அனர்த்த முகாமைத்துவம்:  எதிர்கட்சிகளின் பங்கு என்ன..?(வெளிச்சம்:094)

அனர்த்த முகாமைத்துவம்: எதிர்கட்சிகளின் பங்கு என்ன..?(வெளிச்சம்:094)

— அழகு குணசீலன் —

எமது அரசியல் அமைப்பு, இலங்கை ஒரு ஜனநாயக சோஷலிசக்குடியரசு என்று கூறுகிறது. அங்கு அரச தலைவராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்கிறார். அமைச்சரவைக்கும் அவரே தலைமை தாங்குகிறார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் தலைமை பிரதமரிடம் இருக்கிறது. பிரதமர் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் ஒரு அமைச்சரவை உறுப்பினர். எதிர்கட்சி தலைவர் பதவி ஒரு ஜனநாயக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு சமமானது. அதற்கான அனைத்து உரிமைகளையும், பொறுப்புக்களையும் அரசியல் அமைப்பும் மற்றும் பாராளுமன்ற நடைமுறைச்சட்டங்களும் வழங்குகின்றன.

ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையை பொறுத்து அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் தேசிய நலன் கருதி ஒன்றிணைந்தும், கொள்கை ரீதியான முரண்பாடுகளில் உடன்பாடில்லாத போது  இயலுமானவரை விட்டுக்கொடுப்புகளுடன் ஒரு இணக்கத்தை கண்டும் அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்டும்  கூட்டாக செயற்பட முடியும். குறிப்பாக இலங்கையின் இன்றைய இயற்கை அனர்த்த அவசரகால சமூக, பொருளாதார, அரசியல்  அசாதாரண சூழலில் இது சாதாரண சூழலிலும் முக்கியமானது. ஒட்டு மொத்தத்தில் நாட்டினதும், மக்களினதும் நலன் சார்ந்து இந்த ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாகின்றது.

 அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருப்பதனால்  அல்லது பலமான அரசாங்கம் என்பதனாலும், பலவீனமான, ஒற்றுமையற்ற எதிர்கட்சி  கட்டமைப்பை கட்சி அரசியல் நலன் சார்ந்து ஒதுக்கி விட்டு செயற்படுவது முறையற்றது. இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆபத்தானது மட்டும் அன்றி முரணானதுமாகும். அதேபோன்று தேசிய நலன் சார்ந்து இன்றுள்ள அசாதாரண இடர்க்காலத்தில் கட்சி அரசியல் கடந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டிய கடமைப்பாடு எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.

இலங்கையின் இன்றைய இயற்கை அனர்த்த நிலைமைகளின் களநிலை சரி, பிழைளுக்கு அப்பால் பொறுப்பு கூறவேண்டிய கடமைப்பாடு நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் இயங்குநிலை நிர்வாகமாக  மையமாக -இயந்திரமாகவுள்ள அரசாங்கத்திற்கு உரியது. அதேவேளை எதிர்க்கட்சியினர் ஜனநாயக பாராளுமன்றம் ஒன்றில் அவர்களுக்கு உரிய பொறுப்புக்களையும் புறம் தள்ளமுடியாது. மறுபக்கத்தில் அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் பொறுப்பை தட்டிக்கழிக்காது புரிந்துணர்வுடன் செயற்படவும் வேண்டும். 

இந்த வகையில் எதிர்கட்சிகளின் பொறுப்பும், கடமையும் எவை?

  1. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்தல். அரசாங்கத்தின் நடவடிகைகளை விமர்சனம் செய்தல்.
  1. அரசாங்க ஆலோசனைகளுக்கு மாற்றாக மாற்று கருத்துக்களையும், மாற்று அணுகுமுறைகளையும் முன்வைத்தல்.
  1. நாட்டு மக்களில் சிறுபான்மையினரின் (எதிர்கட்சி ஆதரவாளர்கள்) விருப்பு, வெறுப்புக்களை பிரதிநிதித்துவம் செய்தல்.
  1. மேற்கூறிய பொறுப்புக்களையும், கடமைகளையும் எதிர்கட்சியாக ஒரு ஜனநாயக பாராளுமன்றத்தில் செய்யமுடியாமல் போனால், அதாவது அரசாங்கம் பாராளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி எதிர்கட்சிகளின் ஜனநாயக செயற்பாட்டிற்கு தடையாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால், அதற்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராட்டங்களை செய்தல்.

அநேகமான நாடுகளில் எதிர்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது, எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கும் போது இந்த பொறுப்பு காலப்போக்கில் இயல்பாகவே, ஓவியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில், மற்றும் துறைசார் மனித உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர் – பெண்ணுரிமை, ……அமைப்புக்களின் கரங்களுக்கு மாற்றப்படுகிறது. இந்தப்பிரிவினருக்கும் கருத்து, எழுத்து சுதந்திர உரிமைகள் மறுக்கப்படும் போது மறைமுகமாக செயற்படும் இயக்கங்களுக்கும் (UNTER GROUND MOVEMENTS)  அதன் பின்னணியிலான அரசாங்க எதிர்ப்பு பேரணிகளுக்கும் வாய்ப்பாக அமைகிறது. இந்த போராட்ட வளர்ச்சி போக்கு குறித்து ஜே.வி.பி.க்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை. ஏனெனில் அதுதான் அவர்களின் அரசியல் வீதி வரைபடம். வேண்டுமானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்? அதைத்தான் நாங்களும் செய்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் நினைவுபடுத்தலாம்.

