NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

— கருணாகரன் —

ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. 

எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பது என்ற அடிப்படையில் செயற்படுவது இன்னொரு வகையான வியூகம். இரண்டையும் மிகக் கச்சிதமாகச் செய்கிறது NPP. 

“இதில் என்ன புதுமை உண்டு?எந்த அரசியற் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான இயல்புதானே இது? முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டினார்கள். ‘நிலையான அபிவிருத்தி‘, ‘அரசியற் தீர்வுக்கான முயற்சி‘, ‘புதிய அரசமைப்பு உருவாக்கம்‘ என்றெல்லாம் எத்தனையோ படங்கள் காட்டப்பட்டது. இப்பொழுது NPP தன்னுடைய வேலையைச் செய்கிறது. அது அப்படிச் செய்யும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். சனங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் தீர்மானித்துக் கொள்வர்“ என்று சிலர் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உண்மை உண்டு. ஆனால், அதற்காக ஏனைய தரப்புகளோடு NPP யை சமப்படுத்திப் பார்க்க முடியாது. NPP வேறான ஒன்று. அதனுடைய அடித்தளமும் செயற்பாட்டு முறையும் அதற்கான நுட்பங்களும் வேறு. ஏனைய கட்சிகளிலிருந்தும் முந்திய ஆட்சித் தரப்புகளிடமிருந்தும் அவற்றின் உபாயங்களிலிருந்தும் NPP வேறுபட்டது. மட்டுமல்ல, NPP யைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் ஏனைய ஆட்சித் தரப்பினரைப் பற்றியதைப்போல அல்ல. அது வேறானது. ‘ஏனையவற்றை விடப் பரவாயில்லாத தரப்பு‘. ‘நம்பிக்கைக்குரிய சக்தி‘. ‘முற்போக்கானது‘. ‘ மாற்றங்களைச் செய்யக் கூடியவர்கள்‘. ‘நேர்மையானவர்கள்‘, ‘குற்றங்களோடும் ஆட்சித் தவறுகளோடும் சம்மந்தப்படாதவர்கள்‘, ‘முந்திய ஜே.வி.பியும் இன்றைய NPP யும் ஒன்றல்ல‘ என்ற அபிப்பிராயம் அல்லது அவ்வாறானதொரு பார்வை பொதுமக்களிடத்தில் NPP யைப் பற்றி உண்டு. 

இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அரசியலமைப்பு உருவாக்கம், பன்மைத்துவம் குறித்த அணுகுமுறை, பல்லினத் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் போன்றவற்றில் ஏனைய சக்திகளோடு பெரிய வேறுபாடுகளில்லை என்றாலும் அந்த வேறுபாட்டை உணர முடியாதவாறு NPP நடந்து கொள்கிறது. 

இதனை யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அவர்கள் NPP யைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். என்பதால்தான் தமிழ்பேசும் மக்களிடம் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்குமான ஆதரவுத் தளம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் NPP க்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று யாரும் சமாதானம் சொல்லி ஆறுதலடையக் கூடும். ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியில்லை. அந்த இறக்கத்தை ஏறுமுகமாக்குவதற்கு NPP தீவிரமாகச் செயற்படுகிறது. அதற்கே ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதும் தொடர்பாடல்களை விரிவாக்குவதுமாகும். அதாவது NPP மிகச் சுறுசுறுப்பாகவும் மிகத் தீவிரமாகவும் வேலை செய்கிறது. இதனை எதிர்த்தரப்புகள் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகத்தினர் இந்த விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். 

ஏனென்றால், NPP யின் அடிச்சட்டம் JVP யே. JVP அடிமட்டத்தில், மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் மக்களைப் பங்கேற்பாளர்களாக்குவதிலும் திறன்வாய்ந்தது. எத்தகைய தோல்விகளுக்குள்ளும் திறன் குன்றாமல் வேலை செய்யக் கூடியது. ஆயுதப் போராட்ட காலத்தில் JVP யின் முதுகெலும்பு ஒன்றுக்கு இரண்டு தடவை முறிக்கப்பட்டது. அரசியற் கட்சியாகச் செயற்பட்ட காலத்தில்,  அரசியல் ரீதியாக பல துண்டுகளாக உடைந்தது அல்லது ஆட்சியாளர்களால் அவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனாலும் அதனுடைய அடித்தளம் சிதையவில்லை. 

இரண்டாவது, இடதுசாரி முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மாறாக தீவிர இனவாதத்தை வரலாறாகப் பெற்றது. மலையக மக்களை வேற்றாளர்களாகப் பார்ப்பது தொடக்கம், தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் உளத்தைக் கொண்டது. தற்போது கூட அதில் பெரிய அளவில் மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை.

இதையெல்லாம் மறைப்பதற்கே ‘அனைவரும் இலங்கையர்கள். அனைவரும் இலங்கையர்களாகவே கொள்ளப்படுவார்கள்‘ என்ற பெருங்கதையாடல்கள் NPP யினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரையும் சமனிலையில் NPP நோக்கினால் அது மகிழ்ச்சியே. ஆனால், அது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதாவது நடைமுறையாக இருக்க வேண்டும். 

