சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்..                       தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல்

சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல்

— கருணாகரன் —

தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. 

மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்பாட்டுத்தன்மை போன்ற சூழமைவுகளோ தென்படவில்லை. குறைந்தபட்சம், தமிழர்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய ஒரு ஆளுமையைக் கூடத் தமிழர்கள் கண்டடைவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை. நேர்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட தலைமைத்துவத்துக்குரியவர்கள்இருந்தாலும் அவர்களை ஏற்று முன்கொண்டு செல்வதற்குத் தமிழ்ச் சூழல் தயாராக இல்லை.  

அதற்காக சம்பந்தன் தனிப்பெருந்தலைவராக இருந்த 2009 – 2024 வரையான 15 ஆண்டுகளில் ஏதோ பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்று இங்கே கூறவரவில்லை. அந்தப் பதினைந்து ஆண்டுகளிலும் சம்பந்தன் மீது கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் அவர் பொறுப்புச் சொல்ல வேண்டியவராகவும் இருந்தார். ஆனால், அவர் எதற்கும் பொறுப்புச் சொன்னதுமில்லை. பொறுப்பை ஏற்றதுமில்லை. தன்னுடைய முதற் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களைப் போலவே அவரும் எந்தப் பொறுப்பையும் ஏற்காத மிக மோசமான தலைவராகவே மறைந்தார். 

அதனால்தான் அவருடைய மரணத்தை மக்கள் தங்களுடைய இழப்பாகக் கருத மறுத்தனர். அவர் மறைந்த பின்னான கடந்த ஓராண்டிலும் சம்பந்தனை மக்களும் ஊடகங்களும் அரசியற்கட்சிகளும் நினைவுகூரவேண்டும் என்று கருதவில்லை. தமிழரசுக் கட்சி உட்பட. இதில் தமிழரசுக் கட்சி பெருந்தவறை இழைத்துள்ளது. 

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த பிறகு,  இயங்கு நிலையையும் மக்களிடம் புழங்கு நிலையையும் இழந்திருந்த தமிழரசுக் கட்சியை மீள்நிலைப்படுத்தியவர் சம்பந்தன். அதற்காக அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த  ஏனையோருடன் ஒரு நிழற்போரைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஜனநாயக விரோதப்போக்கைக் கையில் எடுத்து, சர்வாதிகாரத் தனத்தோடு செயற்பட்டார். இதனால் ஏற்பட்ட கண்டனங்கள் அனைத்தையும் ஏற்றவர் சம்பந்தன். இப்படித் தன்னைப் பலியிட்டு (அதனால் அவர் பெற்றவையும் அதிகம்)  தமிழரசுக் கட்சியைத் தலைமைக்கும் முதன்மை அரங்குக்கும் கொண்டு வந்தவர்.  சம்பந்தனை தமிழரசுக் கட்சி எளிதில் மறந்து விட்டது. இவ்வளவுக்கும் அதற்கு இப்பொழுதும் 10 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்துமென்ன, தங்களுடைய நேற்றைய தலைவரை நினைவு கூர முடியாதவர்களாகவே ஆகி விட்டனர்.  

ஆனால், இந்தப் பத்தியாளர் உட்பட ஒரு சிலர் (யதீந்திரா, வி.தனபாலசிங்கம்) மட்டுமே சம்பந்தனைக் குறித்தும் அவருக்குப் பிந்திய அரசியலைக் குறித்தும் சிந்திப்பவர்களாக உள்ளனர். இவ்வளவுக்கும் இவர்கள் அப்போதும் சம்பந்தனுடைய தலைமையையும் அரசியலையும் விமர்சன பூர்வமாக அணுகி  வந்தவர்கள். அவர்களால்தான் இப்போதும் சம்பந்தனையும் சம்பந்தனுக்குப் பின்னான சூழலையும் அப்படி நிதானமாகப் பார்க்க முடிகிறது. 

