— கருணாகரன் —
யாராலும் கையாள முடியாத – எவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் நிற்காத ஒரு நிலையை எட்டியுள்ளது தமிழ் அரசியல். அரசியலில் தமிழ் அரசியல் – சிங்கள அரசியல் – முஸ்லிம் அரசியல் எல்லாம் உண்டா என்று அரசியல் அறிஞர்கள் கேட்கலாம். உண்மையான அர்த்தத்தில் அப்படிச் சொல்ல முடியாதுதான். என்றாலும் பிரயோக நிலையில் அப்படிக் குறித்த சமூகங்கள் தங்களுடைய அரசியலை வரையறுத்து வந்திருப்பதால் இலங்கையின் அரசியலில் இத்தகைய அடையாளம் உருவாகி விட்டது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல், தலித் அரசியல், இந்தியத் தேசிய அரசியல் அல்லது காங்கிரஸ் அரசியல், காவி அரசியல் எனப்படும் பா.ஜ.க அரசியல் போன்றவற்றின் அடையாளத்தைப்போல.
எப்படியோ நடைமுறை அர்த்தத்தில் இருப்பதன்படி தமிழ் அரசியலானது, தமிழ்த்தேசிய அரசியலாக அடையாளம் காட்டப்படுகிறது அல்லது உணரப்படுகிறது. அந்தத் தமிழ்த்தேசிய அரசியல் இதுவரையிலும் அரச எதிர்ப்பை அல்லது சிங்கள வெறுப்புவாதத்தை முன்னிறுத்தியே மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. இதற்கான வாய்ப்பையும் அடிப்படைக் காரணத்தையும் அளித்தது, சிங்களத் தேசியவாதமும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசும். ஆனால், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. மாறியுள்ளது என்றால், சிங்களத் தேசியவாதமும் அரச ஒடுக்குமுறையையும் மாறி விட்டன என்று அர்த்தமில்லை. அவற்றின் கட்டமைப்பில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் உணர்நிலையில் சற்று நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியானது மாற்றத்தை நோக்கிக் கொண்டு செல்லுமா இல்லையா என்பதை எதிர்வரும் ஆட்சியும் அதை உள்ளடக்கும் காலமும்தான் நிர்ணம் செய்யும். அல்லது தற்காலிகமான ஒரு பதுங்கல்தானா என்பதையும் அதுவே தீர்மானிக்கவுள்ளது.
ஆனாலும் தற்போது ஆட்சிப் பீடமேறியுள்ள புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து தங்களுடைய தலைவராக உணர்கிறார்கள். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இப்படி உணரப்படும் ஒரு தலைவரை நாடு இப்பொழுதுதான் சந்திக்கிறது.
ஆனால், இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கு அல்லது இது உண்மையான ஏற்புத்தானா என்பதை அறிவதற்கு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வாய்ப்பாகும். அல்லது அனுரகுமார திசநாயக்கவும் NPP யும் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை NPP எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்களப் பகுதி வாக்குகள் மட்டுமல்லாமல், தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களிலும் NPP க்கான ஆதரவு அலை காணப்படுகிறது. குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் NPP யின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையை தமிழ் – முஸ்லிம் தரப்புகளிடம் காண முடியவில்லை.
இது வழமைக்கு மாறான ஒன்றாகும்.
வழமையாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகளுமே செல்வாக்கைப் பெறுவதுண்டு. இது ஒரு பாரம்பரியமாகவே தொடர்ந்து வந்துள்ளது. இந்த நம்பிக்கையில்தான் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தத்தமது தேசியவாத அரசியலை எந்தச் சிரமமுமில்லாமல் மேற்கொண்டு வந்தனர். இதில் அவர்களுக்குச் சற்றுத் திமிரும் இருந்தது. இதனால்தான் “நாம் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் எமது மக்கள் அதற்கு வாக்களிப்பார்கள்“ என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் துணிந்து கூறக்கூடியதாக இருந்தது.
