பெருந்தலைவர் இராஜதுரையை கொண்டாடுவோம்..!(வெளிச்சம்: 095)

பெருந்தலைவர் இராஜதுரையை கொண்டாடுவோம்..!(வெளிச்சம்: 095)

— அழகு குணசீலன் —

செல்லையா இராசதுரை என்ற சொல்லின் செல்வர் இராஜதுரையின் மரணச்செய்தியால், மட்டக்களப்பு மக்கள்  கனத்த இதயங்களை சுமக்கிறார்கள்.

காரணம் இராசதுரை மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மாநகர பிதா, மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியின் முதலாவது  உறுப்பினராக 33 ஆண்டுகள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை அலங்கரித்தவர், ஒரு  ஜனநாயக அரசியல்வாதி என்பதற்கும் அப்பால் அவர் ஒரு சகாப்தம். பெருந்தலைவர்.

மானிடவியல் தத்துவார்த்தம்: 

பெருந்தலைவர் இராதுரை ஒரு குறிப்பிட்ட துறைக்குள் தன்னை வரையறுத்துக்கொண்ட ஒரு தத்துவார்த்தவாதியல்ல. அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, மதம் -ஆன்மீகம், பகுத்தறிவு, சீர்திருத்தம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம், அரசியல் அறம், ….போன்றவற்றை தன்னகத்தே உள்வாங்கிக்கொண்டு செயற்பட்ட தசாவதானி. தத்துவஞானி. இதனால் பெருந்தலைவர் இராசதுரையை ஒரு ‘கூட்டுத்தத்துவஞானி‘(COLLECTIVE/ COLLABORATIVE  PHILOSOPHER) என்று கூறினால் அது மிகையல்ல. அவர் தனிமனித தத்துவார்த்த கருத்தியலை அன்றி சமூக தத்துவார்த்த கருத்தியலை கொண்டிருந்தார். இதனால் அவரின் பன்மைத்துவ, பல்துறை ஈடுபாடு வியாபித்திருந்து.

மானிடவியலாளர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மாக்சிய கருத்துக்களுடன், பகுத்தறிவுவாதிகளுடன் முரண்படுவதில்லை. மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு விழுமியங்களில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கு குறுக்கே நிற்பதில்லை. அவற்றை அங்கீகரித்து அந்த நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள கருத்தியலை அறிய -ஆய்வு செய்வர். இதுதான் கிழக்கின் கண்ணகி வழிபாட்டின் ஊடாக இராசதுரையை சிலப்பதிகார உரையாளனாக மாற்றியது. சைவ சமயத்தின் பின்னால் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் இரகசியங்களை மானிடவியல் நோக்கில் அணுக வழிவகுத்தது.

1977 பொதுத்தேர்தல்:  

1977 பாராளுமன்ற பொதுத்தேர்தலில்   மட்டக்களப்பில் அ.அமிர்தலிங்கத்தின் நடு நிலையற்ற நிலைப்பாட்டிற்கு சிறந்த உதாரணம் “வடக்கில் இருந்து வந்த தமிழர்விடுதலைக் கூட்டணியினர் காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது”.  பெயரளவில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி இது நடந்தது. கோவை மகேசன், ஈழவேந்தன், ரகுபதி பாலசிறிதரன், அந்தனி சில் …… போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