சம்பந்தன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்த்தேசியவாத அரசியலுக்குள்ளும் அதற்கு வெளியிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் கண்டனங்களும் இப்போது சில கேள்விகளை எழுப்புகின்றன. சில விடயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

1.   “சம்பந்தன், ஜனநாயக விரோதமாகத் தன்னுடைய தலைமைத்துவத்தை நடத்துகிறார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்கும் தமிழரசுக் கட்சி ஏகபோகமாக நடப்பதற்கும் சம்பந்தனுடைய ஜனநாயக விரோதப்போக்குத்தான் காரணம்” என்று கூறப்பட்டது. அப்படியென்றால், சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு, கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்துவதற்கான ஜனநாயக அடிப்படையிலான முயற்சிகள் நடந்திருக்கவேண்டுமே! அப்படி நடக்கவேயில்லை. பதிலாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணி எனப் புதிய அணி ஒன்றே உருவாகியது. அதுவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி – தமிழ்த்தேசியப் பேரவை என்ற அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸோடு போய்க் கரைந்துள்ளது. மறுவளமாகத் தமிழரசுக்கட்சியோ, சம்பந்தனுக்குப் பிறகுதான் தனித்துப்போய் மேலும் சிதையத் தொடங்கியிருக்கிறது. இங்கே சம்பந்தனுக்குப் பிந்திய நிலை மேலும் மோசமடைந்துள்ளதே தவிர, நிலைபெறவில்லை. 

2.   சம்மந்தன், தன்னுடைய தலைமைத்துவக் காலத்தில் மென்னிலையிலான தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுத்திருந்தார். அதுதீவிர நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ்த்தேசியவாதிகளை எரிச்சலடைய வைத்தது. பதிலாக வெளியுலகமும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் யதார்த்தவாதிகளும் சம்பந்தனுடைய அந்த நிலைப்பாட்டை வரவேற்றனர். தன் மீதான தன்னுடைய சமூகத்தின் கண்டனத்தை ஏற்றுக்கொண்டே சம்பந்தன் மென்னிலைத் தேசியவாதத்தை முன்னிறுத்தித் தீர்வைக் கோரினார். அதனால் நியாயமான – யதார்த்தமான ஒரு தலைவராக வெளியுலகத்தினால் பார்க்கப்பட்டார். அதற்கேற்ப சம்பந்தனால் தீர்வைப் பெறமுடியாத போதும் அவருடைய நியாயமான கோரிக்கைகளும் நிலைப்பாடும் மதிக்கப்பட்டன. இப்பொழுது மென்னிலைத் தமிழ்த்தேசியவாதம் என்பதே இல்லை என்றாகி விட்டது. பதிலாகத் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதமே எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இது தீர்வுக்கான சாத்தியங்களைக் குறைத்திருக்கிறது. இதற்கான மாற்று வழியாக எதை – யாரை முன்னிறுத்துவது?

3.   சம்பந்தனுடைய மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டியது சிங்களத்தரப்பும் வெளியுலகமுமாகும். அதை அவை செய்யத்தவறின. சம்பந்தனுடைய காலத்தில் அவருடைய நிலைப்பாட்டை ஏற்றுத் தீர்வைக் கண்டிருந்தால் இன்றைய தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதம் மீள் எழுச்சியடைந்திருக்காது. இப்போதுள்ள நிலையில் சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றோர் கூட தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆக, சம்பந்தனைப் பலப்படுத்தத்தவறியதன் விளைவை சிங்களத் தரப்பும் வெளியுலகமும் சந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாகச் சிங்களத் தரப்பு, மிகவாய்ப்பான சூழலை இழந்து மிக நெருக்கடியான சூழலுக்குள் புகுந்துள்ளது. 

