ஒரு பேப்பர் பையன்- சிறுவர் போராளி- பேராசிரியரான கதை…..!(வெளிச்சம்: 067)

ஒரு பேப்பர் பையன்- சிறுவர் போராளி- பேராசிரியரான கதை…..!(வெளிச்சம்: 067)

— அழகு குணசீலன் —

மட்டக்களப்பு  வாழ்வியல் அகராதியில் களுதாவளை என்ற கிராமத்தின் அர்த்தம் “முன்மாதிரி”.  களுதாவளையார்  செயலால் செய்து காட்டியவர்கள்,  இன்னும் செய்து காட்டுபவர்கள். மொழிவாரி தரப்படுத்தல், சூறாவளி, சுனாமி, போர்க்காலம் ….  போன்றவற்றால்  ஏற்பட்ட பாதிப்புக்களை  அறிவை  ஆயுதமாக கொண்டு  வாழ்வை வடிவமைத்தவர்கள்.  இடையூறுகளை எதிர்நீச்சல்  போட்டு சாதிப்பவர்கள்  களுதாவளையார். 

களுதாவளையாரின் தீர்க்க தரிசனம் மிக்க சமூக, பொருளாதார, அரசியல் தீர்மானங்களில் எல்லாம் இந்த முன் மாதிரியான,  வியூகம் மிக்க, விடாமுயற்சியுடனான சமூகத் தலைமைத்துவப் பண்பை இங்கு எப்போதும் – இப்போதும் சுவாசிக்கின்றது மட்டக்களப்பு தமிழகம்.

அந்த வகையில்  1982 காலப்பகுதியில்  பள்ளிவிட்ட பின்னரும், விடுமுறை நாட்களிலும்  களுதாவளையிலும், அயல்கிராமங்களிலும்  ‘பேப்பர் பையன்’ ( PAPER BOY)  ஒருவனை பார்த்த ஞாபகம்  உண்டோ… ? அந்த பத்திரிகைகள் “காந்திய” பத்திரிகைகள்.  மட்டக்களப்பில் காந்தியம் என்றால் யோகன் கண்ணமுத்து(அசோக்), பாதர் யோசப்மேரி, வாசுதேவா, மண்டூர் மகேந்திரன், துரைரெட்ணம் ஆகியோரை தவிர்த்து எழுத முடியாது. அசோக்கும், சிவரெத்தினமும்  களுதாவளையைச் சேர்ந்தவர்கள். அசோக்கிடம் இருந்து பெற்றுக்கொண்ட காந்தியப் பத்திரிகைகளையே  சிவரெத்தினம் என்ற அந்த காற்சட்டை  பேப்பர் பையன் விற்பனை செய்தான்/ விநியோகித்தான். 

  1983 இனக்கலவரத்தை அடுத்து மலையக மக்களை காந்திய இயக்கம், எல்லைக்கிராமங்களில்  குடியேற்றியும், பொருளாதார ஆதார வாழ்வியலுக்காக  பண்ணைகளையும் அமைத்திருந்த காலம். காந்தியம் ஊடாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளட்) தன்னை  அரசியலில் இணைத்துக்கொண்டகாலம்.  தாந்தாமலை, தும்பங்கேணி பகுதிகளில் காந்திய குடியேற்றங்களும், பண்ணைகளும் இருந்தன. எல்லைக்கிராம சிங்கள மக்களும்  புளட் இயக்கத்தை  அனுசரித்து, ஆதரவளிக்கும் புரிந்துணர்வு இருந்தது. அன்றைய ஜே.வி.பி.யுடனும் தொடர்புகள் பேணப்பட்டன.

 பேப்பர் பையனாக காந்தியம் – புளட் அமைப்புக்களில் ஏற்பட்ட கொள்கை ரீதியான ஈர்ப்பு தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின்  சிறுவர் போராளியாக இணைந்து, பயிற்சிக்காக 1984 முற்பகுதியில் இந்தியா செல்கிறார் சிவரெத்தினம். தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தில்  பங்கேற்ற சிறார் போராளிகளில் சுந்தரம்பிள்ளை சிவரெத்தினம்  என்ற சிறுவனும் ஒருவன். காலப்போக்கில் ‘விடுதலை’ என்ற பெயரிலான  அரசியல் அறிவு வறுமையின் நெளிவு, சுளிவுகளை, அரசியல் வங்குரோத்து தனத்தை, அதிகார வெறியை, அறிவற்ற ஆயுத பூஜையை அடையாளம் கண்டு அந்த  ‘தறுதலையில்’ இருந்து வெளியேறி,  பேராசிரியராக தன்னை உயர்த்திக்கொள்ளவும்  ஒரு முன்னாள் சிறுவர் போராளியால் முடியும் என்பதை அந்த சிறுவன் சிவரெத்தினம் பேராசிரியராக உயர்நிலை பெற்றதன் மூலம் நிரூபித்துள்ளார்.

