செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்

— அ.அன்பழகன் குரூஸ் —

தன் இளமைக் காலம் முதல் தமிழின்பாலும், தமிழ் இலக்கியங்களின்பாலும், தமிழ் விடுதலை வேட்கையினாலும் உத்வேகம் பெற்ற செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், ஈழவளநாட்டின் தற்கால தமிழ் இலக்கியகாரர்களில் மிகவும் முக்கியமானவராக அடையாளங் காணத்தக்கவராவார். எனது பார்வையில் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்களை தனிமனிதனாக அவரது செயற்றிறன் மற்றும் சிந்தனைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறுபோட்டுப் பார்க்கையில் ஒரு முப்புரி கொண்ட பலமான வடம் போல அல்லது முக்கனிபிழிந்த சாறு போல மூன்று கோணங்களின் அவரைப் பகுத்தறிவதே பொருத்தமாகும் எனக் கருதுகின்றேன். இது முழுவதும் அவரது கடந்தகாலத் தடங்களை அடிப்படையாகக் கொண்டதாகும், இதனை வெறும் கற்பனையினின்று விலகி அவரது இயங்கு நிலை மற்றும் சமூகத்துக்கு அவர் சுட்டிக்காட்டிய இலச்சினைகளை அடிப்படையாகவே கொண்டு பார்க்கப்பட்டது. அந்த மூன்று தடங்களும் இவ்வாறு அமைகின்றன,

1. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் தமிழ் அரசியற் தளம்.

2. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் நட்பும் உறவும் சார்ந்த தனிமனிதப் பண்புத் தளம்

3. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் தமிழ் கலை இலக்கிய ஆளுமைத் தளம்.

அவற்றை நான் தனி வேறாகப் பகுத்தறிய விழைகின்றேன்.

1. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் தமிழ் அரசியற் தளம்:

அதீத விமர்சனங்களுக்கு உட்பட்ட இவரது அரசியற் செயற்பாடுகளை நான் விமர்சிக்கவோ அல்லது கருத்துரைக்கவோ அல்லது பெருமை பேசவோ இங்கு என்னால் முடியாது. இருந்தாலும் தனி ஒரு கோணத்தில் தமிழ் அரசியல் விடுதலை என்பதனை சில மாற்றுச் சிந்தனைகளோடு அல்லது மாற்று அரசியல் செயற்பாடுகளோடு எடுத்து வளர்த்து இன்றும் அதனோடு இயங்கிக்கொண்டிருக்கின்றார் என்பதனை நானும் நம்மில் பலரும் அறிவர். இச் செயற்பாடு இவர் பற்றிய நோக்கில் ஜனரஞ்சகத்திற்கும், தமிழ் ஈழப் பிரதேசத்தின் தமிழ் சமூகத்தின் யதார்த்தத்தினின்றும் குறிப்பிட்ட அளவு விலகிச் செல்வதனால் பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் தனது தமிழ் அரசியற் தளத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றார் என்பதாகவே நான் இவரது அரசியற்தளத்தை அடையாளங்காணுகின்றேன். இது பற்றி நான் அதிகம் எடுத்துரைக்கப் போவதில்லை ஏனெனில் இது அதற்கான பத்தியல்ல.

2. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் நட்பும் உறவும் சார்ந்த தனிமனிதப் பண்புத் தளம்:

சேமித்து வைக்காச் செல்வங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் தனி மனிதப் பண்புகளை நேசிப்பதால் அவருடன் நான் எல்லா வரையறைகளையும் கடந்து நட்பாகவும், உறவாகவும், வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இதுதான் இவரது நீண்டகால நட்பு வட்டத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் எனவும் எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனை நட்போடும் உறவோடும் இணைந்திருக்கும் பலரை நான் காண்கின்றேன்.

எதையும் மிக இலகுவாக நோக்கிக்கொண்டே மிக இறுக்கமான சூழ்நிலைகளையும் சாதாரணமாகக் கடக்கவல்லவர். தனது முடிவுகளில் அசையாத உறுதிகொண்டவர், பழகி உறவாடி வாழுதற்கு மனத்தின் அடிவரை நிலைத்திருக்கக்கூடிய பண்பு கொண்டவர். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதீத விருப்புக் கொண்டவர். கலை இலக்கியத்துக்கும் அப்பால் சமூக நோக்கில் கல்விக்காகவும்;, வாழ்வாதாரத்துக்காகவும் தன்னால் முடிந்த உதவிகளை மற்றவருக்குச் செய்வதன்மூலம் சமூக அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புடைய ஒருவராக அறியப்படுபவராவார்.  

3. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் தமிழ் கலை இலக்கிய ஆளுமைத் தளம்:

இவரது கலை இலக்கிய ஆளுமைத் தளத்தை

ஆக்க இலக்கியத் தளம்

செயற்பாட்டு இலக்கியத் தளம்

என இரு கோணங்களில் ஆய்வு செய்யும் அளவு இவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழ்க் கலை இலக்கியத்துக்கும் சிறந்த வெளிப்பாடுகளை மேற்கொண்டு இன்றுவரையும் இலங்கை மாத்திரமன்றி சர்வதேச நாடுகளிலும் அறியப்பட்ட ஒருவராக வாழுகின்றார்.

*. செங்கதிரோன் கோபாலகிருஷ;ணனின் தமிழ் கலை இலக்கிய ஆளுமைத் தளம்.  

ஆக்க இலக்கியத் தளம்:

=============

1968இல் வெளிவந்த கவிஞர் காசி ஆனந்தனின் ‘தமிழன் கனவு’ எனும் நூலும், அதனைத் தொடர்ந்து, சுதந்திரன் பத்திரிகையில் 1970 தொடக்கம் 1975வரை தமிழ் உணர்ச்சிக் கவிதைகள் மூலம் தன்னை தமிழர் உரிமைக் களத்தில் இணைத்துக்கொண்டுள்ளார் என்பதனையும் அறிய முடிகின்றது.

‘செங்கதிர்’

========

அனைவராலும் செங்கதிரோன் என அறியப்பட்ட இவர் அந்தப் புனைபெயரைப் பெறக் காரணமாக அமைந்தது இவரது ‘செங்கதிர்’ எனும் சஞ்சிகையாகும். ஈழத்தின் கீழைக் கரையினின்று தோற்றம் பெற்ற இவரது மாதாந்த சஞ்சிகை 62 இதழ்களை வெளிக்கொணர்ந்து படைப்பிலக்கியக் கால வெளியில் தன் கதிர்களைப் பரப்பி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கன கச்சிதமான வடிவத்தில் வெளிவந்த செங்கதிர் சஞ்சிகை ஒரு இலக்கியக் கலவையாக வெளிவந்துள்ளது. பல புதிய எழுத்தாளார்கள் கவிஞர்கள் உருவாக இச் சஞ்சிகை களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நான் ஒரு நூல் நயவுரை செய்தபோது என்னை இவர் அடையாளங்கண்டு தொடர்ந்து ஓரிரு ஆண்டுகளுக்குள் வீடு தேடிவந்து எனது கலையிலக்கியச் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தார்.

குறிப்பாக 16வது ‘செங்கதிர்’ இதழிலிருந்து தனது செங்கதிரின் துணையாசிரியராக என்னை இணைத்துக்கொண்டு நானும் ஆக்க இலக்கியப் பணிபுரிய ஒரு வலுவான தளத்தைத் தந்தார்.

‘வயல்’

====

மட்டக்களப்பில் விபுலாநந்தா வெளிவாரிப் பட்டப்படிப்புக் கல்வி நிலையம் எனும் மிகவும் வலுவானதொரு தளம் எண்பதுகளில் காணப்பட்டது. அதில் சாருமதி யோகநாதன், க.ஆறுமுகம், புதுக்குடியிருப்பு சதாசிவம், அழகு குணசீலன், பேரின்பராசா, வசந்தராசபிள்ளை, சிவலிங்கேஸ்வரன், போன்றோருடன் இணைந்து ‘வயல் எனும் சஞ்சிகையில் தன் ஆக்க இலக்கிய வெளிப்பாடுகளைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நான்கு வெளியீடுகள் மட்டும் வெளிவந்த போதிலும் ‘வயல்’ மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சியில் வயல் வெளிபோல பரந்ததாக வரலாறு படைத்த சஞ்சிகையாகும். கனகாத்திரமான இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட இந்த வயல்வெளியில் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனும் சேர்ந்து தமிழ் விதைத்து வளர்த்துள்ளார். இந்த வயல் தொடந்து ‘பூவரசுகள்’ இலக்கிய வட்டத்தால் 5ம் இதழ்பெற்றதுமாகும்.

‘ஓலை’

====

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2001 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட ‘ஓலை’ எனும் பல்லிலக்கியச் சஞ்சிகையில் தாபக ஆசிரியராக இயங்கி, 22 இதழ்கள் வெளிவரச் செயற்பட்டுள்ளார். இதுவே இவரை சஞ்சிகை எனும் ஊடகத்தின்பால் வசீகரிக்கச் செய்ததோ எனவும் எனக்கு எண்ணத் தோன்றும். இதனால்தானோ என்னவோ 2011ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒன்றுகூடிய சஞ்சிகையாளர்களை ஒன்றிணைத்து சர்வதேச தமிழ்ச் சஞ்சிகை அமைப்பைத் தோற்றுவிக்க முன்னின்று உழைத்தார்.

