— கருணாகரன் —
‘‘மாற்றங்களை உருவாக்க வேண்டும்‘‘ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்திருக்கும் அநுரகுமார திசநாயக்கவின் (NPP) அரசாங்கம், என்ன செய்கிறது? நம்பிக்கை தரக்கூடிய முயற்சிகள் ஏதாவது நடக்கிறதா..?‘ என்று பலரும் கேட்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அந்த மாற்றம் ஆரம்பித்துள்ளதா?அதற்கான பணிகள் நடக்கிறதா? என்ற எதிர்பார்ப்புள்ளது. எவ்வளவுக்கு விரைவாக மாற்றங்கள் நடக்கிறதோ அந்தளவு மக்களுக்கு நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு. ஆகவே அவர்கள், அந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
புதிய (தேசிய மக்கள் முன்னணி) அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது -ஏற்படுத்தவுள்ளது என்ற எதிர்பார்ப்போடு இலங்கைக்கு வெளியே இருப்பவர்களும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், ‘அநுர குமார திசநாயக்க தரப்பின் வெற்றி, தென்னாசியப் பிராந்தியத்தில் புதிய அரசியற் பண்பாடொன்றுக்கான – இடது நிலை அரசியலுக்கான – அடித்தளமாக அமையக் கூடும்.அதற்கான முன்மாதிரியை (Exemplary) உருவாக்கலாம்‘என்பது மக்களுக்கான அரசியலை – மாற்று அரசியலை (Alternative politics) முன்னெடுக்க முயற்சிப்போருடைய எதிர்பார்ப்பாகும்.
மட்டுமல்ல, எதிர்த்தரப்பான மக்கள் விரோத அரசியலை (Anti-people politics) முன்னெடுக்கும் பேராதிக்க – பெருமுதாளித்துவ – காப்பரேட் அரசியலாளர்களுக்கு (Corporate politicians) இன்னொரு வகையான எதிர்பார்ப்புண்டு. காரணம், இது இலங்கையில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் அரசியல் நடடிவடிக்கை (Political action to create change) என்பதால், அதனுடைய சாத்தியம், அதைச் செயற்படுத்தும் முறைமை, அதற்கான ஆளுமை வெளிப்பாடு போன்றவற்றையெல்லாம் அவர்கள் அறிய விரும்புகின்றனர். குறிப்பாக இந்த அரசாங்கத்தினுடைய வெற்றி – தோல்விகளை அவர்கள் கவனிக்க வேண்டிய கட்டாயமுள்ளது.
இப்படிப் பல தரப்பிலும் இலங்கைப் புதிய அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளைக் குறித்த அவதானிப்பும் எதிர்பார்ப்பும் தீவிரமடைந்திருக்கிறது. வழமைக்கு மாறான முறையைக் கொண்ட இடது நிலையாளர்களின் அரசியல் நடவடிக்கை இது என்பதால் ‘இலங்கை மாதிரி‘யை (Model of Sri Lanka) அறிவதற்கு எல்லோரும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் கிடைத்திராத பேராதரவு அநுர குமார திசநாயக்கவின் (NPP) அரசாங்கத்துக்கே கிடைத்திருக்கிறது. 75 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அதிகாரத்திலிருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டுக்கும் வெளியே இருந்தொரு தரப்பு இப்பொழுதுதான் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதுவும் இடதுசாரிய அரசியற் கோட்பாட்டோடு, ஆயுதப் புரட்சியை முன்னெடுத்துத் தோற்கடிக்கப்பட்ட தரப்பு, ஜனநாயக வழிமுறையான தேர்தலில் பெருவெற்றியைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. இது மக்களிடையே ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் வெளிப்பாடாகும் – வெற்றியாகும். எனவே மக்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால் மாற்றத்தைக் குறித்து – புதிய நடவடிக்கைகளைக் குறித்த எதிர்பார்ப்பு வலுத்திருக்கிறது.
இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. இலங்கையில் இனத்துவச் சிக்கல்களும் தீவிர பிரச்சினைக்குரியவை. தனியே பொருளாதார அடிப்படையிலான மாற்றம் மட்டும் நாட்டை நிறைவாக்கி விடாது. இனமுரண்பாடுகளுக்கான தீர்வையும் காணும்போதே நாட்டில் மெய்யான மாற்றம் நிகழும். நாடு பின்னடைந்திருப்பதற்கு இனத்துவ முரண்பாடும் அதன் விளைவான 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரும் பிரதான காரணம். இந்தப் போரில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய ஒரு லட்சம் வரையானோர் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மனித வள இழப்பாகும். இதற்குப்பால் போரிலே கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. மனித உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. மீளவே உருவாக்க முடியாத அளவுக்குப் பண்பாட்டு இழப்பு, இயற்கை வள இழப்பு எல்லாம் நிகழ்ந்திருக்கிறது. அதை விட சொத்துகள், வீடு, ஊர் போன்ற மக்களுடைய உருவாக்கங்கள் அனைத்தும் இழப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே பொருளாதார முன்னேற்றத்தோடு இனப் பிரச்சினைக்கான தீர்வையும் இணைத்தே ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
இன ஒடுக்குமுறையின் காரணமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பேசும் தரப்பினர் மேற்கொண்டு வந்த (சமூக மற்றும் புவிசார்) பிராந்திய அரசியற் செல்வாக்கை உடைத்து தேசிய மக்கள் சக்தி வெற்றியைப் பெற்றுள்ளது. கூடவே சிங்கள மக்களிடத்திலும் பேராதரவு. ஆக மொத்தத்தில் நாடு தழுவிய அளவில் முழுமையான செல்வாக்கைப் பெற்றுள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த எதிர்பார்ப்புக் கேள்விகள் பல முனைகளிலிருந்தும் எழுகின்றன.
ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு, அரசியமைப்புத் திருத்தம், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு, அதிகார துஸ்பிரயோகத்துக்கு முடிவு, நாட்டைச் சூறையாடியோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை, இனப்பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு, கிராமங்களின் வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றம், கல்வியில் மறுசீரமைப்பு என பல விடயங்களிலும் முன்னுதாரணமான மாற்றத்தை – முன்னேற்றத்தை -உண்டாக்குவதாகவே அநுரவின் அரசாங்கத்தின் பிரகடனமாகும். அதாவது இவற்றைச் செய்வதற்கான System change ஐ செய்வதாக.
அப்படிச் System change ஐச் செய்வதாக இருந்தால் காலதாமதத்தைச் செய்யாமல் உடனடியாகவே அதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகிறது. உண்மையும் அதுதான்.தாமதித்தால், System change க்கு எதிரான அல்லது மாற்றத்துக்கு எதிரான சக்திகள் (Forces against change) எழுச்சியடைந்து விடும் அபாயமுண்டு. இதுதான் முன்பும் நடந்தது.
முன்னைய ஆட்சித் தரப்புகளிற் சில (1994 இல் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம், 2015 மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவதற்கு முயற்சித்தன. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அரசியலமைப்பு மாற்றத்தையும். ஆனால், அதைச் செய்வதற்கு அவை எடுத்துக் கொண்ட காலதாமதம், உட் குழப்பங்கள், கரிசனைக்குறைவு போன்றவற்றின் காரணமாக தீர்வுகளுக்கு எதிரான சக்திகள் (Forces against solutions) அதைக் குழப்புவதற்கு வாய்ப்பாகியது.
