(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)
– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் –
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான அழகுகுணசீலன் அவர்கள் அரங்கம் மின்னிதழில் எழுதிவரும் ‘வெளிச்சம்’ பத்தித் தொடரின் 62 ஆவது அங்கத்தில் (வெளிச்சம் – 062) 09.06.2025 அன்று
‘கிழக்குத் தமிழர் அரசியல் : தனித்துவம் – மாற்று! சந்தர்ப்பங்கள் – சவால்கள்!!’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில்,
குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அதிகாரபூர்வத் தலைவரும் ‘சொல்லித்தான் ஆகவேண்டும்’ என்ற இவ் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடரின் எழுத்தாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகிய என்னுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது என்பதாலும் அது கிழக்குத் தமிழர்களின் எதிர்கால அரசியலுடன் சம்பந்தப்பட்டதொரு பொது விடயம் என்பதாலும் அதற்கான பின்னூட்டலைப் பொதுவெளியில் இடவேண்டிய கடப்பாடு எனக்குண்டு.
அழகு குணசீலனின் கட்டுரையின் நிறைவுப் பகுதி இவ்வாறு கூறுகிறது.
“மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இளைய படகு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் கடந்த கால சரி பிழைகளை மனம் விட்டு, கபடத்தனங்களைக் கடந்து பேசி கிழக்கு அரசியல் தலைமைத்துவம் ஒன்றை இணைந்து வழங்கவேண்டும். நிலவும் இடைவெளியைக் குறைக்க முதலில் கிழக்கு தனித்துவ அரசியலில் இணங்கி அடுத்து மாற்று அரசியலுக்காக செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி பேசலாம்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அழகு குணசீலனின் அந்தரங்க சுத்தியான நோக்கமும் ஆதங்கமும் புரிகிறது.
அழகு குணசீலனின் கட்டுரையில் மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனக் குறிப்பிடப்படுவது 2018 இல் எனது தலைமையில் ஏற்படுத்தப்பெற்ற அதிகாரபூர்வமான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகும் என்பதையும், இளைய படகு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனக் குறிப்பிடப்படுவது அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது (TMVP) சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகத்தையும் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியையும் இணைத்துக் கொண்டு தங்கள் அரசியல் கூட்டுக்கு (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஒப்புதலின்றியும் எதிர்ப்புக்கு மத்தியிலும் பலவந்தமாகக் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைத் தன்னிச்சையாகச் சூட்டிக்கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ‘படகு’ச் சின்னத்தில் போட்டியிட்ட அணி ஆகும் என்பதையும் வாசகர்களின் வசதிகருதி விளக்கமாகக் கூறவேண்டியுள்ளது.
கிழக்கின் தனித்துவ அரசியல் என வருகிறபோது கிழக்கின் அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளாகப் பிள்ளையான், வியாழேந்திரன், கருணா அம்மான் ஆகிய மூவரும் அவர்களுடைய சரி பிழைகளுக்கப்பால் – பலம் பலவீனங்களுக்கப்பால் களத்தில் நிற்கும் பிரதானமானவர்களாக உள்ளனர். மூவருமே ஏதோ ஒரு வகையில் அரசியல் அதிகாரத்திலும் இருந்தவர்கள்.
இம்மூவரையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 2018 இல் இருந்தே முயன்றது.
ஆனால், மூவருமே ஒத்துழைக்கவில்லை. இந்த மூவருமே 2018ல் முழுமையாக ஒத்துழைத்திருந்திருந்தால் 2020 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலேயே போலித் தமிழ்த் தேசியம் பேசி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பொதுவில் வஞ்சித்துக்கொண்டு விவசாய மனோபாவம் கொண்ட கிழக்குத் தமிழர்கள்மீது மேட்டுக்குடி வர்க்க மேலாதிக்க குட்டி பூர்ஷுவா அரசியலைத் திணித்துவரும் போலித் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் கிழக்கின் அரசியற் களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருக்க முடிந்திருக்கும்.
2020 லேயே (மூத்த) ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் ஒரு குடையின் கீழ் ஏற்படவிருந்த கிழக்கின் அரசியல் ஐக்கியத்தை மூவரும் தனித்தனியாகக் குழப்பிய போதிலும் கூட (மூத்த) ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ நம்பிக்கை இழந்து விடாமல் நல்லெண்ண அடிப்படையில் எதிர்காலத்திலாவது இவர்கள் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் (மூத்த) ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ சில துணிகரமான நிலைப்பாடுகளை எடுத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ‘படகு’ச் சின்னத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் இரு வேட்பாளர்கள் (வெள்ளிமலை, வாணிதாசன்) உள்ளடக்கப்பட்டிருந்தனர். அம்பாறை (திகாமடுல்ல) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபைப் பட்டியலில் போட்டியிடுவதற்கு தமது கட்சி சார்பிலான வேட்பாளர்களையும் நிறுத்துவதாக வாக்களித்திருந்த பிள்ளையான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. பிள்ளையானுடைய கட்சி தனது வாக்குறுதியை மீறியது.