‘தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்’

============

ஒரு அரசியல் கருத்தியல் நூலாக 2016ல் இவரால் வெளியிடப்பட்ட ‘தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்’ எனும் நூல் முழுக்க முழுக்க இவரது அரசியற் கருத்துக்களைக் கொண்டிருந்தது. நான் இதன் உட்பொருளை அரசியற் தளத்துக்கே பொறுப்பளித்து, ஒரு ஆக்க முயற்சி என்பதனை மட்டும் அடையாளம் காட்டி இந்தப் பதிவில் இடுகின்றேன்.

‘விளைச்சல்’ (குறுங்காவியம்)

================

ஈழத்தின் கிழக்குத் தேசத்தில் தலைசிறந்த கவிஞரான நீலாவணனின் ‘வேளாண்மை’ யின் தொடராக தனது மரபுக் கவிதையில் கவிச்சரத்தினை வெளியிட்டு நீலாவணனின் வேளாண்மையை நிறைவு செய்ததுடன், தனக்கும் ஒரு தகுந்த இடத்தை உருவாக்கியுள்ளார். கவிதைத் திறன்பொதிந்த இந்நூல் மட்டக்களப்பின் வேளாண் பாரம்பரியத்தில் குடும்ப வாழ்வியலை அறியத் தக்கதாக அமைகின்றது.

‘சமம்’

====

30 உருவகக் கதைகளைக் கொண்ட ‘சமம்’ எனும் நூல் இவரது ஆக்க இலக்கிய அடையாளமாக அமைகின்றது. சிறிய கதைகள் சமூகக் கருத்துக்ளை வாசகரிடையே மிக இலகுவாக விதைக்க வல்லதாக அமைந்திருப்பதும், தற்கால உலகில் வாசிப்பின்பால் ஈர்க்கவல்லதாகவும் இந்நூல் அமைவதுடன் இவரது ஆக்க இலக்கியத்தின் சிறந்த உருவாக்கம் எனக் கூறத்தக்கதாகும்.

‘யாவும் கற்பனையல்ல’

==============

2023இல் வெளியிடப்பட்டு தமிழ் இலக்கியம் மற்றும் தனக்கேயுரிய சமூக அரசியற்கருத்தோட்டமாக அமைந்த இந்நூல் ஆக்க இலக்கிய வரிசையில் அமைவதுடன், இவர் தன் கருத்தியலை நாசூக்காக நகர்த்தும் ஊடகமாகவும் அமைந்தது என நான் கருதுகின்றேன்.

இவை தவிர ஆக்க இலக்கிய முயற்சியில் அச்சிடப்படாத சிலவற்றையும் அடையாளம் காண்பது பொருத்தம் எனக் கருதுகின்றேன். அவை,

1. உரைகல் (நூலாய்வுகளின் தொகுப்பு)

2. பொழிவு (உரைகள்)

3. அம்பாறை மாவட்டத் தமிழர்கள் – ஓர் அரசியல வெட்டுமுகம். (அரசியல் நூல்)

4. சொல்லத் துணிந்தேன் – ‘அரங்கம்’ அரசியற் பத்திகளின் தொகுப்பு.

5. வாக்குமூலம் – ‘அரங்கம்’ அரசியற் பத்திகளின் தொகுப்பு.

6. சொல்லித்தான் ஆகவேண்டும் – ‘அரங்கம்’ அரசியற் பத்திகளின் தொகுப்பு.

7. கனகர் கிராமம் – ‘அரங்கம்’ தொடராக வந்த, அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பெற்ற ஒரு சிறு கிராமத்தைக் களமாகக் கொண்ட அரசியல் சமூக வரலாற்று நாவல்.

*. செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் தமிழ் கலை இலக்கிய ஆளுமைத் தளம்.

செயற்பாட்டு இலக்கியத் தளம்

================

1970 களில் கல்முனையில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் தலைமையில் ‘தேனாடு’ எனும் இலக்கிய மன்றத்தினால் செயற்பாட்டு இலக்கியத் தளத்தில் பிரவேசித்தவர் இவர். கவிஞர் சண்முகம் சிவலிங்கம், நீலாபாலன் எனும் கல்முனைப் பூபால், க.ஆறுமுகம், காளிதாஸ், ஆசிரியர் இராமசாமி (யோகராஜா) போன்றவர்களால் செயற்பாட்டு இலக்கியத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்.

