BRICS : அநுரவின் அரசியல் பின்கதவு நகர்வும் , சிறுபான்மை மக்களும்…!(வெளிச்சம்: 016)

BRICS : அநுரவின் அரசியல் பின்கதவு நகர்வும் , சிறுபான்மை மக்களும்…!(வெளிச்சம்: 016)

— அழகு குணசீலன் —

 பிரிக்ஸ்: பொருளாதாரத்தில் துரிதமாக முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பு. பொருளாதார மந்தத்தை தனது வரலாற்றில் என்றும் இல்லாதவாறு சந்தித்திருக்கின்ற இலங்கையை இதில் அங்கத்துவம் பெறச்செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விண்ணப்பித்து இருந்தது. ரணிலின் ஏனைய  சில திட்டங்கள் போன்று இதையும் தொடரப்போவதாக அறிவித்துள்ள புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி, ரஷ்யாவில் நடைபெறுகின்ற மாநாட்டிற்கு தூதுக்குழு ஒன்றையும் அனுப்புகின்றது.

மேலெழுந்தவாரியான பொருளாதார நோக்கில் இது முரண்பாடுடையது. ஏனெனில் துரிதமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவருகின்ற ஒரு கூட்டில் வங்குரோத்து விளிம்பில் இருக்கின்ற இலங்கை அங்கத்துவம் பெறுவதும், ரணில் ஆட்சியை பொருளாதார ரீதியாக கடுமையாக விமர்சித்து வந்த அநுர ஆட்சி அதைத்தொடர்வதும் தான் அந்த முரண்பாடு. அமெரிக்க ஆதரவு வலதுசாரி  ரணில் ஆட்சியின் கொள்கை ஒன்றை இடதுசாரி ஆட்சி ஒன்று தொடர்கிறது. இதன் பின்னணியில் உள்ள பின்கதவு அரசியல் என்ன? அது இலங்கைக்கு பெற்றுத்தரக்கைடிய வெளிப்படையாக “பேசாப்பொருளாக” உள்ள இராஜதந்திர பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல்  நலன்கள் எவை? என்ற கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளது. அப்படி நன்மைகள் கிடைக்குமாயின்  அதன் மூலம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கவுள்ள அடைவு என்ன?

இந்த கூட்டின் இலக்கு உண்மையில் அமெரிக்க “எதிரணி” ஒன்றை உருவாக்குதல். அதற்கு ரஷ்ய ஆதரவுடன் சீனா களத்தில் நிற்கிறது. சீனாவும் இந்தியாவும் எதிரும் புதிருமானவை என்றாலும்  உலகமயமாக்க பொருளாதார தத்தம் நலன் சார்ந்து ஒரே மேசையில் அமர்ந்து பேச வேண்டிய நிலையில் உள்ளன. இதனால் சீனா தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நாடுகளை உள்ளிழுத்து தனது பலத்தை பிரிக்ஸ்சில் அதிகரிக்க பார்க்கிறது. அதேபாணியில் இந்தியாவும் தனதுபாட்டிற்கு ஆட்சேர்க்கிறது. இதுதான் இந்தியாவின் வெளிப்படையான இலங்கைக்கான அங்கத்துவ அழைப்பு. இந்தியா இதைச் செய்வதால் இப்போதைக்கு அமெரிக்கா சற்று ஆறுதலடைகிறது. ஆனால் இந்த இலங்கையின் வரவை எதிர்பார்த்து சீனா  கதவுக்கு பின்னால் நிற்கிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாக இப்போது செய்தி வெளியாகி இருக்கிறது. இது பற்றி அநுர ஆட்சி வாய் திறக்கவில்லை. இதன் கசிவு தான் அநுரகுமார ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்தியாவுக்கு அவசர அவசரமாக பலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மேற்கொண்ட வெளிப்படையான பயணம். இதை இலங்கை அணிசேரா நாடாக இருக்கும் என்று கூறி “பலன்ஸ்” (BALANCE) பண்ணப்பார்க்கிறார் அவர். அவர் குறிப்பிட்டதன் அர்த்தம் அமெரிக்கா, ரஷ்யாவை பலன்ஸ் பண்ணுவதல்ல. மாறாக சீனாவையும், இந்தியாவையும் பலன்ஸ் பண்ணுவது.

