பலராலும் கௌரவிக்கப் பட்டிருக்கின்றார். அத்தோடு பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பட்டப் படிப்புக்காக இவரின் இலக்கியப் பணி தொடர்பாகப் பல ஆய்வுகளைச் செய்துள்ளனர். 

கலாபூசணம் மண்டூர் அசோகா கவிதை, மெல்லிசைப் பாடல்கள், நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளில் தடம் பதித்திருந்தாலும் சிறுகதைகளே அவருக்கு மிகவும் பிரியமானவை. 2022 இல் இறுதியாக வெளிவந்த நான்காவது சிறுகதைத் தொகுப்பாகிய ‘எழுதப்படாத கவிதைகள்’ நூல் மகுடத்தின் 50 வது நூலாக வெளிவந்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தடம் பதித்திருக்கும் மகுடம் பதிப்பாசிரியர் மைக்கல் வி.கொலின் பாராட்டுக்குரியவர். அழகான முன்அட்டைப் படமும் பின்னட்டையில் நூலாசிரியரின் நிழற்படமும் அத்தோடு மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலினின் ஆசிரியர் பற்றிய குறிப்பும் அடங்கி இருக்கின்றன. 95 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்நூல் 10 சிறுகதைகளை உள்ளடக்கியது. மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின் அவர்களின் பதிப்புரை, கலாபூஷணம் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்களின் நீண்டதொரு சிறப்பான அணிந்துரைரையுடனும் உங்களுடன் சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியரின் ஒருபக்க நறுக்குக் செய்தியுடனும் வெளிவந்திருக்கின்றது. 

‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் கதைத் தெரிவுகள், கதைகளின் கரு, பாத்திரப்  படைப்பு, உரையாடல், உருவம், உள்ளடக்கம், உத்தி, கதையின், ஆரம்பம், மத்தி, முடிவு, மொழிநடை, வர்ணனை ஆகியவற்றை அவருக்கேயுரிய பாணியில் சிறப்பாக அமைத்திருக்கின்றார். இவை ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் புலமை, அனுபவம், புனைகதை இலக்கியத் தேர்ச்சி, நேசிப்பு, முதிர்ச்சி ஆறறல், விடாமுயற்சி மொழித் தேர்ச்சி ஆகியன வெளிப்படையாகத் தென்படுகின்றன. 1970 முதல் இன்றுவரை ஆடம்பரமில்லாமல் தமிழ் இலக்கியத் துறையில் பன்முகப் பார்வையுடன் தடம் பதித்து,  இலங்கையிலும் வெளிநாடுகளிலும்பல விருதுகள், பாராட்டுக்கள், கௌரவிப்புக்களைப் பெற்று, தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் புகழ்பூத்த எழுத்தாளர் மண்டூர் அசோகா. இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள இலக்கிய உள்ளங்கள் மண்டூர் அசோகாவைத் தெரியாது இருக்க முடியாது.

கலாபூஷணம் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் அணிந்துரையில் ‘…..பொதுவாகவே அசோகா தன் கதைகளில் பெண்களின் உணர்வுகள் மன அழுத்தங்கள் முதலியன யதார்த்த வாழ்வோடு மோதுகின்ற தன்மைகளை மிக இயல்பாகவே சித்திரித்திருக்கின்றார். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பனவாகவே பெரும்பாலான கதைகள் பின்னப்பட்டிருக்கும். அவரது புனைவுகளில் மெய்யனுபவச் சித்திரிப்புகளினூடாக மனித உறவுச் சிக்கல்களும், மனித உணர்வு நெருக்கடிகளும் முனைப்புற்றிருக்கும். ‘கொன்றைப் பூக்கள்’ முதல் ‘உறவைத் தேடி’ வரையிலான தொகுப்புக்களில் இடம் பெற்றிருந்த அத்தனை கதைகளிலும் இப்பொதுப் பண்பினை இனங் காணலாம். அவ்வாறான பண்பின் ஒரு தொடர்ச்சியினையே இத்தொகுதியிலும் தரிசிக்க முடிகிறது’ எனக் குறிப்பிட்டிருப்பது கதை சொல்லும் பாங்கில் மண்டூர் அசோகா பெற்றிருக்கும் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. 