இதன் விளைவு தொடர்ந்து தமிழ் கலை இலக்கியத் தளத்தில் இவர் செயற்பாட்டு இலக்கியக்காரராக இன்னும் இயங்கு சக்தியுடன் வாழுகின்றார்.

குறிப்பாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்வேள் க.இ.க.கந்தசாமி மூலம் 1975 முதல் செயற்படத்தொடங்கிப் பின்னர் 1990 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் ஆட்சிக் குழு உறுப்பினர், நூலகச் செயலாளர், துணைச் செயலாளர், ஓலை’ ஆசிரியர் எனக் கணிசமான காலம் காத்திரமான செயற்றிறனுடன் இயங்கியுளாளர். குறிப்பாகக் கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் செ.குணரெத்தினம் மற்றும், புலவர் கனகரெத்தினம் ஆகிய பலருடன் இணைந்து கலை இலக்கியச் செயற்பாட்டுத் தளத்தில் இயங்கியுள்ளார்.

1987 மலேசியத் தமிழாராய்ச்சி மாநாடு.

‘தமிழும் விஞ்ஞானமும்’ எனும் தலைப்பில் 1987 மலேசியத் தமிழாராச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார்.

தென்னகக் கவிஞர் சுரதா தலைமையில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை    மலேசியாவில் உருவானபோது,  அந்த முயற்சியில் சேர்ந்து செயற்பட்டதுடன் அன்று இலங்கைக்கான இணைப்பாளராகவும் நியமனம் பெற்றார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்டப் பிராந்தியச் செயலாளராகவும், அவ் அமைப்பின் ‘தாயகம்’ சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இயங்கியுள்ளார்.

‘கண்ணகி கலை இலக்கியக் கூடல்’:

======================

2011ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் கண்ணகி கலையிலக்கியப் பாரம்பரியங்களை வளர்த்து கண்ணகி இலக்கியத் தளத்தை உருவாக்க ‘கூடல்’ எனும் கண்ணகி கலை இலக்கிய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டபோது கண்ணகி கலை இலக்கிய விழாவை ஏற்பாடுசெய்து 2011ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரை ஒன்பது கண்ணகி கலை இலக்கிய விழாக்களை நடாத்தச் செயற்றிறனுடன் தலைமை வகித்தவர் இவர். இதனால் கிழக்கிலங்கையின் கண்ணகி கலையிலக்கியத்தின் கனபரிமாணங்கள் சர்வதேசம் வரை வியாபிக்கச் செயலாறியவர் எனலாம். இவரோடு இணைந்து பலர் இந்த முயற்சியில் முன்னின்று உழைத்ததுடன் நானும் பொதுச் செயலாளராத் தொடர்ந்து பயணித்த அனுபவம் காலத்தால் அழியாதது.

கண்ணகி கலையிலக்கிய விழாப் பட்டயம், தொடக்க விழா, ஆய்வரங்கு, இயலரங்கு, கலையரங்கு, இதுவரை ஏழு ‘பரல்’ களைக் கண்டதும், கதிரவன் இன்பராஜாவைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட ‘கூடல்’ விழா மலர் மற்றும், கண்ணகி வழக்குரை (மீள்பதிப்பு) வசந்தன் கவித் திரட்டு (மீள்பதிப்பு) போன்ற முக்கிய உருவாக்கங்கள் இவரது செயற்பாட்டுத் தளத்திற்கு ஆதாரங்கள் எனலாம்.

இவ்வாறு தமிழ் இலக்கியச் செந்நெறிப் புலத்திற்குச் செயற்பாட்டு ரீதியாகவும், ஆக்க இலக்கியங்ளைப் புனைந்ததனாலும் இன்றுவரை தன்னை அர்ப்பணித்துக் செயற்பட்டுக்கொண்டிருப்பதனாலும், உள்ளத்தாலும் உடலாலும் தமிழ் இலக்கியங்களின்பால் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் கொண்டதனாலும் இவர் தொடர்ந்து படைப்புலகிற்கு மேலும்பல இலக்கியங்களை வழங்குவார் என்ற நம்பிக்கையில் நிறைவுசெய்கின்றேன்.

[‘கலையருவி’ கவிஞர் அ.அன்பழகன் குரூஸ். 

LLB, MA, PG Dip in Edu, Dip in RM

சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்.

45A பிரதான வீதி

சின்ன ஊறணி

மட்டக்களப்பு]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *