தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள்

தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள்

— கருணாகரன் —

பாராளுமன்றத் தேர்தல் தமிழ்பேசும் சமூகங்களைத் தடுமாற வைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதையும் விட தேசிய மக்கள் சக்திக்கான (NPP அல்லது AKD) ஆதரவு அலை அதிகமாகக் காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் தேசிய மக்கள் சக்தி (NPP அல்லது AKD) யைப் பற்றியே பேசுகிறார்கள். “மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பளித்தால் என்ன?“ என்று கேட்கிறார்கள். 

இது தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சற்றும் எதிர்பார்த்திருக்காத நிலையாகும். இப்படியொரு பேரலை வந்து தம்மைத் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த அதிர்ச்சி இரண்டு வகைப்பட்டது. ஒன்று, தேசிய மக்கள் சக்தி என்பது இடதுசாரித்தனமுடையது என்பதால், அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம். ஏனென்றால் தமிழ்ப் பெருந்திரளுக்கு இடதுசாரிகள், மாக்ஸிஸ்டுகள் என்றால் எப்போதுமே சற்றுக் கசப்பும் இளக்காரமுமுண்டு. அதனால் இடதுசாரிகளைத் தள்ளித் தூரத்தில் வைத்துக்கொள்வார்கள். அதை மீறித் தேசிய மக்கள் சக்தியின் பக்கமாக மக்கள் திரும்புவதை எப்படி ஏற்றுக் கொள்வது, அனுமதிப்பது என்ற சிக்கல். 

இரண்டாவது, தேசமாகத் திரள்வோம், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவோம், தமிழ்த் தேசியக் கூட்டுணர்வை திரட்டுவோம் என்பதற்கு மாறாக – அதை விட்டு விலகி, தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரள்வது. 

இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் – எதிர்ப் பரப்புரையைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றன தமிழ்த்தேசியத் தரப்புகள். 

இப்போதுள்ள நிலையில் வடக்குக்கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கும் தமிழ்த்தரப்புகளுக்குமிடையில்தான் போட்டி. அதிலும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில்தான் தேசிய மக்கள் சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி – தமிழ்த்தேசியத் தரப்புகள் ஆகியவற்றுக்கிடையிலான முத்தரப்புப் போட்டியுண்டு. இந்தப் போட்டிக் களத்தைச் சமாளித்து வெற்றியடைவதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகளிடத்தில் எந்தக் கைப்பொருளுமில்லை. மெய்ப்பொருளும் கிடையாது.  

இதேவேளை தேசிய மக்கள் சக்தியும் எதிர்பார்த்திராத ஒரு ஆதரவு நிலையை வடக்குக் கிழக்கில் பெற்றுள்ளது. அது வடக்குக் கிழக்கில் தன்னுடைய செல்வாக்குப் பரப்பைச் சரியாக விரிக்காமலே, தன்னுடைய வேலைத்திட்டங்களையும் ஆட்களையும் உருவாக்காமலே பெறுகின்ற ஆதரவாகவும் வெற்றியாகவும் இருக்கப்போகிறது. 

இதற்குக் காரணம், கேள்விக்கிடமில்லாத வகையில் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் நடத்திய பொய் (மாயை) அரசியலின் விளைவேயாகும். தமிழ்த்தேசியவாத சக்திகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பை அளித்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், அதை தமிழ்த்தேசியவாத சக்திகள் வேறுவிதமாக உணர்ந்திருந்தன. 

தேசிய மக்கள் சக்தியை விட அரச ஆதரவுத் தரப்புகளான ஐ.தே.க அல்லது பொதுஜன பெரமுன அல்லது சு.க போன்றவைதான் தமக்குச் சவாலாக இருக்கும் என. அல்லது, அவற்றின் ஏஜென்டுகளாகத் தொழிற்படும் தமிழ்ச் சக்திகளே  தமிழ்த்தேசிவாத சக்திகளுக்குப் போட்டியாக இருக்கும் என. என்பதால்தான் அவை முன்னேற்பாடாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த முற்பட்டதாகும். 

இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறாகி விட்டது. அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத, கையாளவே முடியாத கட்டத்துக்குச் சென்று விட்டது. இனி நடப்பதைக் காண வேண்டியதுதான் என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது.  

