— அழகு குணசீலன் —
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்னதான் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா இடங்களிலும் பேசிலானாலும் இந்த நாட்டில் இடம்பெற்ற கடந்த கால தேர்தல் முடிவுகள் நாட்டை ஒன்றாகக் காட்டத் தவறியிருக்கின்றன. வடக்கு தெற்காக அல்லது தெற்கு வடக்காகாக ஒரு நீள்வெட்டுமுக தோற்றம் இது.
என்.பி.பி. புதிதாக வடக்கு கிழக்கில் ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் கணிசமான ஆதரவை பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது கடந்த காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று முழுமையாக அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியாது. 1978 அரசியல் அமைப்புக்கு முன்னரும் பின்னரும் , தொகுதிவாரி தேர்தலிலும், மாவட்ட ரீதியான விகிதாசார தேர்தலிலும் தென்னிலங்கை தேசிய கட்சிகளை அல்லது அவற்றின் ஆதரவுகட்சிகளை வடக்கு,கிழக்கு மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று எம்.பி.க்களை என்.பி.பி.பெற்றுள்ளதை முதன்மைப்படுத்தி, அல்லது மட்டக்களப்பில் மூன்று எம்.பி.க்களை தமிழரசு பெற்றுள்ளதை முதன்மைப்படுத்தி, மிகைப்படுத்தப்பட்ட கட்சிசார் அரசியல் செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை. இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் மக்கள் எதற்காக இந்த வாக்களிப்பை செய்திருக்கிறார்கள் என்பதும் , கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுமாகும்.
வடக்கு , கிழக்கில் அளிக்கப்பட்ட வாக்குகள் சிறுபான்மை தேசிய இனங்களின் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்காக அளிக்கப்பட்டவை. பொருளாதார நெருக்கடி வடக்கு கிழக்கில் இரண்டாம் பட்சம். தெற்கிலும், மேற்கிலும், மத்தியிலும் ஒரு அளிக்கப்பட்ட வாக்குகள் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு முன்மொழிவுகளை முதன்மை படுத்தியவை. அதே வேளை தென்னிலங்கை சிறுபான்மை தேசிய இனங்களிடையே வடக்கு கிழக்கிற்கு ஒரு எட்டப்படும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஆனால் மாற்றத்திற்கான என்.பி.பி.அரசாங்கம் ஒரு பகுதி மக்களின் அரசியல் அதிகார பகிர்வு மாற்றத்திற்கான அங்கீகாரத்தை பின் போட்டு, இன்னொரு பகுதி மக்களின் பொருளாதார மாற்றத்திற்கான செயற்பாடுகளை நியாயப்படுத்துகிறது. ஒருபகுதி மக்கள் வாக்களித்த முன்னுரிமையை நிராகரித்து இன்னொரு பகுதி மக்களின் முன்னுரிமையை சகல தரப்பினதும் முன்னுரிமையாக அடையாளப்படுத்துகிறது. இது உண்மையில் “மாற்றம்” என்பதை ஒரு பக்க சார்பானதாக மாற்றி விடுகிறது.
ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா முதல் அண்மையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்ந ஜயதிஸ்ஸ வரை வெளியிட்டுள்ள கருத்துக்கள் இதனை வெளிப்படுத்துகின்றன. வடக்குக்கு திக்விஜயம் செய்த ஜனாதிபதி இனப்பிரச்சினை பற்றி பேசுவதை புத்திசாலித்தனமாக தவிர்த்துக் கொண்டார். “உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என்பது , ஜனாதிபதியின் இன்றைய நிலையில் மக்களின் விருப்புக்கு மாறாக வேறு அன்றாட பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது.
சுதந்திர தின செய்தியாக பேராயர் புதிய அரசியலமைப்பை கொண்டு வாருங்கள் என்று பகிரங்கமாக கோரியிருந்தார். இது தென்னிலங்கை பௌத்த, சிங்கள கடும்போக்கு தேசிய வாதிகளிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தணிக்கவும், பேராயருக்கு மறைமுகமாக பதிலளிக்கவும் அமைச்சரவைப்பேச்சாளர் இப்படிச் சொன்னார்.
” புதிய அரசியலமைப்பு பணிகளை விட பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அந்த வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதில்லை.” என்று அடித்துக் கூறியிருந்தார் போலும். அதேவேளை என்.பி.பி. அரசாங்கம் அரசியலமைப்பு, மற்றும் சட்டரீதியான விடயங்களில் தெளிவற்றதாக செயற்படுவது தெரிகிறது.
ஐ.எம்.எவ் விவகாரங்கள், மத்திய வங்கி ஊழலில் அர்ச்சனா மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வரல், உகண்டா பணக்கிடங்கை தோண்டுதல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற்றல், ஈஸ்டர் படுகொலை விவகாரத்தில் சந்தேகநபரும், சாட்சியுமான(?) அஸாத்மௌலானவவை நாட்டுக்கு கொண்டு வரல் , லசந்தவின் விசாரணையில் சந்தேகநபர்களை சட்டமா அதிபர் விடுவித்ததில் நீதியமைச்சருக்கே தெளிவில்லை. வீட்டை விட்டு மகிந்தராஜபக்சவை வெளியேறுமாறு உத்தியோக பூர்வமாக அறிவிக்க மாட்டோம் என்று அரசாங்கம் கூறுவதை விடவும் அப்பட்டமான பலவீனம் வேறொன்றுமில்லை. அரசாங்கத்தை விடவும் மகிந்த தரப்பு இந்த விடயத்தில் தெளிவாக இருக்கிறது.
