கற்பனையில் தமிழ்ச்சமூகம்!

கற்பனையில் தமிழ்ச்சமூகம்!

— கருணாகரன் —

தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. 

(இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 

1.   “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது.

2.   “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழ் மக்களின் நலனுக்காகச் செய்யப்படவே இல்லை. இந்திய நலனை முதன்மைப்படுத்திச் செய்யப்பட்ட ஒன்று. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 29.07.1987 இலிருந்து சரியாக ஐந்தாவது நாளான 04/08/1987 அன்று, யாழ்ப்பாணம் – சுதுமலையில் வைத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். தம்முடன் கலந்தாலோசிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று. அதனால்தான் அந்த ஒப்பந்தத்தையும் மாகாணசபையையும் புலிகள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையோ, அன்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களோ இன்று இல்லை. அவற்றில் ஒரு பகுதியை 1990 இல் பிரேமதாச பிடுங்கி விட்டார்.  

புலிகள் இல்லாமலாக்கப்பட்ட 2009 க்குப் பிறகு, மிஞ்சிய அதிகாரத்தைக் கொண்டு, கடந்த 16 ஆண்டுகளில் ஏன் மாகாணசபை முறைமை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? 2009 க்குப் பிறகு தமிழர்களின் பிரநிதிகளாகச் செயற்பட்ட – மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமையையோ இந்தியாவின் அனுசரணையையோ மறுக்கவில்லையே. அதை நடைமுறைப்படுத்துமாறுதானே கேட்டது. மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்தைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்ததே! இப்போது கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அதிகாரங்களைப் பகிருங்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், அதற்கு அரசாங்கம் தயாரில்லையே. இந்த நிலையில் எப்படி மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக் கொள்வது? 

இந்தப் பலவீனமான – வஞ்சகத்தனமான மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான பெறுமதியை இழந்ததாக ஆகிவிடும். அது மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் எமது மக்களின் அரசியல் உரிமையைப் பற்றியோ எமக்கான தீர்வைப் பற்றியோ கவனிக்காது. ஆகவே நாம் மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மக்களுடைய அபிலாஷையை நிறைவு செய்யக் கூடிய தீர்வைப் பற்றியே பேச முடியும். அதற்காகவே போராட வேண்டும்” என விவாதிப்பது. 

இந்த இரண்டு வாதங்களையும் கேட்கும்போது சரிபோலவே தோன்றும். அல்லது ஒவ்வொன்றும் சரிபோலிருக்கும். என்றபடியால்தான் இரண்டு நிலைப்பாட்டுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். 

ஆனால், இந்த இரண்டு வாதங்களையும் அல்லது இந்த இரண்டு விடயங்களையும் குறித்து விளக்கமளியுங்கள் என்றால், பலரும் தெளிவற்றுக் குழப்பமடைகிறார்கள். அல்லது திருதிருவென விழிக்கிறார்கள். 

இந்தத் தெளிவற்ற நிலையும் விளக்க முடியாத தடுமாற்றமும் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நிலைப்பாடுகளுக்குத் தலைமையேற்றிருக்கும் அரசியல் தலைவர்களுக்குமில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோருக்கும் இல்லை. 

அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் இதுவரையில் அதைத் தெளிவாக முன்வைத்திருப்பர். அப்படி எங்கும் காணவில்லை. 

மாகாணசபை முறைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தோராகும். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சுகு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கலாநிதி விக்னேஸ்வரன் – கோபாலகிருஸ்ணன் தரப்பின் கிழக்குத் தமிழர் ஒன்றியம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றவை வெளிப்படையாகவே மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றன. ஏற்கின்றன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்குமிடையிலும் வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், இவை மாகாணசபை முறைமையை ஏற்கின்றன. அதிலிருந்து முழுமையான தீர்வுக்குப் பயணிக்க வேண்டும். அதுவே சாத்தியம் என வலியுறுத்துகின்றவை.

இவற்றோடு செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன்  தலைமையிலான புளொட், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், உதயராசாவின் தலைமையிலான சிறி ரெலோ போன்றவையும் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் தரப்புகளே. 

தமிழரசுக் கட்சியும் ஏறக்குறைய மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக – உறுதியாகச் சொல்வதற்கு அதனால் முடியவில்லை. அப்படிச் சொன்னால், அது வலியுறுத்தி வரும் சமஸ்டி கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று எதிரணிகள் (குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள்) தலையில் குட்டத் தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த விடயத்தில்  பட்டும்படாமல் உள்ளது. 

மாகாணசபை முறைமையை முன்தொடக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே சாத்தியமான தொடக்கம் என்று வலியுறுத்தும் தரப்புகள் புலம்பெயர் சூழலிலும் உண்டு. ஆனால், அவை அங்கே வலுவானவையாக இல்லை. அல்லது அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தக் கூடிய அளவுக்கு அவை வேலைகள் எதையும் செய்வதில்லை. அந்த நிலைப்பாட்டுடன் தாயகத்தில் உள்ள தரப்புகளைப் பலப்படுத்துவமில்லை. 

தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் ஒன்றிரண்டு ஊடங்களில் மட்டும்தான் மாகாணசபை முறைமை அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. 

இதேவேளை மாகாணசபை முறைமையை வெளிப்படையாக ஆதரிக்கும் தரப்புகளை இந்தியாவின் ஆட்கள் (உளவாளிகள், சார்பு நிலைப்பட்டவர்கள், இந்தியாவின் ஏஜென்டுகள்..) என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்; பழித்துரைக்கப்படுகிறார்கள்; சந்தேகிக்கப்படுகிறார்கள்.