4.   சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலம் போருக்குப் பிந்தியது.  2009 – 2024 வரையான 15 ஆண்டுகள். இந்தக்காலத்தில் அவர் போரினால் மிகச் சிதைவடைந்திருந்த தமிழ்ச்சமூகத்தையும் தமிழ்ப்பிரதேசங்களையும்மீள்நிலைப்படுத்திப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குத்தலைமை வகித்திருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், அவர் அதைச்செய்யவே இல்லை. மட்டுமல்ல, பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று சந்திக்கவுமில்லை. வயது முதிர்வு காரணமாக அவரால் களத்துக்கு – மக்களிடம் – செல்லமுடியவில்லை என்று யாரும் சொல்லக் கூடும். அவர் தலைமை வகித்த கூட்டமைப்பையோ, அவர் தலைமையிலான மாகாணசபை நிர்வாகத்தையோ, தமிழரசுக்கட்சியையோ கூட அதற்காக அவர் வழிப்படுத்தவில்லை. பதிலாகத் தன்னுடைய தலைமையைச் சர்வாதிகாரத் தன்மையோடு வைத்துக்கொண்டு, எத்தகைய கூச்சமுமின்றித் தனக்கான வசதிகளைக் கொழும்பில் பெருக்கினார். இதுபாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகச்செயலாகும். அதாவது இவர்கள் தலைமையேற்ற அரசியலினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிர்க்கத்தியாக இருக்கும்போது, அந்த மக்களின் பிரதிநிதி – தலைவர் – வசதி, வாய்ப்புகளைப் பெருக்கி வாழ்ந்தார் என்பது நேரெதிரான செயற்பாடாகும். போதாக்குறைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தனைச் சந்தித்தபோதெல்லாம் அவர்களை எடுத்தெறிந்தே நடந்து கொண்டார். கூடவே, போராளிகளையும்அவமதித்தார். 

5.   “சம்பந்தன் கிழக்கைச் சேர்ந்தவர். கிழக்கின் யதார்த்தத்தையும் உள்ளக்கிடக்கையையும் புரியக்கூடியவர். ஆனால், வடக்குச்சிந்தனையையே (தமிழ்த்தேசியவாதத்தையே) பிரதிபலித்தார். அதற்குத்தலைமை தாங்கினார். அதற்கே விசுவாசமாக இருந்தார்” என்ற குற்றச்சாட்டு, கிழக்கில் உள்ள கணிசமான தரப்பினரிடத்தில் உண்டு. கிழக்கையும் வடக்கையும் சமனிலைப்படுத்தக் கூடிய – கிழக்கின் நியாயங்களையும் நிலைப்பாட்டையும் யதார்த்த நிலையையும் வடக்கு புரிந்து கொண்டு  செயற்படவேண்டும் என்ற கடப்பாட்டைஏற்கக் கூடிய நிலையைச் சம்பந்தன் உருவாக்கினாரா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். இது கிழக்கிற்கு சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் தவறாக அமைகிறது. இதைச்சம்பந்தனுக்குப் பின்னர் உள்ள – அல்லது வரக்கூடிய தலைவர்கள் புரிந்துகொண்டு செயற்படுவார்களா?

6.   போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, சாத்தியப்படுத்தக் கூடியதாக இருந்த 13 ஆவது திருத்தத்தையும் அதனோடிணைந்த மாகாணசபையையும் கூட நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் சம்பந்தன் ஈடுபடவில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் அவருக்குத் தயக்கங்களிருந்தன. அந்தத் தயக்கங்களுக்குக் காரணம், ஒரு ‘கிழக்கான்’ (திருகோணமலையான்), தமிழர்களின் கனவை, அந்தக் கனவுக்காக அளிக்கப்பட்ட உச்ச தியாகங்களை எல்லாம் சில்லறையாக்கி விட்டான்’என்ற பழி தன்னைச் சேரும் என்று அஞ்சினார். அதனால்தான் அவர் கிடைக்காத தீர்வைப் பற்றி, அடைய முடியாத இலக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சம்பந்தன் தமிழர்களுக்குத் துரோகமிழைத்ததாக வரலாறு தன்னைப் பழிக்கக் கூடாது என்று முட்டாள்தனமாக நம்பினார். மக்களுக்கு வெற்றியை அளிக்கும்போதே ஒரு தலைவராக வரலாற்றில் பரிமளிக்க முடியும் என்பதை உணரத் தவறினார். உணர்ந்தாலும் துணியத் தவறினார். இந்தக் குறைபாடு ஏனைய தமிழ்த்தேசியவாதிகளிடத்திலும் உண்டு. இவ்வளவுக்கும் யதார்த்தத்தையும் உண்மையான நிலவரத்தையும் அறிந்திருந்தார் சம்பந்தன். ஆனாலும் அதை ஏற்று, தன்னுடைய தலைமைத்துவத்தில் சரியான– பொருத்தமான  அரசியலை முன்னெடுக்க அவர் துணியவில்லை. அப்படித் துணிந்திருந்தால் அவர் வெற்றிகரமான ஒரு தலைவராக வரலாற்றில் நிலைபெற்றிருக்கக் கூடும். 

