கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – (பகுதி 111) (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-48)

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – (பகுதி 111) (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-48)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)                              

– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் – 

பக்கம்-05:

 1970 இல் ஆட்சி அமைத்த முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிக்கு மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தல் எனும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்தது. இதனால் இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பயனடைந்தனர். இதன்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பின்தங்கிய பிரதேசங்களான வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் வழமையை விடக் கூடுதலான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. தரப்படுத்தல் முறைமையினால் வசதியான மாவட்டமாகக் கருதப்பட்ட யாழ் மாவட்டத் தமிழ் மாணவர்கள், அவர்கள் அதுவரை அனுபவித்து வந்த வாய்ப்புகள் குறைக்கப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் 1970 ஆம் ஆண்டின் பின்னர்தான் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் குறிப்பிடும்படியான ஒரு தொகைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் யாழ் மாவட்டத் தமிழ் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் எனும் ஒரே காரணத்திற்காகத் தமிழரசுக் கட்சியும் அதனைச் சார்ந்த தமிழ் மாணவ இளைஞர் அமைப்புகளும் தரப்படுத்தல் முறைமைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போதைய அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலஞ்சென்ற பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்குக் கொடும்பாவி கட்டி எரிக்கும் அளவுக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்களும் தமிழ்த் தேசியம் எனும் போர்வையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டக்களப்பிலும் விஸ்த்தரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தமது கண்ணைத் தாமே தமது கைகளினால் குத்த வைக்கப்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்த நிலைமை கிழக்கிலே தமிழ் முஸ்லிம் நல்லுறவு கெடுவதற்கு ஊக்கியாகவும் அமைந்தது. தமிழ்த் தேசிய அரசியல் எப்போதும் வடக்கு மாகாணத் தமிழர்களின் குறிப்பாக யாழ் குடாநாட்டுத் தமிழர்களின் நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தி வந்துள்ளமை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டடாகும்

பக்கம்-06:

 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது உருவான புதிய மூதூர் தொகுதி தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகும் வகையில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அது நியாயமானதே.

 அதன்படி 1960 மார்ச் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ரி. ஏகாம்பரமும் யூ.என்.பி. வேட்பாளர் எம் இ எச் மொஹமட் அலியும் தெரிவாகினர். அதேபோல் 1960 ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ரி ஏகாம்பரமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ எல் அப்துல் மஜீத்தும் தேர்ந்தெடுக்கப்பெற்றனர்.

  1960 ஜூலையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர்த் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரி ஏகாம்பரம் 23.03.1961 அன்று காலமானார்.

இவரது மரணத்தினால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் (28.06.1962) ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற சொல்லாடலை தமிழர்களுடைய உரிமைப் போராட்ட அரசியலில் தோற்றுவித்து தமிழ்- முஸ்லிம் ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசிவந்த தமிழரசுக் கட்சி என்ன செய்திருக்க வேண்டுமென்றால், தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாறு உருவாக்கப்பெற்ற மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ஏகாம்பரம் அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் தமிழர்களுக்கு உரித்தான அந்த ஆசனத்தைத் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி அவருக்கு முஸ்லிம் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்து வெல்லப்பண்ணியிருக்க வேண்டும். இதுவே தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வெளிக்காட்டக் கூடியதும் பேணக் கூடியதுமாகும். ஆனால் தமிழரசுக் கட்சி அதனைச் செய்யாமல் முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு முன்னே தேர்தலில் யூ என் பி கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற எம் இ எச் மொகமட் அலியை இடைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி அவருக்குத் தமிழர்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்து வெற்றியீட்டப் பண்ணி மூதூர்த் தொகுதியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே முஸ்லிம்களாக (அப்துல் மஜீத் மற்றும் மொகமட் அலி) இருக்கப் பண்ணினர்.

 பின்னர் 1965இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மூதூர்த் தொகுதியின் தமிழரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் மொகமட் அலியையே நிறுத்தி வெற்றியிட்ட வைத்து இத்தேர்தலிலும் மூதூர்த் தொகுதியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே முஸ்லிம்களாக (அப்துல் மஜீத் மற்றும் மொகமட் அலி) வரவைத்தனர்.

 இதனால் மூதூர்த் தொகுதித் தமிழர்கள் ஏகாம்பரம் மரணித்த 1961 இல் இருந்து 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் மூதூர்த் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக அ.தங்கதுரை தேர்ந்தெடுக்கப்படும்வரை ஒன்பது ஆண்டுகள் தமக்கென ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரின்றியே இருக்க வேண்டியதாயிற்று.

 இதிலிருந்து இரண்டு உண்மைகள் தெளிவாகின்றன. ஒன்று தமிழரசுக் கட்சி அரசியலில் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று சொல்லிக்கொண்டு ஒரு போலித் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையையே கட்டி வளர்த்தது.

 மற்றையது, கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை விடவும் தமிழரசு கட்சிக்கு முன்னுரிமையாகத் தேவைப்பட்டது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மட்டுமே.

 தமிழரசுக் கட்சியின் இந்த மனப்போக்குக்கூட கிழக்கில் தமிழ் முஸ்லிம் விரிசலுக்கு வித்திட்டது. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருத்தர் மீது ஒருத்தர் குரோதம் கொள்ள வழி வகுத்தது.

 (குறிப்பு: தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட கூடியவாறு 1959இல் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்ட மட்டக்களப்புத் தொகுதியில் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் செ. இராசதுரையையும் தமிழரசுக் கட்சியில் கவிஞர் காசி ஆனந்தனையும் அதாவது இரு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம்களுக்குரிய ஆசனத்தைப் பறிக்கும் நோக்குடனான அதன் முரண்பாடான அரசியலும்கூடக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இன முரண்பாட்டிற்கு எண்ணெய் வார்த்தது.)

(தொடரும்….)