2009 யூன் 16 இல் பிறந்த பிரிக்ஸ்ஸின் ஸ்தாபக நாடுகளாக பிரேசில், ரஷ்யா, இந்தியா,சீனா, தென்னாபிரிக்கா உள்ளன.  இந்த நாடுகளின் முதல் எழுத்துக்களை கொண்டே ” BRICS” என்ற  இந்த பெயர் சூட்டப்பட்டது. பின்னர் 2024 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபுக் குடியரசு, எகிப்து, ஆஜன்ரினா, மற்றும் எத்தியோப்பியா என்பன இணைந்துள்ளன. இப்போது இலங்கை அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும்  வெனிசுவேலா, கியூபா, வியட்னாம் உள்ளிட்ட சோஷலிச கொள்கை கொண்ட நாடுகளும், மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளும் விண்ணப்பித்துள்ளன. பாலஸ்தீனத்தை கூட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் தொடர்கின்றன.

உலகில் இன்றைய நிலையில் “நாங்கள்” பொருளாதார உற்பத்தி (37%), சனத்தொகை (46%), ஏற்றுமதி(20%) இறக்குமதி நுகர்வுச்சந்தை(19%) என்பன வற்றில் “உங்களுக்கு” சளைத்தவர்கள் அல்ல என்ற செய்தியை மேற்குலகுக்கு சொல்வது இதன் வெளிப்பாடு. ஒரு வகையில் மேற்குலக கட்டுப்பாட்டிலான G7, G8,G20 குழுக்களுக்கு சவாலான இன்னொரு குழு.

அமெரிக்க டொலருக்கு எதிராக ஒரு மாற்று சர்வதேச நாணயத்தை உருவாக்குவதும், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கிக்கு எதிராக புதிய அபிவிருத்தி வங்கி(NDB) ஒன்றை ஸ்தாபிப்பதும் பிரிக்ஸ்ஸின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று.

உலகில் இராணுவ, பொருளாதார, அணுவாயுத சமபலமற்ற, பலமானதும், பலவீனமானதுமான நாடுகளைக்கொண்ட கூட்டுக்களில்/ அமைப்புக்களில் இதுவும் ஒன்று.  ஐ.நா. முதல் பிரிக்ஸ் வரை பலவீனமான, சிறிய நாடுகள் மேலாதிக்க சக்திகளுக்கு பின்னால் போகவேண்டிய நிலையிலேயே உள்ளன. இங்கும் குறிப்பாக இலங்கை, எதிதோப்பியா …. போன்ற நாடுகளின் நிலையும் இதுதான்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேற்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உக்ரைன், பாலஸ்தீன போர்களில்  அவற்றின் முடிவுகளுக்கு பின்னால் ஒத்து ஊதவும், ஓடவும் வேண்டியிருக்கின்றது . 

இந்த அனுபவங்களூடாகவே பிரிக்ஸ்ஸில் இலங்கையின் வகிபாகத்தை நோக்கமுடியும். ஐ.நா. சீர்திருத்தம் பற்றி பேசப்படுகிறது. அப்போது தென்னாபிரிக்கா, இந்தியா, பிரேசில் என்பன ஐ.நா.பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர அங்கத்துவத்தை கோரிநிற்கின்றன.  இதற்கு ஐ.நா. பொதுச்சபையில் போதுமான ஆதரவு தேவை. இந்த பின்னணிகளை எல்லாம் மாலையாக கோர்ப்பதன்மூலமே பிரிக்ஸ்ஸின்  அரசியல், இராணுவ, பொருளாதார பின்னணி நகர்வை மேலும் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்த நிலையில் இலங்கை போன்ற  பொருளாதார, இராணுவ பலம் குறைந்த,  அணுவாயுத பலம் அற்ற  ஆனால் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில்  கேந்திர அமைவிடத்தை கொண்ட ஒரு சிறிய நாடு இவ்வாறான கூட்டுக்களின் மூலம் அடையக்கூடிய நன்மைகள் என்ன? நிச்சயமாக கடன் உதவிகள், வர்த்தக உதவிகள், அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிற்கான நிதியுதவி சிபார்சுகள் மட்டும் தானா? சமாந்தரமாக வர்த்தகம், உல்லாசப்பிரயாணம், போர்க்கப்பல்கள் தரித்து நிற்க துறைமுக வசதிகள், யுத்தம் என்று வந்தால் இலங்கை தளங்களை பயன்படுத்தக்கூடிய வசதிகள் என்று பலவுள்ளன. இந்த உறவுகளுக்கு ஊடாக பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும்  இலங்கை அரசாங்கம் பெறக்கூடிய கைமாறு என்ன? அந்த கைமாறே இந்த பின்கதவு அரசியல்.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு வெளியக விசாரணை, மற்றும் பொறுப்புக்கூறல் ஐ.நா.51/1 பிரேரணையை வழக்கமான சிங்கள, பௌத்த பேரினவாத மகிந்த, கோத்தபாய பாணியில் இடதுசாரி ஜே.வி.பி. /என்.பி.பி. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி நிராகரித்திருக்கிறது. ஐ.நா.பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கான ஆதரவுத்தளம் ஒன்றை ஆயத்தப்படுத்த வேண்டியதேவை இலங்கைக்கு உண்டு. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் “உள்நாட்டு விவகாரம்” என்று சீன வெளியுறவு நிலைப்பாட்டுடன் ரஷ்யாவும் இணங்கி இருக்கிறது. இதன்மூலம் ஐ.நா. பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு வல்லரசுகள் இலங்கைக்கு வலது மற்றும் இடது புறத்தில் இருக்கிறார்கள். 

