— அழகு குணசீலன் —
இலங்கையின் புத்தாண்டு அரசியல் போக்கு குறித்து பல விடயங்கள் பேசப்படுகின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் கைதை பேசு பொருளாக்கி, இந்த சிங்கள, தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் பழைய ஆண்டை வழியனுப்பியும், புத்தாண்டை வரவேற்றும் உள்ளது. முக்கியமாக புத்தாண்டில் உட்கட்சி மோதல்களை முழுமையாக மறைக்க முடியாத நிலையில் ஜே.வி.பி. அரசாங்கத்தினதும், தமிழரசுகட்சியினதும் நிலை காணப்படுகிறது. முன்னாள் அமைச்சர் டக்ளஸின் கைதால் இவற்றை மறைக்க முற்பட்ட இந்த கட்சிகளுக்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இது புத்தாண்டின் முதல்தோல்வி.
அரங்கம் “வெளிச்சம்” பத்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவிடப்பட்டது போன்று, ஹருணி அமரசூரியாவை பிரதமர் பதவியில் இருந்து தூக்குவதற்கு ஜே.வி.பி.யின் சிரேஷ்ட பெலவத்த குழு ஒன்று படாத பாடுபடுகிறது. கடந்த வருடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டும் கைகூடவில்லை.
ஒரு சந்தர்ப்பம், பிரதமர் ஹருணி அமரசூரியவுக்கு இந்திய பல்கலைக்கழகம் ஒன்று, இந்திய வெளியுறவு அமைச்சின் சிபார்சில் கலாநிதி பட்டம் வழங்தியதை காட்டி ஹருணி இந்திய அரசாங்கத்திற்கு சார்பானவர், இந்தியாவுக்கு விலை போகின்றார் என்ற குற்றச்சாட்டு.
மறு சந்தர்ப்பம், அமைச்சரவை மாற்றத்தின் போது ஹருணியை பிரதமர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, பெலவத்தையின் அதி உயர் அதிகாரபீடத்தின் வலதுகரமான பிமல் ரத்நாயக்காவுக்கு பிரதமர் பதவியை வழங்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹருணி அமர சூரியாவின் பக்கத்தில் நின்றதால் இது சாத்தியப்படவில்லை.
என்றாலும் மழை விட்டும் தூவானம் ஓயாத நிலையாக , தற்போது புதிய கல்விச்சீர்திருத்தத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 6ம் வகுப்பிற்கான ஆங்கில நூலில் அச்சிடப்பட்டுள்ள வெப்சைற் ஒன்று தன்னினச்சேர்க்கையாளர்களின் பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு, கல்வி அமைச்சர் என்ற வகையில் ஹருணி மீது முன் வைக்கப்படுகிறது.
கல்வி அமைச்சராக ஹருணி அமரசூரியாவின் கல்விச்சீர்திருத்தம் குறித்து பலதரப்புக்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இதில் மதத்தலைவர்களும், நிறுவனங்களும் முக்கியமானவை. கல்விசார் தொழிற்சங்கங்களும் தங்கள் ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளன. இந்த விமர்னங்கள் நூல் வெளிவருவதற்கு முன்னரே முன்வைக்கப்பட்டபோதும் அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாது, இலங்கையின் கலாசார, பண்பாட்டு, பாரம்பரிய, விழுமியங்களை கருத்தில் கொள்ளாது இந்த தவறு இடம்பெற்றிருக்கிறது.
இது எவ்வாறு நடந்தது…?
இதற்கு யார் பொறுப்பு….?.
இந்த கேள்விகள் எதிர்க்கட்சிகளால் மட்டும் அல்ல, அரசாங்கத்தரப்பாலும், கல்விசார் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களாலும் எழுப்பப்படுகின்றன.
இதற்கு அதிகாரிகளை பொறுப்பு கூற கட்டாயப்படுத்தி கல்வி அமைச்சர் தப்பிக்க முடியாது. அதனால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று அரசாங்கத்திற்குள் உள்ள பலம்மிக்க ஜே.வி.பி.தரப்பு கோருகிறது. எதிர்க்கட்சிகளும் பொறுப்பு கூறவேண்டியது தற்காலிகமாக பதவியை துறந்துள்ள தேசிய கல்விநிறுவனத்தின் தலைமை அல்ல கல்வி அமைச்சரே என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன.