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைமை வேட்பாளராகக் கருணா அம்மானை நிறுத்திப் போட்டியிட்டு சுமார் 30,000 வாக்குகளைப் பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி) 25,000 வாக்குகளையே பெற்றது. ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் தேவையான வாக்குகளில் சில ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றதால் தேர்ந்தெடுக்கப்பட முடியாமல் போனது மட்டுமல்ல துரதிஷ்டவசமாக அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குச் சாத்தியமான ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பறிபோனது. இந்நிலைமை ஏற்படக் காரணம் இத்தேர்தலில் கருணா அம்மான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் உதாசீனம் செய்தமையேயாகும். மட்டுமல்ல கருணா அம்மான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் முழுக் கிழக்கு மாகாணமும் தழுவிய நிலைப்பாட்டிற்கும் தீர்மானத்திற்கும் முரணாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை எதிர்த்துத் ‘தையல் மெஷின்’ சின்னத்தில் ஒரு சுயேச்சைக் குழுவையும் இறக்கியிருந்தார்.
வியாழேந்திரனைப் பொறுத்தவரை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை அவர் ஏற்றுக் கொண்டிருந்தபோதிலும் அதன் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ரி எம் வி பி கட்சியின் ‘படகு’ச் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் என்று முரண்டு பிடித்தார். ஆனால், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் ‘கப்பல்’ சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்திருந்தார். ஆனால் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பிள்ளையானின் வாக்குறுதியை (தேர்தலுக்குப் பின்னர் தான் பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்துக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றாகத் தன்னுடைய கட்சி இணைந்து கொள்ளுமென்றும் அதன் பின்னர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் ஏனையவர்களுடன் இணைந்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தீர்மானிக்கும் பொதுச் சின்னத்திலேயே தன்னுடைய கட்சி போட்டியிடுமென்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.) நம்பி ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் அவரை எதிர்க்க விரும்பவில்லையென்பதால் வியாழேந்திரன் கப்பல் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருக்கவில்லை. அதனாலேயே அவர் தேர்தலில் மொட்டுக் கட்சியில் போட்டியிட்டு வென்றார். தேர்தல் முடிந்த பின்னர் பிள்ளையான் தனது வாக்குறுதியை மீறினார்.
இவ்வாவாறாக அன்று கிழக்கின் அரசியல் ஐக்கியத்தைக் குழப்பிய இம்மூவரும்தான் இன்று அழகு குணசீலன் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு ‘இளைய படகு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பாக’ இணைந்துள்ளார்கள் இதனை (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்த கூட்டமைப்பாக நோக்கவில்லை. ஒரு அரசியல் சந்தர்ப்பவாதக் கூட்டாகவே கருதுகிறது. இக்கூட்டின் மீது நிறைய அரசியல் சந்தேகங்கள் இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மக்களிடம் வாங்கிய அடியினால்தான் இப்போது கூட்டிணைந்துள்ளார்கள்.
இவர்கள் மூவரிடமுமே தங்கள் எண்ணங்களிலும்-வார்த்தைகளிலும்-செயற்பாடுகளிலும் உண்மை நேர்மை வெளிப்படைத்தன்மை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த மனப்போக்குகள் இல்லை. (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்த விடயங்களில் இந்த மூவரிடமுமே சூடு கண்ட பூனையாகும்.
ஆனால், உலக இயங்கியல் விதிப்படி எதுவும் நிரந்தரமில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. கட்சி மற்றும் தனிநபர் நலன் சார்ந்த மனோநிலையில் மாற்றமேற்பட்டு அவற்றைக் கடந்து மக்கள் நலன் சார்ந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் இம் மூவரிடமும் ஏற்படுமாயின்-உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த எண்ணங்களின் அடிப்படையில் மாற்றங்கள் மூவரிடமும் உள்வாங்கப்படுமாகவிருந்தால் மட்டுமே அழகு குணசீலனின் ஆதங்கம் நிறைவேற வாய்ப்புண்டு. கபட அரசியலுக்கு ஒரு போதும் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு துணை போகாது. மக்கள் நலன் சார்ந்த தூய்மையான அரசியலே (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செல்நெறி.