ஆகவே இந்த வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட வேண்டியது NPP அரசாங்கத்திற்கு அவசியமாகும். ஆனால், மக்களுடைய எதிர்பார்ப்புகளின் அளவுக்கு அரசாங்கத்தின் வேகம் போதாமலே உள்ளது. ‘மாற்றங்களை நிகழ்த்துவோம். மக்களுடைய நம்பிக்கையைப் பாதுகாப்போம்‘ என்று ஒவ்வொரு நாளும் அமைச்சர்களும் அரசுப் பிரதானிகளும் பேசிக் கொண்டும் அறிக்கை விட்டுக் கொண்டுமிருக்கிறார்களே தவிர, எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை. பறவையின் வேகம், முயலின்வேகம், பாம்பின்வேகம், ஆமையின் வேகம், நத்தையின் வேகம் என்றெல்லாம் சொல்வார்களே, இங்கே நத்தையின் வேகத்திற்கூட நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்குச் சிறிய அளவிலான தொடக்கங்கள் ஏற்படவில்லையென்றால் ஏமாற்றம் ஏற்படும். நாளாந்த உணவுக்குப் பயன்படும் அரிசியின் விலையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது அநுர அரசாங்கம். இதற்காக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தோடு மூன்று சுற்றுப் பேச்சுகளை நடத்தி விட்டார். இருந்தும் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. அந்தளவுக்கு மாஃபியாக்கள் பலமாக உள்ளனர். என்பதால் மாற்று ஏற்பாடாக இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது அரசாங்கம். இது விவசாயிகளுக்கு உடன்பாடில்லாத சங்கதி. இப்படியே ஒவ்வொன்றிலும் பல சிக்கல்கள் உள்ளன.
என்னதானிருந்தாலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தே தீர வேண்டும். தடைகளை உடைத்தே ஆக வேண்டும். இதற்கு வாய்ப்பாக முதலில் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டும்? என்பதை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது, சாத்தியங்களை உருவாக்குவது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும். சாத்தியக் குறைவுகளிருந்தால், அவற்றை எப்படி நிர்வகிக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். இதெல்லாவற்றையும் முற்கூட்டியே சிந்தித்த படியாற்தானே System change ஐப் பற்றி NPP பேசியது? அப்படிப் பேசிய – நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்த – NPP யினால் ஏன் அவற்றை விரைவாக முன்னெடுக்க முடியவில்லை? ஏன் தாமதித்துக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
மாற்றங்களுக்கான நடவடிக்கை (Action for changes) என்பது நிச்சயமாக மாற்று நடவடிக்கையாகவே அமையும். வழமையான நடவடிக்கைப் பொறிமுறைகளுக்கூடாக மாற்றங்களைச் செயற்படுத்த முடியாது. மாற்று நடவடிக்கை என்பது ஏறக்குறைய அதிரடி நடவடிக்கையே. ஆனால், அப்படி அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் முடியாது. சட்டமும் விதிமுறைகளும் (Law and Regulations) ஏற்கனவே உள்ள System மும் தடையாக இருக்கும். அப்படித்தான் இருக்கிறது. அப்படியென்றால் என்ன செய்வது?
இதுதான் இப்பொழுதுள்ள சிக்கலே.
இதற்கு மாற்றுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதை விரைந்து செய்வதன் மூலமே NPPயின் பிரகடனங்களை நிறைவேற்ற முடியும். அதற்குத்தான் மக்களின் ஆணை தாராளமாக உண்டே. ஆகவே தாமதம் செய்யாமல் அரசாங்கம், மாற்றங்களுக்கான அடிப்படை மாற்றங்களை (Basic changes) செய்ய வேண்டும். இதை NPP ஏற்கனவே முன்னுணர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், நீண்டகாலமாக கெட்டிதட்டிப்போயிருக்கும் அரசியல் மற்றும் நிர்வாக முறைகேடுகளை இலகுவாகச் சீர்ப்படுத்த முடியாது. அதுவும் ஜனநாயக வழியில். ஆனால், ஜனநாயக நெறிமுறைகளின்படியேதான் அதைச் செய்யவும் வேண்டும். அப்படியென்றால் அடிப்படை மாற்றங்களைச் செய்தால்தான் மக்கள் எதிர்பார்க்கின்ற –நாட்டுக்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க முடியும். இந்த நெருக்கடியிலிருந்து – இந்தச் சிக்கலிலிருந்து வெளியேற முடியும்.