சம்மந்தனுக்குப் பின் வந்தோரும் சம்மந்தனை மறுத்துரைத்தோரும் கூட இந்த எண்ணத்திலிருந்தும் வேறுபடவில்லை. ஒவ்வொருவருக்குமிடையில் போட்டியிருந்ததே தவிர, மாற்றங்களோ யதார்த்தத்தை உணரக் கூடிய திறனோ, மக்கள் மீதான கரிசனையோ இருக்கவில்லை.
இத்தகைய பலவீனங்களிருந்தாலும் தமிழ் மக்கள் தங்களுடைய அடையாளமாகவும் அரசியலாகவும் தமிழ்த்தேசியவாதச் சக்திகளையே ஆதரித்து வந்தனர். இதில் எந்தச் சக்தியையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் வேறு வழி இல்லை என்பதால், திரும்பத்திரும்ப இந்தச் சக்திகளையே ஆதரித்தனர்.
விலக்காக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடிப் பரம்பலுக்கு ஏற்ப சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தத் தடவை இது மாற்றமடையப்போகிறது. வடக்குக் கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் NPP யின் பிரதிநிதிகளாகவே இருக்கப்போகிறார்கள். முன்னரும் ஆட்சியிலிருந்த தரப்பைப் பிரநிதித்துவம் செய்யும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுண்டு. அது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அல்லது அதனுடைய எல்லை மட்டுப்பட்டிருந்தது.
இந்தத் தடவை அது சற்று விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், ஏற்கனவே சுட்டியுள்ளதைப்போல அனுர மற்றும் NPP மீதான நம்பிக்கையாகும். அதாவது மாற்றம் வேண்டும். மாற்றம் நிகழ்த்தப்படும். அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடத்தில் மேலோங்கியுள்ளது. இரண்டாவது, சிங்களத் தரப்பிலும் அரசிடமும் காணப்படுகின்ற நேரடியான இனவாதமற்ற நெகிழ்ச்சி நிலை.
இது தமிழ், முஸ்லிம் தேசியவாத அரசியற் தரப்பினருக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய ஒன்று. சிங்களத் தேசியவாதம் தீவிர நிலையில் இருந்தால்தான் தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் எழுச்சியடையும். பொதுவாகவே தேசியவாதத்தின் கூர்முனை அப்படித்தான் அமைவதுண்டு. எதிர்த்தேசியமே மறு தேசியத்தை கூராக்குவது.
இங்கே சிங்களத் தேசியவாதம் தணிவு நிலைக்கு உள்ளாகியிருப்பதால், அதை முன்னிறுத்தித் தமிழ்த்தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் செயற்படுத்த முடியாதுள்ளது. இந்தத் தணிவு பதுங்குதலா அல்லது மாற்றத்துக்கான தொடக்க நிலையா என்பதில்தான் குழப்பங்களும் கேள்விகளும் நிறைகின்றன.
மெய்யாகவே மாற்றத்தை நோக்கியதாக இந்தத் தணிவு நிலை ஏற்படுமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும். அப்படி நடந்தால் NPP யும் அனுரவும் வரலாற்றில் கொண்டாடப்படும் சக்திகளாகக் காணப்படும் சூழல் உருவாகும். இலங்கைத் தீவும் புதியதொரு நிலையை எட்டும். இலங்கையின் அரசியல் பண்பாடும் போக்கும் சிறக்கும். அது இந்தப் பிராந்தியத்தில் புதியதொரு அரசியற் பண்பாட்டுக்கு வித்திடுவதாகவும் அமையும்.
எனினும் எதையும் உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையும் காணப்படுகிறது. இந்தத் தளம்பல் பல தரப்பிலும் உண்டு.