இந்த நிலைக்குக் காரணம், 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி) அதிலிருந்து பிரிந்து சென்ற பிற தரப்பினரும் மக்களுக்கான அரசியலைச் செய்யவே இல்லை. இவை செய்ததெல்லாம் அரச எதிர்ப்பை மையப்படுத்திய வெறும் வாய்ச்சவாடல் அரசியல்தான். அடுத்தது, தமக்கிடையிலான உள்மோதல். 

வாய்ச்சவாடல் அரசியலை தேர்தற் பரப்புரை தொடக்கம் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றம் வலையில் தொடர்ந்தனர். போதாக்குறைக்கு ஊடக அறிக்கைகளிலும் ஊடகச் சந்திப்புகளிலும் அவற்றை நிகழ்த்தினர். அதற்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் இவற்றின் பங்கேற்பு குறைவு. அல்லது இல்லை எனலாம். தொடக்கத்தில் சில போராட்டங்களில் தலையைக் காட்டினார்கள். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டம், மீள்குடியேறும் மக்களுடைய போராட்டம் (வலி வடக்கு – கேப்பாப்பிலவு) நில அளவீட்டுக்கு எதிரான போராட்டம், அரசியற் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், நில அபகரிப்பு – பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றில்.

இது கூட சம்பிரதாயமான எதிர்ப்பாக – பங்குபற்றுதலாக –  இருந்ததே தவிர, இவற்றைத் தீவிரப்படுத்தி, மக்கள் போராட்டமாக எந்தச் சக்தியும் முன்னெடுக்கவில்லை. அதற்கான உழைப்போ, அர்ப்பணிப்போ எந்தத் தரப்பிடமும் இருக்கவில்லை. எந்த அரசியல்வாதியும் போராட்டங்களின் அடையாளமாக முகிழ்க்கவில்லை.

இதனால் இவர்கள் தேர்தற் காலங்களில் முன்மொழிந்த எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக்காண முடியாமற்போய் விட்டது. பதிலாகப் புதிய பிரச்சினைகள் உற்பத்தியாகின. 

ஆக எதிர்ப்பு அரசியல் என்பது சனங்களுக்கு நெருக்கடியைத் தரும் ஒன்றாக மாறியதே தவிர, அரசுக்கு அது எந்த நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் வழங்கவில்லை. 

மட்டுமல்ல, இந்தத் தரப்புகள் சொன்னதைப்போல பிராந்திய சக்தியாகிய இந்தியாவையோ சர்வதேச சக்திகளான சீனா மற்றும் மேற்குலகத்தையோ வென்றெடுக்கவும் இல்லை. சீனாவுடன் தமிழ்த்தேசியத் தரப்புகள் நேரடியாகவே மோதிக்கொண்டன. 

எனவே எதிர்ப்பு அரசியலில் மக்கள் ஏமாற்றமே அடைந்தனர். அதாவது தமிழ்த்தேசிய அரசியலில் சலித்தனர். யாரை நம்புவது? யாரை ஏற்றுக் கொள்வது? என்று பகிரங்கமாகவே பலரும் சொல்வதைக் கேட்கலாம். மாற்றுத் தெரிவுகள் இல்லை என்ற நிலையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் தெரிவு செய்தனர் – ஏற்றனர். 

இனியும் அதைச் செய்ய முடியாது என்பதே மக்களின் இன்றைய நிலைப்பாடாகும். 

ஆனால், இதைக் கவனத்திற் கொள்ளத் தயாரற்ற தமிழ்த்தேசியவாதச் சக்திகள், இன்னொரு நிலையில் இதை – இந்தப் பலவீனத்தை  – மறைத்துக் கொள்வதற்கும் தமக்கிடையில் அதிகாரத்தை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் தமக்குள் மோதிக் கொண்டன. இதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் இது வளர்ச்சியடைந்து இரண்டு அணிகளாகத் தோற்றம் கொண்டது. ஒரு அணி அரச சார்பு அல்லது மென்னிலை அரச எதிர்ப்பு அணியாகவும் மறு அணி அரச எதிர்ப்பு – தீவிர அணியாகவும் மாறியது. அதற்குள்ளும் உப அணிகள் உண்டு. ஆனாலும் இரண்டு வகையான போக்குகளே பெரிதாக அடையாளமாகின. 

சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரச ஆதரவாளர்களாக – துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். மறு தரப்பினர் தம்மைத் தியாகிகளாகக் காட்ட முற்பட்டனர். ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தக் காட்சிப்படுத்தல்தான் நடந்தது. ஏன் இப்போதும் அப்படியான ஒரு தோற்றப்பாட்டை முன்வைத்தே தமிழ்த்தேசியவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. 