இதற்கான பயில்காலமாகவும் பயில்களமாகவும் NPP அதிகாரத்துக்கு வந்த பின்னரான இரண்டு மாதங்களும் ஆட்சிக்களமும் உண்டு. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேற் பார்க்க வேண்டிய காரியங்களை விரைவுபடுத்த வேண்டும். இது அநுர குமார திசநாயக்கவுக்கான பொறுப்பாகும்.
இதுதான் இலங்கையின் இன்றுள்ள யதார்த்தச் சூழல்.
ஆனாலும் அநுர குமார திசநாயக்கவின் மீதும் அவருடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு வலுவான நம்பிக்கை உண்டு. காரணம், அரசாங்கம் முன்னுதாரணமாகத் தனது செலவுகளைக் குறைத்திருக்கிறது. வரியை உயர்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையகப்படுத்தி வைத்திருந்த சொத்துகளை மீட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பாதுகாப்புக்கான செலவு தொடக்கம் அவர்களுக்கு வழமையான முறையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆடம்பர வசதிகள் அனைத்தையும் குறைவாக்கியுள்ளது. ஜனாதிபதிபதியின் பதவியேற்பு, நாடாளுமன்றில் கொள்கைப் பிரகடன உரைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றை எல்லாம் சாதாரணமாகவே – எளிமையாகவே – நடத்தி முடித்திருக்கிறார் அநுர. குறிப்பாக கொள்கை விளக்க உரைக்கு வரும்போது பின்பற்றப்படும் சிறப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் விலக்கி விட்டார்.
அப்படித்தான் இந்தியாவுக்கு ஜனாதிபதி மேற்கொண்ட பயணத்தின்போதும் விசேட ஏற்பாடுகளைப் புறக்கணித்து விட்டுச் சாதாரணமாகவே சென்று திரும்பியுள்ளார். அவ்வாறே முன்னாள் ஜனாதிபதிகளுக்கிருந்த அதி உச்ச வசதிகளிலும் வெட்டு விழுந்திருக்கிறது. இதெல்லாம் அநுர குமார திசநாயக்கவின் மீதான மதிப்பையும் நம்பிக்கையையும் மக்களிடத்திலே உயர்த்தியுள்ளன.
ஆக எளிமையான அரசாங்கம் என்ற ஒரு புதிய தோற்றமும் பண்புருவாக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படுகிறது. ஆனால், இவை மட்டும் மாற்றங்களுக்குப் போதாது. நாட்டுக்கு வருவாயைத் தேடும் வழிகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும். அவற்றை விருத்தி செய்ய வேண்டும். ஊழல் பெருச்சாளிகளாக நாட்டைச் சூறையாடியோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பை பொருத்தமான முறையில் பன்மைத்துவத்தின் அடிப்படையில், பல்லினத்தன்மைக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண வேண்டும். வடக்குக் கிழக்கிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டும்.அங்கே மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
இதில் உடனடியாகச் செய்ய வேண்டியவற்றை இனங்கண்டு செய்வது அவசியமாகும். அதன் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். மக்களுக்குப் புதிய உற்சாகத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். அப்படி நம்பிக்கை அளிக்கப்படுமாக இருந்தால் நாட்டை விட்டுத் தினமும் ஆயிரக்கணக்கில் புலம்பெயரும் நிலையைக் கட்டுப்படுத்தலாம். நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதென்பது ஒரு மிகப் பெரிய வளம் வெளியே செல்கிறது என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். புலம்பெயர்ந்து செல்வோர், பெரும்பாலும் இளைஞர்களும் உழைக்கும் திறனாளர்களும் பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்களாகவுமே இருக்கின்றனர். இது மிகப் பெரிய மனித வள இழப்பாகவே உள்ளது. ஆகவே அரசாங்கம் இதைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்றுப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. மாற்றங்களை மக்கள் உணரும்போதுதான் இந்த வெளியேற்றம் தணியும்.