1. எதிர்கால அரசியலை எப்படி மேற்கொள்வது என்ற கேள்வி NPP யிடம் இருப்பதை உணரலாம். ஏற்கனவே அதனிடம் காணப்பட்ட வேகமும் தீவிரத் தன்மையும் ஆட்சி பீடமேறிய பின்னர் காணப்படவில்லை. அதிரடி அறிவிப்புகளைச் செய்த NPP தற்போது அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சற்று மெதுவான – தணிவான போக்கையே கடைப்பிடிக்கிறது.
இதற்கான காரணத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும். NPP ஒரு முற்று முழுதான புரட்சிகரச் சக்தி அல்ல. புரட்சிகர எண்ணங்களைக் கொண்ட அரசியல் சக்தியெனலாம். அதாவது ஆயுதப்போராட்ட அமைப்பிலிருந்து பரிணாமமடைந்த தேர்தல் வழியான ஜனநாயக அரசியற் சக்தியாகும்.
புரட்சிகரச் சக்தி ஒன்று ஆயுதப் புரட்சி மூலமோ அல்லது மக்கள் புரட்சியின் மூலமோ அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒரு வகை. அப்படிக் கைப்பற்றப்படும் அதிகாரமானது, ஏற்கனவே இருக்கின்ற கட்டமைப்பை உடைத்து (Breaking the structure) அரங்கேறுவது. அல்லது மீறுவதாகும். அங்கே ஏற்கனவே இருந்த விதிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்ப்பட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இடமில்லை. அது முழு அதிகாரத்தின் சுயாதீனத்தைக் கொண்ட எழுச்சியும் ஆட்சியுமாக இருக்கும்.
இங்கே நிகழ்ந்திருப்பது அதுவல்ல. இது ஜனநாயக வழிமுறை மூலமான தேர்தலுக்கூடாக அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கப்பட்டதாகும்.
ஆகவே இந்த மாற்றமும் மாற்றுத் தலைமையும் இன்னொரு வகையானது. இதில் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட அல்லது அவற்றை அனுசரித்த ஒரு ஆட்சியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதைத்தான் செய்ய முடியும். அதற்கமையவே மாற்றங்களும் அதற்கான கால அட்டவணையும் இருக்கும். எதையும் அதிரடியாகச் செய்ய முடியாது. சட்டம், விதிமுறை என்பவற்றுக்குட்பட்டே செயற்படுத்த வேண்டியதாக இருக்கும். அதற்கு அப்பால் மாற்றங்களை நிகழ்த்த வேண்டுமானால் அதற்கு அரசியலமைப்பை (அரசமைப்பை) மாற்ற வேண்டும். அதன்பின்பே மாற்றங்களை முழுமையான அளவில் அல்லது திருப்தியான முறையில் எதிர்பார்க்கலாம்.
இது NPP யின் நிலை என்றால் –
2. தமிழ், முஸ்லிம் தரப்புகள் தம்மை நிலைப்படுத்துவது எப்படி? தமது அரசிலையத் தொடர்வது எவ்வாறு என்ற குழப்பத்திற்குள்ளாகியுள்ளன.
ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல ஒரு Formula அரசியலையே தமிழ் – முஸ்லிம் தரப்புகள் செய்து வந்தன. அதற்குத் தோதாக தெற்கிலும் சு.க அல்லது ஐ.தே.க அல்லது பொதுஜன பெரமுன இருந்தது. இதனால் பழகிய வடிவத்தில் அதிக சிரமம் இல்லாமல் தமது அரசியலை இவை தொடரக் கூடியதாக இருந்தது.
இதை இந்தத் தடவை NPP உடைத்து விட்டது. அது தேசிய அளவில் தன்னை விஸ்தரித்ததால், பிராந்தியத்தில் செல்வாக்கைக் கொண்ட தரப்புகளும் அடிபடும் நிலைக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தரப்பு மிகப் பலவீனப்பட்டுள்ளது. போதாக்குறைக்குத் தமிழ் வாக்குகளைப் பிரிக்கக்கூடிய வகையில் அவற்றுக்கிடையிலான போட்டிகள் நிலவுகின்றன. கூடவே சுயேச்சைக் குழுக்களும்.