‘எழுதப்படாத கவிதைகள்’ தொகுப்பில் கோர்த்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து சிறுகதைகளில் ஐந்து சிறுவர்களின் கல்வி, அவர்களின் பாசத்துக்கான ஏக்கம், தவிப்பு, ஆசா பாசங்கள், சிறுவர் கல்வி, உரிமை மீறல்கள் ஆகியன உணர்வு பூர்வமாகப் பேசப்படுகின்றன. மூன்று சிறுகதைகளில் பெண்களின் திருமணத்துக்குப் பின்னரான பிறழ்வான பாலியல் நடத்தை, மனவெழுச்சிகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புகள், உறவுச் சிக்கல்கள் என்பவை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுகதை போர்க்கால இழப்புக்களையும் அவல வாழ்வினையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமாக விபரிக்கின்றது. ‘வேட்டை’ சிறுகதை இரு நண்பர்களின் இணைபிரியாத நட்புறவினையும் ஒருவரின் இழப்பு, மற்றவர் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வதும் வாசகரின் உணர்வுகளை உறைய வைப்பனவாக அமைகின்றது.  

இத்தொகுதியிலுள்ள கதைகளின் தெரிவு என்பது கதை ஆசிரியர் வாழ்ந்த பிரதேசத்தில் ஊடாடிய மாந்தர்களுக்கு நேர்ந்த அவலங்கள், துன்ப, துயரங்கள், வாழ்க்கைப் போராட்டங்களில் அவர் உள்ளத்தை நெகிழ வைத்த உண்மைச் சம்பவங்கள் கதைத் தெரிவுகளாகவும் பொருளாகவும் கருவாகவும் அமைந்திருக்க வேண்டும். அதனால்தான் கதைகள் ஒவ்வொன்றும் உணர்வுபூர்வமாகவும் உயிரோட்டமாகவும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கதைகளின் தலைப்புகளிலும் அவரின் அனுபவம், ஆற்றல், முதிர்ச்சி வெளிப்பட்டிருப்பதைக் கதைகளை நுகரும்போது வாசகருக்குத் தெரியவரும்.

தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளினதும் பாத்திர வார்ப்பு அளவோடு, கச்சிதமாகக் கதைப் போக்கிற்கும் உள்ளடக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கின்றன. கதையின் நாயகன், நாயகிகளாகவும் பிரதான துணைப் பாத்திரங்களாகவும் புனையப்பட்டவர்கள் வாசகரின் உள்ளத்து உணர்வுகளைத் தொட்டு மனதை விட்டு அகலாதவர்களாக ஊடாடிக் கொண்டிருப்பது திண்ணம். 

மணிவண்ணன், செல்லம்மா, மாலா (ஆசிரியை), சத்தியா (மாணவி), செந்தூரன் (மாணவன்) பவானி (ஆசிரியை), சந்திரன், குமரன், பொன்னம்பலத்தார் அவரின் மனைவி, கண்மணி, ராகவி, மனோன்மணி ஆகியவை  மனதை விட்டகலாத அழுத்தமான பாத்திரங்கள். அத்தோடு கதை சொல்லிகளாக வரும் சில பாத்திரங்களும், துணைப் பாத்திரங்கள் ஒரு சிலவும் கதைகளுக்கு உயிர்ப்பினை கொடுத்து நிற்கின்றன. கதைகளின் பாத்திர வார்ப்புகள் மிக அளவோடு தேவையான கதை மாந்தர்களுடன் கதைகளை நகர்த்திச் சென்றிருப்பது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கும்போது அந்தச் சூழலும் கதை மாந்தர்களும் மனக் கண்முன் ஊடாட வைக்கின்ற உத்தி ஆசிரியருக்கே உரிய தனிச் சிறப்பாகும்.

இத்தொகுப்பில் வரும் ஒவ்வொரு சம்பவங்களையும் கதையினையும் உள்வாங்கி அனுபவித்து தூக்கணாங்குருவி கூடு கட்டுவதுபோல் ஒவ்வொரு சொல்லுக்கும் உயிர் கொடுத்து, கதைக்கு உருவம் கொடுத்து பாத்திரங்கள் வாசகர் முன்னே நடமாடுவது பொலான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருப்பது ஆசிரியரின் தனிப்பட்ட திறமையினையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி நிக்கின்றது. 

ஒவ்வொரு கதையினது தலைப்பும் உள்ளடக்கமும் இணைந்து செல்லும் வகையில் கதை சொல்லும் பாங்கில் உள்ளடக்கத்தில் தொய்வு ஏற்படாத வகையில் மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரங்களுக்கூடாக கதைகளைச் சுவரசியமாகவும், விறுவிறுப்பாகவும் வாசகரின் எள்ளத்து உணர்வுகளையும் ஆவலையும்  தூண்டிவிடத்தக்க வகையில் கதைகளை நகர்த்திச் சென்றிருப்பது உள்ளடக்கத்துக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. விட்டு விடுதலையாகி…. என்ற சிறுகதையை நகர்த்திச் செல்வதற்கு சந்திரன் என்ற கதாபாத்திரம் (சிறுவன்) உலக வாழ்க்கையை வெறுத்து மரணத்தை நாடிச் செல்கின்ற சந்தர்ப்பத்தை வாசகர்களுக்குப் பதிய வைப்பதற்காக அந்தப் பாத்திரத்துக்கும் சூழலுக்கும் வர்ணனைக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் சிறந்த எடுத்துக் காட்டாகும். 

