செப்டம்பர் 21 : பழையவரே…புதியவரா..? (வெளிச்சம்:008)

செப்டம்பர் 21 : பழையவரே…புதியவரா..? (வெளிச்சம்:008)

 — அழகு குணசீலன் —

இலங்கையின் தேர்தல் களம் முன் எப்போதும் இல்லாதவாறு முன்னணி ஐந்து வேட்பாளர்களுக்கும் இடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. களநிலவரத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு எதிரும் புதிருமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஆனால் இந்த “மாற்றம்” மாற்றத்தை வேண்டுகின்ற கட்சிகளின் விருப்புக்குமாறாக  “மாற்றத்திற்கு” பதிலாக ஒரு “தொடர்ச்சியை” நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகின்றது.  முறைமை மாற்றம் என்ற பெயரில் இடம்பெற்ற காலிமுகத்திடல் வன்முறைகளுக்கு மக்கள்  “தொடர்ச்சி” என்று பதிலளிக்க போகிறார்களா? என்று எண்ணத்தோன்றுகிறது.

அவர் புரட்சிகர அமைப்பு ஒன்றின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர்.

அந்த ஆயுதப்போராட்ட காலத்தில் வெடிகுண்டு பரிசோதனையில் ஒரு கையை இழந்தவர்.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் ஏழாவது எதிரி.

பொடி அதுல என்பது அவரின் இயக்கப்பெயர்.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் செய்த முதல் வேலை ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறியது தான்.

1971 கிளர்ச்சி தொடர்பாகவும், ஜே.வி.பி. தொடர்பாகவும் இதுவரை எழுதப்பட்டுள்ள நூல்களில் இவரது நூலே முதன்மையானது என்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

அவர்தான் சர்வதேசம் அறிந்த அரசியல் ஆய்வாளர், பத்தியாளர்  விக்டர் ஐவன்.

விக்டர் ஐவன் ஜே.வி.பி.யின் தவறான தலைமைத்துவம்,  இளைஞர்களுக்கான தவறான திசைகாட்டல் , இளைஞர்கள் மீது அவர்கள் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற வன்முறைகள் குறித்து விலாவாரியாக தனது அனுபவத்தை அந்த நூலில் தருகிறார்.

சமூக விஞ்ஞான மானிடவியல், உளவியல் நோக்கில் வன்முறையை கையில் எடுப்பது தோல்வியின் வெளிப்பாடு. தோற்றுப்போவோமோ என்ற உள்மன அச்சம்.ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஜே.வி.பி.க்கு சாதகமாக இல்லை. இதனால் மெல்ல மெல்ல வன்முறை நோக்கி நகர்கிறது ஜே.வி.பி. 

அண்மையில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் கூட்டத்திலும் ஜே.வி.பி.யினர் நடந்து கொண்ட விதம் விக்டர் ஐவனின் எழுத்தை மட்டும் அன்றி, தோல்வியின் அச்சம் குறித்த பதற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.  ஜனவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் சோஷலிச முற்போக்கு முன்னணி மாணவர்களுக்கு எதிராக ஜே.வி.பி. வன்முறையில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி இழுத்து மூடப்பட்டுள்ளது. இது மற்றைய பல்கலைக்கழகங்களுக்கும் பரவ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் கூட்டத்தில்   அதன் முக்கியஸ்தர் ஜே.வி.பி. பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஆயுதங்களுடன் புகுந்து  அட்டகாசம் செய்திருக்கின்றனர் ஜே.வி.பி.யினர். எதிர்வரும் தேர்தல் தோல்வி குறித்த உளவியல் அச்சம் அவர்களை நிதானம் இழக்கச்செய்கிறது – நிலைகுலையச்செய்கிறது. 

