அநுரவுக்கு பொல்லைக் கொடுத்து வாங்கிக்கட்டும்  தமிழ்த்தேசியம்!(வெளிச்சம்:017)

அநுரவுக்கு பொல்லைக் கொடுத்து வாங்கிக்கட்டும் தமிழ்த்தேசியம்!(வெளிச்சம்:017)

  — அழகு குணசீலன் —

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் என்.பி.பி.தலைமைக்கு பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் பரிதாபத்தை பேசுகிறது இவ்வார வெளிச்சம். 

தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனம் தென்னிலங்கையில் ஒரு பலமான சிங்கள பௌத்த அரசியல் தலைமை உருவாக எவ்வாறெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறது என்பது “பூசிமெழுகலுக்கு” அப்பால் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்தச் செய்தி விரைவாகவும், விரிவாகவும் தமிழ்மக்களை சென்றடைய வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கரங்களில் பொல்லைத்திணித்து தமிழ்த் தேசிய இனத்தின் பன்மைத்துவ, அடிப்படை ஜனநாயக உரிமைகளை, சிங்கள பௌத்த பேரினவாத நோக்கில் அடித்துக்கொலை செய்யுங்கள் என்பதற்கு சமமாக ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு  கட்சிசார்ந்த அரசியல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. அந்த முக்கியமான, அதேவைளை அன்றும், இன்றும் தவறானது என்று தெரிந்தும் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் எவை?

1. தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியே தீருவோம் என்ற தீர்க்கதரிசனமற்ற, அடம்பிடித்த பொதுக்கூட்டமைப்பின் முடிவு.

2. அதற்கு எதிரான எம்.ஏ. சுமந்திரனின் செயற்பாடுகளும், ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற அறிவிப்பும்.

3. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்ற ஈ.பி.டி.பி, ரீ.எம்.வி.பி மற்றும் தமிழ்த்தேசிய சில்லறைகளும், குழுக்களும் எடுத்த முடிவுகள்.

4. இந்த அரசியல் போக்கில் சோனகக்கட்சிகளும், மலையகக்கட்சிகளும் பிரிந்து நின்று சஜீத்பிரேமாசவையும், ரணில் விக்கிரமசிங்கவையும் ஆதரித்தமை.

ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தீர்க்கமானதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வு எதையும் தெளிவாக முன்வைக்கவில்லை. வெறுமனே 13 ஐ தமக்கு ஏற்றவாறு வியாக்கியானம் செய்து ‘பிடிகொடுக்காமல்’ நடந்து கொண்டார்கள். வெற்றுக்காசோலைக்கு வாக்களிக்கவா? போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய இன்றைய ஜனாதிபதி அநுரகுமார ஆட்சி அந்த காசோலையையும் கிழித்தெறியும் கருத்துக்களை நாளுக்கு நாள் வெளியிட்டு வருகிறது.  சிங்கள பௌத்த அநுர ஆட்சிக்கு அந்த காசோலையை கிழிக்குமாறு சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றன மேற்குறிப்பிட்ட தேர்தல் அரசியல் முடிவுகள்.