எழுதப்படாத கவிதைகள்’ தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் நனவிடை உத்தியைப் பயன்படுத்திப் பின்னப்பட்டிருக்கின்றன. இதில் பல கதைகளுக்குக் கதை சொல்லியாக ஆசிரியரும் இன்னும் சில கதைகளுக்குக் கதை சொல்லிகளாகச் சில பாத்திரங்களையும் பயன்படுத்தி இருக்கின்றார். இத்தொகுப்பில் வரும் கதைகள் யாவும் உண்மைச் சம்பவங்கள். சமூகச் சீரழிவுகள், சமகாலப் பிரக்ஞைகள், துன்பியல், உரிமை மீறல்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், உளநாட்டு யுத்தகால வடுக்கள், இழப்புக்களை உயிர்ப்புடன் கூறுவதற்குச் சிறந்த உத்தியாக ஆசிரியர் நனவிடை உத்தியைத் தெரிவு செய்திருக்கலாம். அது அவருக்கு இலகுவான உத்தியாகவும் இருந்திருக்க வேண்டும்.

கள வர்ணனை, பாத்திர அறிமுக வர்ணனை ஆகியவற்றைக் கதைக்கும் சம்பவங்களுக்கும் உயிரோட்டத்தை ஏற்படுத்தி, கதை ஓட்டத்தில் வாசகரின் ஆவலைத் தூண்டி கதையின் களச் சூழலுடனும் பாத்திரங்களுடனும் இலயித்திருக்க வைப்பதற்காக வர்ணனைகளை உயிர்த் துடிப்புடன் அளவோடு கச்சிதமாகப் பயன்படுத்தி இருக்கின்றார். வா.வே.சு. ஐயர், கல்கி, கு.ப.ரா, லா.சா.ரா, செங்கை ஆழியான், கணேசலிங்கன் போல் அல்லாமல் கதைக் கருவும் கதையின் உள்ளடக்கமும் திசை மாறிச் செல்லாத வகையில் வர்ணனைகளைக் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது. இதனைக் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள். எல்லாக் கதைகளிலும் பாத்திர அறிமுக வர்ணனை அளவோடு சிறப்பாக அமைந்திருந்தாலும் ராகவி, மனோன்மணி, மணிவண்ணன் போன்ற பாத்திரங்களின் அறிமுக வர்ணனை மிகச் சிறப்பென்றே கூறலாம்.

புனைகதை இலக்கியம் வாசகரைச் சென்றடைந்து பேசப்படுவதற்கு இலகுவான சரளமான மொழி நடையும் உரையாடலும் மிக முக்கியமானதாகும். இவை இரண்டும் வட்டார வழக்கில் அவ்வப் பிரதேச மக்கள் பேசும் மொழி நடையில் அமைந்திருப்பது கதைகளுக்கு உயிர்ப்பைக் கொடுக்கும். கதை மாந்தார்கள் வாசகர் முன் உலாவுவது போலான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது மொழி நடையும் பாத்திர உரையாடல்களுமாகும். இங்கு மண்டூர் அசோகா தமிழ் இலக்கிய பாரம்பரியத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதனாலும் தான் 30 வருடங்களுக்கு மேலாகத் தமிழ் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்தவர் என்பதனாலும் மொழி நடையிலும் உரையாடல்களிலும் அதிக கவனமெடுத்துக் கதைகளைப் புனைந்திருக்கின்றார். துயரம் சுமப்போர் என்ற சிறுகதையில் பொன்னம்பலத்தாருக்கும் அவர் மனைவிக்கும் அதிகாலை வேளையில் இறுதியாக நடந்த உரையாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு மொழி நடையும் உரையாடலும் அமைந்திருப்பது கதை கூறுவதில் ஆசிரியருக்கேயுரிய தனிச் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது. இதனை ஒவ்வொரு கதைகளிலும் வாசகர் அவதானிக்கலாம்.  

ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் வாசகர் மனதில் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி கதையின் மீது இலயித்து ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைந்திருக்கின்றன. நழுவிச் செல்லும் காற்தடங்கள் என்ற சிறுகதையின் ஆரம்பம் ‘அந்தச் செய்தியை அறிந்த நாளில் இருந்து செல்லம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கைகால்கள் பரபரக்க என்ன செய்வதென்று தெரியாமல் கச்சான் காற்றில் பறக்கும் சருகு போல அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தாள். இரவில் தூக்கம்கூட வர மறுத்தது. மனமெல்லாம் அந்த எண்ணம் ஒன்றே வியாபித்திருந்ததால் அவளுடைய இயல்பான வாழ்க்கை முறையும் மாறிப் கோய் இருந்தது….’ எனச் செல்லம்மாவின் மனநிலையை அச்சொட்டாக உடுத்துக் காட்டுகின்றது. இதேபோல் சகல கதைகளின் ஆரம்பமும் அமைந்திருக்கின்றன. இவை கதை சொல்லும் பாங்கில் ஆசிரியருக்கிருந்த ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றது. 

ஒவ்வொரு கதைகளையும் சுவாரசியமாக விறுவிறுப்போடு நகர்த்திச் செல்வதில் ஆசிரியர் மிகுந்த கவனமெடுத்திருக்கின்றார். இதனை இத்தொகுப்புக்கு முன்னர் வெளிவந்த அவரது சிறுகதைத் தொகுப்புகள், நாவலிலும் அவதானிக்கலாம். சரளமான வட்டார வழக்கு மொழி நடையில் ஒவ்வொரு சொல்லுக்கு உயிர் கொடுத்து மிகக் காத்திரமான படைப்புக்களைத் தமிழ் இலக்கியத்துக்குக் அளித்திருப்பது பாராட்டத்தக்கது. கதை ஒன்று சொல்லும் பாங்கில் ஆவலைத் தூண்டக்கூடிய வகையில் நகர்ந்து சென்று கதையின் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி விறுவிறுப்பாக நகர்ந்து சென்று உச்சத்தைத் தொட்டு முடிதல் வேண்டும். இப்போக்கு இத்தொகுப்பில் ஆறு கதைகளில் மிகச் சிறப்பாக வெளிப்ட்டிருக்கிறது.

சிறுகதை ஆசிரியர் உயிர்ப்புடன் கதை கூறும் பாங்கிலும் வாசகரின் மனக்கிடையைப் புரிந்து கொண்டு அவர்களின் ஆவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் கதையை நிறைவு செய்வதில் வெற்றி காண வேண்டும். அந்த வகைகையில் மண்டூர் அசோகா கதைகளை நிறைவு செய்வதில் தனது நான்கு சிறுகதைத் தொகுப்புக்களிலும் வெற்றி கண்டிருக்கிறார். மிகச் சாதுரியமாக வாசகரைக் கதைகளில் தக்க வைத்து மிக நுணுக்கமாக ஒவ்வொரு சொல்லுக்கும் உயிர் துடிப்பை ஏற்படுத்திக் கதைகளை நிறைவு செய்வது ஆசிரியரின் சித்திரிப்புத் திறமையை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து முடிக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. இதனை இந்நூலின் முன்னுரையில்  புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் சுட்டி இருக்கின்றார்.

அண்மையில் நான் வாசித்து, இரசித்து, மெய்மறந்த சிறுகதைத் தொகுப்புக்களில் கலாபூசணம் மண்டூர் அசோகாவின் எழுதப்படாத கவிதைகள் தொகுப்பு பாராட்டத் தக்கது. பத்துக் கதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் ஐந்து கதைகள் மிகச் சிறப்பானவை. அதேபோல் நான்கு கதைகளில் ஆரம்பத்திலும் இறுதியிலும் இருந்த சுவாரசியமும் விறுவிறுப்பும் கதைகளின் மத்தியில் காணப்படவில்லை.  வேட்டை, ஒரு செம்மறியாட்டுக் குட்டியும் சில ஓநாய்களும் என்ற கதைகளின் தலைப்பில் கவனமெடுத்திருக்கலாம். துன்பியலான கதைகளில் பாத்திரங்களின் உடல்மொழி மற்றும் கறியீடுகளில் மேலும் கவனமெடுத்திருந்தால் அக்கதைகள் மிகமிகச் சிறப்பாக அமைந்திருக்கும். உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், உயர்வு நவிற்சி, முரண்நிலை, முரண்நகை ஆகிய அழகியல் அம்சங்கள் தேவையான இடங்களல் போதுமானளவு சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு. முன்னட்டைப் படத்தில் கவனமெடுத்திருக்கலாம். இவை குறையென்பதல்ல இவற்றிலும் கவனமெடுத்திருந்தால் சில கதைகள் மேலும் சிறப்பாக மைந்திருக்கும்.

மிக விரைவில் இவரது கவிதைத் தொகுப்பு நூலொன்று வெளிவர இருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகறிந்த மண்டூர் அசோகாவின் படைப்புகள் மேலும் வெளிவர வெண்டும். அதற்கான ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் கிடைக்க வேண்டும். அதேபோல் மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின் இது பொன்ற மேலும்பல நூல்களை வெளிக்கொணர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.