புன்சிரிப்பு மாறா பாரதி..

புன்சிரிப்பு மாறா பாரதி..

  — கருணாகரன் —

தமிழ்ப் பரப்பில் பத்திரிகையாளராக அறியப்பட்ட இராஜநாயகம் பாரதி காலமாகி விட்டார். பாரதிக்கு வயது 63. மரணம் ஒருவரை எடுத்துச் செல்வதற்கு வயதில்லை. ஆனாலும் பாரதியின் மரணம் எதிர்பாராதது. அவருடைய அண்ணன் பரதனின் மரணமும் அப்படித்தான் நடந்தது. பரதன் இறக்கும்போது அவருக்கு வயது, 61. பரதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான போராளியாக இருந்தவர். 1980 களின் முற்பகுதியிலிருந்து 1990 களின் நடுப்பகுதி வரையில் புலிகளோடு இணைந்து செயற்பட்டவர். இலங்கை – இந்திய இராணுவங்கள் மற்றும் முரணியக்கங்களின் எதிர்ப்பு நிறைந்த  சூழலில் தப்பிப் பிழைத்து, லண்டனில் தன் துணைவியோடு நடந்து சென்று கொண்டிருக்கும்போது மரணத்தை சந்தித்தவர். 

புலிகளுடைய தொலைக்காட்சியான ‘நிதர்சனம்‘,  வானொலியான ‘புலிகளின் குரல்‘ ஆகியவற்றை உருவாக்கி, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளராக நீண்டகாலம் இருந்தவர் பரதன்.

பாரதி, பரமேஸ்வராக்  கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் படிப்பை முடித்த கையோடு ஊடகத்துறைக்குள் நுழைந்து விட்டார். 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழமுரசு‘பத்திரிகையில் இணைந்து ஆசிரியர் பீடத்தில் பணியாற்றினார். அது போராட்டம் உச்சமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த காலகட்டம். பல இயக்கங்களும் தலையிலும் மனதிலும் முரண் அரசியலைச் சுமந்து கொண்டு குறுக்கும் மறுக்கும் திரிந்து கொண்டிருந்தன. வேறுபாடின்றி  இயக்கங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது இலங்கை இராணுவம். இரண்டுக்குமிடையில் ஊடகவியலாளராகச் செயற்படுவதும் வாழ்வதும் சவாலாகியிருந்த நாட்கள் அது. 

அப்படியான நாளொன்றில், குண்டு வெடிப்புப் பற்றிய செய்திஒன்றுக்காக யாழ்ப்பாணக்  கச்சேரிக்குச் சென்றிருந்தபோது படையிரால் கைது செய்யப்பட்டார் பாரதி. விசாரணைகளின் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்டுச் சில காலம் ஈழமுரசுவில் பணியாற்றினாலும் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய ‘முரசொலி‘பத்திரிகையில் இணைந்தார். ஆரம்ப கால ஊடகத்துறையில் பாரதிக்கு வழிகாட்டிகளாகவும் ஊக்கிகளாகவும் எஸ். திருச்செல்வம், சிறி நடராஜா, கிறிஸ்ரி ரஞ்சன், சுப்பிரமணியம் போன்றோர் இருந்தனர். முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் பாரதி ஒரு விபத்தில் சிக்கித் தன்னுடைய கைகளில் ஒன்றை இழந்தார். 

வடக்கு கிழக்கு மாகாணசபையின் நிகழ்வொன்றுக்காக வடக்கிலிருந்து ஊடகவியலாளர்களை இந்திய அமைதிப்படை (IPKF) கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட வாகன விபத்து அது. அதனால், இந்திய இராணுவம் உடனடியாகவே யாழ்ப்பாணத்துக்கு பாரதியைக்கொண்டு வந்து,மேலதிக சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு விமானத்தில் எடுத்துச் சென்றிருந்தது. அங்கே சிகிச்கை முடித்து இலங்கைக்குத் திரும்பிய பாரதி, தொடர்ந்து சில காலம் முரசொலியில் பணியாற்றினார். 1990 இல் முரசொலியும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது, பாரதி அங்கிருந்து கொழும்புக்குச் சென்றார். 