பொதுவேட்பாளரை போட்டிக்கு நிறுத்துவது என்ற பொதுக்கைட்டமைப்பின் – தமிழ்த்தேசிய உடைந்த அணிகளின் முடிவுகள், ஏற்கனவே சுமந்திரன், அரங்கம் பத்தியாளர்கள் உட்பட பல்வேறு பிரிவினரும் விடுத்த எச்சரிக்கையை மெய்யாக்கி இருக்கிறது. அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அளிக்கப்படவேண்டிய இரண்டரை இலட்சம் வாக்குகளை வீணடித்து அநுரவுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கச்செய்திருக்கிறது. இந்த வாக்குத்தொகை சஜீத், ரணிலுக்கு அளிக்கபட்டிருந்தால் அவர்களின் வாக்குகளை அதிகரித்திருப்பதுடன், அநுரவின் வெற்றி வாய்ப்பையும் குறைந்திருக்கும்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய இன்றைய ஜனாதிபதி தமிழ்மக்களை எச்சரித்து, இனவாத குரலில் வெளியிட்ட கருத்தை அன்றைய அரசியல் சூழலில் கண்டிக்காது வழமையான, தனிப்பட்ட பாராளுமன்ற உணவு விடுதி நட்புறவின் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு ‘எனக்கு தெரிந்த வகையில் அநுரகுமார திசாநாயக்க இனவாதியல்ல’ என்று மறுப்பு தெரிவித்தார்.  அநுரவின் இந்த செய்தியை சுமந்திரன் விளங்கிக் கொண்டதை விடவும் பெரும்பாலான தமிழ் மக்கள் சரியாகவே புரிந்து கொண்டார்கள். சுமந்திரனுக்கு அப்போது தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற நிலையில் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று தமிழ்த்தரப்பு கண்டனத்தை கண்டும் காணாது இருத்தல். மற்றையது தமிழ்மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அதைக் கண்டிப்பது. இரண்டில் எதையும் தேர்வு செய்யாது மூன்றாவதை  வழியை தேர்வு செய்து வழமைபோல் தனது தனித்து ஓடும் குணாம்சத்தினால் ஜே.வி.பி.யின்  இனவாத வரலாற்று குணாம்சத்தை அவர் மறுத்து இருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புகலிட ஊடகம் ஒன்றுக்கு கூறியிருந்த கருத்து இங்கு முக்கியமானது. “தேர்தலுக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையில் சஜீத் பிரேமதாசவுக்கு இதுவரை இருந்து வந்த ஆதரவு அலையில் தீடீர் மாற்றம் ஏற்பட்டு அநுரபக்கம் அந்த அலை அடிக்கத்தொடங்கியது” என்பதே அது. ஆனால் அவர் அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. ஜனாதிபதி யார் என்று தெரிந்தபின்னர் அதற்கான காரணத்தை அவரால் பகிரங்கமாக கூறமுடியாது என்பதை  தென்னிலங்கை பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியராக புரிந்து கொள்ள முடியும். இன்றைய அநுர ஆட்சியின் போக்கில் அது அவருக்கு பாதுகாப்பானதே. 

  வெளிச்சம் பத்தியாளரைப் பொறுத்தமட்டில் அந்த அலைமாற்றத்திற்கும், தமிழரசுக்கட்சி சஜீத்பிரேமாசவை ஆதரிக்கும் என்ற சுமந்திரனின் அறிவிப்புக்கும் நேரடித்தொடர்பு உண்டு. சஜீத், ரணில் அணியை விடவும் சுமந்திரனின் வாயால் என்ன வரப்போகிறது என்பதை  ஏற்கனவே அறிந்திருந்த அநுரகுமார அணி, அதற்கான மாற்று திட்டம் ஒன்றையும் இரகசியமாக தீட்டியிருந்தது. சுமந்திரன் சஜீத் பக்கம் சாய்வார் என்பதை ரணில், அரியநேத்திரன் ஊகித்தபோதும் மாற்று திட்டங்கள்  எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.

தமிழரசுக்கட்சியின் முடிவு அறிவிக்கப்பட்டபோது “தமிழர்கள் சஜீத்தை ஆதரிக்கிறார்கள், என்பதுடன் சேர்த்து இந்த முடிவுக்கு பின்னால் இந்தியா இருக்கிறது” என்ற கருத்தும் தென்னிலங்கை கிராமங்களில் மிகச்சிறந்த கட்சி கட்டமைப்பை கொண்டிருந்த கிராமிய மட்ட ஜே.வி.பி.தலைமைகள், பௌத்த விகாரைகள்-அவற்றின் விகராதிபதிகளாலும், சிறிலங்கா இராணுவ சமூகங்களுக்கு ஊடாகவும் பரப்பப்பட்டது. இதுவே அநுரவின் வெற்றியை தீர்மானித்த உடனடிக் காரணமாகும். இந்த ஆபத்தை சுமந்திரன் உணர்ந்திருந்தாரா?. அதனால் தான் அவர்  தமிழரசுக்கட்சியின் ஆதரவு முடிவை இறுதிவரை இழுத்தாரா? என்று கொள்ள வேண்டியுள்ளது. கொழும்பில் இந்திய தூதுவரை சந்தித்த ஒரு வேளை அவசரப்படத்தேவையில்லை என்று சுமந்திரன் கூற தூதுவரும் அதை ஆமோதித்திருந்தார். சில வேளை சுமந்திரன் அநுர யாழ்ப்பாணத்தில் கூறிய கருத்தையும் ஒரு தந்திரோபாயமாக  பின் விளைவுகளை கணக்குப் போட்டு திசைகாட்டிக்கு ‘பராக்குகாட்ட’  வேண்டுமென்றே நியாயப்படுத்தினாரா? என்ற கேள்வியும் இங்கு எழுப்பப்படவேண்டிய ஒன்றாகிறது.