அப்படியென்றால், அதற்கான நடவடிக்கைகளை NPP படிப்படியாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை எதுவும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் அவ்வாறான எதிர்பார்ப்போடும் தேடல்களோடும்தான் உள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய போன்ற சற்றுப் பன்முகத் தன்மையோடு  விடயங்களை நோக்கக் கூடியவர்களின் மீதான நம்பிக்கையோடு  உள்ளனர். அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படியே அடுத்த கட்டமாக உருவாக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் அரசியலமைப்பை பல்லின சமூகங்களின் தேசம் என்ற வகையில் உருவாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.

அரசியமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தால், அது சிங்களத்துக்கு முன்னுரிமை அளித்தலாகவே அமையும்.

“பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டால், சிங்களத்தரப்பின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே முயற்சிகள் நடக்கும்“ என்ற கதைவிடல்கள் இங்கே அவசியமற்றவை. அப்படியென்றால், அது இதற்குமுன் ஆட்சியிலிருந்த தரப்புகள் சொன்னதையே தேசிய மக்கள் சக்தியும் வெட்கமில்லாமல் சொல்கிறது என்று அர்த்தமாகும். 

குறிப்பாக1970 களில் இனவன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொன்னதைப்போல, ‘சிங்கள மக்கள் விரும்புவதையே தன்னால் செய்ய முடியும். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செய்வது அவர்களுடைய நம்பிக்கைக்கு இழைக்கப்படும் செயலாகும் என்பதைப்போலாகும். 

ஆக, கட்சிக்குள்ளே அடிப்படையான மாற்றங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல், வெளியே பெருங்கதையாடல்களைச் செய்யும் ஒரு ஆட்சித்தரப்பாகவே தேசிய மக்கள் சக்தியும் செயற்பட விளைகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளைத் திருத்தம் செய்வதாகச் சொல்லப்பட்டாலும் அதில் இனப்பிரச்சினையைக் கையாண்ட தவறான அணுகுமுறை போன்ற பெரிய விடயங்கள் திட்டமிட்டு விலக்கப்படுகின்றன. அதாவது,தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டு அவசியமானவை புறக்கணிக்கப்படுகின்றன (Only selected agendas are implemented. Selected and necessary ones are ignored).     

ஆட்சியிலிருக்கும் தரப்பு, தொடர்ந்தும் அதிகாரத்தைப் பெறுவதற்கே விரும்பும்; முயற்சிக்கும் என்பதால் இந்த மாதிரியான விளையாட்டுகளை, தந்திரோபாயங்களாகச் செய்யும் என்று இதற்கும் யாரும் நியாயப்படுத்தல்களைச் செய்யக் கூடும். அப்படியெல்லாம் நியாயப்படுத்தி, NPP யைப் பிணையெடுக்க முற்பட்டால், அவர்கள் இந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளி விடுகிறார்கள் என்றே அர்த்தமாகும். 

இங்கே NPP யை வழமையான தமிழ் நோக்குநிலையில் வைத்து இந்தச் சொற்களைக் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரவுக் கண்ணோட்டத்தில் அணுகுவதனால், அதனுடைய முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பொறுப்பையும் உணர்த்துவதற்கே இவை அழுத்தமாகக் கூறப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மாற்றங்களுக்கான ஒரு சக்தி(தரப்பு) என்ற அடிப்படையில் நம்பிக்கையோடு நோக்கப்படுவதால் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“         என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல்.  

இனவாத அடிப்படையில் விடயங்களை அரசாங்கம் நோக்க முற்பட்டால் நாடு பிளவுண்டதாகவே இருக்கும். ஒருபோதும் ஒற்றுமைப்படாது. பிளவுண்ட நிலையில் இருக்கும் நாட்டில் முன்னேற்றத்தை எட்டவே முடியாது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் முதலீடுகளுக்கான வாய்ப்பும் சீரான அபிவிருத்தியும் நடக்காது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பங்களிக்கவும் பங்குபெறவும் முடியாமல் போய் விடும். இதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவாறு தேர்வு செய்யப்படும் அடிப்படையில் ஏற்பும் புறக்கணிப்புமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாகவே மாறும். அப்படி மாறினால் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கும். அதன்பிறகு எப்படி அனைவரும் இலங்கையர்களாக முடியும்?

முந்திய ஆட்சியாளர்கள் மீளவும் அதிகாரத்தைப் பெற முடியாதவாறு தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் NPP யினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படியேதான் ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கைகள் தொடக்கம் அனைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் அமைகின்றன. இதையே தம்மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவை சொல்வதற்குரிய தகுதி அவற்றுக்கு இல்லை. அப்படிச் சொல்லித் தங்களுடைய தவறுகளை மறைத்து விடவும் முடியாது. 

இத்தகைய பின்னணியில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் சமூகங்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை  எதிர்கொள்ளப்போகின்றன? அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அரச எதிர்ப்பு, NPP யும் இனவாதக் கட்சிதான் என்று வழமையான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அத்தகைய அணுகுமுறை நிச்சயமாக அவற்றுக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மக்களுக்கும்தான். ஆகவே NPP யும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஏனைய தரப்புகளும் புதியனவாகச் செயற்பட வேண்டும்.  நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைக் காண்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாகும்.