 ஒரு ஜனநாயக நாட்டில் -பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் கடமைகளை செய்யமுடியாமல் போனதன் இறுதி விளைவே காலிமுகத்திடல் ‘அரகலய’ என்பதையும், அரச தலைவர் கோத்தாபாய நாட்டை விட்டு ஓடிய பின்னரும், பாராளுமன்ற பெரும்பான்மையூடான அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க பாராளுமன்றத்தை கொளுத்த ஜே.வி.பி.விடுத்த அறைகூவலையும், யார் மறந்து இருந்தாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறக்க வாய்ப்பில்லை.

  கடந்த அரசாங்க காலத்தில் ஜே.வி.பி.  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கூறிய ஐந்து பொறுப்புக்களையும், கடமைகளையும் சுதந்திரமாக செய்யமுடியாத நிலையில் மக்கள் போராட்டமாக அது வெடித்தது. இன்றைய ஜனாதிபதி அன்று பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி  மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுப்புக்களுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த ஒருவர். பொருளாதார நெருக்கடிக்கு ஊழல், இலஞ்சம், தரகுப்பணம், மற்றும் குடும்ப, உறவினர் ஆட்சியே பொறுப்பு என்று 400 கோப்புக்களுடன் பாராளுமன்றத்தில் தோன்றியவர். இதற்கு  முறைமை மாற்றமே ஒரேவழி என்று ஆட்சியை அறுவடை செய்தவர். 

 எனவே இன்றைய எதிர்க்கட்சிகள் அன்று அவர் ஏற்ற பொறுப்பையும், செய்த கடமையையும் நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளன என்பதை அரசாங்க தரப்பு முதலில் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  ஜனாதிபதி அண்மையில் அனர்த்த முகாமைத்துவ விஷயங்களை மாவட்ட மட்டத்தில் மேற்கொண்ட  “எங்கள் எல்லோருக்கும் எவரையும் கேள்வி கேட்கின்ற உரிமை உண்டு’ என்று  ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால் பாராளுமன்றத்தில் இடம் பெறும் கேள்வி, பதில்களை கேட்கும் போது அருவருப்பாக இருக்கிறது. சிலர் ஜனாதிபதியின் கருத்துக்கு முரணான கருத்துக்களை வெளியிட்டு அவரைச் சங்கடப்படுத்துகின்றனர்.

 எதிர்க்கட்சிகளின் பொறுப்பும், கடமையும் என்னும் போது அரசாங்கத்தின் அனைத்து அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளையும் நிராகரிக்கவேண்டும் என்பதோ அல்லது அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் நியாயமான விமர்சனங்கள், ஆலோசனைகள், கோரிக்கைகளை பெரும்பான்மையை பயன்படுத்தி புறந்தள்ள வேண்டும் என்பதோ அல்ல. பேரிடர் காலம் ஒன்றில், அனர்த்த முகாமைத்துவம் குறித்து மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் கட்சி அரசியல் செய்யாது ஒன்றிணைந்து செயற்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிவாரண, மீள் கட்டமைப்பு நிதி உதவிகளை செய்ய முன்வந்துள்ள சர்வதேசத்திற்கும் பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருக்கும். ஊர் இரண்டு பட்டால் நன்மையடைவது யார்? என்பது அரசாங்க, எதிர்கட்சி தரப்புக்களுக்கு தெரியாத பூகோள அரசியல் அல்ல.

அண்மைய இயற்கை அனர்த்தம் தொடர்பாக எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு தேசிய, பிராந்திய, சர்வதேச காலநிலை அறிக்கைகளை கணக்கில் எடுத்து முன் ஏற்பாடுகளை செய்யவில்லை என்பதாகும். அதேவேளை இந்த அறிக்கைகளை இன்று பாராளுமன்றத்தில் பட்டியலிடும் எதிர்கட்சிகள், இந்த அறிக்கைகளை முன்வைத்து அனர்த்தத்திற்கு முன்னர் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முற்காப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அப்படி  நடந்திருந்தால் அதற்கு பதிலளிக்கவும், சில ஏற்பாடுகளை செய்யவும் அரசாங்கத்திற்கு உதவியாக இருந்திருக்கும். இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளில் பல அனர்த்தத்திற்கு முன்னர் எழுப்பப்பட்டிருக்க வேண்டியவை. எனவே இது விடயமாக அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள பொறுப்பு கூறல் வகிபாகம் 50:50. தவறுகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி விட்டு பின்னர் பிழைபிடிப்பது அப்பட்டமான கட்சி அரசியல் நகர்வு.