பிரிக்ஸ் அங்கத்துவத்தின் பின்னர் இனப்பிரச்சினை விவகாரத்தை தொடர்ந்தும் இந்தியா ஊதிப்பெருப்பிக்காது. இந்தியா ஈழத்தமிழர்களை கைவிட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆகக்கூடியது கொழும்புக்கு 13ஐ இடையிடையே நினைவூட்டுவது, யாழ்ப்பாணத்திற்கு ஒற்றுமைப்படுங்கள் என்று ஓதுவதும் மட்டும்தான். தமிழக தொப்புள் கொடி உறவு அறுந்த கனகாலம். இதனால் தான் தமிழ்நாட்டு தமிழீழ ஆதரவாளர்கள் சிவசேனாவையும்,விஷ்வ இந்து பரிஷத்தையும் , இந்துத்துவாவையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இலங்கைத் தலைவர்களுக்கு இருந்த தலையிடி ஒரு துளியும் அநுரவுக்கு இல்லை.  பிரிக்ஸ் குளிசைத் துண்டு எழுதி இந்தியா கொடுத்துள்ளது.

போர்க்குற்ற உள்ளக விசாரணையிலும் “உண்மையை” அறிவது மட்டும்தானாம் . குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லை. ஜனாதிபதி அநுரவுக்கு போர்க்குற்ற உண்மைகள் கடந்த கால ஜனாதிபதிகளை விடவும் அதிகம்தெரியும். மேலும் எந்த உண்மையை தேடப்போகிறார் அநுர. அநுரவின் வெற்றிக்கு இராணுவ சமூகத்தின் வாக்குகள் பெரும்பங்களிப்பை செய்துள்ளன. தனது அரசியல் எதிரிகளை களைவதற்காக ஊழல் விசாரணைகளை துரிதப்படுத்தும் அவர், பாதிக்கப்பட்ட  ஒரு இனத்தின் குரலை கேட்க தயாராயில்லை. கடந்த கால கொலைகள் சிலவற்றை தேர்வு செய்து விசாரணை செய்ய முயற்சிகள் நடக்கிறது. இதில் 1989, 2022 ஜே.வி.பி. கால புத்திஜீவிகளின்  கொலைகள் திட்ட மிட்டு தவிர்க்கப்பட்டுள்ளன. ஷானி அபசேகர என்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுரவின் ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அவருக்காக பிரச்சாரம் செய்தவர். அவரை கொந்துராத்து அடிப்படையில் நியமித்து நிர்வாகத்தில் கட்சி அரசியலை “சுத்தம்” செய்திருக்கிறார்கள்.

இலங்கை வாழ் தமிழ், முஸ்லீம், மலையக மக்களை ஜே.வி.பி. தேசிய இனங்களாக கொள்ளவில்லை.  இந்திய, அரபுலக ஆதரவுடனான ஆக்கிரமிப்பாளர்கள் என்ற ஜே.வி.பி.யின் ஐந்தாவது விரிவுரையில் இருந்து அவர்கள்  இன்னும் இம்மியும் அசையவில்லை. இதைத்தான் ஜே.வி.பி.யின்  பொதுச்செயலாளர்  ரில்வின் சில்வாவின் கருத்து உறுதிப்படுத்துகிறது.”வடக்குக்கு அதிகாரப்பகிர்வு தேவையில்லை, மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு தேடுகிறார்கள்” என்ற கருத்தில் ரில்வின் சில்வா கயிறுதிரித்துள்ளார். இவர்கள் இடதுசாரிகளா? இந்த இடதுசாரிகளை விடவும்  தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கிறது அது அதிகாரப்பகிர்வு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற வலதுசாரிகள், மாகாணசபை முறையை அங்கீகரிக்கின்றவர்கள் பரவாயில்லை.

