மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச சபையின் அரசியல் பழிவாங்கல்

மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச சபையின் அரசியல் பழிவாங்கல்

 — எழுவான் வேலன் —

மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச சபை, மொத்தம் 20 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 02 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தலா ஒரு உறுப்பினரையும் கொண்டமைந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சி, ஒவ்வொரு உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் ஆதரவினைப் பெற்று 12 உறுப்பினர்களுடன் ஆட்சியமைத்துக் கொண்டது. இதன் தவிசாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மேகசுந்தரம் வினோராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

23.06.2025 அன்று இப் பிரதேச சபையின் கன்னியமர்வு இடம்பெற்றுள்ளது. இந்தக் கன்னியமர்வில் ஆலய திருவிழாக்களின் போது வாகனப்பாதுகாப்பு நிதியாக சங்கங்கள், மன்றங்களினால் அறிவிடப்படும் நிதியில் 30 சதவீதத்தினை வரியாக அறவிடுவதென்றும் அதே போன்று திருவிழாக்களில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளிடம் நிலவாடகை மின்சாரக் கட்டணம் என்பவற்றுக்காக ஆலயத்தினரால் அறவிடப்படும் நிதியில் 50 சதவீதத்தினை வரியாக அறவிடுவதென்றும் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தினை எதிர்க்கட்சியினைச் சேர்ந்த எட்டுப் பேரில் ஏழு பேர் எதிர்த்து வாக்களிக்க, ஒருவர் நடுநிலமை வகித்துள்ளார்.  

தமிழரசுக்கட்சி தனது கன்னியமர்வில் இவ்வாறான ஒரு தீர்மானத்தினை எடுத்ததன் மூலம் ஓர் அரசியல் பழிவாங்கலை களுதாவளையின் மேல் அவசர அவசரமாக மேற்கொண்டிருக்கின்றது என்பது மிகத் தெட்டத்தெளிவான உண்மையாகும். இப்பிரதேச சபையில் இரண்டு வட்டாரங்களைக் கொண்ட ஒரே ஒரு கிராமம் களுதாவளையாகும். எல்லாவகைத் தேர்தல்களிலும் இக்கிராமத்தின் ஒற்றுமையான முடிவு வலுவான தாக்கத்தைச் செலுத்துவதாகும். அன்று தொடக்கம் தமிழரசுக் கட்சிக்கு வலுவான ஆதரவினை வழங்கிவருகின்ற கிராமமாகவும் இருப்பதோடு தமிழரசுக் கட்சியில் மத்திய குழு உறுப்பினர்களையும் ஒரு முன்னாள் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரையும் கொண்டிருக்கின்றது. இவையனைத்தும் இருந்தும் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் களுதாவளையின் இரண்டு வட்டாரங்களிலும் தமிழரசுக் கட்சி தோற்கடிக்கபட்பட்டது. இதனை தமிழரசுக்கட்சி எதிர்பார்க்கவில்லை. தங்களைத் தோற்கடித்த களுதாவளைக்கு இந்த வரி விதிப்பின் மூலம் தமிழரசுக் கட்சியினர் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வரி விதிப்பானது பிரதேச சபைக்குட்பட்ட எல்லா ஆலயங்களுக்கும்தானே என வாசகர்கள் வாதிக்கலாம், ஆனால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிகப் பிரபல்யமான ஆலயமாகவும் அதிகளவான பக்தர்கள் வழிபடும் ஆலயமாகவும் அமைந்திருப்பது களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா 23.06.2025 அன்ற ஆரம்பமாகி 02.07.2025 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறுகின்றது. எனவே அது முடிவடைவதற்கு முன்பு இவ்வாறான தீர்மானத்தினை எடுத்து பழிவாங்க வேண்டும் என்ற அவசரத்தில் கூட்டப்பட்ட கூட்டமே 23.06.2025 கூட்டப்பட்ட கூட்டமாகும்.

இதன்மூலம் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அவர்களது நல்வாழ்வுக்காகவும் நாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்கின்ற வெற்றுக் கோசத்தை நீக்கி தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

