“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 49)

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 49)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

      — செங்கதிரோன் —

 மறுநாள் நன்றாக விடிந்த பின்பும்கூட கோகுலனும் அவனது மைத்துனன் ரவீந்திரனும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. காலைத்தேநீருடன் வந்து கோகுலனின் மனைவி சுந்தரி இருவரையும் தட்டியெழுப்பிய போதுதான் “கும்பகர்ண” நித்திரையிலிருந்து குதித்து எழும்பினார்கள். 

 தேநீரைப் பருகிவிட்டு வீட்டுக்குள்ளேயிருந்து வெளியிலே வந்து வளவைச் சுற்றிப்பார்த்தார்கள். கல்முனையிலிருந்து மட்டக்களப்பு வரை நடந்து வந்த பாதையில் தாம் பார்த்த சூறாவளிச் சேதங்கள் அத்தனையும் அங்கும் அரங்கேறியிருந்தன. முருங்கை மரங்கள் முறிந்து வீழ்ந்தும் மாமரங்கள் அடியோடு சாய்ந்தும் கிடந்தன. வீட்டின் கூரை ஓடுகள் தரையில் வீசப்பட்டு உடைந்து துண்டுகளாகிக் கிடந்தன. அயல் வீடுகளிலும் அதுதான் நிலை. 

 இருவரும் கட்டைக் கால்சட்டைகளை அணிந்து கொண்டு கைகளில் கத்தியுடனும் கோடாரியுடனும் களமிறங்கி வீழ்ந்து கிடந்த மரங்களை வெட்டித் துண்டுகளாக்கி அப்புறப்படுத்தி வளவைத் துப்பரவு செய்யத்தொடங்கினார்கள். வளவெங்கும் சிதறிக்கிடந்த ஓட்டுத் துண்டுகளை அப்புறப்படுத்தினார்கள், வீட்டுக் கூரையில் வானம் தெரியும் படியாக ஓட்டையாகத் தெரிந்த பகுதிகளையெல்லாம் புதிய ஓடுகளாலும் ‘பொலித்தீன்’ துணிகளாலும் பரவி மறைத்தார்கள். வீட்டுக்கிணற்றையும் கூடச்சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. 

 எல்லா வேலைகளையும் கோகுலனும் மைத்துனன் ரவீந்திரனும் இணைந்து செய்தார்கள். கோகுலனின் மாமனார் -மனைவியின் தந்தை-கூடமாட நின்று உதவினார்.

 வேலைகளை முடித்துப் பகலுணவு அருந்திவிட்டு வீட்டின் வரவேற்பு மண்டபத்தில் கோகுலனின் மனைவியின் குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

 இம்முறை அடித்த சூறாவளி பகலில் அடிக்காமல் இரவு நேரத்தில் வீசியது நல்லதாகப் போயிற்று என்றார் கோகுலனின் மாமனார்.

 பகலில் அடித்திருந்தால் பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள்-சந்தைக்கு மற்றும் கடைத்தெருவுக்குச் சாமான்கள் வாங்கச் சென்றவர்கள்-அலுவலகங்களுக்குச் சென்ற அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள்-வைத்தியசாலை உட்பட வேறு இடங்களுக்குப் பல்வேறு தேவைகளுக்காகச் சென்றவர்கள் என்று எல்லோரும் வெளியில் நடமாடியிருப்பார்கள். உயிர்ச் சேதங்களும் காயங்களும் கூடுதலாக ஏற்பட்டிருக்கும். அறுந்து வீழ்ந்த பிரதான மின்சாரக் கம்பிகளில் சிக்கி மேலும் பலர் இறந்திருப்பர். இரவில் என்றபடியால் எல்லோரும் தத்துமது இருப்பிடங்களுக்குள் பாதுகாப்பாக இருந்து விட்டார்கள் என்றார்.

 மாமனாருடனான கோகுலனின் உரையாடல் கோகுலனை ஈர்த்ததால் இதற்கு முந்திய காலங்களில் வீசிய சூறாவளிகள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் சொல்லும்படி தனது மாமனாரைத் தூண்டினான் கோகுலன்.

 கோகுலனின் மாமனார் தான் பிறந்தது 1908 இல் என்றும் இதற்கு முந்திய சூறாவளிகளைப் பற்றிய நேரடி அனுபவங்கள் தனக்கு இல்லையென்றும் ஆனால் தனது தந்தையார் தனக்குப் பின்னாளில் சொன்ன விடயங்களைக் கூறிவைத்தார்.

