(‘அரங்கம்’ தொடர் நாவல்)
— செங்கதிரோன் —
அறுபதாம் கட்டையில் வீடமைப்பு அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பெற்றிருந்த முப்பது வீடுகளினதும் நிர்மாண வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. நிர்மாண வேலைகள் நிறைவு பெற்று வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வை எந்தப் “பந்தா” வும் இல்லாமல் எளிமையாக அரசியல் ஆரவாரங்களில்லாமல் நடத்தவே கனகரட்ணம் விரும்பினார். அந்த வீட்டுத் திட்டத்திற்கும் அதனையொட்டி வீட்டுத் திட்டப் பிரதேசத்தை மையமாக வைத்துச்சுற்றியிருந்த இடத்திற்கும் கனகரட்ணத்தின் பெயரைச் சூட்டத் தனது விருப்பத்தைப் பல தடவைகள் கோகுலன் வெளிப்படுத்திய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கனகரட்ணம் அதில் அக்கறைப்பட்டவராகத் தெரியவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் கோகுலனிடம் சொன்னார். “தம்பி! நமக்குச் சிலுசிலுப்பு வேண்டாம். பலகாரம்தான் வேண்டும். வீட்டுத் திட்டத்தை வடிவா முடிச்சு உரிய ஆக்களுக்குக் கையளித்தால் போதும். பெயரெல்லாம் தேவையில்ல”.
“இந்த வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டக்குள்ளயும் நீங்க வரல்ல. இப்ப வீடுகளும் கட்டி முடியப்போகுது. வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் அவ்வீடுகள உங்களக் கொண்டுதான் பயனாளிகளுக்குக் கையளிக்க விரும்புறாங்க. பயனாளிகளும் அப்படித்தான் ஆசைப்படுறாங்க. வீடுகள் கையளிக்கப்படும் அன்றைய தினமே அவ்வீட்டுத் திட்டம் அமைந்துள்ள இடத்துக்கு உங்கட பெயரைச் சூட்டி அதப் பகிரங்கமாக அறிவிக்கவேணும் என்றிரது என்ர விருப்பம். அதற்குத் தயவு செய்து மறுப்புச் சொல்லாதீங்க. அது சம்பந்தமாக வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகளுடன் பேசிற்றன். அவங்களும் அத விரும்புறாங்க. சம்மதத்தையும் தெரிவிச்சிட்டாங்க” என்றான் கோகுலன்.
“தம்பி கோகுலன்! நீ கேட்டா எனக்கு மறுப்புச் சொல்ல ஏலா. நீ எதையும் சும்மா கேக்கமாட்டாய். ஏதோ பொது நன்மைக்குத்தான் கேப்பாய். அதனால நான் மறுப்புச் சொல்லல்ல. ஆனா அது பெரிசா இல்லாம ஆர்பாட்டங்கள் இல்லாம எளிமையான நிகழ்வாக இருக்கட்டும்” என்றார் கனகரட்ணம். இந்த அளவுக்காவது தனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டு சம்மதித்து விட்டாரே என்று கோகுலன் திருப்தியடைந்தான்.
அடுத்த நாளே அந்த வீட்டுத் திட்டக் கிராமத்துக்குக் ‘கனகர் கிராமம்’ எனப் பெயர் சூட்டும் கோரிக்கைக் கடிதங்களை வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கும் உரிய ஏனைய சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் கனகரட்ணத்திடம் கையெழுத்து வாங்கிச் சூட்டோடு சூட்டாக அனுப்பி வைத்தான் கோகுலன்.
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திட்ட நிர்மாண வேலைகள் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்த சமகாலத்தில் கனகரட்ணம் எம்.பி யின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழான காரைதீவு வெட்டுவாய்க்கால் நிர்மாண வேலையும் திருக்கோவில் பிரதேசத்தில் பாவட்டாக்குளம் நிர்மாண வேலையும் நடந்து கொண்டிருந்தன.