இங்கு கவனிக்க வேண்டியது பெலவத்த குழு கல்வி அமைச்சில் இடம்பெற்ற தவறுக்காக ஹருணியை பதவிவிலக கோருவதானால் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரவேண்டும். ஆனால் கோரிக்கை விடும் தரப்பின் இலக்கு பிரதமர் பதவி. பதவி விலகலை மட்டும் அவர்கள் கோரவில்லை அந்த பிரதமர் பதவிக்கு ஜே.வி.பி. கடும்போக்காளர் பிமல் ரத்நாயக்காவைவை நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இதன் உள் நோக்கம் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை ஜே.வி.பி. சுருட்டிக்கொள்வது. இன்னொரு வகையில் என்.பி.பி. முகத்தை படிப்பறையாக மறைத்து ஜே.வி.பி.யாக மாறுவது. ஹருணி ஜே.வி.பி. கட்சியை சேர்ந்தவர் அல்ல. என்.பி.பி.என்ற கட்சியை கட்டிய நாற்பது சிறிய தொழிற்சங்க, சிவில் அமைப்புக்களின் கூட்டை பிரதிநிதித்துவம் செய்பவர். இந்த கூட்டமைப்பினர் அமெரிக்காவின் ஆதரவில் இடம்பெற்ற காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தை கொண்டு நடாத்தியதிலும், அதற்கு இடதுசாரி நிறந்தீட்டுவதிலும் முக்கிய பங்காளிகள்.
இந்த அமைப்புக்களில் பல தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இவை குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள், மேற்குலக, பிராந்திய வெளியுறவு இராஜதந்திர உறவுகள் குறித்தவை மட்டும் அன்றி வடக்கு கிழக்கு காணி அபகரிப்பு, இராணுவ பிரசன்னம், பொது நிர்வாகத்தில் இராணுவமயமாக்கம், சிறுபான்மை தேசிய இனங்களின் பிர்ச்சினைக்கான தீர்வு, ஐ.எம்.எப் . நிபந்தனைகள்……. போன்ற பலவற்றை அடிப்படையாகக்கொண்டவை.
ஆனால் அநுரவும், ஹருணியும், விஜய ஹேரத்தும் கொண்ட மும்மூர்த்திகளே மேற்குலக இராஜதந்திர உறவுகளை கையாளக் கூடியவர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஹருணியை நீக்கி விமல் ரத்நாயக்கவை பிரதமராக்குவது அவரது ஜே.வி.பி. கடும் போக்கு, இந்திய, மேற்குல எதிர்ப்பு, சீனச்சார்பு அரசியல் குணாம்சங்கள் காரணமாக அரசாங்கத்தில் சர்வதேச, பிராந்திய, வெளியுறவு சமநிலை தளம்பும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருதுவதாக தெரியவருகிறது.
பெலவத்தைக்கு இந்தத் தடவை முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஜனாதிபதிபதியின் சமரசம் புதிய பிரதமர் விஜய ஹேரத்தாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. அப்போது ஹருணிக்கு வெளியுறவு அமைச்சர் பதவியை வழங்கி சமநிலையை சமாளிக்கலாம் என்று ஜனாதிபதி மாற்று நொடி போடுவதாக வெளிவரும் குசினி கபினட் குசுகுசுப்புக்களையும் தட்டிக் கழித்து கடந்து செல்லமுடியாது.
ஆக, செப்டம்பர் 2024 இல் தொடங்கிய புகை தொடர்ந்தும் புகைகிறது. நெருப்பில்லாமல் புகையாது தானே…..!
******************
தமிழ்த்தேசிய அரசியலின் பிரதான பங்காளர்கள் தாங்கள் தான் என்று
கூறும் தமிழரசுக்கட்சிக்குள்ளும் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் அடித்தளம் சரியில்லை என்றால் வெடிப்புகள், சிதைவுகள், உடைவுகளுக்கு குறைவேது. இது ‘வீட்டுக்காரர்களுக்கு உள்ளும், வெளியும் பிரச்சினையாகவே இருக்கிறது.
யாழ். தேர்தல் மாவட்ட தமிழரசுக்கட்சி எம்.பி . சிறிதரன் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர். அரசியல் அமைப்பு சபையின் ஒன்பது உறுப்பினர்களுள் ஒருவர். பிரதான எதிர்கட்சியைத் தவிர்த்து மற்றைய எதிர்க்கட்சிகளை அரசியல் அமைப்பு சபையில் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர். சிறிதரன் தமிழரசுக்கட்சியின் ஏகபோக பிரதிநிதியாக அரசியல் அமைப்பு சபையில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சிறிதரன் அரசாங்கத்திற்கு சார்பாக கடந்த பல சந்தர்ப்பங்களில் அரசியல் அமைப்புச் சபை நியமனங்களுக்கு வாக்களித்துள்ளார் என்ற விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த எட்டு நியமனங்களில் எட்டுக்கும் அரசாங்க முன்மொழிவை ஆதரித்துள்ளார். அதில் நான்கு நியமனங்கள் சிவில் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்த்தேசிய அரசியலில் இது வேறாக நோக்கப்பட்டாலும், பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாக சிறிதரன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் ஜனவரி 3ம் திகதி வவுனியாவில் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு அவரிடம் அரசியல் அமைப்பு சபையில் இருந்து விலகுமாறு கோரியுள்ளது. விளக்கம் கோரியும் கடிதம் எழுத ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்த கூட்டத்தில் சிறிதரன் எம்.பி.சமூகமளித்திருக்கவில்லை. ஆனாலும் இது விடயத்தில் சிறிதரன் ஆதரவளித்த எட்டு சந்தர்ப்பங்களையும் விலாவாரியாக விளக்கி எம்.ஏ. சுமந்திரன் விளக்கம் கோரி கடிதம் எழுதுவார் என்று கூறப்படுறது.