ஈ.பி.டி.பி, ரீ.எம்.வி.பி. என்பன வற்றின் முழுமையானதும், மற்றும் சோனக கட்சிகள், மலையக கட்சிகளின் பகுதியான ரணில் ஆதரவு தீர்மானங்களும்  பொது வேட்பாளரைப்போன்று, ஒப்பீட்டளவில் கூடிய வெற்றி வாய்ப்பை கொண்டிருந்த சஜீத்பிரேமாசவுக்கு கிடைக்கவேண்டிய வாக்குகளை பிரித்து அநுரவுக்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. இதில் துரதிருஷ்டவசமாக சஜீத்தும், ரணிலும் விட்டுக்கொடுப்புடன் ஒரு இணக்கத்திற்கு வந்து ஓரணியில் நின்றிருந்தால் இன்றைய ஜனாதிபதியின் பெயர் ரணில் அல்லது சஜீத்தாக இருந்திருக்கும். பொதுஜன பெரமுனவும் பிளவுபடாமல் இருந்திருந்தால் என்.பி.பி. வெற்றி பெற்றிருக்கவே முடியாது. மாறாக நாமல் தனித்து போட்டியிட்டிருந்தாலும் இரண்டாம் தேர்வு கணக்கிடப்படாமல் ரணில் அல்லது சஜீத் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்க முடியும்.

சஜீத், ரணில் இவர்களில் எவர் வெற்றி பெற்று இருந்தாலும் மாகாண சபைக்கும், அதிகாரப்பரவலாக்கத்திற்கும் இன்று அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள/ஏற்படப்போகின்ற ஆபத்து நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. அதிகாரப்பகிர்வு ஆமை வேகத்திலாவது நகர்ந்திருக்கும். ஆனால் இப்போது இருக்கின்ற ஆபத்து அதிகாரப்பகிர்வுக்கு அடிப்படையாக உள்ள மாகாணசபை முறையை இழப்பதாகவும், சிறுபான்மை தேசிய இனங்களின் பன்மைத்துவ தனித்துவ அடையாளங்களை நிராகரிப்பதாகவும், அவற்றை பேணுகின்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகவும் அமையப் போகின்றது.

இப்போது சிறுபான்மை தேசிய இனங்களை ஜனாதிபதி தேர்தலில் வழிநடத்திய இந்தியா இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறது? ஏனெனில் இந்தியாவுக்கு பின்னால் போய் தோல்வியடைந்தது தமிழர்கள் மட்டும் அல்ல, அதற்கு ஆலோசனை வழங்கிய இந்தியாவின் இராஜதந்திரமும் தான். இப்போது அநுரகுமார பொல்லை வைத்திருந்தாலும் அதைபாவிக்காமல் தடுக்க இந்தியாவால் முடியுமா? இதற்கான விடைக்கு பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதியின் இந்தியாவுக்கான விஜயம் வரை காத்திருக்கவேண்டும்.

இந்த நிலையில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இருக்கின்ற கேள்வி அநுரவின் கையில் உள்ள பொல்லை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு பறிப்பது என்பதுதான்.  தற்போதைய நிலையில் அதற்குரிய வழி பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி/என்.என்.பி. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதை தடுத்து நிறுத்தி , பலமான எதிர்க்கட்சி ஒன்றை கட்டி எழுப்புவதுதான்.

இல்லையேல் பிட்டுக்கு மண்சுமந்த கதையாக அடி விழப்போவது  அரசியல் தவறுகளை செய்த சிறுபான்மை கட்சிகளுக்கல்ல. மாறாக மக்களுக்கே……!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *