சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அணையா தீபமாக ஒளியூட்டும் சொல்லின் செல்வர்  இராசதுரை

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அணையா தீபமாக ஒளியூட்டும் சொல்லின் செல்வர் இராசதுரை

— பேராசிரியர் சு.சிவரெத்தினம் —

தமிழ்த் தேசிய அரசியலின் தோற்றம், வளர்ச்சி, அதன் இன்றைய நிலை எனப் பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்கவகையில் எத்தனைவிதமான மனிதர்களை இது அடையாளம் காட்டியிருக்கின்றது. தலைவர்கள், தியாகிகள், போராளிகள், அதிகார வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள், சுயநலமிகள், கோமாளிகள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. தமிழ் மக்களை வைத்து எவ்வாறான அரசியல் வியாபாரமெல்லாம் நடாத்தி பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் இந்த அரசியல் வியாபாரத்தில் உண்மையாக தமிழ் மக்களை நேசித்தவர்கள் பலர் வஞ்சிக்கபட்டு அவமானப்படுத்தப்பட்டு நோகடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்கள் என்பதும் வரலாறு எமக்குக் காட்டி நிற்கும் பாடங்களாகும்.

தமிழ்த் தேசிய வரலாற்றுப் பாடத்தில் அதிகார ஆசைக்கு தமிழ்த்தேசியம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று கற்றுக்கொள்வதற்கான முதல் அத்தியாயமாக விளங்குபவர்தான் மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரையாகும்.

தமிழ்த் தேசிய அதிகார மைய வெகுசன ஊடகப்பரப்பில் இராசதுரை அவர்கள் பற்றிய உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டவையாகும். 1985ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர்களுக்கு இந்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட செய்திகளே வரலாறாகச் சொல்லப்படுகின்றது. இதனால் இராசதுரை அவர்கள் பற்றிய உண்மையான புரிதல் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை. சரியான வரலாற்றை தேடி அறிந்து கொள்கின்ற ஆர்வம் கூட இல்லாது அரசியல் கோமாளிகளுக்கு குடைபிடிக்கின்ற கூட்டமாக தமிழ்ச் சமூகம் மாறிவருவதும் அவ்வாறான ஒரு சமூகத்தை உருவாக்குவதில் தமிழ் சமூக வலைத்தளங்கள் ஆர்வம் காட்டுவதும்தான் தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய போக்காக இருப்பது கவலையளிக்கின்ற விடயமாக இருக்கின்றது.

இவ்வெழுத்தானது இராசதுரை அவர்களுக்கு இழைக்கப்பெற்ற துரோகத்தனங்கள் பற்றிப் பேச முற்படவில்லை. நண்பர் ஸ்ராலின் அவர்கள் 07.12.2025ம் திகதி “அரங்கம்” மின்னிதழில் அதுபற்றிய ஒரு சுருக்கமான வெட்டுமுகத்தோற்றத்தை எழுதியிருக்கின்றார்.

செ.இராசதுரை அவர்கள் சமூகம், இலக்கியம், நாடகம், அரசியல், சுற்றாடல், பொருளாதாரம், கல்வி என பல்துறைகளில் முன்னோடியான பல பணிகளை மட்டக்களப்பில் செய்திருக்கின்றார். இக்கட்டுரையானது இராசதுரை அவர்களின் பணிகளில் ஒன்றான கல்விப் பணி பற்றிப் பேச முற்படுகிறது.