சம்பந்தனைப்போலவே யதார்த்தம் என்னவென்றும் உண்மை என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை மறுதலித்து, கற்பனையில் குதிரையை ஓட்டவே விரும்புகிறார்கள். சம்பந்தனுக்கிருந்த தயக்கங்களும் அச்சமும் துணிவின்மையுமே ஏனையோரிடத்திலும் உள்ளது. அதிகம் ஏன், சம்பந்தன் இருந்த காலத்தில் சம்பந்தனுடைய நிலைப்பாட்டுடன் ஒத்ததாக – மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேசிய சுமந்திரன் கூட இப்பொழுது தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேச விளைகிறார். முன்சொன்னதைப்போல சந்திரகுமார் போன்றவர்கள் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் சாயத் தொடங்கி விட்டனர். யதார்த்தம், நடைமுறைச் சாத்தியம் என்பதையெல்லாம் விட்டு, தமிழ் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. மக்களுடைய தேவைகளுக்கான கேள்வி, அவர்களுடைய கொள்திறன் போன்றவற்றுக்கு அப்பாலான திசையில் தமிழ் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. 

ஆகவே போருக்குப் பிந்திய தமிழரின் அரசியல் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியல் (Post-war Tamil politics

or Post-war Tamil nationalist politics) என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய நல்விளைவுகள் எதையும் உருவாக்க முடியாத பலவீனத்தை– வீழ்ச்சியையே கொண்டுள்ளது. 

ஆனால், எப்போதும் சில வாய்ப்புகள் இருந்தன. அவற்றின் தன்மையும் அளவு வேறுபாடுகளும் மாறுபடலாமே தவிர, சாதகமான நிலைமைகளும் சாத்தியப்பாடுகளும் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. 

இங்கே அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால், தனிநாடோ(தமிழீழமோ) பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஸ்டியோ இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியமுமில்லை என்பதைப் பற்றி பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அதைத் துணிந்து சொல்வதற்கு அவர்கள்  தயாரில்லை. அப்படிச்சொன்னால் தாம் வரலாற்றுத் துரோகியாகி விடுவோம் என்று அச்சமடைகிறார்கள். இதனால் பொய்யாகப் போலியாக நடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். இதை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம். அப்படியாராவது மறுத்தால், தாம்வலியுறுத்துகின்ற – நம்புகின்ற அந்தத் தீர்வு வடிவத்தை எட்டுவதற்கான வழிமுறை – பொறிமுறை – கால நிர்ணயம் அல்லது கால எல்லை என்னவென்று அவர்கள் விளக்கவேண்டும். 

இங்கே அடிப்படையான தவறு, தாம் நம்பும் உண்மையை மக்களுக்கு முன்வைக்கக் கூடியதிறனும் துணிவும் இல்லாமையே ஆகும். அதற்கிணையானது, சர்வதேச சமூகத்தையும்(இந்தியா – சீனா உட்பட) சிங்கள, முஸ்லிம் சமூகங்களையும் அரசியலையும் கையாள முடியாத – கையாளும் திறனற்ற – அரசியல் தலைமையாகும். இந்தப் பலவீனங்கள்தான் தமிழ் மக்களுடைய அரசியல் தோல்வியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது. 

எனவே சம்பந்தனுடைய காலம், அதற்குப் பின்னான காலம் என்ற ஒன்றைப் பகுத்துப் பார்க்கமுடியாது. போருக்குப் பிந்திய தமிழ்ச் சூழல் என்பது போரினால் ஏற்பட்ட வீழ்ச்சியை விட மேலும் பலவீனமானது, தோல்விகரமானதாகவே உள்ளது.  

உலகெங்கும் போருக்குப் பிந்தியசூழலும் அரசியலும் மாற்றத்தைக்கண்டதாக – கொண்டதாகவே – இருந்துள்ளது. படிப்பினைகளும் மீள்நிலையும் அதனுடைய ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால், இலங்கைத்தமிழருக்கோ எதையும் கற்றுக்கொள்ளாத – கற்றுக் கொள்ளமுடியாத, எதையும் பெற இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது. இதுதான் தமிழ்ப் புத்திஜீவித்தனமும் அதிதீவிரவாத மோகத்தின் கதியுமாகும்.