— அழகு குணசீலன் —
சூனியம்: இது பாயோடு ஒட்டவைக்கின்ற மட்டக்களப்பு மாந்திரீகம் அல்ல. மாறாக நிலத்திலும், புலத்திலுமான தமிழ்த்தேசிய அரசியலின் நிலைப்பாட்டு- செயற்பாட்டு சூனியம். அவர்களும், அவர்களின் கட்சிகளும் அரசியல் ஆசன போட்டியில் ஆட்களுக்கும், கட்சிகளுக்கும் செய்யும் கழுத்தறுப்பு சூனியம்.
இன்றைய தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை அவதானிக்கும் போது இந்த சூனியங்கள் தான் அரசியலாகிவிட்டது . 75 ஆண்டுகால பழம்பெருமை வாய்ந்த தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ச்சியாக ஒரு வட்டப்பாதையிலே சுழல்கிறது. இது சூடடிப்பதற்கு பழக்கப்பட்ட மாட்டுத்தொடுவை சுற்றிச்சுற்றி வருகின்ற வளைவு போன்றது. இந்த வட்டக் களவெட்டி அரசியல் தமிழ்மக்களை சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் அடகு வைக்கிறது, அடிமையாக்குகிறது என்று ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அன்று ஆயுதம் தூக்கிய அனைவரும் அன்றைய சுற்று வட்டத்திலேயே சூடடிக்கும் மாட்டுத்தொடுவையாக இன்று சுழல்கின்றனர்.
தேசிய விடுதலைப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்களில் புரட்சிகரசக்திகள் முதலில் செய்யவேண்டியது இந்த மரபு ரீதியான, வழமையான, சமூக, பொருளாதார, அரசியல் சுழற்சிப்பாதையை அல்லது சுற்று வட்டத்தை தகர்ப்பது. இந்த வட்டம் பொருளாதாரக் கோட்பாடுகளில் “நச்சுவட்டம்” என்று அழைக்கப்படுகிறது. சமூகத்தை அந்த வட்டத்திற்குள்ளேயே கட்டிப்போடுகின்ற நஞ்சு. பொருளாதார சுரண்டலுக்கு மட்டுமன்றி அரசியல் சுரண்டலுக்கும் இது பொருந்தும்.
இந்த நச்சு வட்டம் உடைக்கப்பட்டு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்கான, வழமைக்கு மாறான புதிய பாதை அமைக்கப்படவேண்டும். இதையே தமிழ்த்தேசிய அகிம்சை, ஆயுத போராட்டங்களில் மக்கள் எதிர்பார்த்தார்கள் /எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இரண்டு தரப்பும் இந்த சுற்றுப்பாதையை உடைப்பதில் தோல்வி அடைந்தனர் என்பதே ஜதார்த்தம். அல்லது சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமான அந்த நச்சு வட்டத்தை அப்படியே வைத்து ஆராத்தி எடுத்து தங்கள் கட்சி அரசியலை தக்கவைத்துக்கொள்கின்றனர்.
யுத்தம் முடிந்து பதினாறு ஆண்டுகளாகியும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் திருந்தவில்லை. 75 ஆண்டுகளுக்கு முந்திய அரசியலையே தொடர்கிறது. அப்படியானால் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்னரான அரசியல்தான் இன்னும் தமிழர் அரசியலா? தமிழ்ச்சமூகம் சமூக, பொருளாதார, அரசியலில் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அந்த புள்ளியில் தான் நிற்கிறதா? அப்படி அது இயங்குநிலை அற்றது என்றால் அதற்கு யார் பொறுப்பு? தமிழ்ச்சமூகமா? அரசியல் தலைமைகளா? அல்லது இருதரப்புமா?
இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் போராட்ட காலத்தில் அப்படி “எதுவோ” இருந்தது என்று சிலர் வலிந்து காட்ட முற்படுவதாகும். அது உண்மையல்ல. ஆயுதப்போராட்ட காலத்திலும், அதற்கு முந்திய ஜீ.ஜீ. பொன்னம்பலம் /எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம்/ குமார் பொன்னம்பலம், இரா. சம்பந்தன், மாவை / கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காலத்திலும், இன்றைய சிவஞானம், சுமந்திரன்/ முன்னாள் இயக்கத்தலைமைகள் காலத்திலும் அதே பூச்சிய வட்டப்பாதையிலேயே தமிழ்த்தேசிய அரசியல் சுழல்கிறது. புலிகள் கூட அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டே தங்கள் ஏகபோகத்தை நிலைநாட்டினர். இதை அடிப்படையாகக் கொண்ட 75 ஆண்டுகால ஒட்டு மொத்த சமூக, பொருளாதார, அரசியலின் எதிர் விளைவுகளைத்தான் தமிழ் சமூகம் இன்று அனுபவிக்கின்றது.