இராசதுரை அவர்கள் அரசடிப் பாடசாலையில் படித்த காலத்தில் முனைக்காட்டைச் சேர்ந்த அருளம்பலம் எனும் தமிழ் ஆசிரியரே அவருக்கு தமிழ் மீதான பற்றையும் காதலையும் விருப்பத்தினையும் ஏற்படுத்தியிருக்கின்றார். 8ம் வகுப்பில் இராமாயணத்தின் கையேயிப்படலமும் 9ம் வகுப்பில் கலிங்கத்துப் பரணி ஆகிய இலக்கியங்களை மிகச் சுவைபடக் கற்பித்ததன் காரணத்தினால் தொடர்ந்து தமிழ் இலக்கியங்களையெல்லாம் தேடிப்படித்து அதனை மாணவர்களுக்குச் சுவைபடச் சொல்கின்ற ஆற்றலை இராசதுரை வளர்த்துக் கொண்டார். 10ம் வகுப்பு படிக்கின்றபோது ‘ஜெயமனோகரா’ எனும் நாடகம் ஒன்றினை எழுதி அதில் மனோகராவாகப் பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த நாடகத்தினை பல மேடைகளில் அரங்கேற்றி அதன் மூலம் பெறப்பட்ட நிதியினை மத்திய கல்லூரியில் தமிழ் நூலகம் ஒன்றை அமைக்கும்படி அதன் அதிபரிடம் கையளித்தார். 10ம் வகுப்புப் படிக்கும்போதே நூலகத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இவ்வாறான ஒரு பெருஞ்செயலைச் செய்ததே அவருடைய முதல் கல்விப் பணி எனலாம்.

தமிழ் சமூகம் மூடநம்பிக்கைகள் இன்றி அறிவுடைய சமூகமாக வாழ வேண்டும் என்பதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது இந்த மக்கள் நலன்சார்ந்த அயராத உழைப்பையும் முயற்சியையும் அடையாளம் கண்ட மட்டக்களப்பு மக்கள் 1956ம் ஆண்டு அவரை பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். அன்றிலிருந்து மக்களின் மனதில் அசைக்கமுடியாத இடத்தினைப் பெற்றுக் கொண்ட இராசதுரையால் தங்களுடைய பதவிக்கு ஆபத்து வரலாம் என்பதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த துரோகத்தனங்களால் மனம் உடைந்து கட்சியை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்தச் சூழலில், அவர் அரசியலை விட்டு ஒதுங்காது அதேநேரம் தனது பிரதிநிதித்துவத்தை தனது சுயநலனுக்காக அரசோடு பேரம் பேசி தனது பைகளை நிரப்பிக் கொள்ளாது தனது கொள்கையில் அவர் தெளிவாக இருந்தார். இனியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து பயணிக்க முடியாது என்ற நிலையில்த்தான் அவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களுடன் தனது நிலை தொடர்பாக உரையாடினார். ‘நான் யாரோ ஓர் அமைச்சர் விட்டுப் போன அமைச்சர் பதவியில் உட்கார விரும்பவில்லை. நான் எந்த அரசியல் கொள்கைக்காக வாதாடினேனோ, போராடினேனோ, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேனோ அந்தக் கொள்கைக்கு பங்கம் இல்லாது  வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்த ஒரு பிரதேச அபிவிருந்தி அமைச்சின் முக்கியத்துவம் பற்றி அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களுடன் பேசினேன்.’ என்று கூறுகின்றார்.

இராசதுரை அவர்களின் வேண்டுகோளினை ஏற்ற ஜனாதிபதி பாராளுமன்றில் தனக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினால் அன்றிருந்த கட்சிமாறுதல் சட்டத்தினை இராசதுரை அவர்களுக்கு ஏற்றவண்ணம் மாற்றி பிரதேச அபிவிருத்தி, இந்து கலாசார, தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு எனும் புதிய அமைச்சினை உருவாக்கி அவருக்கு வழங்கியிருந்தார்.