ஜனாதிபதி தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புக்களை நாம் முற்றாக ஏற்க வேண்டியதில்லை. அதேவைளை அவற்றை எடுத்த எடுப்பில் முற்றாகவும் நிராகரிக்கவும் முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அநுரகுமார, சஜீத் என்று இருந்த களநிலை ரணில், நாமல், அரியம் ஆகியோரின் பிவேசத்தின் பின்னர் அடிப்படையில் மாறியிருக்கிறது.  “மாற்றத்தை” வேண்டியவர்கள் இதை எதிர்பார்த்து இருக்கவேண்டும், அப்படியொரு நிலையில் செய்ய வேண்டிய நேர்மையான தேர்தல் யுக்திகள் என்ன? என்பதை அடையாளம் கண்டிருக்கவேண்டும் .   ஜே.வி.பி.இறுதி தேர்தல் யுக்தி வன்முறையும், இன, மத வாதமும் என்று திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பவேண்டியுள்ளது.

அநுரகுமார திசாநாயக்க, சஜீத் பிரேமதாச ஆகியோரின் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அநுர    ++ சஜீத்.  ++     ரணில் 

மார்ச் 2024:

41 வீதம்—39 வீதம் —12 வீதம் 

யூலை 2024:

37 வீதம்.—36. வீதம்.—22 வீதம் 

ஆகஸ்ட் 2024:       

36 வீதம்.—32 வீதம்.—28 வீதம் 

தேர்தல் களம் சூடுபிடித்த கடந்த ஒரு மாதத்தில் (செப் 2. வரை)  அநுரவுக்கு ஒரு வீத வீழ்ச்சியும், சஜீத்துக்கு நான்கு வீத வீழ்ச்சியும் ஏற்பட ரணிலின் ஆதரவு குறிப்பிடத்தக்க வகையில் ஆறு வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இருந்து நோக்கினால் அநுரவுக்கு ஐந்து, சஜீத்துக்கு ஏழு வீதமான ஆதரவு குறைந்துள்ளது. ஆனால் ரணிலுக்கு பதினாறு வீதம் அதிகரித்துள்ளது. இது ஒன்றும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. நாமல் ராஜபக்ச, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவில்லை என்றால் இப்போதே இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதை ஓரளவுக்கு உறுதியாக சொல்லக்கூடியதாக இருக்கும்.

உண்மையில் அரியநேந்திரனின்  நேரடி போட்டி வேட்பாளர் சஜீத் அன்றி வேறு எவரும் அல்ல. தமிழரசுக்கட்சியின் குழப்பமான முடிவு சஜீத்தின் வாக்குகளை அதிகரிக்காது அரியநேத்திரனின் வாக்குகளை அதிகரிக்கிறது. இதனால் ஒப்பீட்டளவில் அதிக நன்மையடைபவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். ரணிலின் இந்த எதிர்பாராத பாய்ச்சலுக்கு களநிலையில் பல காரணங்களைக் கூற முடியும்.

* இதுவரை யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்காத வாக்காளர்கள் தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகளுக்கு பின்னர் முடிவுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

*  சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவர்களின் முக்கிய பாரம்பரிய கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படும் என்ற நிலை இன்று இல்லை.  ஏனெனில் தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் பிரிந்து நிற்கின்றன.

* இந்த தேர்தலின் முக்கியத்துவம் பொருளாதாரம் சார்ந்தது. இலங்கையின் எதிர்காலம் குறித்தது. இது விடயத்தில் “நற்சான்றிதழ்” ஒன்றை இதுவரை தான் என்ன செய்தேன், இன்னும் என்ன செய்வேன் என்பதை ஆதாரத்துடன் முன்வைக்க கூடிய ஒரேயொரு வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உள்ளார்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் இதனை அனுபவ ரீதியாக கண்டுள்ளனர்.

*    கடந்த பதிவில் குறிப்பிட்டது  போன்று பொதுவேட்பாளர் பெறும் வாக்குகள்  சஜீத்துக்கு ஏற்படுத்தும் நட்டமே அன்றி மற்றையவர்களை அது பாதிக்காது. தமிழ் பிரதேசங்களில் சஜீத்தின் பிரச்சார கூட்டங்கள் இரத்துச் செய்யப்படுவது இதன் வெளிப்பாடுகளில் ஒன்று.

