தவித்தமுயல் அடித்தல் : மலையில் பிடுங்கி தரையில் நாட்டுதல் (வெளிச்சம்:096)

தவித்தமுயல் அடித்தல் : மலையில் பிடுங்கி தரையில் நாட்டுதல் (வெளிச்சம்:096)

— அழகு குணசீலன் —

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து பேசுபொருளாகி இருக்கின்ற பல விடயங்களுள் தமிழர் அரசியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது மலையக மக்களின் மீள்குடியேற்றம்.

இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண _இழப்பீட்டு தொகைகளை எடுத்த எடுப்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார். அப்போது பாராளுமன்ற சபை மண்டபத்திற்கு வெளியே தமிழர்  முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஜனாதிபதி அநுரவும் வந்த வழியில் சந்திக்கிறார்கள். மலையக மக்களின் மீள்குடியேற்றம் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி தன்னிடம்…..“காணி எங்கே இருக்கிறது மனோ….?”என்று   கேட்டதை பல தடவைகளில் இது விடயமாக மேற்கோள் காட்டிய மனோகணேசன், “ஜனாதிபதிக்கு இது விடயத்தில் புரிதல் இல்லை….” என்றும் கூறுகிறார்.

இலங்கையை சுழற்றிய சூறாவளி, வெள்ளம், மண்சரிவு என்பன அபாய எச்சரிக்கைகளை புறக்கணித்த, முற்காப்பு ஏற்பாடுகளை செய்யாத இலங்கை அரசையும், அதன் தலைவரையும் புரட்டிப்போட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால் ஆயிரம், இலட்சம், கோடி என்று மூன்று, ஐந்து, ஏழு பூச்சியங்களை அடுக்கி நிவாரண – இழப்பீட்டு தொகைகளை இலக்கங்களை நீட்டி அறிவித்த ஜனாபதிக்கு தனது முன்மொழிவுகளை எங்கு செய்வது, எவ்வாறு செய்வது என்ற களநிலை, வளநிலை விபரங்கள் தெரிந்திருக்கவில்லை. அவரின் முழுக் கவனமும் பாதிக்கப்பட்ட பட்ட மக்களை, எதிர்க்கட்சிகளின், பிராந்தியத்தின், சர்வதேசத்தின் முன்னெச்சரிக்கை புறக்கணிப்பு குற்றச்சாட்டில் இருந்து  ஆசுவாசப்படுத்துவதாகவே இருந்தது/இருக்கிறது. அரசாங்கம் செயலிழக்கவில்லை செயற்படுகிறது என்று காட்டவேண்டிய தேவை.

 எந்த பிளான் ‘A’ யும், ‘B’யும்  இல்லாத அரசாங்கத்தின் பலவீனத்தை எதிர்க்கட்சிகளும், சில அமைப்புக்களும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதன் விளைவே மனோகணேசன் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கப் போய் எதிர்காலம் குறித்து எந்த முன்யோசனையும் இன்றி இருந்த மக்களிடம் “தவித்தமுயல் அடித்த கதை”.   அதுதான் வடக்கு, கிழக்கில் காணி தந்தால் அங்கு போகத்தயாரா? என்ற அவரின் கேள்விக்கு மக்கள் அளித்த ‘ஆம்….ஆம்.., தயார்…தயார்….’ என்ற பதில். மனோகணேசன் மக்களிடம் இந்த கேள்வியைக் கேட்க  அடிப்படை காரணம்  ஜனாதிபதி மனோவிடம் கேட்ட  காணி எங்கே இருக்கிறது மனோ? என்ற கேள்விதான். இப்போது மனோ மாட்டிக்கொண்டு விட்டார்.

தனது பொக்கட்டுக்குள் வடக்கு, கிழக்கு காணிகளை வைத்திருப்பவர் போன்று கேட்டு விட்டு அதற்கு நியாயம் கற்பிக்க அநுர தன்னிடம் காணி எங்கே இருக்கிறது என்று கேட்ட கதையைச் சொல்கிறார். இதற்கு பின்னால் எம்.ஏ  சுமந்திரன் ஒரு அறிக்கை, ஆறு திருமுருகன் ஒரு அறிக்கை, முபாரக் என்று ஒரு முஸ்லிம் சகோதரரும் ஒரு அறிக்கை. ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. போதாக்குறைக்கு ஜனாதிபதி தேர்தல் கணக்கை இன்னும் காட்டாத அரியநேந்திரனும் விடயத்தை விட்டுவைக்கவில்லை. ஒவ்வொருவரும் வடக்கு கிழக்கில் சகல இனமக்களும் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைக்கு மலையக மக்களை பலிக்கடாவாக்கப் பார்க்கிறார்கள். இது தமிழ்தேசிய அரசியல் கடந்து வந்த, வந்து கொண்டிருக்கின்ற மலையக மக்களின் மலையக தேசியத்தை சிதைத்து வடக்கு கிழக்கு தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கும் திட்டமிட்ட செயற்பாடு.