இந்த இடத்தில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அஞ்ஞாதவாசம் முடிந்து அயோத்தி திரும்பியிருக்கிறார். ஆனால் இது முதன்முறையல்ல. என்றாலும் அவரின் மீள்வருகை தமிழ்மக்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறது. 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் எந்த ஒரு அரசியல் நகர்வும் உருப்படியாக இடம்பெறவில்லை என்பதுதான் அது. இதன்மூலம் 1987 முதல் 2009 வரையான புலிகள் காலத்திலும், அதைத்தொடர்ந்த 2009 முதல் இது வரையான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு – தமிழ்தேசிய கட்சிகள் காலத்திலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக எந்த காயும் நகர்த்தப்படவில்லை. இதன் ஒரு பகுதியாகவே வரதராஜப் பெருமாளின் மீள்வருகை முக்கியம் பெறுகிறது. ஆக, கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழ்த்தேசிய அரசியல் அடைவுகள் எதுவும் அற்ற அழிவுகளை மட்டும் விட்டுச் சென்றிருக்கின்ற வெறும் சூனிய -பூச்சிய அரசியல் என்பது வெளிப்படை.
இன்றைய பிரதான ஆட்சியாளரான ஜே.வி.பி. இந்திய மேலாதிக்க அனுசரணையிலான மாகாணசபை முறையை நிராகரித்தது. ஆனாலும் மாகாணசபை தேர்தலில் பங்கேற்றது. கஜேந்திரகுமார் நிலைப்பாடும் இதுதான். இந்தியா இது பற்றி வெளிப்படையாக பேசுவதை நிறுத்தி விட்டது. ஆனால் வரதராஜப்பெருமாள் ஊடாக தமிழ்த் தரப்புக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது என்றே கொள்ளவேண்டியுள்ளது. இதன் முதல் கருத்துப் பரிமாற்றம் தான் பெருமாள் – பிரேமச்சந்திரன் சந்திப்பும், அதைத்தொடர்ந்த மாகாணசபை அதிகாரங்கள் பற்றிய கருத்தரங்கும். இதன்மூலம் பூச்சிய அரசியலில் இருந்து, அடைய முடியாத இலக்குகளில் இருந்து தமிழ்த்தரப்பை வெளியே எடுக்க இந்தியா முயற்சிக்கிறதா? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அப்படியானால் இது விடயத்தில் தனக்கு இருக்கின்ற பொறுப்பை இந்தியா உணர்கிறது. தமிழ்த்தேசிய பூச்சிய அரசியல் அடிவாங்கி திரும்பி வரட்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்து வரதாராஜப்பெருமாளுக்கு மணி கட்டியிருக்கிறதா?
சுமந்திரனின் முதலமைச்சர் வேட்பாளருக்கான முன் அறிவிப்பு, அண்ணேக்கு தம்பிமார் செலுத்திய அஞ்சலியும், எதிர்ப்பும், செல்வநாயகம் காலத்திலே கறள் – துருப்பிடித்துப்போன ஹர்த்தால் அறிவிப்பும், கடையடைப்பும், தென்னிலங்கையில் அநுர ஆட்சிக்கு எதிராக அதிகரித்துள்ள எதிர்ப்புக்கள் எல்லாம் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு மறைகரம் இருக்கிறது. இதற்கிடையில் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) கொழும்பில் இன்னொரு பக்கம் நகர்கிறது. இவர்களில் எந்த தரப்பும் சூனிய வட்டத்தின் கோட்டில் இருந்து விலகி செயற்பட தயாரில்லை.
அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டங்கள், உரிமைப் போராட்டத்தில் ஒரு பகுதி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தோற்றுப்போன அதே சூனியச்சுற்றுவட்டத்தில் பயணித்து போராட்ட இலக்கை அடைய முடியாது. ஜே.வி.பி. அறுபது ஆண்டுகால பெருமையை பேசிக்கொண்டு ரோகண விஜயவீரவின் சுற்று வட்டத்தில் பயணித்திருந்தால் இன்றைய இலக்கை அடைந்திருக்க முடியுமா? அதற்கான குறைந்த பட்ச அரசியல் நேர்மை, சமூக அரசியல் மயமாக்கம், கட்சியையும், சிவில் சமூக, தொழிலாளர் அமைப்புக்களை ஒன்றிணைத்த செயற்பாட்டு அரசியல் ஒன்று தேவை. இதுவே வழக்கமான சுற்றுவட்டத்தை உடைப்பதற்கு தேவையான நிபந்தனை. ஆனால் சில வேளைகளில் இது தமிழ்த்தேசிய அரசியல் அதிகாரத்தை அடித்துச்சென்றுவிடும் என்பதால் பூச்சிய அரசியல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுகின்றது.
தமிழ்த்தேசிய அரசியல் உண்மையை பேசவில்லை என்று, அண்மையில் நேர்காணல் ஒன்றில் ஒரு ஊடகவியலாளர் ஆதங்கப்பட்டார். இங்கு உண்மை எப்போது பேசப்பட்டது? தமிழ்த்தேசிய அடையாள அரசியல் அகிம்சையிலும் சரி, உருவத்திலும் சரி, பிறப்பில் இருந்து இன்றுவரை உண்மை பேசியதில்லை. இனியும் பேசப்போவதில்லை.ஆயுதப்போராட்ட அமைப்புக்களே உண்மை பேசியதில்லை என்றால் பாராளுமன்ற அரசியலில் அதை எங்கு தேடுவது. பாராளுமன்ற சிறப்புரிமை என்பதே பாராளுமன்றத்தில் பொய் சொல்வதற்கான சட்டரீதியான அங்கீகாரம் என்றாகிவிட்டது.