ஆக எப்போதும் கதாநாயகன் – வில்லன் என்ற வகையிலான அரசியலையே தமிழ்த்தரப்பு முன்னெடுத்தது.

1.    தமிழ்த்தேசியவாதத் தரப்பு எதிர் அரசு மற்றும் சிங்களத் தேசியவாதம். 

2.    அரச ஆதரவுத் தமிழ்த்தேசியம் அல்லது மென்னிலைத் தமிழ்த்தேசியம் எதிர் தீவிர நிலைத் தமிழ்த்தேசியம். 

இதைச் சூடேற்றும் அரசியல் எனலாம். அதாவது எப்போதும் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தம்மை – தமது குரலைப் பேசுபொருளாக (விவாதப் பொருளாக) வைத்துக் கொள்வதே இதனுடைய உத்தியாகும்.

இதனால் என்ன பயன் விளைகிறது என்பதையிட்டு இவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. எத்தகைய அக்கறைகளும் இருந்தது கிடையாது. 

இதனால்  இதற்கு அரசியற் பெறுமானங்கள் எதுவும் இல்லை. என்பதால்தான் மக்கள் இவற்றை – இவர்களை நிராகரிக்க முற்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் கண்முன்னே பிரமுகர்களாகி வளர்ச்சியடைந்தனர். சொத்துகளைச் சேர்த்தனர். உலகச் சுற்றுப்பயணங்களைச் செய்தனர். இறுதியில் சாராயக்கடைகளை அரசிடம் சலுகையாகப் பெற்று அதை விற்பனை செய்வது வரையில் சென்றனர். 

பதிலாக இனவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளும் மக்களும் வரவரப் பலவீனப்பட்டனர். ஒருசாரார் இது சரிப்படாது என உணர்ந்து நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தனர் – புலம்பெயர்ந்து  கொண்டுள்ளனர். 

இவையெல்லாம் மக்களுக்குக் கடுமையான ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தின. இதனால் இந்தச் சக்திகளின் மீது சனங்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த வெறுப்பை தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது. இன்னொரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த ஆதரவைப் பெறும் நிலை உண்டு. 

ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அது மட்டும்தான் தமிழ் பேசும் சமூகங்களை வெளிப்படையாக ஆதரித்தும் அரவணைத்தும் செல்லும் தரப்பாக தற்போதுள்ளது. அதனால், அதற்கும் ஒரு ஆதரவுத் தளம் காணப்படுகிறது. சற்றுச் சிந்திக்கக் கூடியவர்கள், தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஆதரவை அளிப்பது அதனைக் கேள்விக்கிடமில்லாத வகையில் பலப்படுத்தி, அதிகாரத்தின் உச்சத்துக்குக் கொண்டு போய் விடும். அதற்குப் பிறகு, அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய பலமோ வல்லமையோ நாட்டு மக்களுக்கு இல்லாமற் போய் விடும். ஆகவே அதைச் சமனிலைப்படுத்தக் கூடிய அளவுக்கு ஒரு பலமான எதிர்க்கட்சி (கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை) வேண்டும் என்று கருதுகிறார்கள். 

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதேயாகும். ஏனெனில், வரலாற்றில் எப்போதும் கேள்விக்கிடமில்லாத அதிகாரம் விளைக்கின்ற அநீதி எளிதாக இருப்பதில்லை. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னே முற்போக்கு – ஜனநாயக சக்திகளாகத் தம்மைக் காட்டிக் கொண்ட தரப்புகள், அதிகாரக் கட்டிலில் ஏறிய பின்னர் நடந்து கொண்ட கசப்பான வரலாற்று அனுபவங்கள் ஏராளமுண்டு. 

என்பதால் சமனிலைப்படுத்தக் கூடிய ஒரு தேர்வை மக்கள் செய்ய வேண்டும். அதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகள் மட்டுமல்ல, முஸ்லிம் தேசியவாதக்கட்சிகளிடத்திலும் பலவீனமான நிலையே உண்டு. ஆகவே இதையெல்லாம் கடந்து ஒரு வலுச் சமநிலையைக் காணக்கூடிய அரசியற் தெரிவை மக்கள் செய்வதற்கு யார் வழிகாட்டுவது? 

அது நாட்டுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும். அதுவே தமிழ் மக்களுடைய – அவர்களுடைய தேசிய இருப்புக்கும் உதவும்.