மலையக தமிழர்கள் தங்களை ஒரு தனித்தேசிய இனமாக அடையாளப்படுத்தும் -அதற்கான மொழி, பாரம்பரிய வாழ்விடம், பொருளாதாரம், கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை கொண்டுள்ள நிலையில், அவர்களை மலையில் இருந்து பிடுங்கி வடக்கு, கிழக்கு தரையில் குடியேற்றும் சிந்தனை மலையகத்தேசியத்தை சிதைக்கும் செயல் இல்லையா? இதன் மூலம் அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, பண்பாட்டு வாழ்வியல் சிதைக்கப்படுகிறது. அது அவர்களின் தனித்துவமான அடையாளங்களை  அவர்களாகவே தொலைக்க வழிவகுக்கும். கடந்த கால இன வன்முறைகளின் போது வடக்கு, கிழக்கில் குடியேற்ப்பட்ட மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் கசப்பானவை. அவர்களின் மலையக தேசியத்தை அவர்களைக் கொண்டே அழித்து, வடக்கு, கிழக்கு தமிழர்களின் தேசியத்தை பாதுகாக்க மலையகமக்கள் பகடைகாய்களாக- எல்லைக்கிராமங்களின் வேலிகளாக குடியேற்றம் செய்யும் அரசியல் இதன்பின்னணியில்  இருந்தது. 

சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் அவர்களின் வாழ்க்கைத்தரம் ஒப்பீட்டளவில் இலங்கைத்தமிழர்களைவிடவும், தேசிய சராசரியை விடவும் குறைவானது. வறுமை, இனவாத புறக்கணிப்பு, கம்பெனிகளின் உழைப்பு சுரண்டல் என பல விடயங்கள் இதற்கு காரணம். இதனால் இலங்கை வாழ் தமிழர்கள் இரண்டு அல்லது சமூக உட்கட்டமைப்பு சார்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவினர். பல்வேறு சமூகப் பிரிவினர்.

ஆய்வாளர் சூரியநாராயணன் தனது கட்டுரை ஒன்றில் குறிபிட்டுள்ள விடயங்கள் வடக்கு, கிழக்கில் குடியேற்றும் யோசனையை கேள்விக்குட்படுத்துகின்றன.

தமிழர்களின் நலனுக்காக சர்வதேச அளவில், குறிப்பாக இந்தியர்களின் ஆதரவைத்திரட்டுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) , மற்றும் பல்வேறு போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இலங்கையின் தமிழ் மக்களை அடுத்தடுத்து சிங்கள ஆதிக்க அரசாங்கங்களால் கடுமையான பாகுபாட்டிற்கு ஆளான ஒருமைப்பாட்டு குழுவாக சித்தரித்தனர்…

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒருமைப்பாட்டு குழுவாக இல்லை என்பதை அவர்கள் வேண்டுமென்றே மறைத்தனர். உண்மையில் அவர்கள் இலங்கைத்தமிழர்கள், இந்தியத்தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் எனப்பிரிக்கப்பட்டுள்ளனர்… 

அவர்களின் குறைகள், அபிலாஷைகள், அவர்கள் தேடும் தீர்வுகள் மற்றும் அவர்களின் போராட்ட முறைகள் அனைத்தும் வேறுபட்டவை. மேலும் இலங்கைத்தமிழர்களிடையே கூட யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புக்கு தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் இடையே வேறுபாடுகள் உள்ளன…. ”   

இது கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசினால் அதற்கு பிரதேசவாத சாயம்பூசும் தம்பிகளுக்குமான சூரியநாராயணனின் அர்த்தமுள்ள பதிலாக அமைகிறது. 