இவற்றுக்கு ஏற்ப முதலில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டார் அநுர குமார. பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியாவுடன் பல கூட்டுத்திட்டங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் தமக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என NPP அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவும் ஏறக்குறைய மகிழ்ச்சியையும் நிறைவையும் வெளியிட்டுள்ளது. இதனுடைய விளைவாக உடனடியாகவே கிழக்கு மாகாணத்தில் 23 திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போரினாலும் சமூக முரண்பாடுகளாலும் பின்னடைந்திருக்கும் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாகும். ஆனால், அதை இன முரண்பாடுகள் எழாத வகையில் பாரபட்சங்களுக்கு இடமளிக்காமல் நிறைவேற்ற வேண்டும். இது தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்ற மாகாணம். இங்கே அபிவிருத்தித் திட்டங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்வது சிறப்பானதே. அடுத்த கட்டமாக நாட்டின் பிற பகுதிகளிலும் இத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம்.
அடுத்த பயணமாக சீனாவுக்குப் பயணிக்கிறார் ஜனாதிபதி. சீனப்பயணத்தின்போதும் நிறைவளிக்கக் கூடிய ஏற்பாடுகளோடும் திட்டங்களோடும் அவர் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் நிறையத் திட்டங்களையும் முதலீடுகளையும் இலங்கையில் மேற்கொள்ளக் கூடும். ஏற்கனவே உள்ள திட்டங்களை விரிவுபடுத்த வாய்ப்புண்டு.
இந்தியாவையும் சீனாவையும் கையாள்வது இலங்கைக்கு எப்போதும் சவலான விடயமே. அதே நேரம் இரண்டையும் மிக லாவகமாக இதுவரையான தலைவர்கள் கையாண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் நோக்க வேண்டும். அநுரவும் அதைத் தளர்வின்றித் தொடர்கிறார் என்றே தெரிகிறது. அப்படித் தொடர்ந்தால் பயன். முக்கியமாகப் பிராந்திய நெருக்கடிகளுக்குள் சிக்காதிருக்கலாம். அதேவேளை இலங்கைக்குப் பல வழிகளில் நீண்டகாலத் தீமைகளும் உண்டு. குறிப்பாக சுயசார்ப்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது சவாலானதாகி விடும். இதை எப்படிச் சமாளித்து, தன்னுடைய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தப்போகிறது தேசிய மக்கள் சக்தி?
அநுரவின் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களும் நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன என்று பாராட்டுத் தெரிவித்துள்ளன அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள். அப்படியென்றால், ‘‘இது எப்படி மாற்றத்துக்கான அரசாங்கமாக இருக்கும்?மக்களுக்கான ஆட்சியை இதனால் எப்படி வழங்க முடியும்? இடதுசாரியப் பொருளாதார நோக்கைக் கொண்ட ஆட்சியொன்றுக்கு வெளியுலகம் எவ்வாறான வரவேற்பை அளிக்கும்? எனவே இது மாற்றம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கும் ஆட்சியாகவே இருக்கும்‘‘ என்கின்றன சில தரப்புகள்.
இப்படி ஒரு வெளி ஆதரவு வட்டமும் எதிர்ப்பு வட்டமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக மேற்குலகினதும் இந்தியாவினதும் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எதிர்க்கட்சிகளுக்கும் மக்களில் ஒரு சாராருக்கும் இருந்தது. ஏனென்றால் இறுக்கமான சில நிலைப்பாடுகளைப் பின்பற்றி வந்த ஜே.வி.பி மைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளியுறவில் வெற்றியடையுமா? சர்வதேச சமூகம் தேசிய மக்கள் சக்தியை எப்படி வரவேற்கும் என்றெல்லாம் கேள்விகளிருந்தன.