ஆனால் யதார்த்தமான அரசியல் என்பது மாகாணசபையிலிருந்தே தொடங்க முடியும் என்பதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வோர், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்வதற்கு அதனுடைய சக பங்காளித்தரப்பான முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை; பேசுவதுமில்லை. முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளாத அல்லது அவர்களும் இணைந்து கோராத மாகாணசபை முறைமை வெற்றியளிக்கப்போவதில்லை. 

மாகாணசபை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள சக்திகளுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக மலையக அரசியற் சக்திகளையும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் – அதை வேண்டும் என்று கருதும் சிங்களத் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். 

இது இலகுவானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடக்கம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வரையில் பலர் மாகாணசபையின் வழியாகவே அரசியலில் நுழைந்தவர்கள். இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட மாகாணசபையின் வழியாகப் பயன்களைப் பெற்றவர்களே. 

ஆகவே, இதையெல்லாம் புரிந்து கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். 

மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்ப்பது – மறுதலிப்பது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தரப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கும் இந்தத் தரப்பு, ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஏறக்குறைய இது அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் தொடர்ச்சியாக தம்மை அடையாளப்படுத்துவது. 

இதை ஒத்ததாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தேசமாகத் திரள்வோம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அணிகளும் உள்ளன. புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரபாகரனை நேசிப்பவர்களாகவும் இருப்பதால் இந்த நிலைப்பாட்டை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள்.

அதாவது தாம் எதை நம்புகிறோமோ அதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், அதைச்செய்கிறார்கள். 

கோட்பாட்டளவில், இந்த நிலைப்பாடு பலருக்கும் ருசிகரமாகவே இருக்கும். அதற்குக் காரணமும் உண்டு. சிங்கள ஆதிக்கத்தரப்பின் நடைமுறை மற்றும் சிந்தனைகள் தரும் வரலாற்றுப்படிப்பினை அவர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கும். இந்தியாவும் மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்யவில்லை. இலங்கை அரசும் அதைத் தட்டிக் கழிக்கும் மனோநிலையில் உள்ளது என்பதால், அவர்கள் அதற்கு மாறான பிரிந்து செல்லும் – தனியாக நிற்கக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்திக்கின்றனர்.  

ஆனால், அதை அடைவதற்கான சாத்தியங்களைக் குறித்து இவர்களிடம் தெளிவில்லை. இருக்கின்ற நம்பிக்கை எப்படியானதென்றால், இலங்கை அரசாங்கம் செய்த இன ஒடுக்குமுறைக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காத போக்கும் என்றோ ஒருநாள் சர்வதேச சமூகத்தை ஈழத்தமிழ்ச்சமூகத்தின்பால் திருப்பும் என்பது மட்டுமேயாகும். அதற்காக தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்களத் தரப்பைத் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கின்றன; நம்புகின்றன. 

சர்வதேச சமூகம் என்பதை இவை மேற்குலக நாடுகள் என்றே வரையறையும் செய்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கிடைக்கின்ற வரையறுக்கப்பட்ட அளவிலான ஆதரவை தமக்கான முழுமையான நம்பிக்கையாகக் கொள்கின்றன. இந்த ஆதரவு காலப்போக்கில் ஏனைய மேற்கு நாடுகளின் ஆதரவாக மாறும் என்று நம்புவோர் இதில் அதிகமுண்டு. 

என்பதால் முடிந்த முடிவாக பிரிவினை என்ற மனநிலையில்தான் இவர்கள் உள்ளனர். யதார்த்தத்தைப் பற்றி இவர்கள் சிந்திப்பதாகவே இல்லை. யதார்த்த நிலையே பிராந்திய ஆதிக்கத்தைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலை இன்னும் உருவாகவில்லை. பிராந்தியம் என்பது இந்தியாவும் சீனாவும் இணைந்த நிலையே. இரண்டு நாடுகளையும் தமிழர்கள் தமது அரசியற் தொடர்பு வலயத்திலோ வலையமைப்பிலோ கொண்டு, அதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயற்படவில்லை. ஏன் மேற்குலகைக் கையாளக் கூடிய பொறிமுறைகள் (இராஜதந்திர நடவடிக்கைகள்) எதையும் இவை மட்டுமல்ல எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. 

இந்தப் பலவீனமான நிலையில்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் உள்ளது. 

ஜனநாயக அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளும் போக்குகளும் இருக்கும். அதற்கு இடமும் உண்டு. ஆனால், தமக்கென ஒரு நிலைப்பாட்டை அல்லது கோட்பாட்டை முன்னெடுக்கும் தரப்புகள் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் என்ன? அதற்கான கால வரையறை (உத்தேசமாக) என்ன? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை முன்னெடுக்கும் வழிமுறை – சாத்தியப்படுத்தும் பொறிமுறை – என்ன? என்றெல்லாம் மக்களுக்குக் கூற வேண்டும். அது முக்கியமான கடப்பாடு. 

இங்கே தமிழ் அரசியல் தரப்பில் அந்தக் கடப்பாடு என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இங்கே நடந்து கொண்டிருப்பது, தேர்தலை மையப்படுத்திய அரசியலாகும். தேர்தல் வெற்றிக்காக எதை முன்னே வைக்க வேண்டும். எதை முதலீடாக்க வேண்டுமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். 

இதற்கு அப்பால், தாம் முன்னிறுத்தும் அல்லது தாம் நம்பும் கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை மெய்யாகவே வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அதற்காக அவை பாடுபட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேணடும். அதாவது அதைச் செயற்படுத்த வேண்டும். 

இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை. 

பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!. 

ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள்.