இங்கு ஒரு விடயத்தை மேலும் சுட்டிக்காட்ட முடியும். மலையகமக்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற வரவேற்பு அறிக்கை விட்டவர்களான எம்.ஏ.சுமந்திரனும், மனோ கணேசனும் உண்மையில் இலங்கை, மலையக தமிழர்களாக கொள்ளப்படமுடியாத சூரியநாராயணனின் உட்பிரிவுக்குள் அடங்குகின்றனர். இதன்படி சுமந்திரனும், மனோவும் கொழும்புத் தமிழர்கள். 1983 இனக்கலவரத்தில் சுமந்திரனின் பெற்றோர் சுமந்திரனோடு யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்தனர். ஏன்? அவர்களால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் வாழ முடியவில்லை. ? இந்த கேள்விக்கு பின்னால் உள்ள பதில் மலையக மக்களுக்கும் பொருந்தும்.

வடக்கு கிழக்கில் ஏற்பட்டு வரும் சனத்தொகை/ வாக்காளர் வீழ்ச்சியை புலம்பெயர்ந்த தேசங்களில் ஈழப்போராட்டம் நடாத்தும் தமிழர்களை கொண்டு நிரப்பவேண்டுமே அன்றி மலையக மக்களை கொண்டு அல்ல. ஆனால் அது சாத்தியமில்லை. ஏனெனில் அவர்களும் சுமந்திரன், மனோ கொழும்பு தமிழர்கள் ஆனது போன்று கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், அவுஸ்திரேலிய …. தமிழர்கள் ஆகிவிட்டார்கள். இப்போது தாங்கள் விட்டுச்சென்ற காணிகளை அரசாங்கம் அறிவித்த இழப்பீடு இலட்சங்களுக்கு எப்படி விற்பனை செய்வது என்பதுதான் அவர்களின் பிரச்சினை. இதற்கு மலையகமக்கள் வடக்கு, கிழக்கு நோக்கி நகர்த்தப்படவேண்டும் என்ற சிந்தனையே முன்னிற்கிறது. சில விலக்குகள் இருக்கலாம்.

2012 சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி பிரதான மலயக மாகாணங்களில் வாழ்ந்த மலையக தமிழர்கள் கிட்டத்தட்ட  வடக்கில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் தொகைக்கு சமமானவர்கள். சுமார் எட்டு இலட்சம் பேர். புலம்பெயர்ந்தவர்கள் கனடா (300,000), ஐக்கிய இராச்சியம் (120,000), இந்தியா (100,000), ஐரோப்பா (200,000),  அவுஸ்திரேலியா மற்றும் சூழவுள்ள நாடுகளில் (100,000.).   

2012 இல் மத்திய மாகாணம் (485,000), ஊவா மாகாணம் (150,000),சப்பிரகமுவ மாகாணம் (100,000) மேற்கு மாகாணம் (60,000). 2012 இல் இலங்கையின் மொத்த சனத்தொகையில் மலையகத் தமிழர்கள் 4.2 வீதம் என புள்ளி விவரங்கள் கூறுகின்ற போதும்  உண்மையில் இன்றைய நிலை 2.1 வீதம் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த போக்கு மலயகத்தேசியம் குறித்த எச்சரிக்கையாக அமைகிறது. வடக்கு கிழக்கு தமிழ்த்தேசியத்திற்கு புலம்பெயர்ந்த சனத்தொகை ஏற்படுத்திய பின்னடைவை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டிய காலம் இது. தமிழ்த்தேசிய பக்தர்களான ஆய்வாளர்கள் இந்த விடயத்தை மறைத்து டொலர்கள் ஆயுதத்திற்கு வழங்கிய பங்களிப்பையும், ஜெனிவாவில் கொடிபிடிப்பதையுமே கணக்குப்பார்க்கின்றனர்.

இயற்கை காலநிலை- புவியியல் சூழலில் 200 ஆண்டுகள் பாரம்பரியத்தில் -பழக்கப்பட்ட- இசைவாக்கத்தில் வளர்ந்த ஒரு ஈரவலய மரத்தை அதற்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற வரண்டவலயத்தில் பிடுங்கி நாட்டமுடியாது என்பதற்கு கடந்த கால குடியேற்றங்களின்  தோல்விகள் சான்றுபகர்கின்றன. சாதாரணமாக காலநிலைக்கு பழகிப்போவதற்கே மிகக் கூடிய பராமரிப்பும், நீண்ட காலமும் தேவை. அப்படி இசைவாக்கம் அடைந்தாலும் அந்த மரம் பிடுங்கி நாட்டப்பட்டது – வந்தேறு குடி என்ற பட்டத்தையே சுமக்கிறது. மலையகத்தில் இருக்கின்ற அரசியல் உரிமைகள் கூட இல்லாமல் வெறும் வாக்கு அறுவடைக்கு மட்டுமே தமிழ்தேசியத்தால் பயன்படுத்தப்படுகின்றது.  ஆசை வார்த்தைகளை கூறி குடியேற்ற அழைப்பு விடுக்கின்ற அரசியலுக்கு பின்னால் மறைந்துள்ள தேர்தல் அரசியல் இதுதான்.

