— அழகு குணசீலன் —
“PROVE YOU HAVE A DEGREE MAHINDA DESHAPRIYA CHALLENGES SPEAKER”
கொழும்பு டெய்லி மிரர் இல் டிசம்பர் 6ம் திகதிய பதிப்பில் வெளியான செய்தி இது. இந்த செய்தி இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்த பதிவை ஆதாரமாகக்கொண்ட செய்தியாகும். தேசப்பிரிய என்.பி.பி./ ஜே.வி.பியின் ஆதரவாளர் மட்டுமன்றி, சபாநாயகரின் பள்ளித்தோழனும், நண்பரும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
அவரது பதிவில் சபாநாயகரையும், என்.பி.பி.யையும் நோக்கி இரண்டு கோரிக்கைகளை அவர் முன்வைத்திருந்தார். கலாநிதி பட்டத்தை நிரூபிக்காவிட்டால்….
சபாநாயகர் அசோகா சபுமல் ரன்வெல தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பது ஒன்று.
அதை அவர் செய்யத் தவறினால் அவர்மீது என்.பி.பி. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மற்றொன்று.
ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை குறித்து நிறையவே பேசியும்,கேள்வி கேட்டும் உள்ளார். அவற்றை நடைமுறையில் செய்து காட்டுவதற்கான “பந்து” தற்போது அவர் பக்கம் அறியப்பட்டுள்ளது. என்றாலும் அரசியல் முக்கியம் வாய்ந்த இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு ஒரு வாரம் எடுத்திருக்கிறது. சபாநாயகர் டிசம்பர் 13 ம் திகதி இராஜினாமாச் செய்துள்ளார்.
ஒரு வாரகாலமாக சபாநாயகரும் நிரூபிக்கவில்லை, என்.பி.பி.யும் எந்த நடவடிக்கையையும் பகிரங்கமாக எடுத்ததாக தெரியவில்லை. அது பற்றி அவரே தெளிவுபடுத்துவார் என்ற செய்தி மட்டுமே வெளிவந்தது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி, பொதுஜனபெரமுன போன்றவை இது குறித்து கேள்வி எழுப்பி “சபாநாயகர் கலாநிதி பட்டத்தை நிரூபிக்காவிட்டால் பதவி துறக்க வேண்டும் இல்லையேல் நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டு வருவோம்” என்று எச்சரிக்கை செய்தன. வழமைபோல் நமது தமிழ்த்தேசிய கட்சிகளும் அதன் பிரதான எதிர்க்கட்சியான தமிழரசுக்கட்சியும் மதில் மேல் குந்தியிருந்தன. சிலவேளை அவர்கள் இது சிறிலங்கா பாராளுமன்ற விவகாரம் நமக்கேன் என்று இருந்திருக்கக்கூடும். நம்பிக்கையில்லா பிரேரணை வந்திருந்தால் சீத்துவம் தெரிந்திருக்கும்.
இதற்கிடையில், யப்பானிய வசேடா பல்கலைக்கழகம் “அப்பேர்ப்பட்ட ஒரு நபர் தங்கள் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவில்லை” என்று தெரியப்படுத்தியிருக்கும் ஆதாரம் வெளிவந்தது. இராஜினாமா கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்றதுடன், ஜனாதிபதி, என்.பி.பி.மீதான அழுத்தம் அதிகரித்துடன் நம்பிக்யில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பிரேரணையில் கையொப்பமிட்ட நாளில் இதுவரை இழுத்தடித்து வந்த சபாநாயகர் கல்லும் தேங்காயும் சந்தித்தது போன்று பதவியை இராஜினாமாச் செய்தார்.
இதில் இன்னும் வேடிக்கை என்னவெனில் “சபாநாயகர் இந்த தகைமையை வழங்கவில்லை, தாங்கள் தான் அதை தவறுதலாக இணையத்தளத்தில் பதிவேற்றி விட்டோம்” என்று பாராளுமன்ற நிர்வாகம் முழுப் பூசணிக்காயை பிடி சோற்றில் புதைத்தது. இவற்றில் இருந்து தெரியவருவது என்னவெனில் சபாநாயகரும், பாராளுமன்ற நிர்வாகமும், ஜனாதிபதியும், என்.பி.பி.யும் இறுதிவரை இந்த விவகாரதத்திற்கு வர்ணம் பூசி மறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதாகும்.
பாராளுமன்ற நிர்வாகம் சுயவிருப்பில், கேள்விச்செவியராக தாம் விரும்பியவாறு ஒரு கல்வித்தகைமையை பதிவிட முடியுமா?
பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தல் என்பது பாராளுமன்ற
நிர்வாகத்திற்கு பொருந்தாதா?
இந்த விவகாரம் ஊழல், இலஞ்சம், குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை வெளியேற்றி, கல்வியாளர்களால் நாடாளுமன்றத்தை நிரப்பி சுத்திகரியுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று என்.பி.பி க்கு வாக்களித்த சுமார் 6.9 மில்லியன் வாக்காளர்களையும் ஏமாற்றிய செயலாகும். இதற்காக என்.பி.பி. முன்னாள் சபாநாயகரும், எம்.பி.யுமான அசோகா ரன்வெல மீது எடுக்கவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை என்ன? கட்சியையும், மக்களையும், பாராளுமன்றத்தையும் அவர் ஏமாற்றி இருக்கிறார். அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்திருக்கிறார். அவரின் எம்.பி.தெரிவுக்கு இந்த ” க(ல்)லாநிதி பட்டம் ஒரு தகைமையாக செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தேர்தல் பிரச்சார மேடைகளிலும், விளம்பரங்களிலும் அவர் கலாநிதியாக கட்சியினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். நேர்மையீனமாக, தவறாக நடந்த ஒருவருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் தனது கட்சியில் பாராளுமன்றத்தில் பயணிப்பதற்கு இலவச ரிக்கட் வழங்கப்போகின்றாரா….? என்.பி.பி.யின் இன்னும் பலர் “கள்ளசேர்டிபிட்கட்” காரர்கள் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. முன்னாள் எம்.பி. பிரேம்நாம் சி தொலவத்த வெளியிட்டுள்ள பட்டியலில் பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணிய சிறி குமார ஜெயக்கொடி, ஹர்சண சூரியப்பெரும,அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் ஏரங்க குணசேகர ஆகியோரின் பட்டங்கள் குறித்தும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் விசேட வைத்திய நிபுணர் இல்லை என்றும், நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி பட்டம் அற்றவர் என்றும், மின்சக்தி அமைச்சர் உயர்கல்வி பட்டம் இல்லாதவர் என்றும் இப்படியே மற்றவர்களும் உள்ளனர் என்கிறார் தொலவத்த. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிர்க்கட்சி வங்குரோத்து அரசியலா? அல்லது உண்மை நிலை இதுதானா என்பதை அலட்சியம் செய்யாமல் பரிசீலனை செய்ய வேண்டியதும், குற்றச்சாட்டு உண்மை எனின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அநுரகுமார தலைமையிலான என்.பி.பி.அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
அசோகா ரன்வெல இந்த ஏமாற்று மோசடிக்காக எம்.பி. பதவியையும் துறப்பாரா?
அதற்கான முடிவை என்.பி.பி.எடுக்குமா ?
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தொடர்ந்தும் கையில் எடுக்குமா?
என்ற கேள்விகள் இங்கு எழுப்பப்படவேண்டியவை. முதற்கோணல் முற்றும் கோணல் என்பதுபோல் இந்த விவகாரத்துடன், விலைவாசி உயர்வு, ஐ.எம்.எப். ஒப்பந்தம், சிறுபான்மையினர் கொண்டுள்ள அரசியல் அதிருப்தி எல்லாம் சேர்ந்து என்.பி.பி.க்கு சனிமாற்றம் 2025 இல் அவ்வளவு நன்றாக இல்லை போலும்.
என்.பி.பி.க்குள் அதிகாரப்போட்டி நிலவுவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார விரும்பினாலும் சில விடயங்களில் அவரது கை கட்டப்பட்டிருப்பதாகவும் கூட பேசப்படுகிறது. கட்சியின் மூத்த, முக்கியஸ்த்தர்கள் முக்கிய சில தீர்மானங்களில் ஜனாதிபதியுடன் முரண்படும் நிலை உள்ளதாக உள்ளூர் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. உள்நாட்டு பொருளாதாரநிலை, இனப்பிரச்சினை, வெளியுறவு போன்ற விடயங்களில் அரசாங்க கொள்கை தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல்களும், திருத்தங்களும், மறுப்புக்களும் வருவதற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது. சபாநாயகர் விடயத்தில் ஏற்பட்ட இழுத்தடிப்புக்கும் இதுவே காரணம் என்றும் கொள்ளவேண்டியுள்ளது.