குறுமண்வெளிக்கும் மண்டூருக்குமிடையிலான நீர்வழிப் போக்குவரத்துக்கான பாதைக்கு சிறியதொரு கட்டணம் கடந்த அரசில் வசூலிக்கப்பட்ட போது அதை தழிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  திரு.சாணக்கியன் அவர்கள் தமிழர்களிடம் வரியை அறவிட்டு சிங்கள அரசுக்குக் கொடுப்பதாக மிகத் தீவிரமாக எதிர்த்திருந்தார். இன்று அதை விட மிக அதிகமான வரியை தமது கட்சி தமிழர்களிடம் அறிவிடுகின்றது. இதற்கு தமிழரசுக்கட்சி கூறும் காரணம் திண்மக்கழிவகற்றலுக்கு அதிகளவு பணம் செலவிடப்படுவதால் அந்தப் பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக இந்த வரி அறவிடப்பட வேண்டியிருக்கின்றது என்பதாகும். இதே கருத்தைத்தான் அன்று பிள்ளையான் அவர்களும் பாதைக்கான செலவின் சிறுதொகையினை அறவிடவேண்டியிருக்கின்றது எனக் கூறியிருந்தார். ஆனால் அதை சாணக்கியனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தாங்கள் செய்தால் அது தமிழர்களுக்கு நல்லது அதே விடயத்தை மற்றவர் செய்தால் தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கை எனும் பார்வை தமிழரசுக் கட்சியில் காலாகாலமாக இருந்து வருகின்ற ஒரு நேர்மையற்ற அரசியல் தனமாகும்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்து இதே வரிவிதிப்பினை விதிப்பதாக தீர்மானம் மேற்கொண்டிருந்தால் தமிழரசுக் கட்சியினர் மிக மோசமான இனவாதத்தைக் கக்கி மக்களை உசுப்பேற்றி வீதியில் இறங்கியிருப்பார்கள். இதுதான் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியமுமாகும். இந்த இரட்டைவேடத்தன்மையினை களுதாவளை மக்கள் மட்டுமன்றி இலங்கைவாழ் தமிழர்கள் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை முன்வைத்து சுகபோகங்கள் அனுபவிக்கும் தமிழரசுக் கட்சியினரைப் போல்  களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் இல்லாது அது உண்மையில் தமிழர் நலனை முன்னிலைப்படுத்தி மிக அடக்கமாக தனது சேவையினை தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்ற ஓர் ஆலயமாகும். மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டு அங்குள்ள கோயில்களின் பூசகர்களுக்கான கொடுப்பனவுகளையும் அக்கோயில்களின் பராமரிப்பிற்கான செலவுகளையும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருமானத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புணானையில் உள்ள பிள்ளையார் ஆலயம் இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதே போன்று பல எல்லைக்கிராமங்களில் உள்ள ஆலயங்களின் கும்பாவிசேக நிதி, ஆலய புனரமைப்பு நிதி, என அக்கோயில்களின் வேண்டுகோள்களின் அடிப்படையில் வழங்கிவருகின்றது. அதே போன்று கல்வி அபிவிருத்திக்காக பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, வசதிகுறைந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவு, என்பவற்றோடு தமிழ்த் தினப் போட்டிகள், மாவட்ட மட்ட, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான போக்குவரத்துச் செலவுகள், என பெருமளவு தொகை செலவு செய்யப்படுகின்றது. இதனைத் தவிர இலங்கையில் எந்தப் பாகத்திலுமுள்ள பாடசாலைகள், நூலகங்கள் ஆலயங்கள், மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகள் தங்களுக்குத் தேவையான குத்து விளக்குகள், மற்றும் பானைகள் போனறவற்றைக் கோருமிடத்து அவை இவ்வாலயத்திலிருந்து இலவசமாக வழங்கப்படுகின்றது. அத்தோடு வசதிகுறைந்த நோயுற்ற நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவும் இவ்வாலயத்தால் வழங்கப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

மேலும், ஆலயத்திற்குரிய கலாசார மண்டபம் பொது அமைப்புக்களின் பொதுத் தேவைகளுக்காக இலவசமாக வழங்கப்டுகின்றது.    

அத்தோடு சுற்றாடல் பாதுகாப்பிற்கும் ஆலய சுற்றுச்சூழல் சுத்தத்துக்கும் மிகவும் முன்னுரிமை வழங்கி பொதுமக்களின் ஆதரவுடன் பேணிப்பாதுகாத்து வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணமாக இருப்பது ஆலயத்துக்குப் செல்லும் வீதியின் இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மருத மரங்களாகும். இதே போன்று ஆலயச் சூழலிலும் பல்வேறுவகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்ப்பட்டு வருவதோடு ஆலய வீதி எப்போதும் பொதுமக்களால் துப்பரவு செய்யப்பட்டு அந்த திண்மக் கழிவுகள் பொதுமக்களாலே பொறுப்புடன் அகற்றப்பட்டு வருகின்றன.

பிரதேச சபையினர் ஆற்ற வேண்டிய இவ்வாறான பணிகளை அவர்களின் எவ்வித உதவியுமின்றி ஆலயம் மிகச் சிறப்பாக ஆற்றிக் கொண்டு வருவதை இவ்வாலயத்துக்கு வருகைதருபவர்களால் அறியமுடியும்.

எனவே மட்டக்களப்பில் தமிழர்களின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்துக்காக முடிந்தளவு சேவையினைச் செய்து வருகின்ற ஆலயமாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது. பொருட்கள், சேவைகள் தவிர நன்கொடையாக மட்டும் வருடமொன்றுக்கு 3.7 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்படுவதை இவ்வாலய ஆண்டுக் கணக்கறிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவத்திலன்று மாத்திரம் திண்மக்கழிவகற்றல் பணியினை மேற்கொள்ளும் அதற்காக பிரதேச சபைக்கு ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. அதன் பிறகு எந்தவொரு கழிவகற்றலுக்கும் பிரதேச சபையினர் ஈடுபடுவதேயில்லை.