சாணக்கியன் எம்.பி. பாராளுமன்றத்தில் அனர்த்த உயிர் இழப்புக்களை ‘அரசாங்கம் செய்த கொலை’ என வர்ணித்தது முழுமையாக ஏற்புடையதல்ல. அவரது முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, பொறுப்புடன் செயற்படவில்லை, எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்களை விடவும், ‘அரசாங்கம் செய்த கொலை’ என்ற வார்த்தை மட்டும் அல்ல அவரது தொனியும் கண்டிக்கத்தக்கது. ஒரு  கடினமான விடயத்தையும் மென்மையாக எடுத்துச் சொல்ல முடியும். ‘இந்த உயரிய சபையில் என்று பேச்சை  தொடங்கி ….’ பலர் அந்த சபையை தாழ்த்தி -தரம் குறைத்து விடுகிறார்கள்.‌ இவர்கள் ஆளும், எதிர் இரு தரப்பிலும் உள்ளனர்.

மறுபக்கத்தில் அவகாலச்சட்டத்தை பிரகடனம் செய்யப்படவேண்டும், அனைத்து கட்சிகளுடன் பேசவேண்டும், சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டவேண்டும்…. போன்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் சாதகமாக பார்க்கப்பட்டதுடன், பதிலளிக்கப்பட்டும் உள்ளன. ‘நாட்டை  கொண்டு நடாத்த முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படையுங்கள்’, ‘சர்வதேச நாணயநிதியத்துடன் உங்களுக்கு பேச முடியாவிட்டால் நாங்கள் பேசுகிறோம்’ என்ற எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாசவின்  கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி “அணே ப்ளீஸ் எபா” என்று பதிலளித்துள்ளார். 

கோத்தபாயவின் பொருளாதார நெருக்கடி காலம் போன்று ஆட்சி இயந்திரம் கொழும்பில் செயலிழக்கவில்லை. நிச்சயமற்ற அரசியல் எதிர்காலத்தை கொண்ட தள்ளாடும் – தொங்கு அரசாங்கமாகவும் இந்த அரசாங்கம் இல்லை. அப்படியான நிலையில் எந்த அரசாங்கமும்  அதற்கான பொறுப்பை எதிர்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்போவதில்லை. மேலும் ஜனாதிபதி கூறியது போன்று அது ஐ.எம்.எப்.க்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம், அதை சட்டரீதியான அதிகாரத்தை கொண்டுள்ள  இரு தரப்புமே கையாளவேண்டும் .  வேண்டுமானால் சஜீத் பிரேமதாச இருதரப்பும் சேர்ந்து இந்த தேசிய நெருக்கடி குறித்து ஐ.எம்.எப்.உடன் பேசுவோம் என்று கோரியிருந்தால் அதன் செயற்றிறன் வேறாக இருந்திருக்கலாம். அரசாங்கத்தின் பதிலும் சாதகமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

உதய கம்பன்வலவின் 16 அம்ச குற்றப்பத்திரிகை, அதற்கு 5 ஆண்டுகள் சிறை, ரணில் விக்கிரமசிங்க தரப்பின் அரசியல் அமைப்பு சட்ட மீறல்….. இவை எல்லாம் நீதிமன்ற விவகாரங்கள். ஜனாதிபதிக்கு எதிராக பதவிக்காலத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதும் இவர்களுக்கு தெரியாததல்ல. அப்படியானால் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களா?  இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன?

எது எப்படியோ, அரசாங்க, எதிர் தரப்புக்களுக்கு இன்று இருக்கின்ற பொறுப்பு இயற்கை அனர்த்த பாதிப்புக்களுடன், ஏற்கனவே சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்தும் நாட்டை மீட்பதற்கான  நம்பிக்கையை  மக்களுக்கு ஊட்டக் கூடிய பணிகளை முன்னெடுப்பதுதான். அரசாங்கம் நிவாரணங்களை – இழப்பீடுகளை அறிவித்திருக்கிறது இது விடயமாகவும், மீள் கட்டமைப்பு தொடர்பாகவும், எண்ணற்ற கேள்விகள் உண்டு. யாரையும், யாரும் கேள்வி கேட்க வேண்டும் என்று ஜனாதிபதி  முதுகில் தட்டிக்கொடுக்கிறார். ஆக, எதிர்க்கட்சிகள் அரசியல் நாகரிகத்துடன்  கேள்விகளை, ஆலோசனைகளை, மாற்று சிந்தனைகளை முன் வைத்து நாட்டை கட்டியெழுப்ப முன்வரவேண்டும். இதை விடுத்து எந்த தரப்பாவது கட்சி அரசியல் விளையாட்டை காட்டினால் அதற்கு காலம் பதிலளிக்கும். 

ஒரே கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்  அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் குறித்து முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவது எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை வெளிக்காட்டுகிறது. இதனால் இந்த இடர்க்கால சூழலில் “அரசாங்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது” என்பது காலம் உங்களுக்கு இட்டுள்ள கட்டளை.