 களுதாவளையானால்தான் இவ்வாறான  வரலாற்று சாதனை ‘ஓவியத்தை’ வரைய முடியும்  என்பதை கிழக்கு பல்கலைக்கழகத்தின், விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின், கட்புல கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சு.சிவரெத்தினம் நிரூபித்துள்ளார். அவரது  இந்த  மகத்தான  சாதனை  அந்த  வெற்றிலைத் தோட்டத்து  மண்மேட்டின் வரலாற்று பதிவாக அமைகிறது. முழு இலங்கைக்கும் முன்மாதிரியாகிறது.

1970 களின் பின்னரைப்பகுதி. கிழக்கு மாகாணத்தில்  ஈழவிடுதலை ஆயுதப் போராட்ட  அமைப்புக்களின் ஊசாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டது. இயக்கங்களின் ஆட்சேர்ப்பு- தேர்வு மிகவும் இரகசியமாக இருந்த காலம். இந்த நிலையில் 1978 நவம்பர் 23 அன்று வீசிய வெப்பமண்டல சூறாவளி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் திருகோணமலையைக் கடப்பதற்கு முன்னர் பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது. இது தமிழ் இளைஞர் பேரவை, ஈழமாணவர் பொதுமன்றம், தமிழ் மாணவர் அமைப்பு என்பன நிவாரணப் பணிகளுக்காக  கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த வாய்ப்பை ஈழப்போராட்ட இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கும் அந்த அமைப்புக்கள் பயன்படுத்த தவறவில்லை. யாழ்ப்பாணம்-மட்டக்களப்பு இளைஞர்களிடையே ஒரு தொடர்பு பாலத்தை கட்ட இந்த நிவாரணப் பணி உதவியது. 

1983 யூலையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்து கொள்வதையும், ஆட்சேர்ப்பு போட்டியில் ஒரு விளம்பரப் பாணியையும் இயக்கங்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இது ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்ட “வீக்கம்” என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த வீக்க விளம்பர காலத்தில் ஏற்பட்ட வெறும்  தமிழ் உணர்ச்சி,  சிங்கள வெறுப்பு, ஆயுத கவர்ச்சியினால் இயக்கத்தில் இணைந்து கொள்ளாது சிந்தாந்த அடிப்படையில், மார்க்சிய, வர்க்க விடுதலைப்போராட்ட கருத்தியலில் ஈடுபாடு கொண்டு,  சுயவிருப்பில் இயக்கங்களில் சேர்ந்தவர்கள் பலர்  களுதாவளையிலும் , மட்டக்களப்பு கிராமங்களிலும் இருந்தார்கள் / இருக்கிறார்கள். களுதாவளை  யோகன் கண்ணமுத்து (அசோக்),  ஸ்ரானின் ஞானம், மற்றும்  சிறுவர் போராளி சிவரெத்தினம் …. போன்றவர்கள்  பாதைதவறிய புளட்டில் இருந்து வெளியேறியவர்களுள்  முக்கியமானவர்கள்.. அவர்களுள் ஒருவரே எமது இன்றைய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சிவரெத்தினம். 1986 இல் இவர் இயக்கத்தை விட்டு  வெளியேறினர்.

1967 இல் பிறந்த இவருக்கு அவர் புளட் இயக்கத்தில் (காந்தியம்) சேர்ந்த 1982 இல் வயது 15 மட்டுமே. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆயுத அமைப்புக்களில், அரச இராணுவத்தில் இணைக்கப்பட்டால் அவர்களை  “சிறார் போராளிகள்”  “சிறுவர் இராணுவம்” என்று கூறுகிறது ஐ.நா. பிரகடனம்.  இங்கு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், விடுதலைப்புலிகளாலும்,  ஈ.பி.ஆர்.எல்.எப் , ஈ.என்.டி.எல்.எப் மாகாணசபை ஆட்சிக்காலத்திலும் இடம்பெற்ற கட்டாய  “பிள்ளைபிடி” சிறுவர் , சிறுமி ஆட்சேர்ப்பு அல்ல இது.  1980 களின் ஆரம்பத்தில் சுயவிருப்பில், பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு சொல்லாமல், கொள்ளாமல் இயக்கத்திற்கு ஓடிய காலத்தை  சிவரெத்தினம் என்ற அன்றைய சிறுவனின் காலம் குறிக்கிறது. மார்க்சியம் பேசிய இயக்கங்கள் கூட அன்று இந்த வயதெல்லையை கருத்தில் கொள்ளவில்லை என்பதற்கு சிவரெத்தினம் ஒரு நல்ல உதாரணம்.    “கேட்டயாடி கதையை ….சுந்தரத்தின்ர மகன் இச(ய)க்கத்திற்கு போயிட்டானாம்….” என்று  களுதாவளைக் கிழவி சொன்னதுபோல்,  மட்டக்களப்பு கிராமங்களில் பொக்கைவாய்க் கிழவிகள்  கடுக்கண் குலுங்க காதோடுகாது வைத்து கதை சொன்ன காலம் அது.