“நாம் இலங்கையர்” என்பது அழகான நாடு, வளமான தேசத்திற்கு மிகப் பொருத்தமான கோஷம். ஆனால் இதற்குள் மறைக்கப்பட்டுள்ள சிங்கள,பௌத்த பேரினவாத பண்புகள்,குணாம்சங்கள் இல்லாதவரை மட்டுமே. அவற்றில் எந்த அடிப்படை மாற்றமும் இன்றி பௌத்தத்திற்கு முன்னுரிமை, புத்தசாசன அமைச்சு அமைச்சர் விஜயகேரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, சிங்கள மொழிக்கான முன்னுரிமையில் மாற்றம் இல்லை, பௌத்தகுருமார்களின் கால்களில் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் வீழ்ந்ததைவிடவும் நன்கு கூனிக்குறுகி வீழ்கிறார்கள். விளைவு: தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவையில்லை. அவர்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினை.

மார்க்சிய நோக்கில் அடிப்படையில் அனைத்தும் பொருளாதாரநோக்கை கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை. அது ஒரே தேசிய சமூகக் கட்டமைப்பை கொண்ட நாடுகளிலேயே வெற்றியளித்திருக்கிறது(?).

இலங்கையில் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் முதலில் தங்களை அவர்களின் அடையாளம் சார்ந்து பெரும்பான்மை இனத்திற்கு சமமான உளவியல் உணர்வை பெறவேண்டும். அது ஏற்படுவதற்கு அதிகாரப்பகிர்வும் அவசியமானது. அதிகாரத்தை சிங்கள தரப்பு மட்டும் வைத்துக்கொண்டு அது மற்றைய சமூகங்களுக்கு பங்கிடப்படமாட்டாது என்ற கருத்து “நாம் இலங்கையர்” என்ற உணர்வை ஏற்படுத்தாது. 

எப்படி சிங்கள தேசத்தில் அரசியல் அதிகாரத்தின் ஊடாக மக்களின் சமூக, பொருளாதார அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறதோ அதே போன்று வடக்கு, கிழக்கு,மலையகத்திலும் அரசியல் அதிகாரத்தின் பகிர்வு  ஊடாக அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும். அதை மறுத்து அதிகாரம் எங்களிடம் இருக்கும் அபிவிருத்தியை செய்து தருகிறோம் என்பது அடக்குமுறையின் வெளிப்பாடன்றி வேறில்லை.

கொழும்பு நிர்வாத்தின் நிர்வாக முகவர்கள் ஊடாக முல்லைத்தீவுக்கு ரோட்டும், யாழ்ப்பாணத்தில் கண் சந்திரசிகிச்சையும்,பாஸ்போர்ட்டும் செய்யக்கூடியதாக இருந்தால் அதுதான் மக்களின் அபிலாஷை என்பது வேடிக்கையானது. சாதாரண தமிழ்,முஸ்லீம் மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லை என்றால், அதே சாதாரண சிங்கள மக்களுக்கு அந்த அதிகாரங்கள் எதற்கு? அங்கும் அதிகார வர்க்கம் தான்  தனக்காக தற்போது ஆட்சியை பெற்றிருக்கிறதா? இந்த முன்னறிவிப்புகள் அனைத்தும் புதிய அரசியலமைப்பு ஒன்று வந்தால் அதில் மாகாணசபை முறை முற்றாக நீக்கப்படும் என்பதற்கான கட்டியம். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நிறைவேற்று அதிகாரம் தனி நாட்டை, சமஷ்டியை, ஏன் கிழக்கு மாகாண மக்களின் விருப்புக்குமாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் வடக்கும், கிழக்கும் தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை அங்கீகரித்து,அதை அவர்கள் அதிகாரப்பகிர்வினூடாக நிர்வகிக்கின்ற வாய்ப்பை வழங்காத வரை, “நாம் இலங்கையர்” என்பது சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல். சிறுபான்மை தேசிய இனங்களின் அடையாளங்களை மறுதலிப்பது. தேத்தண்ணிக்குள் போடும் சீனி போன்று சுய அடையாளங்களை மறைத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தினுள் கரைந்துவிடுங்கள் என்று கட்டளையிடுவது.இந்த இலக்கை அடையவே ஜே.வி.பி. புதிய அரசியலமைப்பு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கு விடப்படும் என்ற கதையையும் விட்டிருக்கிறது.

பிரிக்ஸ் அங்கத்துவம் இந்தப் பாதையில் பயணிப்பதற்கான தடைகளை அநுர ஆட்சிக்கு நீக்குவதாக அமையப் போகிறது. சொந்த நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள சீனாவும், இந்தியாவும் இனிவரும் காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கப்போகின்றன.சிறுபான்மை தேசிய இனங்களுக்கான அடையாளங்களை நிராகரித்து, பெரும்பான்மை இனத்திற்கான அடையாளங்களை பேணும், பாதுகாக்கும் ஆட்சியைத்தவிர சிறுபான்மை மக்கள் ஜே.வி.பி.யிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.