உண்மையில் இந்தச் சூழலில்தான் இதை எப்படிக் கையாள்வது அல்லது இந்த நிலை ஏற்படாமல் தடுப்பது என்பதைக் குறித்துச் சிந்திக்கக் கூடிய தரப்புகள் வேலை செய்திருக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையும் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பும் பாராளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே செயற்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அவற்றுக்கு இப்பொழுதான் வேலை. அதாவது பாராளுமன்றத் தேர்தலில்தான் வேலை. ஆனால், கை முந்திச் செயற்பட்டதால் தலைக்கு நாசம் என்ற மாதிரி அவற்றின் வலுக்குன்றி விட்டது.
உண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபையும் தமிழ்த்தேசியக் கட்டமைப்பும் தலையிட்டிருக்கவே கூடாது. அதில் தலையிட்டதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் அவற்றுக்கான இடமில்லாமற்போனது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறக் கூடாது. தமிழ்த்தேசியமும் தமிழ்ப்பலமும் பலவீனப்படக் கூடாது. தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும் என்றுதான் பொதுச் சபையும் பொதுக்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டன. செயற்பட்டன. விளைவாக நடந்திருப்பது என்ன? எதிர்மாறுதானே!
ஆகவே தமிழ் மக்கள் சிதறிப் போகும் நிலையை பொதுச் சபையும் பொதுக்கட்டமைப்பும் உருவாக்கியுள்ளன. இதனுடைய விளைவே பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள அளவுக்கதிகமான போட்டியாளர்களும் தேர்தலில் சிதையப்போகும் வாக்குகளுமாகும். இந்த நிலைக்கு பொதுச் சபையும் பொதுக்கட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும்.
இதனையே – இவ்வாறான ஒரு நிலைமையே உருவாகும் என இந்தப் பத்தியாளர் உட்பட கூர்மையாக அரசியலை நோக்குவோர் பலரும் மிகத் தெளிவாக அப்போது தெரிவித்திருந்தனர். ஆனாலும் அதைப் பொதுச் சபையினரும் பொதுக்கட்டமைப்பும் நிராகரித்தனர். மட்டுமல்ல, இது எதிர்த்தரப்புக்கு – சிங்கள அதிகார வர்க்கத்துக்கு வாய்ப்பை அளிக்கும் எனவும் கூறப்பட்டது. அது யதார்த்தமாகியுள்ளது.
எல்லாவற்றுக்கும் அப்பால் இன்று உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழலானது இலங்கையின் எதிர்கால அரசியலில் புதியதொரு படிப்பினையை நிச்சயமாக அனைத்துத் தரப்புக்கும் தரப்போகிறது. படிப்பினைக்கு அப்பால் நல்லதொரு சூழலை, நல் வாய்ப்புகளைத் தருமாக இருந்தால் அதுவே சிறப்பாகும். நெகிழ்ந்திருக்கும் சிங்களத் தேசியவாதம் தமிழ்த் தேசியவாதத்தின் கூர்முனையை மழுங்கடிக்கும் விதமாகச் செயற்பட்டால் மகிழ்ச்சி. எதிரெதிர்த் தேசியவாதங்களின் உராய்வு முடிவுறுத்தப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. புதிய யுகம் ஒன்று பிறக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அது ஒன்றை ஒன்று மறைப்பதாக இல்லாமல் ஒன்றை ஒன்று மதிப்பதாகவும் எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துவதாகவும் சமநிலை கொள்வதாகவும் இருக்க வேண்டும்.
தமிழ்த்தேசிய அரசியல் பலவீனப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் சரிவுக்குள்ளாகியள்ளது என வரலாற்றுக் கணக்குப் பார்க்க முற்பட்டால், அதனுடைய விளைவுகள் வரலாற்றுத் தவறுகளாக மட்டுமல்ல, நாட்டின் தவறாகவும் ஆகி விடும். நாட்டின் தவறு என்பது ஆட்சியின் தவறுதான்.