— அழகு குணசீலன் —
மட்டக்களப்பு பொதுநூலகம் மீண்டும் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது . நூலகம் ஒன்றின் சமூக முக்கியத்துவத்தை அறியாத, உணராத, புரிந்து கொள்ள முடியாத சமூக அக்கறை அற்றவர்களாக மட்டக்களப்பின் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருக்கமுடியாது. அவர்கள் உரிமை அல்லது அபிவிருத்தி கொள்கை சார்ந்தவர்களாக இருப்பினும் அல்லது இரண்டு கொள்கைகளையும் கொண்டவர்களாக இருப்பினும், கட்சி அரசியலுக்கு அப்பால் நூல்நிலையமொன்றின் எதிர்கால சந்ததிக்கான அறிவூட்டல் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் தேவையறிந்து செயற்படவேண்டிய பொறுப்பும், அவ்வாறு செயற்பட முடியாத சந்தர்ப்பங்களில் அதற்கான பொறுப்பை ஏற்கவும், கூறவும் வெளிப்படைத்தன்மையுடன் அவர்கள் செயற்படுவதற்கு மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு அரசாங்க காலத்தில் அல்லது ஒரு மக்கள் பிரதிநிதியின் காலத்தில் ஒரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அது அந்த அரசாங்க காலத்தில் அல்லது அதை ஆரம்பித்த அரசியல் வாதியின் காலத்தில் முடிவடைய வேண்டும் என்ற நியதி எங்கும் இல்லை. திட்டங்களை பொறுத்து அதன் நிறைவுக்காலம் வேறுபடுவது பொதுவான வழக்கம். ஆனால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஒன்றை முடித்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பு அப்பிரதேசத்தின் அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருக்கிறது. ஆரம்பித்த அரசாங்கம் அல்லது ஆரம்பித்த அரசியல் வாதிதான் முடித்து வைக்கவேண்டும் என்றால் மற்றையவர்கள் மக்களுக்கு பொறுப்பு கூறுவதில் இருந்து தப்பிக்கொள்வதாகவே கொள்ள முடியும்.ஒரு வகையில் இன்றைய என்.பி.பி. அரசாங்த்தின் அபிவிருத்தி கொள்கைக்கு மாறாகவும் இது அமைகிறது.
எனவே மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான முதலீடு மட்டக்களப்பு சமூகத்திற்கான சமூக முதலீடு. இந்த அரசாங்கம் சமூக முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகின்ற இந்த நிலையில் மட்டக்களப்பு பொதுநூலக வேலைகளை நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கின்ற பணியை செய்ய வேண்டும். நவம்பர் மாதம் வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த இலக்கில் செயற்பட வேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு இருக்கிறது.மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர், மாகாண ஆளுநர் பங்குபெறும் நிலையில் இந்த விடயத்தில் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் கவனம் செலுத்தவேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. இந்த வகையில் மட்டக்களப்பு என்.பி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாநகரமுதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இந்த நூலகத்தை அமைப்பதில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்ட முன்னாள் கிழக்குமாகாண சபை முதல்வரும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தன் சிறையில் இருந்து மட்டக்களப்பு மாநகரமுதல்வருக்கு இது விடயமாக கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை மாநகரமுதல்வரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபராக தடுத்து வைககப்பட்டிருக்கும் போது, பிள்ளையான் எப்படி? இந்த கடிதத்தை எழுதினார்? அனுப்பினார்? என்பதை சம்பந்தப்பட்ட அரசாங்க நீதி, நிர்வாக கட்டமைப்பு விசாரணை செய்வதும், செய்யாமல் விடுவதும் சட்டத்துறை சார்ந்தது. இதற்கு பின்னால் மோப்பம் பிடித்து காலத்தை கழித்து மக்களின் உரிமையும், சமூக முதலீட்டு அபிவிருத்தியுமான நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்காமல் இருப்பது ஒரு வகையில் மட்டக்களப்பு மக்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும், தண்டிக்கும் மற்றும் அவர்களின் உரிமையை மறுதலிக்கும் செயலாகும். இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள், பொதுநிதியை மக்கள் நலன் சார்ந்து பயன்படுத்தாமை, கட்சி அரசியல் அடிப்படையிலான அபிவிருத்தி செயற்பாடுகளை நீக்குதல் போன்ற ஒரு முறைமைமாற்றத்தை செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு இந்த பொறுப்பு மற்றைய எல்லோரையும் விடவும் அதிகமாக இருக்கிறது. இந்த பொறுப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம் என்ற வகையில் மத்தியில் இருந்து மட்டக்களப்பிற்கு பிரபு எம்.பி.ஊடாக பகிரப்படுகிறது . எனவே பொறுப்புடன் செயற்படவேண்டியதும், பொறுப்பு கூறவேண்டியதும் அவரும் ,அதிகாரிகளும், மற்றவை அரசியல் வாதிகளுமே.