இவை போன்றவற்றில் சட்ட நடைமுறைகளை கவனத்தில் எடுக்காது அரசதரப்பு வாய்க்கு வந்தமாதிரி பேசுகிறது. இந்த சட்ட நடைமுறைகள் தெரியாமல் இவர்கள் தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இப்போது திக்குமுக்காடுகிறார்கள். இதனால் அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பேசுகின்ற சவால்களில் ஒரு பகுதிக்கு அவர்களே பொறுப்பு. என்.பி.பி.அளித்த பொய் வாக்குறுதிகளுக்கும், சட்டரீதியான அணுகுமுறைகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு இது. இவ்வாறு இவர்களே தாமாக ஏற்படுத்திக்கொள்கின்ற முள்வேலி சட்ட சிக்கல்களில் இருந்து விடுபட முடியாத நிலையில் பொருளாதாரத்தை காட்டி புதிய அரசியலமைப்பையும், அதிகாரப்பகிர்வையும் தள்ளிப்போட்டு தென்னிலங்கை அரசியல் இலாபத்திற்காக முதலீடு செய்கிறார்கள்.
காலம் போகப்போக அரசாங்கத்தின் ஸ்த்திரத்தன்மை தென்னிலங்கையில் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் “அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவு தற்காலிகமானது என்றும், அது குறைவடைகிறது ” என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, ஆறு முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள்/பொறுப்பாளர்கள் மிகக்குறுகிய நான்கு மாதங்களில் பதவி விலகி இருக்கிறார்கள். இவர்கள் அநுர -ஹர்ணி- விஜயகேரத் மும்மூர்த்திகளின் காபந்து அரசாங்க காலத்தில் நியமனம் பெற்றவர்கள். பலர் ஹரிணி தலைமையிலான கூட்டணி உறுப்பினர்கள்/ ஆதரவாளர்கள். இந்த பதவி விலகல்கள் என்.பி.பி கூட்டணியில் உள்ள பிரதமர் ஹர்ணி அமரசூரியவுக்கும் , ஜே.வி.பி. தலைமைக்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடு.
பிரதமர் தனது பதவிக்கான நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் சமிக்ஞை செய்கின்றன. அரசாங்கத்தின் அமைச்சரும், பாராளுமன்ற அரசாங்க பிரதம கொறடாவுமான பிமல் ரத்நாயக்கவை பிரதமராக்கும் முயற்சி திரைமறைவில் இடம்பெறுகிறது. இது ஜே.வி.பியில் கடும்போக்காளர்களின் கையோங்குவதைக் காட்டுகிறது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காலத்தில் விருப்பத்தேர்வு இல்லை என்றும், பின்னர் இருக்கிறது என்றும் பிரச்சினைபட்டு ஹர்ணி தலைமையிலான கூட்டணியின் முக்கியஸ்தர்கள், துறைசார் நிபுணர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட விடயமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இவ்வாறு அரசாங்கத்திற்குள் முரண்பாடு வளர்ந்து வலுக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென்று பெயர்குறிப்பிடாது ஒரு பெண்ணை பிரதமராக நியமிப்போம் என்று அநுரகுமார அறிவித்தார். இந்த அறிவிப்பு தேர்தல் காலத்தில் என்.பி.பிக்குள் கூட்டணி ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்கான அறிவிப்பு. இதில் ஜே.வி.பி.யின் கடும்போக்காளர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. இது இப்போது இன்னும் வலுக்கிறது.
மறுபக்கத்தில் தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் பலமான கூட்டணி ஒன்றுக்கு முயற்சிக்கின்றன. மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கிறது. தொழிற்சங்கங்கள் பல தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றன. பௌத்த பீடம் நிலைமையை கவனமாக அவதானிக்கிறது. உதயகம்மன்வெல, விமல்வீரவன்ச, யுத்தத்திற்கு ஆதரவான மகிந்தவின் விசிறிகள்…. என்று அரசாங்க எதிர்ப்பு விரிவடைகிறது. ராஜபக்ச கால படையினரை காப்பாற்ற வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.
இந்த நிலையில் சிறுபான்மையினர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுவதற்கான வாய்ப்பு அருகிவருகிறது. மூன்று மாதத்திலேயே 159 பேரைக்கொண்டிருந்தும் இப்படி ஒரு ஸ்த்திரமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது என்றால் அவர்கள் புதிய அரசியல் அமைப்புக்கு கூறுகின்ற மூன்று ஆண்டுகள் அவகாசத்தில் நடக்கப்போவது என்ன. ?
இன்று இருப்பதை விடவும் இனி வரும் காலங்களில் இந்திய -சீன வெளியுறவில் அரசாங்கம் பாரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். சீன நகரங்களுக்கும், இலங்கையின் நகரங்களுக்கும் இடையிலான PARTNER CITY ஒத்துழைப்பு உடன்பாடு பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி சீன நகரம் ஒன்று இலங்கை நகரம் ஒன்றை பொறுப்பெடுத்து அதன் ஆதரவிலும், நிதியுதவியிலும் தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது.
இது வடக்கு கிழக்கு நகரங்களில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன என்பதை மாநகர, நகரசபைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிய வருகிறது. இது தேர்தலுக்கு முன்னர் மக்கள் பிரதிநிதிகள் அற்ற நிலையில் அரசாங்க முகவர்களான ஆணையாளர்கள், ஆளுநர்களை கொண்டு செய்யப்பட இருக்கிறது. அரசாங்கம் இதில் காட்டும் அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவும் சும்மா இருந்து சுகம். காணப்போவதில்லை.
போகிற போக்கில் மக்கள் வாக்கெடுப்புடன் கூடிய புதிய அரசியல் அமைப்பு என்பது இப்போது மட்டும் அல்ல எப்போதும் சாத்தியமில்லை என்ற சந்தேகமே சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் வலுக்கிறது.