இவர்கள், காசி ஆனந்தனுக்கு ஆதரவான பிரச்சாரங்களில் 1970 தேர்தல் முடிவை உதாரணமாக மேற்கோள் காட்டி “1970 தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர்கள் தொகுதியில் இரண்டு தமிழர்கள் வெற்றி பெற முடியுமானால், தற்போது இந்தத் தேர்தலில் ஏன் இரண்டு தமிழர்கள் -காசி ஆனந்தனனும், செ.இராசதுரையும் வெற்றி பெறமுடியாது? “ என்று கேள்வி எழுப்பினார். முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அபகரிக்கின்ற இந்த தவறான கருத்தை இராசதுரையும், எஸ்.பொன்னுத்துரையும் (எஸ்.பொ) மிகவும் கடுமையாக கண்டித்தனர். இவ்வாறு  சகோதர சிறுபான்மைத்தேசிய இனமான மட்டக்களப்பு தொகுதி முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசியல் நேர்மையாளனாக தன்னை அடையாளப்படுத்தியவர் பெருந்தலைவர் இராசதுரை. தேர்தல் வெற்றிக்காக இது விடயத்தில் அவர் மௌனம் சாதிக்கவில்லை.

 பெருந்தலைவரிடம்  மார்க்ஸ்ஸை, லெனினை, பெரியாரை, காந்தியை, அண்ணாவை, தந்தை செல்வாவை -திராவிடத்தை, பகுத்தறிவை,  தமிழ்த்தேசியத்தை, இலங்கை தேசியத்தை, சீர்திருத்தத்தை …. இவை போன்ற இன்னும் பலவற்றை காண்கிறோம். பிற்காலத்தில் ஆன்மீகத்தை  பெருந்தலைவரின் நல்ல நண்பரான கண்ணதாசனின் அர்த்தமுள்ள  இந்துமதம் நூலின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு தத்துவார்த்த வாழ்க்கையை அவரிடம் காணமுடிந்தது.

வி. நவரெட்டணம் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்.  கொள்கை முரண்பாடுகள் காரணமாக தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி 1960 இல் “தமிழர் சுயாட்சிக்கழகத்தை” நிறுவியவர்.  அவர் பெருந்தலைவர் பற்றி கூறுவதை படியுங்கள்…..

 …..வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதில் பாரம்பரிய மட்டக்களப்பு – -யாழ்ப்பாண தப்பெண்ணத்தை முறியடிப்பதில் அவரது பங்களிப்பு குறைவானதல்ல” என்கிறார் வி.நவரெட்ணம்.

“தப்பெண்ணம்” என்ற வடக்கு அரசியல்வாதிகளின் கருத்தை இல்லை…. இல்லை…. அதுதான் “உண்மை”  என்று பிற்காலத்தில் பெருந்தலைவர் இராசதுரை அனுபவத்தில் அமிர்தலிங்கத்தின்  சதியின் ஊடாக அறிந்து கொண்டார்.  வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே அவர் கட்டிய சமூக, பொருளாதார, அரசியல் உறவுப்பாலத்தை தகர்த்தவர் அ.அமிர்தலிங்கம். பெருந்தலைவர்  கட்சியை விட்டு வெளியேறியது (?) கொள்கை முரண்பாடுகள் காரணமாக அல்ல என்பதை தமிழ் கூறும் நல்உலகம்  அறியும். 

அ.அமிர்தலிங்கத்தின் விரோதம், நயவஞ்சகம், குத்து வெட்டு, கழுத்தறுப்பு  இராசதுரைக்கு பெரும் அழுத்தமாக இருந்தது. கட்சியை கூட்டி ஜனநாயக வழியில் இராசதுரையை  விலக்க முடியாத நிலையில் அவர் தானாகவே ஓடட்டும் என்ற அளவுக்கு  அந்த உளவியல் சித்திரவதை இருந்தது.  இத்தனைக்கும் மத்தியில் 1977 முதல் 1979 வரை  இராசதுரை பொறுமை காத்தார் – இந்த உளவியல் சித்திரவதையை சுமந்தார்.

தனது விலகலை (?) தனக்கு நடந்த அனைத்து அநியாயங்களையும் பட்டியல் இட்டு ஒரு பெரும் நூலையே அவரால் எழுதியிருக்க முடியும். ஆனால்” விலகினேனா? விலக்கப்பட்டேனா?” என்று ஒரு சிறு கைநூலை மட்டுமே மக்களுக்கு  விளக்குவதற்காக அவர் வெளியிட்டார். இது அவர் கொள்கை முரண்பாட்டில் அல்ல தனக்கு எதிரான அநீதிகளுக்காகவே கட்சி மாறினார் என்பதை இன்னும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. “இதனால்தான் ராசதுரை மட்டக்களப்பு மக்களுக்கு பெருந்தலைவர்”.