கொழும்பில் வீரகேசரி, தினக்குரல் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தில் ஏறக்குறைய 30ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் பாரதி. இந்தக் காலகட்டத்தில் பாரதியின் செயற்பாடுகள் கொழும்பு மையம் என்பதற்கு அப்பால், தமிழ்ச் சமூகம் என்றே இருந்திருக்கிறது. குறிப்பாகவடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி, அடையாளம், அதனுடைய பாதுகாப்பு போன்றவற்றைக் கவனத்திற் கொண்டிருந்தார். இதற்கான அடிப்படைகளான அரசியல், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை தன்னுடைய ஊடகச் செயற்பாட்டிலும் தான் செயற்பட்ட ஊடகங்களின் தளவாக்கத்திலும் முன்னிலைப் பேசுபொருளாக்கினார். 

தினக்குரல் பத்திரிகையின் வாரப் பதிப்புக்கான ஆசிரியராக இருந்தபோது ‘புதிய பண்பாடு‘என்ற தலைப்பில் பாரதி உருவாக்கியிருந்த சிறப்புப் பகுதி பாரதியின் ஆளுமை, ஆற்றல், கரிசனை, அவருடைய விரிந்த தொடர்பாடற் பரப்பின் அடையாளமாகும். இதற்காகத் தினக்குரலில் பலரையும் எழுத வைத்தார். பலரையும் என்பதன் பொருள், பல்வேறு தரப்பினரையும். பல்வேறு சிந்தனைப்போக்குடையோரையுமாகும். சிவசேகரம் (கோகர்ணன்) யதீந்திரா, அக்கரையூரான்,  காலகண்டன் (சி.கா. செந்தில்வேல்), பெரிய ஐங்கரன், கா. சிவத்தம்பி எனப் பலரும் எழுதினார்கள். 

பாரதியின் அரசியல் நிலைப்பாடு தமிழ்த்தேசியத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் இடமளித்திருக்கிறார். அந்த இடம் ஏதோ ஓரத்தில், சம்பிரதாயத்துக்காக வழங்கப்பட்டதல்ல. பாரதியின் விரிந்த மனம், விரிந்த சிந்தனையின் அடிப்படையிலானது. இதற்குக் காரணம், அவருடைய தந்தையார் சு. இராஜநாயகனின் அரசியலும் அவர் உருவாக்கிய பாரம்பரியமுமாகும். 

இராஜநாயகன் கணித ஆசிரியராக இருந்தாலும் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக இருந்தவர். 1950 களில் ஈழத்திலிருந்து உருவாகிய புதிய இலக்கிய அடையாளமான ‘மறுமலர்ச்சி‘ இதழ்க் குழுவில் இருந்தவர். அதில் சிறுகதைகளை எழுதியவர். பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இராஜநாயகனின் இந்த அம்சங்களும் அரசியல், சமூக, இலக்கிய ஊடாட்ட உணர்வும் பிள்ளைகள் மூவரிலும் தொடர்ந்தன, பிரதிபலித்தன. மூத்த மகனான பரதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில், திரைப்பட இயக்குநராக, இலக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்பும் ஆர்வமுள்ளவராக, ஒளிப்படக் கலைஞராக எனப் பல தளங்களில் மிளிர்ந்தார். பாரதி அச்சு மற்றும் இணைய ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்தி நிலைப்படுத்தினார். கூடவே எழுத்தாளர்கள், கலைஞர்களையெல்லாம் பாரதி மதித்தார். அவர்களுக்குரிய இடத்தை அளித்தார். பெரும்பாலான ஊடகவியலாளர்களைப் போலன்றி, இலக்கிய நிகழ்வுகள், உரையாடல்கள், கலைஞர் சந்திப்புகள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றிலும் பாரதியைக் காணலாம். அதோடு பாரதி பன்முக வாசிப்பாளராகவும் இருந்தார். தினக்குரலில் அவர் வெளியிட்ட பல ஆளுமைகளுடனான நேர்காணல்கள் அவருடைய வாசிப்பின் வழியாக உருவான மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்தவையே. பாரதியைப்போல இன்னொரு பன்முக வாசிப்பாளரும் பல தரப்புத் தொடர்பாளருமாக இருந்தவர் ‘தராகி‘ சிவராம். சிவராமுக்கு அடுத்ததாக அத்தகையதொரு இலக்கியப் பரிச்சயம், மொழிப் பரிச்சியம் உள்ளவரென்றால், அது பாரதியே. இதனால் இலங்கைக்குள் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலுள்ளோரும் தமிழ்நாடு, மலேசியா போன்ற நாடுகளில் உள்ளோரும் பாரதியுடன் உறவைக் கொண்டிருந்தனர்.  