ஆரம்பத்தில் இலங்கையின் இரண்டாவது பெரிய இனக்குழுமமாக இருந்த மலையகமக்களை திட்டமிட்டு பல்வேறு அரசியல் சூழ்ச்சி களுக்கு வடக்கு கிழக்கு தமிழ்த்தேசிய அரசியல் சிங்கள பேரினவாதிகளுடன் ஒத்து ஊதியே அவர்களை எண்ணிக்கையில் பின்தள்ளி அவர்களின் இடத்தை இலங்கைத்தமிழர்கள் பிடித்துக்கொண்டார்கள். இன்னும் அவர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றி தேநீருக்குள் சீனியை கலப்பதற்கு பதிலாக சீனித்தண்ணிக்குள் தேயிலையை கலந்து தேயிலையின் சுயத்துவத்தை  கரைக்கும் -அழிக்கும் முயற்சியாக இந்த குடியேற்ற அழைப்பு அமையக்கூடாது.

மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வியர்வையும், இரத்தத்தையும், உயிரையும் கொடுத்து பாரிய பங்களிப்பை செய்கின்றனர். வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் பங்கு அதிகமானது. பொருளாதாரத்திற்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கு சமமாக அவர்கள் இதுவரை கையாளப்படவில்லை. இந்த இடைவெளியை இல்லாமல் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இது மலையக மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை.  இந்த பொறுப்பை இலங்கை அரசாங்கம் அதுவும் அந்த மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அநுர அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது.

மலையகதேசியத்தை சிதைக்காத வகையில், அவர்களின் சனத்தொகை, வாக்காளர் பரம்பலில் மாற்றம், விகிதாசார பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இல்லாத வகையில் அவர்கள் அவர்களின் தேசத்திலேயே மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டும். இயற்கை அனர்த்தத்தை காரணம் காட்டி – சாக்கு போக்கு சொல்லி ஆணிவேரோடு ஒரு சமூகத்தை பிடுங்கி அதன் வாழ்வியலை அழிக்க முடியாது . அரசாங்கத்திற்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக மலையகசமூகத்தை பலியாக்க முடியாது. மீள்குடியேற்றம் என்பது இயற்கை அனர்தத்தினால் எஞ்சி இருப்பதையும் சிதைப்பதல்ல மாறாக இருப்பதை பாதுகாத்துக்கொண்டு, இல்லாமல் போனவற்றை, இழப்புக்களை கட்டி எழுப்புவது. மலையக மக்களின் வாழ்வை சமூக, பொருளாதார, அரசியல் பாதிப்புகள் சிதைக்காத வகையில் பாதுகாப்பது. இதற்கு பொறுப்பேற்கவேண்டியவர்கள் அரசாங்கமும், தோட்ட முதலாளிகளுமே.

எனவே, இன்றைய இக்கட்டான சூழலில் அரசாங்க, எதிர்க்கட்சிகள், மற்றும் மலையகமக்களை பிரதிநித்துவம் செய்யும் அனைத்து அரசியல் வாதிகளும்,  சிவில் அமைப்புக்களும், துறைசரா அமைப்புக்களும் குறிப்பாக மனித உரிமைகள், சுற்றுச்சூழல் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும்  ஒன்றிணைத்து மலையகமக்கள் மலயகத்திலேயே தமது சமூக, பொருளாதார, அரசியல் சுயத்துவத்தை இழக்காது வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதற்கு வடக்கு கிழக்கு தமிழ்த்தேசிய அரசியலும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். 

வடக்கு, கிழக்கில் உள்ள அரசாங்க, தனியார் காணிகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற நில அபகரிப்பு – ஆக்கிரமிப்பு என்பது வேறு, மலையமக்களின் மீள்குடியேற்றம் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக குழப்பியடித்து ஒன்றைத்தடுக்க மற்றையதை பயன்படுத்தும் சுயலாப அரசியலை  வடக்கு , கிழக்கு தமிழ்த்தேசிய அரசியல் தவிர்க்க வேண்டும். இதுவே மலையகதேசியத்திற்கு குறைந்த பட்ச பாதுகாப்பையாவது வழங்கும். மீள் குடியேற்றத்தின் ஒட்டுமொத்த இலக்கும் இதுவாகவே இருக்கவேண்டும்.