தந்தையின் விழாவுக்கு வந்த தனயனுக்கு கறுப்புக்கொடி: 

வடக்கிற்கும் கிழக்கிற்கும் பாலமாக இருந்தும், தந்தை செல்வாவுடன் நீண்ட காலம் பயணித்தும்  தமிழரசுக்கட்சியை பாதாளத்தில் வீழ்ந்து விடாமல்  காப்பாற்றிய பெருந்தலைவரை, தந்தை செல்வாவின் 35 வது ஆண்டு நினைவில் கலந்து கொள்ள அழைப்பின் பேரில் வந்த போது சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டினார். அது மட்டுமா பெருந்தலைவரை “ஒரு சமூகப்பெயரை” குறிப்பிட்டு அவமானப்படுத்தினார்.  சிவாஜிலிங்கத்தின் பிரேசவாதத்தையும், யாழ்.மேலாதிக்க திமிரையும், சாதிவெறியையும்  இது காட்டுகிறது. கடந்த 98 ஆண்டுகளில் சிவாஜிலிங்கத்தை போன்று எத்தனை பூச்சாண்டிகளை  இந்த அஞ்சா நெஞ்சன் சந்தித்திருப்பார்.

கட்சி கொடியை முறித்தவருடன் கடைசிவரை உறவு: 

1970 பொதுத்தேர்தல் காலத்தில்  மகிழடித்தீவு சந்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களான இளைஞர்கள் கூட்டமாக திரண்டிருந்தனர். அப்போது மண்முனை துறையில் தமிழரசுக்கட்சியின் மூவர்ண கொடி கட்டப்பட்ட கார் ஒன்று கொக்கட்டிச்சோலை பக்கம் பயணிக்க படகுப்பாதைக்கு காத்து நிற்கிறது என்ற செய்தி காதில் விழுந்தது. அந்தக் கார் பட்டிருப்பு தொகுதி வேட்பாளர் எஸ்.எம்.இராசமாணிக்கத்தின் கார் என்றே இளைஞர்கள் நம்பினர். 

கார் மகிழடித்தீவு சந்திக்கு வந்த போது வழியை மறித்து நிறுத்தினர். உள்ளே இருந்தது இராசமாணிக்கம் அல்ல இராசதுரை. அப்போது இராசதுரையோடு முனைக்காடு பாலிப்போடி இன்பராசா பேசினார். “நாங்கள் மண்முனை மேற்கிற்கு பிரச்சாரத்திற்கு போகின்றோம்”என்றார் இராசதுரை. அந்தச் சந்தர்ப்பத்தில் இன்பராசாவின் ஒரு கை காரில் கட்டப்பட்டிருந்த அந்த கொடிக் கம்பத்தில் இருந்தது. கவிக்குயில் சிவஞானம் இன்பராசாவின் கையில் அடிக்க, கொடி முறிந்து விட்டது. இன்பராசா தமிழரசுகட்சி கொடியை முறித்துவிட்டார் என்று ஊரெல்லாம் கதை. உண்மையில் என்ன நடந்தது என்பது  இராசதுரைக்கு தெரியும். அன்றிலிருந்து இன்பராசாவுக்கும் பெருந்தலைவருக்குமான உறவு தொடர்ந்தது. எந்த அரசியல் வாதியிடம் இந்த புரிந்துணர்வை -உறவை எதிர்பார்க்க முடியும்.