ஆனால் ஒரு துடிப்பு மிக்க திறமையான விளையாட்டு வீரனின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் பிறரைக் கவர்வதைப்போல அநுர குமார திசநாயக்கவின் நடவடிக்கைகள் பல தரப்பையும் கவர்ந்துள்ளன. அவர் முயற்சிக்கின்ற அளவுக்கு அவரைச் சுற்றியுள்ள தரப்புகளிடையே மாற்றங்களுக்கான ஒத்துழைப்புகள் கிடைக்கின்றதா என்பதே தொடர்ந்து கொண்டிருக்கும் கேள்வியாகும். அவர்கள் அரசாங்கத்தை பின்னுக்கு இழுக்கும் விதமாக கட்சி அதிகாரத்தை (கட்சிக் கொள்கைகளை) அரசாங்கத்தின் கொள்கைகளாக முழுதாகத் திணிக்க முற்பட்டால் பிரச்சினை உருவாகும். கட்சி, அரசாங்கமா என்பதை அவர்கள் தீர்மானிப்பது அவசியமானது.
நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் ஏற்கனவே கடன் பொறியிற் சிக்கியிருக்கும் நிலையிலிருந்து மீள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று சர்வதேச நாணய நிதியத்துடனான (Agreement with the International Monetary Fund) உடன்படிக்கையாகும். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின்போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர வேண்டிய நிலை அநுர குமார திசநாயக்க அரசாங்கத்துக்கும் உண்டு. அதைப் புறக்கணிக்க முடியாது. அப்படியென்றால் IMFவின் நிபந்தனைகள், பரிந்துரைகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுமக்க வேண்டும். இது System change ஐ மட்டுப்படுத்துகின்ற ஒரு விடயமாகும். வேறு வழியின்றி, IMF உடனான முதற் சுற்றுப் பேச்சுகளை முடித்திருக்கிறது புதிய அரசாங்கம்.
இப்படித்தான் ஒவ்வொரு புள்ளியிலும் சிக்கல்களும் பிரச்சினைகளும் உள்ளன.ஆனால், சில முடிவுகளில் அரசாங்கம் தீர்க்கமாக உள்ளது. குறிப்பாக இன வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு உறுதியும் நிதானமுமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு கூரலென்பது, இறந்த தமது உறவினரை அவர்களுடைய பெற்றோரும் உறவுகளும் நினைவு கொண்டு அஞ்சலி செலுத்துவதே தவிர, விடுதலைப் புலிகளை நினைவு கொள்வதோ அல்லது அவர்களை மீளெழுச்சி கொள்வதற்கு இடமளிப்பதோ அல்ல என. மட்டுமல்ல, இதை இனவாதமாக மாற்ற முயற்சித்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்தது. இந்த மாதிரித் துணிகரமான நடவடிக்கைகள், படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பது தொடக்கம் வேறு சிலவற்றிலும் அவசியமாகும். அதைப்போல முக்கியமானது,இந்திய வம்சாவழி மக்களாகிய மலையக மக்களின் சம்பளப்பிரச்சினை. நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை,தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. 1000 ரூபாய் சம்பளக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் மூன்று ஆட்சிகள் கடந்துள்ளன. இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. இடையில் பொருட்களின் விலை பல மடங்கு கூடி விட்டது. அப்படியென்றால்,நியாயத்தின்படி இப்பொழுது 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மலையகத் தோட்டங்களுக்கு வெளியே நாளொன்றுக்கு 2000 க்கு மேலேதான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆகவே இதிலும் ஒரு நிர்ணயமான தீர்மானத்தை அநுர குமார அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அரசியலமைப்பை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான வரைபை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் பொருளாதார நெருக்கடியைக் குறைப்பது அவசியம். அன்றாடப் பொருட்களின் விலையேற்றம் என்பது மக்களின் வயிற்றுப் பிரச்சினையாகும். ஆகவே அதற்கு முதலில் தீர்வைக் காண வேண்டும். இதுவரையிலும் ஆட்சியிலிருந்தவை கொழும்புத் தலைமைகள் அல்லது கண்டித் தலைமைகளே. இவை மேற்தட்டு ‘வளவுக்காரர்கள்‘ என்ற வர்க்கத்தைச் சேர்ந்தவை. இப்பொழுதுதான் கொழும்புக்கும் கண்டிக்கும் வெளியே, கிராம மட்டத்திலிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அப்படியென்றால் கிராம மக்களின் பிரச்சினையை நன்றாக விளங்கியவர்களே வந்திருக்கிறார்கள். கிராம மக்களின் பிரச்சினையில் முக்கியமானது வயிற்றுப் பிரச்சினை – வாழ்வாதாரப் பிரச்சினையாகும். சாதாரண மக்கள் தமது உழைப்புக்கான ஊதியம், ஊதியத்துக்கு ஏற்ற செலவு. இதைச் சமன் செய்யக் கூடிய பொருளாதார ஏற்பாடு வேணும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இது இல்லையென்றால் பிறகேன் இந்த ஆட்சி என்றே கிராம மக்கள் சிந்திப்பார்கள்.