* அநுரகுமாரவின் அச்சுறுத்தல்  அதை அவர் யாழ்ப்பாணத்தில் விடுத்திருந்தாலும் அது  மலையகத் தமிழர்கள் உட்பட ஒட்டு மொத்த தமிழர்களுக்குமானதே. இது குறித்து முஸ்லீம் சமூகமும்  உஷார் அடைந்துள்ளது. அநுரவின் இவ் இனவாத கருத்து குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் தென்னிலங்கையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சுமந்திரன் அநுரவுக்கு வாக்காலத்து வாங்கி சஜீத்துக்கும், அநுரவுக்குமான வாக்கை குறைத்துள்ளார். சுமந்திரன் மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்த மக்கள்  அரியநேந்திரனை அல்லது ரணிலைத்தான் தேடுவார்கள்.

* சஜீத்துக்கான இந்திய ஆதரவும், அநுரவுக்கான சீன ஆதரவும் வாக்காளர் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாயாவை  நினைவுபடுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், அமெரிக்க ஆதரவுடனான ரணில் பரவாயில்லை என்ற நிலைக்கு வாக்காளர்கள் நாளாந்தம் தள்ளப்படுகிறார்கள்.

* ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம், துணிச்சல், சர்வதேச உறவு, இவை எல்லாவற்றுக்கும் மேலான “பொருளாதார” நிபுணத்துவம் மற்றைய பிரதான வேட்பாளர்களுக்கு ஒரு பற்றாக்குறையாகவே உள்ளது. அதாவது இலங்கையின் இன்றையதேவை வெறும் அரசியல் தலைமைத்துவம் அல்ல. செயற்றிறன் மிக்க ஒரு பொருளாதார நிபுணத்துவ தலைமைத்துவம். இந்த ஆளுமை ரணிலைத்தவிர  வேறு எந்த வேட்பாளர்களிடம் இல்லை.

வடக்க்கிலும், கிழக்கிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் தலைமையிலும்,  இராஜங்க அமைச்சர்கள் சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் தலைமையிலும்  ஏற்பட்டுள்ள மக்கள் திரட்சி தமிழ்த்தேசிய பொதுவேட்பாளருக்கு மட்டும் அல்ல, ரணிலை எதிர்த்து நிற்கும் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும் பெரும்சவாலாக உள்ளது. தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கில் பொதுவேட்பாளரையும், தமிழரசுக்கட்சியின்  சஜீத் ஆதரவு முடிவையும், முன்னணியின் பகிஷ்கரிப்பையும்  தமிழ் மக்கள் நிராகரித்ததாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கு  எதுவும் இல்லை. அதே போன்று வடக்கு கிழக்கு முஸ்லீம் கட்சிகளாக தென்னிலங்கை முஸ்லீம்  தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் குறித்து கணக்கு தீர்க்கும் ஒரு தேர்தலாகவும் இது அமையப் போகிறது.

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஒரு கருத்தை கூறியிருந்தார். அது தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமான ஒரு கருத்து. ” வீச்சு விதைப்பல்ல வெற்றியின் இரகசியம். மாறாக நாற்று நடலே வெற்றியின் இரகசியம் “. வடக்கில் எருமை மாடுகளின் மேல் பெய்கின்ற மழையாக அரசியல் செய்யாது – அதாவது வீச்சு விதைப்பு செய்யாது நாற்று நடல் மூலம் ஒவ்வொருவது வாக்கையும்  சரியாகப்பயன்படுத்துகின்ற அரசியலை ஈ.பி.டி.யும், ரி.எம்.வி.பி.யும் செய்திருக்கிறார்கள். இந்த அறுவடையை வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும், அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கட்டியமாக அது அமையும். 

அரசியல் ஆய்வு என்பது பள்ளி மாணவர்களுக்கான  வினா விடை “பாஸ்ட் பேப்பர்” வகுப்பல்ல .அது ஒரு சமூக விஞ்ஞான பகுத்தறிவு ஆய்வு. இது கற்பனை கதை சொல்வது அல்ல. நடைமுறை ஜதார்தத்தை பேசுவது.சமகால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தர்க்கரீதியாக விவாதித்தல் -விடைதேடல்.

செப்டம்பர் 21 இல்..,….

 அவர்தான் இவரா…..?

இவர்தான் அவரா……?.

ஆக , அவரும்….இவரும்…..ஒருவரா….?