இந்தப் பதவியினால் வரும் சுகபோகங்கள் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வாழாமல் கொடுக்கப்பட்ட அமைச்சினை வினைத்திறன் உள்ளதாக செயற்பட வைப்பதில் கடுமையாக உழைத்தார். தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சினால் உச்சபட்சமாக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்தார். தமிழரசுக் கட்சியினர் போராட்டங்களாலும் வெற்றுக் கோசங்களாலும் சாதிக்க முடியாத பல விடயங்களை தனது அமைச்சின் அதிகாரத்தின் மூலம் சாதித்துக் காட்டினார். குறிப்பாக தனிச்சிங்களச் சட்டத்தினால் சிங்களம் சித்தியடையமுடியாமல் வேலை இழந்த தமிழ் அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதற்கும்  வேலை பெறமுடியாது ஓய்வூதிய வயதை அடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குமான அனுமதியினை அமைச்சரவையில் பெற்றுக் கொடுத்திருந்தார். அதுபோன்று அனைத்து அரச காரியாலயங்களிலும் தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தும் பொருட்டு இலங்கையில் சிங்கள மொழியோடு தழிழும் அரசகரும மொழியாக அரசியல் யாப்பில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இவ்வாறு தமிழ் மொழி விடயத்தில் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் சாதிக்க முடியாத சாதனைகளை செய்திருக்கின்றார்.

இவற்றுக்கு அப்பால் இன்று அவருடைய அடையாளமாக பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்விக்கும், கலைக்கும் ஊற்றுக்கண்ணாக இருந்து கல்விச் சேவையும் கலைச் சேவையும் ஆற்றிக் கொண்டிருக்கும் சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினை 1982ம் ஆண்டு சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியாக ஆரம்பித்து வைத்த பெருமை இவரையே சாரும். அது மட்டுமன்றி மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள தொழில் நுட்பக் கல்லூரி, மட்டக்களப்பில் ஒரு தாதிமார் பயிற்சிக் கல்லூரி என்று நேரடியாக தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் கல்லூரிகளும் இவராலே ஆரம்பிக்பெற்றன.

இசை நடனத்துக்காக ஒரு கல்லூரியினை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கம் எவ்வாறு எழுந்தது எனும் கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது ‘வடக்கு மாகாணம் பலவிதங்களில் முன்னேறியிருந்தது. அவர்களின் மூலதனம் “கல்வி” எங்களுடைய மூலதனம் “வயலும், நீரும், நிலமும்தான்”. அதனால் அவங்கள் படித்து நல்லா முன்னேறினார்கள். இந்த விடயத்தை உணர்ந்து கொண்ட நான் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் எங்களுடைய பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளோடு போட்டிபோட முடியாது, அவர்கள் எல்லாவகையிலும் முன்னேறியிருக்கிறார்கள், அவர்களோடு போட்டிபோடுவது கஸ்ரம் ஆகவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஒரு சலுகை அரசாங்கத்தில் கொடுக்க வேண்டும் என கூறியபோது, செயற்குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் சிரித்துக் கொண்டு ‘என்ன நீங்கள் நொண்டிக் குதிரைகளையெல்லாம் ஓடவிடப் போகிறீர்களா’ எனக் கேட்டார். அது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அதுபோன்று ‘தமிழரசுக் கட்சிப் பத்திரிகையான சுதந்திரனில் நையாண்டித்தனமான கேள்வி பதில் பகுதியொன்று இடம் பெறும். ஒரு நாள் ‘மட்டக்களப்பின் விசேசம் என்ன?’ என்றொரு கேள்வியும் அதற்குப் பதிலாக ‘பாடும் மீன்கள், பாடாத பெண்கள், பேசாத பிரதிநிதி’ என்று பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிலும் என்னைப் பாதித்தது.

இங்குள்ள பெண்கள் வயலிலும் வாய்க்காலிலும் என்ன அழகான பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கும் போது இங்குள்ள பெண்கள் பாடமாட்டார்கள் என்று எவ்வாறு கூறமுடியும் என யோசித்தேன். அந்த நேரத்தில் கர்நாடக சங்கீதத்தை இந்தியா சென்று படித்தவர்கள் 4 அல்லது 5 பேர்தான் இருந்தார்கள்.