இயக்கங்களுக்கு இடையிலான சகோதரப்படுகொலைகளும், உள் இயக்கப்படுகொலைகளும் அதிகரித்திருந்த காலத்தில் புளட் இயக்கத்தில் இருந்து தப்பி இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் வழங்கிய பொதுமன்னிப்பில்  1987 இல் ஊருக்கு திரும்பிய பலரில் சிவரெத்தினமும் ஒருவர். இந்த  போராளிகளுக்கு பொது எதிரியான சிறிலங்கா அரசாங்க இயந்திரம் மன்னிப்பு வழங்கியிருந்த போதும் ,   சகோதர இயக்க போராளிகளை புலிகள்  அங்கீகரிக்கவில்லை. சமாதான காலத்தில் மட்டக்களப்பில் புலிகளால் வாசுதேவா கொலை செய்யப்பட்டமை பலரை  சொந்த ஊரைவிட்டு, மலையகம், மற்றும் தென்னிலங்கை, மீண்டும் இந்தியா, ஐரோப்பிய நாடுகளுக்கு துரத்தியது. அந்த சூழலிலும் பள்ளிப்படிப்பை தூக்கியெறிந்த அந்த தவறான முடிவு சிவரெத்தினத்தின் மனதை குடைந்து கொண்டே இருந்தது. என்ன நடந்தாலும் மீண்டும் படிப்பை தொடர்வது என்ற முடிவுக்கு அந்த முன்னாள் போராளி  உயிரைப் பணயம் வைத்து.  ஊரிலே படிக்க முடிவு செய்கிறார். அந்த காலத்தில் களுதாவளையில் ஏற்பட்டிருந்த கல்வி மீதான விழிப்புணர்வும், அபிவிருத்தியும், ரியூட்டரி வசதிகளும் அவரின் படிக்கவேண்டும் என்ற வைராக்கியத்திற்கு தூண்டுதலை வழங்கியிருக்க வேண்டும். 

கல்விப்பொதுசாதாரணதரத்தில் (O /L, 1987) எவரும் எதிர்பார்த்திராத சிறந்த பெறுபேற்றை முதல் தடவையிலே பெற்றதினால், மிக விரைவில் உயர்தரப்பரீட்சைக்கும் (A/L ,1989) தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்குத்தேவையான  சிறந்த தகுதியை பெறமுடிந்தது. 1982 இல் சிவரெத்தினம் பேப்பர் பையனாக இணைந்த  ஆண்டிலேயே கிழக்கு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஐந்து வருடங்களின் பின்னர் அவர் இயக்கத்தை விட்டு திரும்பி வந்து  சாதாரண, உயர்தரங்களில் சகல தடைளையும் தாண்டிய போது 1992. என்ன ஆச்சரியம்!  பல்கலைகழகம் அமைக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 1992 இல் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் ஆரம்பிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாவது தொகுதி மாணவனாக அனுமதி பெறும் வாய்ப்பு எமது இன்றைய பேராசிரியர் சு.சிவரெத்தினத்திற்கு கிடைக்கிறது.  இனி என்ன? படிப்பிலே பிறந்து, படிப்பிலே வளர்ந்த பெருமானே தான். 

 இன்றைய இந்த நிலைக்கு  அவரை உயர்த்தியதில் புளட் இயக்கத்தில் இடப்பட்ட அரசியல் அறிவூட்டல் கல்வி அவருக்கு  ஒரு உறுதியான அத்திவாரத்தை வழங்கியுள்ளது. அதற்கு மேல் எவ்வளவு உயரத்திற்கு அதை கட்டியெழுப்ப வேண்டுமோ அது அவரவர் பொறுப்பு. அதை பொறுப்புடனும், பொறுமையுடனும் செய்து சாதித்திருக்கிறார் பேராசிரியர் சிவரெத்தினம். இந்தியாவில் புளட் பயிற்சி முகாம்களில்  உள்ள நூல் நிலையங்களில் மாலை 7:30மணி முதல் இரண்டு மணித்தியாலங்கள் கட்டாய வாசிப்பு நாளாந்த நிகழ்வு. அதை சரியாக பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டவர் அவர். புளட் இயக்கத்தில்  ஐந்து ஆண்டுகள் தன்னை  வாசிப்பால் புடம்போட்டவர். வாசிப்பின் மூலம் தான் பெற்ற பரந்த அறிவு, தனக்குள்ளே எழுந்த கேள்விகளுக்கு தான் தேடிய சுய தேடல்கள், வாசித்ததோடு நிற்காது அதை மறுவாசிப்பு செய்தமை போன்ற அனைத்தும் சேர்ந்து  பள்ளிக்கூடத்தை விட்டோடிய ஒரு சிறுவனை பேராசிரியனாக ஆக்கி இருக்கிறது என்றால் அந்த முயற்சிக்கு சிவரெத்தினத்திற்கு நிகர் சிவரெத்தினம் தான். வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்பதற்கு சிவரெத்தினம் நமது கண் கண்ட சாட்சி.

எமது இன்றைய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சிவரெத்தினம் 1996 இல் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமாணி சிறப்பு பட்டத்தை ( BA Hons) பெற்றார். அதையடுத்து 1998 இல் திறந்த பல்கலைக்கழக பட்டப்பின் டிப்ளோமாவையும்(Dip.in Ed)  பெற்று  தனது இலக்கை அடையும் முயற்சியில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தை (M.phil) நுண்கலையில் 2006 இல் பெற்றுக்கொண்டார். பின்னர் 2016 இல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்று 2025 இல் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்தில் பயணித்து 1987 இல் ஊர் திரும்பி, கடந்த 38 ஆண்டுகளாக சிவரெத்தினம் மேற்கொண்ட  கல்வி யாத்திரை அவரை பேராசிரியராக தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் சிலர் நினைப்பது போன்று இது சுகப்பிரசவம் அல்ல. 

பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவியில் இருந்து சந்தர்ப்பம் சூழ்நிலையால், விரும்பியும், விரும்பாமலும் ஈழப்போராட்டத்தில் இணைந்து பின்னர் வெளியேறியவர்கள்  இருக்கிறார்கள். நிர்மலா, வரதராஜப்பெருமாள், நித்தியானந்தன் போன்றவர்கள். ஆனால் சிவரெத்தினம் அதற்கு மாறாக  சிறுவர் போராளியாக இயக்கத்தில் இணைந்து பின்னர்  வெளியேறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தவர் என்பது ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வல்ல.

பேராசிரியர் சிவரெத்தினம் ஒரு சமூகப்போராளி. சமூகங்களின் குறிப்பாக மட்டக்களப்பு சமூகங்களின் முதுசமாக விளங்கும் பண்டைய கலை, கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகளை ஒரு மானிடவியலாளராகவும்,  அதற்குள் மறைந்து கிடக்கின்ற சமூக, பொருளாதார, அரசியலை  மார்க்சிய வர்க்க கருத்தியலிலும் ஆய்வு செய்து பல நூல்களையும் படைத்துள்ளார். 

சடங்குகளினூடாக மட்டக்களப்பு (2008),  ஈழத்து நவீன ஓவியம் எஸ்.ஆர்.கனகசபை முதல் மாற்கு வரை (2011),  சாமத்தியச் சடங்கு தொகுப்பு (2015), மகிடிக்கூத்து, பதிப்பு (2022), கூத்தின் அரசியல் அரங்க விமர்சனக் கட்டுரைகள் (2022),  இராவணேசன் அரங்காடியோர் அனுபவங்கள், தொகுப்பு (2023)  என அவரது படைப்பு, தொகுப்புக்களின் பட்டியல் நீள்கிறது. அவ்வப்போது அரங்கம் மின்னிதழில் சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வவுக்கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.

கிழக்குமாகாண மக்களின் சமூக, பொருளாதார, அரசியலில் அதீத அக்கறை கொண்டுள்ள பேராசிரியர் சு.சிவரெத்தினம் கிழக்கு தமிழர் ஒன்றியம், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, கண்ணகி கலை இலக்கிய கூடம் போன்ற சமூக, அரசியல் நிறுவக கட்டமைப்புகளிலும் முக்கிய பங்காளியும், செயற்பாட்டாளருமாவார்.. 

இவ்வாறு பல்வேறு பக்கத்திலும் இன்றைய இளைய சமூதாயத்திற்கு மிகத்துல்லியமான முன்முதிரியாக திகழும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை  சிவரெத்தினம் அவர்கள் இன்னும் பல ஆய்வுகளையும், படைப்புக்களையும், சமூக நிறுவகங்களையும்  தரவேண்டும் என்று கேட்டும், அவரின் கனவில் இருக்கும்  மட்டக்களப்பில் ஒரு ‘ஓவியக் கலைக்கூடம்’  நனவாக வேண்டும் என்றும் வாழ்த்துவோம்.