இந்த வேலைத்திட்டங்கள் யாவும் ‘ஒரு பானைச் சோற்றுக்குச் சில பருக்கைகளே பதம்’ என்பதுபோல தனக்கு வாக்களித்த மக்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கிவிடும் கனகரட்ணத்தின் செயற்பாட்டு அரசியலைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
கல்முனையில் படித்துக் கொண்டிருந்த கோகுலனின் அக்காமார்களின் பிள்ளைகள் மட்டக்களப்புக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். துறைநீலாவணையில் ஆசிரியப் பணிபுரிந்து கொண்டிருந்த கோகுலனின் தம்பியும் கடல் கடந்த தொலைத் தொடர்புத் திணைக்களத்தில் வேலை கிடைத்துக் கொழும்புக்குச் சென்று விட்டிருந்தான். இந்தக் காரணங்களால் கல்முனை வீடு வாடகைக்கு அவசியப்படாததால் கோகுலனின் தாயாரும் கல்முனையை விட்டு பொத்துவிலுக்குத் திரும்பிக் கோகுலனின் மூன்றாவது அக்காவுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். கோகுலனும் தம்பிலுவிலில் தான் குடியிருந்த வாடகை வீட்டிலிருந்து எழும்பித் திருக்கோவில் சித்திர வேலாயுதர் கோயில் வீதியிலுள்ள தன்னுடைய நண்பன் சந்திரநேருவுக்குச் சொந்தமான வீட்டிற்குத் தன் கர்ப்பிணி மனைவியுடன் குடிபுகுந்தான்.
தமிழ்-சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் குதூகலத்துடன் விடைபெற்றன.
1980 ஏப்ரல் 20 ஆம் திகதி.
புதிதாகக் குடிவந்த திருக்கோவில் வீட்டில் அன்று கோகுலன் எங்கும் வெளியில் செல்லவில்லை. வீட்டில்தான் தங்கியிருந்தான்.
மாலைபட்டு இருள் கவ்வும் நேரம். கோகுலனின் கீழ் பணிபுரியும் நீர்ப்பாசனத் திணைக்களத்து வேலைகள் மேற்பார்வையாளர் இலட்சுமணன் முகத்தில் கலவரக் குறியுடன் வந்தான். வந்ததும் வராததுமாகச் “சேர்! கேள்விப்பட்டீங்களா?” என்றான்.
கோகுலனும் ஏதோ? என்னவோ? என்று எண்ணிக் கொண்டு ”இல்லயே! என்ன நடந்தது” என்றான்.
“கனகரட்ணம் ஐயா மட்டக்களப்பு கல்லடியில மாரடைப்பால இறந்திட்டார்” என்று நாத்தழுதழுக்கச் சொல்லியபடி அழத் தொடங்கினான்.
“ஐயோ! கடவுளே!” என்று கூறிக்கொண்டு தன் தலையிலே கைவைத்த கோகுலன் சில நாழிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் சிறுகுழந்தைபோல் விம்மி விம்மி அழத் தொடங்கினான்.
அழுகுரல் கேட்டு ஓடி வந்த கோகுலனின் மனைவி அருகில் நின்ற இலட்சுமணனிடம் “என்ன நடந்தது?” என்று வினவினாள். இலட்சுமணன் விடயத்தை அழுதுகொண்டே கூற அவள் கோகுலனை ஆசுவாசப்படுத்தத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் திருக்கோவில் ஜெயதேவா, சந்திரநேரு, இராசநாயகம். கவீந்திரன், ஆனந்தன் போடியார், பிரான்சிஸ் மற்றும் தம்பிலுவில் பேரம்பலம் என்று சிறு கூட்டம் கோகுலனின் வீட்டில் கூடிவிட்டது.
ஆனந்தன் போடியாரின் வானில் எல்லோரும் உடன் மட்டக்களப்புக்குப் போகத் தீர்மானித்தார்கள்.
மட்டக்களப்புக் கல்லடியில் அமைந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை வந்தடைந்தபோது, இவர்கள் எல்லோரையும் கண்ட கனகரட்ணத்தின் ‘அப்பலோ’ என அழைக்கப்பட்ட அவரின் உதவியாளன் கோகுலனைக் கட்டிப்பிடித்து “ஐயா! எல்லாம் முடிஞ்சிபோச்சே எம்.பி ஐயா எல்லாரையும் விட்டுத்துப் போயித்தாரே” என்று கதறியழத் தொடங்கினான்.
அந்த உதவியாளனின் தோளில்தட்டி அவனைத் தேற்றிவிட்டு உள்ளே சென்றான் கோகுலன். கூடவந்த எல்லோரும் கோகுலனைப் பின்தொடர்ந்தனர். மண்டபத்தின் நடுவே கனகரட்ணம் நீள்துயில் கொள்ளும் கோலம் கோகுலனின் நெஞ்சை உலுக்கிற்று. நெஞ்சம் கனத்துக் கண்கள் கலங்கின. எல்லோரும் கண்களிலே சுரந்த நீர் கன்னங்களில் வழியக் கனகரட்ணத்தின் பூதவுடலின் கால்களைத் தொட்டு வணங்கி அஞ்சலித்தார்கள்.