 கிழக்கு மாகாணத்தில் சூறாவளி அனர்த்தம் இதற்கு முந்தி 1845, 1907, 1911 ஆம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் ஏற்பட்டுள்ளன என ஆண்டுகளை அச்சொட்டாகச் சொன்னார். 1964ஆம் ஆண்டு திருகோணமலையிலும் ஒரு சூறாவளி அடித்தது என்றார்.

 1845 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி பற்றிய தகவல்கள் தனது தந்தைக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. 1907 ஆம் ஆண்டுச் சூறாவளி ‘பெரிய புயல்’ என்றும் 1911 ஆம் ஆண்டுச் சூறாவளி ‘சிறிய புயல்’ என்றும் அழைக்கப்பட்டதாம்.

 1907.03.09 ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட சூறாவளி பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தியது. 64 பேர் உயிரிழந்தனர். சுமார் 38 இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தொழிலாளி ஒருவரின் ஒரு நாள் கூலி இருபத்தைந்து சதம். எனின் ஏற்பட்ட இழப்பினைக் கணக்குப் போட்டுப் பார்க்கலாம். இந்தச் சூறாவளிபற்றி ‘புயற்பாட்டு’ என்ற தலைப்பில் வாய்மொழி இலக்கியமொன்று பிளவருமாறு விளக்குகின்றது.

  அரிதான கல்லடி காத்தமா நகரும் அருகாயிருக்கின்ற நாவற்குடாவும் மண்முனைப் பற்றுமுதல் மற்றுமுளவூரும் மகிழூரும் மாஞ்சோலை வாரிக்கடல் நீரும் களுதாவளை கல்லாறு கண்டியக்கட்டும் கல்முனை கரவாகு சாய்ந்தமருதூரும் காரைதீவு முதல் நிந்தவூர் தானும் ஓலுவில்லு உப்போடை கோளாவில்லு.

 என்று மேற்படி அனர்த்தத்தினால் பாதிப்புற்ற பிரதேசங்கள் பற்றி இங்கு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 

1907 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தச் சூறாவளி பற்றி ஷெய்கு மதார் புலவர் என்பவரும் ‘புயற்காவியம்’ ஒன்றைப் பாடியுள்ளார். இவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர், கண்ணில்லாதவர், வரகவி என்று அழைக்கப்பட்டவர். இப்புயற்காவியத்தில் மரங்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றி பின்வருமாறு பாடப்பட்டுள்ளது.

  “சோலைதரு பனை தென்னை கதலிகமு கன்னாசி சொல்லரிய மாபலா முந்திரி முருங்கை ஆலரசு பூவரசு புளியமரமும் வம்மி அனல் வாகை சமுளை விளா பாலையின மரங்கள்” 

  இவ்வாறு அழிவடைந்த மரங்களைப்பற்றிப் பாடியுள்ளார் . மேலும் ஒரு பாடலில்.

 “சொன்னமரமன்றியே மாடாடு கோழிகள் சொல்லுகிளி வாத்துத்தாரா கொக்குவக்கா அன்னங்கள் கானான் வயற்கோழி ஊர்க்கோழி ஆலா குளுப்பையிவையோடு வெகுபறவை”

 என்று பாடியுள்ளார் . இங்கு அழிந்துபோன பறவையினங்களைப்பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இதுபோன்ற இருபத்தைந்து செய்யுள்களைக் கொண்டதாக இந்தப் ‘புயற்காவியம்’ அமைந்துள்ளது . இந்தப் புயற்காவியத்தின் ஊடாக நாம் அன்றைய சூழ்நிலை பற்றித் தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது . நமது பிரதேசத்தில் தற்போது காணக் கிடைக்காத மரங்கள் பற்றியும் பறவைகள் பிராணிகள் பற்றியும் இந்தக் காவியத்தின் ஊடாக நாம் தெரித்து கொள்ளலாம்.

 முஸ்லிம் புலவர்களைப் போன்றே தமிழ்ப்புலவர்களும் 1907 ம் ஆண்டுச் சூறாவளி பற்றிப் பாடியுள்ளனர். செட்டிபாளையத்தைச் சேர்ந்த புலவர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 22 செய்யுள்களைக் கொண்ட ‘புயலலங்காரம்’ ஒன்றைப் பாடியுள்ளார் . 

  வெள்ள அனர்த்தம் பற்றிய காவியம் ஒன்றும் உண்டு .