ஆகாயத்தில் பறக்காது, இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வை அடிப்படையாகக்கொண்டும், ஏற்றுக்கொண்டும், உண்மையை மக்களுக்கு சொல்லி அரசியல் செய்து வருபவர்கள் ஈ.பி.டி.பி தலைமை டக்ளஸ் தேவானந்தாவும், ரி.எம்.வி.பி.தலைமை சந்திரகாந்தனும்தான். தமிழர் தரப்பில் கலாநிதி விக்கினேஸ்வரன் – த. கோபாலகிருஸ்ணன் தலைமையிலான அகில இலங்கை தமிழர் மகாசபையும் அதிகாரப்பகிர்வு கோரி தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. மற்றைய தலைமைகள் கதிரை வாங்க காசி இல்லை என்று சொன்னது முதல், தும்புக்கட்டாலும் தொடமாட்டோம் என்று ஆலாய்ப் பறந்தவர்கள், மறுப்பவர்கள் தான். புலிகள் சொன்ன பொய்களை உண்மையாக்கி கதையளந்தவர்கள். இப்போது மாகாணசபை கருத்தரங்கு ஒரு புறம், முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு மறுபுறம். இதற்கிடையில் அநுர அரசு இவை பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை.
எல்லோரும் சேர்ந்து பொய்க்கு வலுச்சேர்த்து இருளை வெளிச்சமாகக் காட்டி விட்டு சூனிய அரசியலில் வந்து நின்று ஆதங்கப்படுகிறோம். அப்படி என்றால் “தமிழீழம் சாத்தியமற்றது” என்று சொன்னவர்கள், புலிகளின் ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடியும் என்று சொன்னவர்கள் தான் உண்மையை பேசியவர்கள். அதற்காக அவர்களுக்கு உங்களால் வழங்கப்பட்ட பட்டம் “துரோகி”. பொய்மை, வெளிப்படைத்தன்மையின்மை, அளவுக்கு மீறிய கற்பிதம், ஏகபோக அதிகாரவெறியை அங்கீகரித்தமை, நியாயப்படுத்தியமை, ஒத்தோடியமை, வழிபாட்டு அரசியல் எல்லாம் இறுதியில் சூனியத்தில் கொண்டு நிறுத்தியிருக்கின்றன. இது அரசியல் வெறுமை அதனால்தான் பூச்சிய அரசியல்….!
செத்தவீட்டில் அரசியல் செய்வது தமிழ்த்தேசிய வரலாற்று தொடர். இதன் தொடர்சியே சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பு. இப்போது இது குறித்து இடம்பெறும் வாதப்பிரதிவாதங்களும், வெளிவரும் வண்டவாளங்களும் முத்தையன்கட்டு குளத்தில் இடம்பெற்ற இளைஞரின் மரணம் விபத்து மரணம்? ஆகிறது. இதற்கு அவசரப்பட்டு சுமந்திரன் விடுத்த ஹர்த்தால் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட முடிவேயன்றி கட்சியின் முடிவல்ல. இதனால்தான் மன்னார் மடுமாதா, நல்லூர் உற்சவங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழரசுக்கட்சியின் அரசியல் முடிவுகள் எப்படி தன்னிச்சையாக எடுக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
ஒரு கட்சி வடக்கு, கிழக்கை மையப்படுத்தி அழைப்பு விடுக்கின்ற ஒரு போராட்டம் எவ்வளவு சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? அது மட்டும் அன்றி ஹர்த்தாலுக்கான உடனடிகாரணத்தின் சரியான தகவல்கள் எவ்வளவுக்கு அதிகமாக சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே முஸ்லீம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு என்று பொய்யாக வெளிக்கு காட்டுவதற்கு எடுத்த எடுப்பில் வெள்ளிக்கிமையை ஹர்த்தால் தினமாக அறிவிக்க முடியுமா? முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் எதுவும் ஹர்த்தாலுக்கு ஆதரவா? இல்லையா? என்று கூட அறிவிக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியல் முஸ்லீம்களை இந்த இடத்தில் தான் வைத்திருக்கிறது.
முதலமைச்சர் வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்து விட்டு அதற்கு அவசரப்பட்டு பொய்க் காரணம் தேடிய, தன்னிச்சையான முடிவாகவே ஹர்த்தால் கடையடைப்பு அழைப்பை பார்க்கமுடிகிறது.
இது அடைவுகள் அற்ற பூச்சிய அரசியலிலேயே சாத்தியம். மையத்தில் ஒரு வெறுமையான வட்ட வடிவான இடைவெளி இருக்க தமிழ்த்தேசிய பூச்சிய அரசியல் அந்த வட்டத்தை சுற்றி 75 ஆண்டுகளுக்கும் மேலாக சுழல்கிறது.
