— சபீனா சோமசுந்தரம் —
வானம் மழை மூட்டத்துடன் காணப்பட்டதால், 4.00 மணிக்கெல்லாம் இருட்டி விட்டிருந்தது.
அந்த நீண்ட ஒற்றையடிப்பாதையை இருள் கவ்வியிருந்தது, மழைமெல்ல தூறிக்கொண்டிருந்தது.
பைக்கின் வேகத்தை கூட்டினேன், வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேலையாட்களுக்கு தேநீர் எடுத்து வரும்படி அப்பா சொல்லவும், அம்மாவுக்கு அழைப்பை ஏற்படுத்தி, “அம்மா பைக்க எடுக்கிறேன்.. தேத்தண்ணிய ஊத்துங்க..” என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி பைக்கை முறுக்கினேன்
வயலில் இருந்து அந்த நீண்ட ஒற்றையடிப்பாதையூடாகத்தான் வீட்டுக்கு செல்ல வேண்டும், எப்படியும் பதினைந்து நிமிடங்கள் ஆகும் அந்த பாதையை கடந்து செல்ல.
வழமையாக பழக்கப்பட்ட பாதை தான், இருந்தாலும்.. அந்த இருட்டும், தனிமையும் என் தைரியத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
“சரி நம்ம பாக்காத இருட்டா.. நம்மட ஊர்ல நமக்கு என்ன பயம்..” என்று நினைத்துக்கொண்டு, பைக்கை முறுக்கினேன்.
அப்போது தூரத்தில் யாரோ நிற்பது போன்று தெரிந்தது, யாருமில்லாத இந்த வீதியில் யார் இது? என்று யோசிக்கையில், மீண்டும் பயம் வந்து தொற்றிக்கொண்டது.
அவர் ஒரு வயதான பாட்டி, பைக்கை நிறுத்தும்படி கையைஅசைத்தார், நானும் நிறுத்தினேன்.
“மனே என்னை அந்த கோயிலடில இறக்கி விடப்பா…” என்றுகேட்டார், நானும் யோசிக்காமல் “சரி ஏறுங்க அம்மம்மா…” என்றேன்.
அவர் ஏறிக்கொண்ட பின், பைக்கை மீண்டும் முறுக்கினேன்.
அவர் எதுவுமே பேசவில்லை, பின்னால் அவர் அமர்ந்திருக்கிறாரா? இல்லையா? என்பதை அடிக்கடி பைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன்.
அவர் பேசமால் இருக்கவும், அந்த தனிமையான வீதியும், இருட்டும் எனக்கு பீதியை கிளப்பியது.
எத்தனை பேய் கதை கேள்விப்பட்டிருப்பேன், இப்படி மழை நேரம் தனிமையான இருண்ட பாதையில் ஆவிகள் நிற்கும், அந்த வழியால்வரும் வாகனங்களை மறித்து அவற்றில் ஏறும், என்றெல்லாம் எங்கள் ஊரில் கதைகள் சொல்வார்கள்.
அதை எல்லாம் கேட்டு நக்கலடித்து சிரித்துவிட்டு கடந்து செல்லும் எனக்கு, இப்போது அந்தக் கதைகள் பயத்தை உண்டாக்கியது.
“ஆவிகளுக்கு கால் இருக்காது” என்று ஏதோ ஒரு பேய் கதையில்கேட்ட ஞாபகம் வரவே, உடனே மூளையில் மணி அடித்தது.
மெல்ல தலையை சரித்து, பின்னால் பார்த்தேன், அந்த வயதான பெண்ணுக்கு கால் இருக்கிறதா என்று, அடக்கடவுளே அவர் அணிந்திருந்த சேலை கால் இருந்தாலுமே அதை மறைத்துக்கொண்டு இருந்தது.
“அய்ய்ய்யோ.. இண்டைக்கு என்ர கதை சரி…” என்று நினைத்துக்கொண்டு, பைக்கின் வேகத்தை கூட்டினேன், சட்டென வானம் வெளித்தது, அப்போது தான் தெரிந்தது அந்த நீண்ட ஒற்றையடி பாதை முடிந்துவிட்டது.
ஒரு பெருமூச்சோடு பின்னால் இருந்த அந்த வயதான பெண்ணிடம், “அம்மம்மா எங்க இறக்கனும்…” என்று கேட்டேன்.
“அந்த முன்னால வாற கோயிலுக்கு கிட்ட நிப்பாட்டு மனே… அங்கதான் என்ர வீடு… ” என்றார்.
அவர் சொன்ன இடத்தில் அவரை இறக்கிவிட்டேன், இறங்கியதும் நான் எதிர்பாராத கணப்பொழுதில், என் தலையை வருடி, “நல்லா இருமனே….” என்று ஆசிர்வதித்தார்.
அவருடைய அந்த அன்பான கைகளின் ஸ்பரிஸம் என்னில் பட்டபோது, மனதில் இருந்த பயம் பறந்தே போய்விட்டது.
“அப்பாடி பேய் எல்லாம் இல்ல…” என்று நிம்மதியோடு என் உதடுகள் புன்னகைத்தது.
சுற்றிலும் பார்த்தேன், அங்கு வீடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, உடனே அவரிடம் கேட்டேன், “எங்க அம்மம்மாஇவடத்த வீடு ஒண்டும் இல்லையே….” என்று
அதற்கு அவர், “இங்க பக்கத்தில தான் வீடு இருக்கடா மனே.. உனக்குத் தெரியாது..” என்று புன்னகைத்தார்.
நேரம் ஆகிக்கொண்டிருந்தது, நானும் வீட்டிற்கு போய் தேநீரை எடுத்துக்கொண்டு மீண்டும் வயலுக்கு போக வேண்டும்.
“எனக்கும் நேரம் போய்ட்டு…. அதனால நானும் வந்திட்டன்… ஆனாலும் அவடத்த வீடுகள் ஒன்டும் இல்லடி.. அவ எங்க போனவோ தெரியல..” என்று நெற்றியை சுருக்கி, சந்தேகத்துடன் அவன் சொல்லிமுடித்தான்.
அதை கேட்டுக்கொண்டிருந்த நான் ஒரு பெருமூச்சோடு, “அப்ப நீங்கபாத்தது ஒன்று பேயா இருக்கனும்.. இல்லன்டா சாமியாஇருக்கனும்…” என்றேன்.
“யேய் என்னடி நீ.. சாமி என்டெல்லாம் சொல்லுற..” என்றான் அவன்
“ஓம்.. அவ பேயா இருக்குமோ என்டு பயந்தனீங்க தானே… அப்ப பேய் இருக்கெண்டால் சாமியும் இருக்கும் தானே..” என்றேன் கேள்வியாய்.
“தெரியலடி பேயோ… சாமியோ… நான் பிறக்க முதலே எங்கட அம்மம்மா செத்திட்டா… அவ என்ர தலையில கையை வச்சுஆசிர்வாதம் பண்ணி போது எங்கட அம்மம்மாவே வந்த மாதிரி இருந்தது.. மனசு என்னவோ சொல்லமுடியாத ஒரு சந்தோசத்திலஇருக்கு” என்றான் அவன்.