 “26.12.1957 இல் இலங்கைத் தீவை மூழ்கடித்த ஏகப் பெரும் வெள்ளப் பிரளயக் காவியம்” என்ற தலைப்பில் திருகோணமலையில் பிறந்து ஒலுவில் பிரதேசத்தில் திருமணம் செய்து மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த புலவர் அப்துஸ்ஸமது ஆலிம் அவர்கள் இதனை இயற்றியுள்ளார். 17.01.1958 இல் இக்காவியத்தின முதலாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பதிப்பு 27.01.1959 இலும் மூன்றாவது பதிப்பு 1963 இலும் வெளியாகியுள்ளது. மேற்படி புலவர் ஒரு நடமாடும் புத்தக வியாபாரி. 44 செய்யுள்களைக் கொண்ட இக்காவியம் வெள்ள அனர்த்தம் பற்றிய முழுவிபரத்தையும் இலகு மொழியில் தெளிவாகச் சொல்கின்றது. 

 “மூழ்கிய வெள்ளமதில் சுவர்களும் இடிந்து. மேலான கோப்பிசமும் தானே சரிந்து. ஆள்கின்ற அவ்வீட்டு மக்களெல்லாரும் அத்தலைந்து திரிகிறாராம் இருக்க வீடுதேடி.

  “வீடிழந்து சுவர்விழுந்து இறங்குவதோர் கூட்டம் வீடுவீடாய்ப் புகுந்துகள வெடுப்பதுவோர் கூட்டம் ஆடுமாடு களையறுத்துப் புசிப்பதொரு கூட்டம். என்றுமுள்ள கள்வருக்கோ அன்று கொண்டாட்டம்”

  “கொடுத்தார் கூப்பனுக்கு இரண்டுபடி அரிசி குறையாமல் தேயிலை சீனி கால் றாத்தல் அடுக்காக கிழங்குகள் வெங்காயம் பருப்பு அத்தனையும் அகதிகட்கு மொத்தமாய்ச் சேர்த்தார்”

   இவ்வாறே தமிழ்ப்புலவரான செட்டிபாளையம் க.உ.சின்னவப்புலவர்’ பெருங்காற்று மழை அம்மானை’ என்ற தலைப்பில் இப் பெரு வெள்ளம் பற்றிப் பாடியுள்ளார்.

 கோகுலனின் மாமனார் இவ்வாறு ஆண்டுகளையும் திகதிகளையும் அச்சொட்டாக நினைவில் வைத்துக் கூறியமையும் காவியங்களின் பாடல் வரிகளைக் குரல் எடுத்துப் பாடிக் காட்டியமையும் கோகுலனுக்கு ஆச்சரியமாகவும் அதேவேளை அரிய பல தகவல்களை அவரிடம் இருந்து பெறக் கிடைத்தமை திருப்தியாகவும் இருந்தது.

 “1957 ஆம் ஆண்டு வெள்ளத்திலதானே உன்னிச்சக் குளம் உடைந்ததெண்டு கத. அது உண்மயா” என்று கேட்டான் கோகுலன்.

 “ஓம்! உண்மதான். உன்னிச்சக் குளம் உடைப்பெடுத்து அதுக்குக் கீழ இருந்த ஊரெல்லாம் தாண்டு போயித்து. பெரிய அழிவுதான் அது. நல்லையா மாஸ்டர்தான் பிறகு உன்னிச்சக் குளத்தத் திருப்பிக் கட்டுவித்தவர். அப்ப அவர் கல்குடாத் தொகுதி எம் பி யா இரிந்தவர்.” என்று அதற்கும் ஒரு விளக்கம் தந்தார் கோகுலனின் மாமனார்.

 இந்த உரையாடலின்போது மாலைத் தேநீரும் காலடிக்கு வந்தது. குடித்துவிட்டு மீண்டும் வளவைத் துப்பரவு செய்யும் மீதி வேலைகளைத் தொடங்கினார்கள்.

 இப்படியாக இரண்டு நாட்களைக் கோகுலன் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் தனது மனைவியின் வீட்டில் கழிக்க வேண்டியிருந்தது. மூன்றாம் நாள் கோகுலன் தன் தாய்வீடு நோக்கி கல்முனைக்குப் பயணத்தைத் தொடங்கினான்.  

 அன்று பகல் கோகுலன் கல்முனையை அடைந்தான். பொதுப்போக்குவரத்து இன்னும் சீரடையவில்லையாததால் அகப்பட்ட வாகனங்களில் ஆங்காங்கே ஏறியும் இறங்கியும் மாறிமாறித்தான் கல்முனையை வந்தடைய வேண்டியிருந்தது.