யாழ் நூலை எழுதிய சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணின் இந்த நிலையை மாற்றி நிறையப் பேர் இசையையும் நடனத்தையும் கற்பதற்கான வாய்ப்பாக சுவாமி விபுலாநந்தருடைய பெயரில் ஒரு கல்லூரியை நிறுவ வேண்டும் என அவாக் கொண்டேன். எனது விருப்பத்தினை ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக எழுத்து மூலம் சமர்ப்பித்தேன். எனது வேண்டு கோளினைப் பார்த்த ஜனாதிபதி எனது வேண்டு கோள் கடிதத்திலேயே ‘இவ்விடயத்தினை ஏன் உங்களுடைய அமைச்சின் கீழ் செய்ய முடியாது?’ என எனக்குப் பதில் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் கிடைத்தவுடன் இசை நடனக் கல்லூரியினை ஆரம்பிக்கின்ற பணியினை மேற்கொண்டேன். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுடன் தொடர்பு கொண்டு இசை, நடனக் கல்லூரியினை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடினேன். அவர் தன்னாலியன்ற அனைத்தும் செய்து தருவதாக உறுதியளித்து என்னை உற்சாகப்படுத்தி இப்பணியினைச் செய்வதற்கு மிகவும் உதவிபுரிந்தார்.    

இசை, நடனம் போன்றவற்றுக்கான பாடத்திட்டத்தினை வடிவமைக்கவும் சில அடிப்படைப் பாடநெறிகளில் பயிற்சி அளிக்கவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர் கே. சிவாநந்தம்பிள்ளை அவர்களை தமிழ்நாடு முதலமைச்சரின் சிபார்சின் பேரில் பெற்றுக் கொண்ட போதிலும் அவரை இங்கு பணிக்கு அமர்த்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரமும் பெற வேண்டியிருந்தது. அதனையும் ஜனாதிபதியினூடாகப் பெற்று அவருக்கான நியமனத்தினை வழங்கினோம். அத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு இலட்சம் பெறுமதியான நூல்களையும் இசைக் கருவிகளையும் அழகான நடராஜர் சிற்பம் ஒன்றினையும் அன்பளிப்பாக வழங்கி இதனை ஆரம்பிக்க உதவிபுரிந்தார்’.  

இவ்வாறு எந்தவித அரசியல் லாபங்களையும் கருத்தில் கொள்ளாது முழுக்க முழுக்க மக்களின் நலன்சார்ந்து ஆரம்பிக்கப்பெற்ற சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரி 2005ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பெற்று சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகமாக தரமுயர்த்தப்பட்டு இசை, நடனம், நாடகம், கட்புல தொழில்நுட்பக் கலைகள் குறிப்பாக ஓவியம், சிற்பம் என்பவற்றில் பட்டப்படிப்பை வழங்குகின்ற நிறுவனமாகத் திகழ்கின்றது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் என  ஒவ்வோரு வருடமும் அண்ணளவாக 400 மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக இசை, நடனம், நாடகம், கட்புல தொழில்நுட்பக் கலைகள் என்பவற்றில் முதுதத்துவமாணி, கலாநிதிப்பட்டங்களும் கிழக்குப் பல்கலைக் கழக பட்டதாரிகள் கற்கைகள் பீடத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

நடனம், சங்கீதம் என்பவற்றில் சாஸ்த்திரிய முறை கற்பிக்கப்பட்ட போதிலும் நாடகக் கற்கையில் ஈழத் தமிழர்களின் நாடக மரபுகள் சிறப்பாக மட்டக்களப்பின் கூத்து மரபு ஒரு பாடமாக கற்பிக்கப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இதுபோன்றே இசை, ஓவியம், சிற்பம் என்பவற்றிலும் ஈழத்தமிழர்களுக்கான அடையாளத்துடன் கூடிய மரபு கற்பிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற பிரஞ்ஞை இருந்த போதிலும் மேலைத்தேய மயமாக்கத்தினையும் சாஸ்த்திரிய முறையினையும் உடைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களுடைய கலைவடிவங்களை அதன் அடையாளத்துடனும் தனித்துவத்துடனும் உருவாக்கக் கூடிய கலையாளுமைகளுக்காக இந்நிறுவனம் காத்துக் கிடக்கின்றது.  