அண்மையில்  மட்டக்களப்பிற்கு பெருந்தலைவர் வந்திருந்தபோது இன்பராசாவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து சந்திக்கவேண்டும், சாப்பாடும் வேண்டும்  என்று உரிமையோடு கேட்டாராம். அத்துடன் நான் “எனது மண் படுவான்கரையை ஒரு முறை பார்க்கவேண்டும்”என்றும் சொல்லியிருக்கிறார். ஒன்று கேட்டால் இரண்டு செய்யும் இன்பராசா கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பிரதம குருவுடன் தொடர்பு கொண்டு பெருந்தலைவர் வருகிறார் விசேட பூசை ஒன்றுக்கு ஒழுங்கு பண்ணுங்கள் என்றும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

சந்திப்பிற்கு பின்னர் சந்தோஷமாக படுவான்கரைக்கு புறப்பட்டு இருக்கிறார்கள். மண்முனைப்பாலத்தடியில் காரை நிறுத்தச்சொல்லி பாலத்தை பார்த்திருக்கிறார். பெருந்தலைவர் இராசதுரை அமைச்சராக இருந்த போது மண்முனைப்பால நிர்மாணத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் ஆயுதப்போராட்டத்தின் தீவிரத்தில் பாலப்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. 

வரலாற்றில் மண்முனை பாலத்திற்கு இரண்டு சோதனைகள் வநதன.‌ ஒன்று நிலப்பிரபுத்துவம் “மாடுகள் களவுபோகும் என்று” பாலம் வேண்டாம் என்ற அரசியல். மற்றையது விடுதலைப்போராட்டம் “ஆமிவருவான்” என்று பாலப்பணிகளை தடுத்து நிறுத்தியது.  இறுதியில் பாலம் இல்லாமலே ஆமி எல்லாப்பக்கத்தாலும் வந்து கொக்கட்டிச்சோலை பகுதியே அழிந்தது. 

இந்த நினைவுகளுடன் பெருந்தலைவர் தான்தோன்றீஸ்வரரை தரிசித்து விட்டு மணற்பிட்டி -காஞ்சிரங்குடா-மண்டபத்தடியூடாக வலையிறவுப்பாலம் கடந்து மட்டக்களப்பு வந்திருக்கிறார். பயணத்தின் போது அப்பகுதியின் கிராமங்களின் பெயர்கள், ஊர்ப் பெரியவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு குசலம் விசாரித்திருக்கிறார் அவர். படுவான்கரையை பார்த்த திருப்தியில் அவரின் இறுதிப்பயணம் இருந்திருக்கும் என்று நம்புவோம்.

பெருந்தலைவரை கொண்டாடுவோம்: 

பெருந்தலைவருக்கு பேராசிரியர் மௌனகுரு எழுதியுள்ள நினைவுக் குறிப்பில்,  இரு விடயங்கள் வெளிச்சத்தின் கவன ஈர்ப்பை பெற்றுள்ளன. ஒன்று அவர் பாராளுமன்றத்திற்கு முதன்முதலில் தெரிவு செய்யப்பட்டபோது “இவர் என்ன, பாராளுமன்றத்தில் சிலப்பதிகாரம் பற்றியா பேசப்போகிறார்?” என்ற கேலிசெய்யப்பட்டமை குறித்த தகவல்.

உண்மைதான்! நான் பொருளாதார மாணவனாக உயர்தர வகுப்பிலும், பல்கலைக்கழகத்திலும் கற்ற போது  குறிப்பாக வரவுசெலவுத்திட்ட உரைகளில் அவர் ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி பேசியதை  செவிமடுத்துள்ளேன். அன்று எனக்கு  அந்த உரை தலைப்புக்கு  சம்பந்தம் இல்லாத ஒன்றாக சலிப்பைத்தந்தது. 

ஆனால், பின்வந்த தமிழ்த்தேசிய எழுச்சிக் காலத்தில் அந்த உரைகளுக்கு பின்னால் இருந்த அரசியலை எண்ணி வியக்கவேண்டி இருந்தது. சிங்கள பௌத்த பேரினவாத அரசியலில் உள்ள நியாயமின்மையை அவர் இலக்கியங்களை கொண்டு புட்டு, புட்டு வைத்தார். 