 கல்முனையை அடைந்ததும் நேரே கல்முனை நீர்ப்பாசன அலுவலகம் சென்றான். அலுவலகம் அரைகுறையாக இயங்கிக்கொண்டிருந்தது. நீர்ப்பாசனப் பொறியியலாளர் ‘மேர்சா’ தனது அறையிலிருந்தார். வேலையாட்கள் சிலர் அலுவலகக் கூரைச் சேதங்களை மேலே ஏறியிருந்து சீர் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் சில வேலையாட்கள் அலுவலக வளாகத்தைத் துப்பரவு செய்துகொண்டிருந்தார்கள். 

 கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த பழைய பாரிய மாமரம் வேரோடு சாய்ந்து கிடந்ததை அப்போதுதான் கோகுலன் முழுமையாக அவதானித்தான். 

 கல்முனை அலுவலகத்தில் தான் கடமையேற்ற 1971 இலிருந்து கடந்த ஏழு வருடங்களாக அலுவலக முற்றத்தில் நின்றுதரிசனம் தந்த அந்தப் பாரிய மாமரம் தரையோடு வீழ்ந்து கிடந்த காட்சி கோகுலனின் நெஞ்சை நெருடியது. அந்த உணர்வுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவனுக்கு அங்கு சக ஊழியர்களிடமிருந்து கிடைத்த செய்தி கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தது. 

 கல்முனை நீர்ப்பாசனப் பொறியியாளர் அலுவலகத்தில் “பியூன் ” ஆகக் கடமைபுரிந்த தம்பிப்பிள்ளை சூறாவளி அடித்த நேரத்தில் கல்முனைக் கடற்கரைப்பக்கம் நின்றிருக்கிறார். 

 காற்று பலமாக வீசத்தொடங்கியதும் பாண்டிருப்பிலுள்ள தனது வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கியிருக்கிறார். சூறாவளிக் காற்று அவரைத்தள்ளிக் கடற்கரை மணலில் வீழ்த்தியிருக்கிறது. எழும்ப முயற்சித்திருக்கிறார். முடியவில்லை. காற்று கடற்கரை மணலை அள்ளிவீசி அவரின் உடலை மூடியிருக்கிறது. எழும்பமுடியாமல் தவித்த அவர் மூச்சுத்திணறியபடி விடியும் வரை விழுந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார். காலையில் அவரது உறவினர்கள் தேடிச்சென்ற போது மண்மூடியபடி முனகிக்கொண்டிருந்திருக்கிறார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்திருக்கிறது. உடனே கல்முனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனாலும் அவரால் உயிர் பிழைக்கமுடியவில்லை. 

 தம்பிப்பிள்ளையோடு தான் ஊடாடிய நினைவுகள் நெஞ்சில் எழுந்து அலை மோத, கோகுலன் நீர்ப்பாசனப் பொறியியலாளர் மேர்சாவின் அறையின் பாதிக்கதவுகளைத் தள்ளிக் கொண்டு நுழைந்தான். 

 கோகுலனைக் கண்டதும் ‘மேர்சா’ “யேஸ் மிஸ்ரர் கோகுலன். வாங்க உங்கட உறவினர்கள் தாய்வீட்டார் மனைவி வீட்டாரெல்லாம் நலமா?” என்று கேட்டார்.

  “உயிர்ச் சேதங்கள் காயங்கள் என்று எவருக்கும் இல்லை. எல்லாருக்கும்போல பொதுவான வீடு மற்றும் பொருட்சேதங்கள்தான்” என்று பதில் சொன்ன கோகுலன், சூறாவளியன்றய தினத்தில் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்தடியில் நடந்த சம்பவங்களையெல்லாம் விலாவாரியாக விபரித்துக் கூறினான். எல்லாவற்றையும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்ட மேர்சா இறந்துபோன வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணனின் மரணம் குறித்துத் தனது அனுதாபத்தை வெளியிட்டார். பின் சிறிது யோசித்துவிட்டு, 

 “கோகுலன் ! உம்மிட பொறுப்பிலுள்ள பிரதேசத்தில சூறாவளியால சேதமடைந்த நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வேலைகளிர விபரங்கள ஒருவார காலத்துக்குள்ள அறிக்கை தரமுடியுமா? ‘ஹெட் ஆபிஸ்’ க்கு அனுப்பிவைக்க வேண்டும்” என்று கேட்டார். 

 “ஓம் சேர்! இரண்டுநாள் கல்முனையில் என் தாயார் வீட்டில் தங்கியிருந்து சூறாவளிச் சேதங்கள சரிப்படுத்தி உதவவேண்டியிருக்கு. அத முடிச்சித்து மூண்டாம் நாள் கோமாரிக்குப் போய் நிண்டு ரெண்டு கிழமைக்குள்ள சூறாவளிச் சேதங்கள அறிக்கயாகத் தாறன் ” என்று சம்மதித்தான். 