சபாநாயகரின் இராஜினாமாவுக்கு அழுத்தம் கொடுத்த மற்றொரு விடயம் ஜனாதிபதியின் இந்திய பயணம். இல்லையேல் இந்திய ஊடகங்களின் ஜனாதிபதிக்கான முதல் கேள்வி சபாநாயகர் பற்றிய தாகவே இருந்திருக்கும். என்றாலும் மழை விட்டாலும் இன்னும் தூவானம் தொடர்கிறது. அப்படி ஒரு கேள்வி வரும் போது இது விடயத்தில் ஜனாதிபதியின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஊடக தகவல் அறியும் உரிமை வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
159 உறுப்பினர்களை கொண்ட அரசாங்க தரப்புக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது ஒன்றும் மலையை பிடுங்கி மாமரத்தில் சாத்துவதல்ல. ஆனால் ஒரு பொய்மைக்காக கட்சி கௌரவத்தை காப்பாற்றப்போனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், என்.பி.பி.க்கும் அது வரலாற்றில் ஒரு கறைபடிந்த கதையாக அமைந்துவிடும். இதனால் கோத்தபாய பாணியில் செயற்படாது ஜனாதிபதி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார். இப்போது முந்தி செய்ய வேண்டியதை செய்யாமல் விட்ட பதவி துறந்த சபாநாயகர் பட்டப்படிப்பு சேர்டிபிக்கட்டை தேடுகிறார். ஐயர் வரும் வரையும் அமாவாசை காத்திருக்குமா என்ன?
க(ல்)லாநிதிகள் குறித்து புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குறித்தும் கதைகள் உண்டு. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடொன்று அன்ரன் பாலசிங்கம் தன்னை கலாநிதி என்று ஒரு போதும் சொன்னதில்லை என்றும் “ஊர்தான்” அவரை அப்படி கூப்பிட்டது என்ற தொனியில் ஒரு கருத்தை எழுதியிருந்தது. ஆனால் இதில் பாலசிங்கத்திற்குள்ள வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சரியான தகவல் வழங்கும் கடமையை அது வசதிகருதி கடந்து சென்று, மூடி மறைத்து அவரை தப்பிக்க வைக்கிறது. அன்ரன் பாலசிங்கம் “கலாநிதி” என்று ஊர், உலகம் கூப்பிட்டதை தனது வாழ்நாளில் எத்தனை மில்லியன் தடவைகள் கேட்டிருப்பார். அப்போது ஒரேஒரு தடவை நான் “க(ல்)லாநிதி என்று அவர் கலாநிதியை மறுத்துரைக்காதவரை தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றிலும், புலிகளின் அரசியல் வரலாற்றிலும் அந்த”மதியுரைஞரின்” நேர்மையை என்ன என்பது.?
க(ல்)லாநிதிகளாக இந்தியாவில் காசுக்கு பட்டம் வாங்கிய பலர் தமிழர் தரப்பில் நிலத்திலும், புலத்திலும் இருக்கிறார்கள். இவர்களில் வைரமுத்து முதல் ஆளுநர் செந்தில் தொண்டமான் வரை மாலைபோட்ட கோர்ட்சூட் காரரும், பட்டு வேட்டி சால்வையோடு மேடையேறுபவர்களும் இருக்கிறார்கள். மட்டக்களப்பில் இருந்து ஒரு சர்வதேச கிளப் ஒன்றின் கிளையினர் கூட்டமாக இந்தியா சென்று க(ல்)லாநிதிகளை சுங்கத்தீர்வையின்றி இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது வெளிச்சத்திற்கு வந்ததால் பட்டத்தை பொதுவெளியில் பயன்படுத்தாது பலர் பெட்டகத்துள் பதுக்கி வைத்துள்ளனராம்.
சபாநாயகர் விடயத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த(?) செயற்பாடு ஜனநாயக பாராளுமன்ற அரசியலுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி. ஒரு ஜனநாயக நாட்டில் அதுவும் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையை கொண்டுள்ள ஒரு பாராளுமன்றத்தில் குறைந்ததளவான உறுபினர்களுடன் எதிர்க்கட்சிகள் இதை சாதித்துள்ளன என்று வகையில் யானை பலம் கொண்ட ஒரு அரசாங்கத்தில் பூனைப்பலம் கொண்ட எதிர்க்கட்சிகளின் முதல் வெற்றி இது. அதேவேளை பெரும்பான்மை பலத்தை கொண்டு ஜனநாயகத்தின் பேரில் ஒரு வரலாற்று தவறை இழைக்காமல் பாராளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு ஒரு புதிய பாதைக்கான திசையை காட்டியிருக்கிறது என்.பி.பி.