மகாபாரதத்தில் பெரும்பான்மை கௌரவர்கள், பஞ்சபாண்டவர்களிடம் அறமற்ற அரசியல் தோற்றுப்போனதை நினைவுபடுத்தினார். இராமாயணத்தில் கூனியின் சதியால் இராமர் காட்டுக்குப் போகவேண்டிய அரசியல் சதியை எடுத்துரைத்தார். சிலப்பதிகாரத்தில் நீதி தவறிய ஆட்சி தலைவனுக்கு கண்ணகி கற்பித்த பாடத்தை பேசினார். இந்தக் கதைகள் தமிழ்தேசிய இனத்தின் விடுதலையின் பால் உள்ள நியாயத்தன்மையை பேசின. ஆம்! பெருந்தலைவர் இராசதுரை வரவு செலவுத் திட்ட விவாதங்களை இலக்கிய மேடையாக மாற்றினார் என்பது உண்மைதான். 

மற்றையது பெரியவரின் பேத்தி சரண்யாவுக்கு எழுதிய செய்தியின் சில வரிகள்.

 …..அவர் இறப்பு இரங்குதற்குரியதன்று. அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. இரங்கல் வேண்டாம், கொண்டாடுவோம்.”

 ஆம்! அருமைகளும், பெருமைகளும் நிறைந்த இந்த பெருமகனை நாம் எவ்வாறு கொண்டாடப்போகிறோம்….?

(*). மட்டக்களப்பு நகரில் அன்னாருக்கு முழு உருவச்சிலை ஒன்றை நிறுவுவதன் மூலம் மட்டக்களப்பு தமிழகம் அவரை கொண்டாட முடியும். மட்டக்களப்பு மாநகர சபை, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம், மட்டக்களப்பு வர்த்தக சங்கம், விபுலானந்த இசை நடன அழகியற்கற்கைகள் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த பணியை செய்வது பற்றி ஆலோசிக்க வேண்டும். 

(*). கிழக்கு பல்கலைக்கழகம் பெருந்தலைவர் இராசதுரைக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்குவதற்கு மட்டக்களப்பின் கல்விச்சமூகமும், நிறுவனங்களும், சிவில் அமைப்புக்களும் சிபாரிசு செய்யமுடியும். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் இதில் உள்வாங்கப்படலாம்.

(*). பெருந்தலைவர் இராசதுரை தொடர்பான எழுத்துக்களையும், அவர் ஆற்றிய உரைகளையும் தொகுத்து ஒரு வரலாற்று ஆவணத்தை நூல் வடிவில் வெளியிடலாம். இதற்கு தமிழக, மலேசிய நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

(*) இவை அனைத்திற்கும் புலம்பெயர்ந்து வாழும்  இலங்கை மக்களிடம் இருந்து நிதி உதவிகளை கோர முடியும்.

இவற்றை இலகுவாக சொல்லி விடலாம் ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?  

இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குழுவினரிடம் பொறுப்புக் கொடுக்கலாம்.

ஆனால் அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரே ஆளுமையாக பேராசிரியர் சி.மௌனகுருவே  அடையாளப்படுத்தப்படுகிறார். மேற்கூறிய அனைத்து தரப்புடனும் தொடர்பை பேணும் ஒருவராக செயற்பாட்டுத் தளத்தில் அவரே உள்ளார். 

 ஐயா பேராசிரியர் மௌனகுருவே வாருங்கள்!

சரண்யாவுக்கு நீங்கள் எழுதிய வார்த்தைகளை அனைவரையும் ஒன்று சேர்த்து நனவாக்குவோம்.

பெருந்தலைவர் இராசதுரையை கொண்டாடுவோம்.