இந்த நிலையில் தான் இம்முறை தமிழரசுக் கட்சியினருக்கு 50 வீதம், 30 வீதம் வரி தேவைப்படுகின்றது.

பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தமது பிரதேசத்துக்குள் வரி அறவிடுகின்ற அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் சமூக சேவைகளைச் செய்து கொண்டிருக்கும் ஓர் ஆலயத்தின் மீது இவ்வளவு பெரும் வீதத்தினை எந்த அடிப்படையில் விதித்தனர் என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கின்றது.

பொருளாதாரச் சுமையினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கும் மக்களை இந்த அதிக வரிவிதிப்பானது மேலும் கஸ்ரத்துக்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்து கொண்ட ஆலய பரிபாலன சபையினர் வாகனப் பாதுகாப்பு நிதியினை அறவிடாது இலவசமாக அந்தச் சேவையினை வழங்குமாறு கல்வி அபிவிருத்திச் சங்கத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

களுதாவளையில் இயங்கும் கல்வி அபிவிருத்திச் சங்கமானது வசதிகுறைந்த மாணவர்களுக்கான இலவச வகுப்புக்களை நடாத்தியும் தங்கள் நிலையத்தில்  மாணவர்களுக்கு இரவு நேர கற்றல் வசதிகளை ஏற்படுத்தி அவர்களைக் கண்காணித்து வழிப்படுத்துகின்ற ஓர் உன்னதமான இலவச சேவையினை வழங்கி வருகின்ற ஓர் நிறுவனமாகும். இந்த வாகனப் பாதுகாப்பு மூலம் பெறப்படும் நிதியினால் அவர்களுடைய மின்சாரக் கட்டணம், மற்றும் சில கற்பித்தல் உபகரணங்கள் நிலையப் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வருடம் அவர்கள் வாகனப் பாதுகாப்புச் சேவையினை இலவசமாக வழங்குவதன் காரணத்தினால் எதிர்வரும் வருடம் அவர்கள் நிதிநெருக்கடியினை எதிர்கொள்வர். அவர்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியினையும் ஆலயமே பொறுப்பெடுக்க வேண்டி வரும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதுபோன்றே வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம், மற்றும் நிலவாடகை போன்றவற்றை அன்பளிப்பாக ஆலயத்துக்குச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட இருப்பதாக அறிய முடிகின்றது. அவ்வாறு அவர்கள் அன்பளிப்புச் செய்யுமிடத்து மீண்டும் அவர்களிடம் பிரதேச சபை வரியினையும் அறவிடுமாக இருந்தால் அது வியாபாரிகள் மீது ஏற்படுத்தப்படும் இரட்டைச் சுமையாக இருக்கும். இந்த இரட்டைச் சுமையினை அவர்கள் பொதுமக்கள் மீதே ஏற்றிவிடுவர்.

தங்களுடைய சிறிய சேமிப்பில் தங்களுக்குத் தேவையான வீட்டுப் பாவனைப் பொருட்களை திருவிழாவில் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கும் சாதாரண ஏழைப் பொதுமக்கள் மேல் தமிழரசுக் கட்சி இடியை இறக்கியிருக்கின்றது. இது போன்றே திருவிழாக்களில் மட்டும் வியாபாரம் செய்து தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் நடைபாத வியாபாரிகளும் சரியான வியாபாரம் இல்லாமல் நஸ்ட்டத்தை எதிர்நோக்கப் போகின்றார்கள். ஆக மொத்தத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழரசுக் கட்சியினர் தங்களுடைய முதல் நடவடிக்கையாக எடுத்திருக்கும் இந்த அரசியல் பழிவாங்கலால் சாதாரண ஏழைத் தமிழ் மக்களும், தமிழ் மக்களுக்காக சேவையாற்றி வந்த சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமுமே பாதிக்கப்படுகின்றது என்பதே தெட்டத் தெளிவான உண்மையாகும்.

இந்த பழிவாங்கல் தன்மையை விட்டு சபையால் மதிப்பீடு செய்யப்பட்ட பெருமளவு வரிமீதி அறவிடப்படாமல் இருக்கின்றது. வினைத்திறன் வாய்ந்த நிர்வாகத்தை ஏற்படுத்தி அவ்வரிகளை அறவிட்டு அந்த நிதியின் மூலம் மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்குவதே நல்ல தலைமைத்துவத்தின் பண்பாகும். இந்த நல்ல தலைமைத்துவப் பண்புகளை தமிழரசுக் கட்சியினர் கற்றுக் கொண்டு நிர்வாகம் நடாத்த முன்வர வேண்டும். அது தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைபயப்பதாகும். அதுவே உண்மையான தமிழ்த் தேசியமுமாகும்.