கிழக்கு பல்கலைக்கழகம், புனாணை தனியார் பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றின் விரிவுரையாளர்களுக்கும், மேற்படிப்பை மேற்கொள்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் இந்த நூல் நிலையம் பாரியபங்களிப்பை செய்ய முடியும். கிழக்கில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்டு வருகின்ற அதிசயிக்கத்தக்க கல்வி எழுச்சியில் இந்த நூலகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உயர்தரவகுப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்க முடியும். முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கலை, இலக்கியம், பண்பாடு, மானிடவியல் ஆய்வுகள் அண்மைக்காலங்களில் கிழக்கில் அதிகரித்துள்ளன. முன்மொழியப்படவுள்ள புதிய கல்வித்திட்டம், ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரிகள் ஆக்கும்/ அங்கீகரிக்கும் திட்டம் போன்றவற்றிற்கு இந்த நூலகத்தின் தேவையும், சேவையும் முக்கியமானது. தொலைக்கல்வி மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
அண்மைய சமூக ஊடகப்பதிவுகளில் இந்த நூலகத்தின் பயன்பாட்டுதிறன் குறித்து சிலர் பதிவிட்டிருந்த கருத்துக்கள் கவலைக்குரியவை. உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டவையாகவும் ,ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சியை, சுய அரசியல் இலாப அடிப்படையில் பதிவிடப்பட்ட சமூக அக்கறையற்ற பதிவுகளாகவே அவற்றை பார்க்க வேண்டியுள்ளது. சில வேளை இது பானைக்கும் -அகப்பைக்கும் உள்ள கொள்ளளவாக இருக்குமோ அப்படியானால் அந்த கொள்ளளவை அதிகரிப்பதற்கும் இந்த நூலகத்தின் பயன்பாட்டுதிறன் அவசியமானது. மட்டக்களப்பில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி நூலக நிர்மாணிப்பு பிரதான வேலைகள் முடிவடைந்தது விட்டன. திறப்புவிழா தாமதப்படுவதனால் கட்டிடம், மற்றும் தளபாடங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்களுக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பதற்கான சில உடனடி தேவைகளை நிறைவு செய்வதே இன்றைய தேவையாக உள்ளது.
இன்று இருக்கின்ற நூலகத்தை பயன்படுத்தவே ஆட்கள் இல்லை என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். ஒருவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரி மக்களின் வரிப்பணத்தை நூலக நிர்மாணிப்புக்கு வழங்கி வீண்விரயம் செய்ததாகவும் ஒரு கருத்தூட்டத்தை பார்க்க கிடைத்தது. நூலகம் குடியிருப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், பொழுதுபோக்குவதற்குமான களியாட்ட கடற்கரையோ, பூங்காவோ அல்ல. யாருக்கு தேவையிருக்கிதோ அதைப் பொறுத்து பயனாளிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். குத்து மதிப்பாக 1923/1924 காலப்பகுதியில் இருபத்தி ஐந்துக்கும் குறையாத செயற்பாடுகள் /நிகழ்வுகள் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன/ நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. இது இன்றைய நூலகத்திலே குறைந்தது மாதம் ஒரு நிகழ்வு இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்கிறது.
இன்றைய சூழலில் மட்டக்களப்பில் வாரம்தோறும் பல கலை, இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.இவற்றில் அதிகமான நிகழ்வுகள் தனியார்/ மற்றும் பொது நிறுவனங்களில் இடம் பெறுகின்றன. புதிய நூலகமும், அதன் பௌதிக வளங்களும் அதிகரிக்கும் போது நூலகத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மேலும் அதிகரிக்கும். ஒரு இலக்கிய நிகழ்வு எங்கு நடாத்தப்படவேண்டுமோ அதற்கு பொருத்தமான இடமாக பொது நூலகம் இடம்பிடிக்கும். அது வருமானத்திற்கான ஒரு வழி மூலமாகவும் மாநகரசபைக்கு அமையும். மாநகர சபையின் வரி வருமான அதிகரிப்பு மட்டக்களப்பு குடியிருப்பாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு வசதியாக அமையும்.
மட்டக்களப்பு பொது நூலகம் 1855 இல் அமைக்கப்பட்டது. 170 ஆண்டுகள் பழைமையை கொண்டது மட்டுமன்றி கிழக்குமாகாணத்தில் பெரிய நூலகமுமாகும். தற்போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ், சிங்கள, ஆங்கில நூல்கள் அங்கு உள்ளன. புதிய நூலகத்தில் இத்தொகை இன்னும் பலமடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல அறிஞர்களும், படைப்பாளிகளும், வீடுகளில் ஆயிரக்கணக்கான நூல்களை தங்கள் நூலகங்களில் வைத்துள்ளனர். இவர்களில் பலரும் இப்போதே தங்களுக்கு பின்னர் இந்த நூல்களை உயில் எழுத விரும்பியுள்ளனர். சிலர் பொதுவெளியில் அறிவித்தும் விட்டனர். இந்த நூல்கள் மும்மொழி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும்,உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கும், பெரும் வசதியாக அமையும்.
புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் மட்டக்களப்பு மக்கள் மேற்குலகில் வெளியிடப்படும் புதிய நூல்களில் ஒரு பிரதியையாவது ஊருக்கு வரும் வேளை அன்பளிப்பு செய்யும்போது எமது நூலகத்தின் வளர்ச்சியை நாம் விரைவில் காணமுடியும். அதே போன்று புலம்பெயர்ந்த மக்களிடம் தமிழ் மொழியிலான பல நூல்கள் உள்ளன. எப்படித்தான் அவர்களது இரண்டாம், மூன்றாம் தலைமுறை தமிழ் மொழி ஆர்வம் கொண்டதாக இருந்தாலும் இந்த தமிழ் நூல்களை விடவும், அவர்கள் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் கற்றுக்கொண்ட வேற்று மொழியிலான நூல்களே இலகுவானவை. இதனால் புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையினரிடம் இருந்து நூல்களின் வரவு அதிகரிக்க அதிக வாய்ப்புண்டு.
தற்போதைய நூலகம் மாநகர எல்லைக்குள் எட்டு கிளை நூலகங்களை கொண்டுள்ளது. மேலும் நடமாடும் நூலக சேவை, டிஜிட்டல் நூலகசேவை என்பனவும் அறிமகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமூக ஊடக பதிவுகள் கூறுகின்ற “இப்போதே ஆட்கள் இல்லை” என்பதில் உண்மை இல்லை. நூலக சேவை மாநகர எல்லைக்குள் நன்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பிரதான நூலகத்திற்கு வரும் பயனாளிகள் குறைவாக இருப்பதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் குடியிருப்பாளர்களுக்கு நூலகசேவையை காலடிக்கு கொண்டு செல்வது என்ற கருத்தியலே இங்கு முக்கியமானது.
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இது மிக விரைவில் 100 ஆயிரத்தை தாண்டிவிடும் நிலை காணப்படுகிறது. 2500 க்கும் அதிகமான செயற்பாட்டு அங்கத்தவர்களையும், நாள் ஒன்றுக்கு 250 க்கும் மேற்பட்ட பயணிகளையும் கொண்டுள்ள நூலகத்தை தரம்குறைத்து, அதன் சமூகத்திற்கான பங்களிப்பை குறைமதிப்பீடு செய்து திட்ட மிட்ட தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுகிறது.
2012 இல் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த கட்டிட நிர்மாண வேலைகள் பின்னர் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டன. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் 2018 செப்டம்பர் 16 ம்திகதிய செய்தியின் படி, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்த முன்மொழிவு ஏற்கப்பட்டு 169.97 மில்லியன் ரூபா 2019 வரவு -செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. இது விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் முயற்சி இருந்ததாக அறிய முடிகிறது. அவரைப்போன்ற கல்வியாளர்கள் தங்கள் கட்சியின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழரசுக்கட்சியின் ஆட்சியில் உள்ள மட்டக்களப்பு மாநகர சபை நிர்வாகத்தையும் பயன்படுத்தி, பிள்ளையான் மேயருக்கு விடுத்த வேண்டுகோளையும் கவனத்தில் எடுத்து மட்டக்களப்பின் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய இந்த பணியை மக்கள் பாவனைக்கு கையளித்து தடம்பதிக்க வேண்டும்.
மற்றொரு அறிக்கையின் படி மாகாணசபை ஆளுநர் ரோஹத போகல்லாகம மாகாணசபை சபை நிதியியல் இருந்து 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது கட்டிடப்பணிகளுக்காக செய்யப்பட்டிருந்த மதிப்பீடு 345 மில்லியன் ரூபாவாகும். மேலும் 100 மில்லியன் ரூபா உள்ளூராட்சி மாகாணசபை சபையின் நிதியியல் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளால் நிர்மாணப்பணிகள் ஒரு வருடம் தாமதித்தே ஆரம்பித்துள்ளன.
இப்போது சமூக ஊடகம் ஒன்றில் கருத்தூட்டம் செய்த ஒருவர் மாநகரசபை வரிப்பண விவகாரத்தை நோக்கினால். கிடைக்கின்ற தகவல்களின் படி 345 மில்லியன் ரூபாவில் ஏற்கனவே குறிப்பிட்ட 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் மேலதிகதேவையான 145 மில்லியன் ரூபா பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட நிதிக்குழுவினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இப்போது நூல்நிலைய வேலைகள் பூர்த்தியாகி விட்டன. எஞ்சியிருப்பது மக்கள் பாவனைக்கு திறந்துவிடுவது மட்டும் தான்.
இதை செய்வதற்கு கிழக்குமாகாண சபைக்கும், மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும், உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள தடை அல்லது தயக்கம் என்ன?
அப்படி ஏதும் தடைகள் இருந்தால் அதை வெல்ல இந்த அரசியல் வாதிகளால் முடியாமல் இருக்கிறதா?