இராசதுரை அவர்கள் இவ்வாறு ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்தவர் என்றவகையில் அவர் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட மிக உன்னதமான பணி இது எனக்  கூறுவதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இருக்கமுடியாது. அவர் கனவு கண்டது போலவே இன்று மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பாடகர்களையும் நடனக்காரர்களையும் கொண்டிருப்பதோடு இலங்கையின் பல பாகங்களுக்கும் இங்கு கல்வி கற்று வெளியேறியவர்களும் நடனம், இசை, ஓவியம், நாடகம் போன்ற கலைகளை கற்பிப்பவர்களாக இருப்பது இராசதுரை அவர்களின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டின் விளைவாகும். இராசதுரை அவர்களை பொறுப்பற்ற விதத்தில் விமர்சித்தவர்களினதும்/விமர்சிப்பவர்களினதும் தூற்றியவர்களினதும் வாரிசுகள் இன்று இந்த நிறுவனத்தில் கல்வி கற்றும் வேலைவாய்ப்புக்களைப் பெற்றும் இருக்கின்றனர். இது தமிழ்த் தேசிய அரசியலின் முரண்நகையாகும்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களின் நிலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த அடிப்படைகளில் எந்த ஒன்றுக்கு பங்கம் ஏற்பட்டாலும் அது மொத்த தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கும், சிதைக்கும் என்ற புரிதல் தமிழ்த்தேசியவாதிகளுக்கு முக்கியமானதாகும். தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசுபவர்களின் தமிழ்த் தேசியத்தின் மையம் தமிழர் நிலமும் ஆட்சியுரிமை எனும் இரண்டு மட்டுமேயாகும். இந்த ஆட்சியுரிமையும் இந்த மண்ணில் சகல துன்பங்களையும் அனுபவித்த சாதாரணத் தமிழ் மக்களுக்குரியதல்ல, அது எந்தவித இராணுவ அடக்குமுறைக்கும் முகம் கொடுக்காது வெளிநாடுகளில் கல்வி கற்று ஆங்கிலம் பேசிக் கொண்டு வரும் தமிழ் மிதவாதத் தலைவர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானதாகவோ அல்லது பணம் உள்ளவனுக்கானதாகவோ இருக்கின்றது. இவர்களுக்குச் சாதாரண பொது மக்களின் பொருளாதாரம், பண்பாடு, கல்வி, சுகாதாரம், என்பவை பற்றி எவ்வித அக்கறையுமின்றி தமிழர்களை உசுப்பேற்றுகின்ற அரசியலே கடந்த 75 வருடங்களாக செய்து வருகின்றார்கள். ஆனால் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பொருளாதார வசதியும் கல்வி வசதியும், சுகாதார வசதியும் கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளை மிகக் கச்சிதமாக பெற்றுக் கொள்கின்றனர். சாதாரண ஏழைத் தமிழ் மக்கள் இவை இல்லாத மந்தைகளாக இருக்க வேண்டும் என்பதே இந்த பிழைப்புவாதத் தமிழ்த் தேசியம் பேசுவோருடைய நோக்கமாக இருக்கின்றது. இந்த நோக்கத்தை மாற்றி சாதாரண ஏழைத் தமிழ் மக்களுக்கும் தங்கள் காலடியில் உயர் கல்வியைக் கற்பதற்கான வசதியை பெற்றுக் கொடுத்த இராசதுரை அவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவராகும்.

10ம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நூலகத்தோடு ஆரம்பித்தவர் அமைச்சரானபோது ஒரு கல்லூரியை ஆரம்பித்து இன்று பலஆயிரக்கணக்கானவர்களுடைய வாழ்க்கைக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றார். அவர் கூறியது போல் அவர் என்ன நோக்கத்துக்காக போராடினாரோ மக்களிடம் வாக்குக் கேட்டாரோ அந்த சொல்லில் இருந்து விலகாது மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஒளி தீபமாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.