எனவே இங்கே தீர்வு என்பது பலவகையானது என்ற புரிதல் அவசியமாகும். ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் இனப்பிரச்சினையையும் அதன் விளைவான போரையும் முடிவுக்கு – தீர்வுக்கு – கொண்டு வருவதைப் பற்றியே கூடுதலாகச் சிந்தித்தன.இதிற் கூட இதை அவை நேர்மையான முறையிற் சிந்தித்தனவா என்ற கேள்வி உண்டு. ஆனால், 2009 க்குப் பிறகான சூழல் வேறுபட்டது. அது இனப்பிரச்சினைக்கான தீர்வோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குமாக இருந்தது. குறிப்பாக போரிலே அழிவடைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களையும் அங்குள்ள சமூகத்தினரையும். இப்பொழுது அது இன்னும் விரிவடைந்து தேசத்தை மறுவாக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைக்குள்ளாகியிருந்தது. இப்பொழுது அது மேலும் விரிவடைந்து முழு நாட்டையும் முழுதாக மாற்றத்துக்குள்ளாக்க வேண்டும் என்ற நிலை.
இதை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு அரசியற் துணிவு அவசியமாகும். தேர்தலில் வெற்றியடைவதும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் சுலபம். அதை சரியாக நிர்வகித்து, மக்களுக்கான ஆட்சியாக மடைமாற்றம் செய்வது கடினம். அதிலும் ஊழலும் அரசியற் கீழ்மைகளும் இனவாதமும் வளர்ந்து திரட்சியடைந்திருக்கும் ஒரு நாட்டில் அதையெல்லாம் உடனடியாக மாற்றுவது சவாலானது. ஆனால், மக்கள் ஆதரவு என்ற பலத்தோடிருக்கும் தரப்பு, அந்த ஆதரவின் பலத்தில், அது அளித்துள்ள துணிவில் நடவடிக்கைகளை எடுத்தால், எதிர்பார்க்கப்படும் இலக்கினை எட்ட முடியும். இதற்கான வரலாற்று வாய்ப்பொன்று JVP க்கு NPP க்கு கிடைத்துள்ளது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் எட்ட முடியாத வாய்ப்பை, தேர்தல் மூலம் பெற்றுள்ளது. அதை அது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி, வரலாற்றை உருவாக்க வேண்டும். அநுர குமார திசநாயக்க வரலாற்று நாயகர் என்றால், அவர் தடைகளைத் தாண்டவும் உடைக்கவும் வேண்டும். அரசியல் என்பது ஓயாத தடைதாண்டலும் ஓயாத முன்னேற்ற நடவடிக்கையும்தான். அதைச் செய்யாத தரப்புகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளேயே செல்லும். அதைச் செய்யும் தரப்புகள் வரலாற்றின் மேற்படியில் ஏறிச் செல்லும்.