மரணச்செய்தியறிந்த மட்டக்களப்பு நகர்ப்புற மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காய் இரவு முழுவதும் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
கோகுலனும் கோகுலனுடன் கூடவந்திருந்த ஜெயதேவா, சந்திரநேரு, இராசநாயகம், கவீந்திரன், ஆனந்தன்போடியார், பிரான்சிஸ், பேரம்பலம் என்று அனைவருமே கல்லடியிலே அன்றிரவைக் கண்விழித்துக் கழித்தார்கள்.
தினகரன் பத்திரிகை நிருபர்களான எஸ்.வி.சிவகுரு மற்றும் மட்டக்களப்பு விசேட நிருபர் ம.த.லோறன்ஸ்சும் கொடுத்திருந்த செய்தி மறுநாள் 21.04.1980 திங்கட்கிழமை தினகரன் இதழில் முன்பக்கச் செய்தியாகக் கொட்டை எழுத்தில் ‘மாவட்ட அமைச்சர் கனகரத்தினம் காலமானார்’ என்ற தலைப்பின்கீழ் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்;தது.
மட்டக்களப்பு மாவட்ட அமைச்சரும் பொத்துவில் இரண்டாவது எம்.பியுமான திரு.எம்.கனகரத்தினம் நேற்று மாலை 4.20 மணிக்கு மாரடைப்பினால் காலமானார்.
வெள்ளிக்கிழமை தமக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த திரு.கனகரத்தினம் அவர்களை டாக்டர் ஆர்.கே.செல்லையா கல்லடியிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்று பார்வையிட்டார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவரை உடனடியாக அனுமதிக்க டாக்டர் செல்லையா எடுத்த முயற்சிகளுக்கு திரு.கனகரத்தினம் இடமளிக்கவில்லை. வீட்டிலிருந்தே தாம் சிகிச்சை பெற விரும்புவதாக அவர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் அவருக்கு மீண்டும் மார்புவலி ஏற்பட்டது. மட்டக்களப்பு வைத்தியசாலையில் பதில் டாக்டர் திரு.ஆர்.தியாகராசா உடனடியாக கல்லடிக்கு விரைந்து சென்று கனகரத்தினத்தை பரிசோதனை செய்தார்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திரு.கனகரத்தினம் மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரி 4ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு முதல்வருமான திரு. இராசதுரை திரு. கனகரத்தினம் அவர்களை பார்வையிட்டு உரையாடினார். சரியாக 4.20 மணிக்கு மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பினால் அமைதியாக காலமானார்.
மட்டக்களப்பு மைதானத்தில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த திரு. இராசதுரை வைத்தியசாலைக்கு விரைந்து திரு. கனகரத்தினம் அவர்களின் பூதவுடலை கட்டித்தழுவி கண்ணீர் சிந்தினார்.
திரு. கனகரத்தினம் அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நேற்று மாலை 6.05க்கு கல்லடியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் திரு.கனகரத்தினத்தின் இறுதிக்கிரியைகள் பற்றி ஏற்பாடு செய்கிறார்.
தற்போதைய ஏற்பாட்டின்படி இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள அவரது அலுவலகத்திலும் பின்னர் மாநகரசபை மண்டபத்திலும் அதே தினம் வைக்கப்படும். பொதுமக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுமென்று திரு.இராசதுரை தெரிவித்தார்.
திரு. கனகரத்தினத்தின் மறைவுச் செய்தியை மட்டக்களப்பு பொலிஸ் சுப்றீண்டன் பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு.ஆர்.சுந்தரலிங்கத்துக்கு அறிவித்தார். திரு.சுந்தரலிங்கம் உடனே இச்செய்தியை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுக்கு அறிவித்தார்.
1966 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்துக் கோகுலனைச் சுமந்தபடி முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காலக்குதிரை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது.
20.04.1980 ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மறுநாள் நண்பகல்வரை அமரர். கனகரத்தினத்தின் பூதவுடல் கல்லடியிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுப் பிற்பகல் 1.30 மணியளவில் கல்லடி வாசஸ்தலத்திலிருந்து வெள்ளை மலர்களாலும் வெள்ளைக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வாகனப் பவனி மூலம் பூதவுடல் பேழை மாநகர சபை மண்டபத்திற்கு ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட காட்சி – மாநகர சபை மண்டப வாசலில் வைத்து அமைச்சர் இராசதுரை அவர்களாலும் மாநகர சபை ஊழியர்களாலும் பூதவுடல் பேழை மண்டபத்துள் காவிச் செல்லப்பட்டு வெள்ளை நிறமலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமரர். கனகரட்ணத்தின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட காட்சி – அமைச்சர் இராசதுரை மலர்மாலையொன்றை அமரர். கனகரட்ணத்தின் பூதவுடலுக்குச் சாத்தி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து கனகரடணத்தின் தாயார் திருமதி.மயில்வாகனம், சகோதரிகள் திருமதி.சந்திரசேகரம் மற்றும் திருமதி.பத்மநாதன், புதல்வர்களில் ஒருவரான ரகுலோஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்திய காட்சி – 22.04.1980 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இரதம் ஒன்றில் அமரர். கனகரட்ணத்தின் பூதவுடல் பொத்துவில் தொகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட காட்சி – மீண்டும் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்ட அமரர். கனகரட்ணத்தின் பூதவுடல் 23.04.1980 புதன்கிழமை மாலை மாநகரசபை மண்டபத்திலிருந்து மக்களெல்லாம் அலைமோத ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த வெண்கோபுர மேடையில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த அமரர். கனகரட்ணத்தின் சிதைக்குக் கனடாவிலிருந்து வந்த அவரது மூத்தபுதல்வன் ரகுலோஜன் தீமூட்டிய காட்சி – தீம்பிழம்புகள் தழுவ அன்னாரின் பூதவுடல் அக்கினியில் சங்கமாகிய காட்சி எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாகத் திரைப்படச் சுருளை வேகமாக ஓடவிட்டதைப்போல கோகுலனின் நினைவுத்திரையில் தோன்றி மறைந்தன.
அமரர். கனகரட்ணத்திற்கான இறுதிக்கிரியைகள் நடைபெற்றுக் கல்லடிக் கடற்கரையில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட அன்றிரவு கல்லடிக் கடற்கரையின் அலைவாய்க் கரையில் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாகத் தனியே நெடுநேரம் அமர்ந்திருந்த தன்னை நண்பர்கள் ஜெயதேவாவும் சந்திரநேருவும் தேடிவந்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றதையும் கோகுலன் நினைத்துப் பார்த்தான். அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குக் கனகரட்ணத்தின் மறைவு ஏற்படுத்திய இழப்பை எதிர்காலம் எப்படி ஈடுசெய்யப்போகின்றது என்பதே அன்று கோகுலனின் மனக்கவலையாகவிருந்தது. தான் கனவு கண்ட ‘கனகர்கிராமம்’ எதிர்காலத்தில் அதன் கதி எவ்வாறு அமையுமென்பதும் அவனது ஏக்கமாயிருந்தது.
. . .
சில நிமிடங்கள் கண்களை மூடியபடி அமைதியாக இருந்த கோகுலனை அவன் மனைவி அருகில் வந்து “என்ன? காலம வீரகேசரிப் பேப்பர வாசிச்சுப் போட்டு யோசிக்கத் தொடங்கிய நீங்க காலமயும் மத்தியானமும் சாப்பிட்ட நேரம் போக மிச்ச நேரமெல்லாம் யோசிச்சித்து இரிக்கீங்க. என்னதான் அப்பிடிக் குடிமுழுகிப்போன யோசனை. இரவு எட்டு மணியாப் போய்த்து. எழும்புங்க. எழும்பி முகம் கழுவிச் சாமி கும்பிட்டிட்டு வாங்க சாப்பிட” என்று தோளில் தட்டி உலுக்கியபோதே நினைவுச் சுழியிலிருந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக் கொண்டு எழுந்த கோகுலன் முகம் கழுவவெனக் குளியலறை நோக்கிச் சென்றான்.
மனைவியுடன் அமர்ந்து இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழுந்த கோகுலன் மீண்டும் தன் இருக்கைக்குத் திரும்பி காலக் குதிரையில் மீண்டும் ஏறியமர்ந்து நினைவுக் கடிவாளத்தைச் சுண்டினான்.
(தொடரும் அங்கம் – 60)