என்.பி.பி. அரசாங்கம் ஒன்றைக்கேட்டால் இன்னொன்றை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சாராயத்தவறணை லைசன்ஸ் பெற்றவர்களையும், அதற்கான சிபாரிசுகளை செய்தவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிடுங்கள் என்று தமிழ்த் தரப்பு பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் கோரிக்கைக்கு பூரணமான பதிலை வழங்கவில்லை. சாராயக் கடைகளின் விலாசத்தை மட்டுமே வெளியிட்டது.
இந்த நன்றிக் கடனுக்காகவே சிறிதரன் அரசியல் அமைப்பு சபையில் அரசாங்கத்தை ஆதரிக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அநுர அரசாங்கம் சொல்வதுபோல் வெளிப்படைத்தன்மை அதனிடம் இல்லை என்பதற்கும், அரசியல் நேர்மை இல்லை என்பதற்கும் இது ஒரு சின்ன உதாரணம். மதுவரி வருமானம் கிடைக்கும் என்றால் சாராயம் போதையைத் தராதா ….?
தமிழரசில் சிறிதரன் படிப்படியாக தனிமைப்படுத்தப்படுவதற்கு அநுர அரசாங்கம் அவரை ஆதரிப்பது போன்று முதுகில் குத்துகிறதா…?
தமிழரசின் அடுத்த எம்.பி. மட்டக்களப்பு சிறிநேசன். இயற்கை அனர்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியை ‘கண்சிவந்த மேனியர்…’ என்று பாராட்டியவர். இத்தனைக்கும் மத்தியில் மட்டக்களப்பு மக்களின் வாயில் இருந்து நிவாரணம் வழங்கலில் அரசியல் தலையீடு, நேர்மையின்மை, ஊழல்…. பற்றிய குரல் இன்னும் ஓயவில்லை.
இவர் திருகோணமலை பொதுச்சபை கூட்ட காலத்தில் இருந்து சிறிதரன் அணியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியினர் குறுக்கும், மறுக்கும் வாக்களித்த போது அரியநேந்திரனை ஆதரித்தவர்.
மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. யோசப் பரராசசிங்கத்தின் நினைவு நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்களின் அழைப்பின்றி – சிறிநேசனின் அழைப்பில் மேடையேறியிருக்கிறார். இது குறித்து தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு சிறிநேசனிடமும் விளக்கம் கோரியிருக்கிறது. இப்படி அழைப்பின்றி மேடையேறுதல் அரியத்தாருக்கு ஒன்றும் புதிதல்ல. அவரை தெரிந்தவர்களுக்கு தெரியுமாம்.
கடந்த ஒரு வருட காலகாலமாக இந்த இரு ‘சிறி’ களினதும் பாராளுமன்ற செயற்பாட்டை அவதானித்தால் அவர்களின் ‘பிறழ்வு’ துலங்கும். தென்னிலங்கையில் மட்டும் அல்ல வடக்கு, கிழக்கிலும் அநுர அரசாங்கத்தின் ஆதரவு ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல் கால மட்டத்தில் இல்லை. அரசாங்கமும், மற்றைய கட்சியினரை சேர்த்தல், ஆதரவு கோருதல் இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் சறுக்கி விட்டது. இப்போது யாரையாவது, எப்படியாவது வாங்கி உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை தக்கவைக்க பார்க்கிறது.
இந்த அரசியல் நோக்கில் வடக்கு கிழக்கில் ஏற்பட்டு வரும் ஆதரவுச் சரிவை சரிக்கட்ட இந்த இரண்டு ‘சிறி’ களையும் அரசாங்கம் கைக்குள் போடுகிதா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழரசுக்கட்சி இவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில். பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் இவர்களுக்கான மக்கள் ஆதரவு அல்ல, அரசாங்கம் இவர்களை பயன்படுத்தும் என்பதாகும். தமிழரசுக்கட்சி ரி.என்.ஏ. ஆக மறு பிறப்பு எடுத்தாலும் இந்த சவாலை எதிர்கொள்வது கஷ்டம்.