பாரதியின் பன்முகத் தன்மையினாலும் பன்முகப் பார்வையினாலும் சிவசேகரம், செந்தில்வேல், கா.சிவத்தம்பி, யதீந்திரா போன்றோர் தொடர்ந்து எழுதி வந்தனர். அதிலும் மாற்றுக் கருத்தாளராகக் கடுந்தொனியில் எழுதும் சிவசேகரம் (கோகர்ணன்), ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார் என்றால் அது பாரதி உருவாக்கிய ஜனநாயக வெளியின் வெளிப்பாடேயாகும். வீ. தனபாலசிங்கம், வி. தேவராஜா, இ. பாரதி, பூபாலரட்ணம் சீவகன் போன்ற மிகச் சிலரே பன்மைத் தன்மையுடன் தமிழ் ஊடகப் பரப்பில் இயங்கியோர், இயங்கி வருவோர். இவர்கள் ஒவ்வொருவருக்குமான அரசியற் பார்வைகளும் நிலைப்பாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும் அதற்கப்பால், ஊடக அடிப்படை, ஊடக நெறிமுறை, ஊடக தர்மம் போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக விழுமியத்தோடு செயற்படுகின்றவர்கள். என்பதால்தான் இவர்களுடைய கால ஊடகங்கள் பரிமளிப்பாக இருந்தன. ‘புதிய பண்பாடு‘ பக்கங்கள்  ஏறக்குறைய சரிநிகர் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியது. சரிநிகரின் அடிப்படையும் நோக்கும் வேறாக இருந்தாலும் ஆழமான வாசிப்புக்குரிய வெளியையும் உள்ளீட்டையும் கொண்டிருந்தது. அதற்கு நிகராக இன்னொரு தளத்தில் தினக்குரல் (புதிய பண்பாடு) இருந்தது. 

பாரதி, தேவராஜ், தனபாலசிங்கம், சீவகன் போல, தமிழ் ஊடகப் பரப்பில் செயற்படும் பெரும்பாலானவர்கள் இருப்பதில்லை. அவர்கள் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை ஊடகங்களில் அப்படியே வெளிப்படுத்துவர், பிரதிபலிப்பர். என்பதால்தான் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்கள் உட்சுருங்கியவையாக – சற்றே பெரிய துண்டுப் பிரசுரங்களாக மாறியுள்ளன. பாரதி போன்றவர்கள் வெளிவிரிவை நோக்காகவும் விருப்பாகவும் கொண்ட ஊடகவியலாளர்கள். இந்த அஞ்சலிக்குறிப்புக் கூட அந்த அடிப்படையிலான மதிப்புக்கான மரியாதையுடன் –  மதிப்புடன் எழுதப்படுகிறது. 

பாரதியும் தனபாலசிங்கமும் இணைந்த கலவையின் வெளிப்பாடாக அவர்களுடைய காலத்தில் வெளிவந்த தினக்குரலைப் பார்த்தால் இந்தக் குறிப்பு எதைச் சுட்ட விளைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். 

ஊடகம், கலை, இலக்கியம் ஆகிய பரப்புக்கு அப்பால், பாரதிக்கு அரசியற் தரப்பிலும் பலரோடு ஆழமான நட்பும் உறவும் இருந்திருக்கிறது. அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பின்னணியைக் கொண்டவர் என்று தெரிந்தாலும் அதைக் கடந்து தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,ரெலோ, ஈ.பி.டி.பி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் மகாசபை, புதிய ஜனநாயக மாக்ஸிஸக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.க, மலையக அரசியல் அரங்கம் எனச் சகல கட்சிகளோடும் நேர்மையான உறவைக் கொண்டிருந்தார். இதனால், இந்தக் கட்சிகளின் தலைவர்களெல்லோரோடும் பாரதிக்கு நெருக்கமான உறவிருந்தது. 

இப்படியெல்லாம் இருந்தாலும் பாரதி எவரோடும் விவாதங்களை நடத்தியதில்லை. அதனால் யாரோடும் முரண்பட்டதுமில்லை. என்றாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாகவே நின்றார். இதற்கு இரண்டு உதாரணங்களைச் சுட்ட முடியும். ஒன்று, ஈழமுரசுவிலிருந்து விலகிச் சென்று முரசொலியில் அவர் சேர்ந்தது. அதைப்போல வீரகேசரியிலிருந்து விலகிச் சென்று தினக்குரலில் இணைந்தது. இரண்டிலும் நிர்வாக முரண்களுக்கு எதிராக பாரதி நின்றது இதைத் தெளிவாகச் சொல்லும். 

ஆனால், எப்போதும் தன்னைப் பிரகடனம் செய்வதோ, தன்னை முன்னிலைப்படுத்துவதோ பாரதியின் குணமல்ல. எப்போதும் தள்ளி நிற்பவராக, உடனடியாக அவசரப்பட்டு எதையும் சொல்லாமல், சற்று விலகி நின்று அவதானித்துக் கொண்டிருப்பராகவே பாரதியைக் காண முடியும். அவருடைய சுபாவமே அப்படியானது. குரல் கூட மிக மென்மையானது. பேசும் பாங்கும் அப்படியே. மிகப் பவ்வியமாக, தணிந்த நிலையில்தான் பேசுவார். பெரும்பாலும் மற்றவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதே பாரதியின் இயல்பாகும். தன்னுடைய அபிப்பிராயம் என்று அவர் எப்போதாவது அபூர்வமாகத்தான் அவருடைய வாயிலிருந்து வரும். ஆனால், எல்லோரையும் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்துத் தனக்குள் ஒரு சித்திரத்தைப் பாரதி உருவாக்கிக் கொள்வார். ஆனாலும் அதற்காக அவர்களைத் தூர ஒதுக்க மாட்டார். தனக்குப் பொருத்தமில்லாத தரப்பினர் என்றால், முரண்பட்டுக் கொள்ளாமல், தானாகவே ஒதுங்கிக் கொள்வார். இது பாரதியின் தந்தை சு. இராஜநாயகனிடமும் இருந்த குணமாகும். 

பாரதியின் ஊடகப் பங்களிப்பை மதிப்பிடுவதானால், அவர் ஒரு தூக்கலோ துருத்தலோ அற்ற தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கிறார் எனலாம். அதேவேளை தன்னுடைய அரசியலுக்கு அப்பால் உள்ளோருக்கும் ஜனநாயக அடிப்படையில் தாராளமாக இடமளித்திருக்கிறார். இதனால் அவர் ஒற்றைப் படைத்தன்மையான உறவாளராக இல்லாமல் பல தரப்புடனான உறவாடலையும் செய்யக் கூடியவராக இருந்திருக்கிறார். ஜனநாயக விழுமியத்தைப் பேணியதோடு, ஊடகத்தின் பன்மைத்துவமான அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கலை, தத்துவம், அறிவியல் என அனைத்தையும் சமனிலையோடு நோக்கி, அவற்றைக் கையாண்டிருக்கிறார். ஊடகப் பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார். தமிழ் ஊடகப் பரப்பில் பாரதியின் செயற்பாட்டு அடையாளம் வலுவானது. முன்னுதாரணமானது. ஊடகத்துறையில் பயில்வோருக்கும் பணியாற்றுவோருக்கும் அது தக்கதோர் அடிப்படையாகும். 

பின்னாளில் பாரதி யாழ்ப்பாணத்திற்கு வந்து ஈழநாடு, பொருண்மியம் என்றெல்லாம் வேலை செய்து, இறுதியில் வீரகேசரியின் பிராந்தியப் பணிமனையில் பணியாற்றியிருக்கிறார். வீரகேசரியை விட்டு நீங்கியவர் வீரகேசரியில் மீள இணைந்ததைப்போலவே, 1960 களிலிருந்து 1990 கள் வரையும் அவர் பிறந்து  வளர்ந்த திருநெல்வேலிச் சூழலுக்கு மீண்டும் வந்திருந்தார். அவருடைய இறுதி நாட்கள் திருநெல்வேலியிலேயே கழிந்தன. மரணமும் அங்கேயே நடந்தது. அதுவும் அவர் இருந்த வீட்டிலிருந்து ஒரு 300 மீற்றர் சுட்டு வட்டத்துக்குள். ஆனால், பிறந்த வளர்ந்த வீட்டில் அல்ல. அந்த வீடு வேறு கைகளுக்கு மாறியதால் அவர் வாடகை வீட்டிலேயே வாழ நேர்ந்திருக்கிறது. 

ஈழப்போராட்டத்தோடு எழுச்சியடைந்த ஒரு ஊடகவியலாளராக பாரதியைப் பார்க்கலாம். அது உருவாக்கிய நெருக்கடிகள், வீழ்ச்சிகள், துயரங்கள் பாரதியையும் பாதித்தது. பாரதியை மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தையும்தான். அவர்கள் இழந்தது அதிகம். பெற்றது மிகக் குறைவு. அதற்குள்ளும் பாரதியும் பாரதியின் குடும்பத்தினரும் இந்தச் சமூகத்துக்கு அளித்தது ஏராளம். அதுவே மேன்மைக்குரியது. அஞ்சலி.