 மேர்சா திருப்தியுடன் ‘சரி’ எனத் தலையசைத்தார். 

 அலுவலகத்திலிருந்து வெளியேறிய கோகுலன் நேரே பாண்டிருப்பிலுள்ள ‘பியூன்’ தம்பிப்பிள்ளையின் வீடு சென்று அவரது குடும்பத்தாரைச் சந்தித்து அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்துவிட்டுத் தாயாரின் வீட்டைச் சென்றடைந்தான். 

 சூறாவளிச் சேதங்களின் பாதியளவு சீர் செய்யப்பட்டிருந்தன. அங்கு இரண்டுநாள் தங்கி தம்பி யோகனுடன் சேர்ந்து மீதி வேலைகளுக்கும் உதவிவிட்டுத் திட்டமிட்டபடி மூன்றாம்நாள் காலை கோமாரிக்குப் புறப்பட்டான். 

 கோகுலனின் ‘மோட்டார் சைக்கிள்’ சூறாவளிக்கு முன்னர் கோமாரிக் ‘குவாட்டஸ்’ இல் விடப்பட்டிருந்ததால் கோகுலன் போக்குவரத்துக்கு வாகனமில்லாமல் சிரமப்பட்டான். சிறு தூரங்களை நடையிலே சமாளித்தான்.

 பொதுப் போக்குவரத்துச் சேவை இன்னும் வழமைக்குத் திரும்பாததால் தூரப்பயணங்களுக்கு வாகனங்களைத் தேடுவதும் ஒரு பாரிய வேலையாக வந்து சேர்ந்தது.

 மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து எவ்வாறு அகப்பட்ட வாகனங்களில் ஏறியும் இறங்கியும் மாறிமாறி கல்முனையை வந்து சேர்ந்தானோ அவ்வாறே கல்முனையிலிருந்தும் அகப்பட்ட வாகனங்களில் ஏறியும் இறங்கியும் மாறியும் அக்கரைப்பற்றையடைந்து அக்கரைப்பற்றில் இருந்தும் அவ்வாறே பயணித்து ஒருவாறு அன்று மதியமும் கழிந்து பின்னேரமாகக் கோமாரியை வந்தடைந்தான். காலையில் கல்முனையிலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து எதுவுமே பருகவோ உண்ணவோவில்லை என்பதால் தாகத்துடன் பசிக்களையும் சேர்ந்து கொண்டது.

 கோமாரிப் பிரதேசத்தில் சூறாவளியின் தாக்கங்கள் ஒப்பீட்டளவில் குறைவானதாகவே காணப்பட்டது. கோமாரிக் ‘குவாட்டஸ்’ காவலாளி கதிரேசுவிடம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லித் தாகத்தைத் தீர்த்துவிட்டு தான் கோமாரியில் தங்கியிருக்கும் நாட்களில் சாப்பாட்டை வைத்துக் கொள்ளும் ‘புஸ்பாக்கா’ வீட்டிற்கு இரவுச் சாப்பாட்டிற்கு வருவதாகக் காவலாளி கதிரேசு மூலம் செய்தி அனுப்பினான் கோகுலன். ‘குவாட்டஸ்’ சுக்குள் நுழைந்த முதல் வேலையாகக் கடிதங்களைப் பார்வையிட்டான்.

 சூறாவளியில் சேதமடைந்த நீர்ப்பாசன உட்கட்டமைப்புக்களை அறிக்கையிடும்படியான அறிவுறுத்தற் கடிதமும் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளரால் அனுப்பப்பட்டிருந்தது. இது நல்லதொரு சந்தர்ப்பம். இதனை உச்சமாகப் பயன்படுத்த வேண்டுமென்று எண்ணினான் கோகுலன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதே கனகரட்ணத்தின் அரசியல் அவனுக்குக் கற்பித்திருந்தது.

 தான் பொறுப்பாகவிருந்த சாகாமம் மற்றும் கோமாரிப் பிரதேசங்களில் சூறாவளியினால் நேரடியாகச் சேதமடைந்த நீரப்பாசன வேலைகளை மட்டுமல்ல அப்பகுதிகளில் தூர்ந்து போய்க்கிடந்த கிராமியக்குளங்கள் எல்லாவற்றையுமே உள்ளடக்கிச் சூறாவளியால் சேதமடைந்த நீர்ப்பாசன வேலைகளாகப் பட்டியலிட்டுக் கல்முனை நீர்ப்பாசனப் பொறியிலாளருக்குத் தாமதமின்றி அனுப்பி வைத்தான்.

 மட்டுமல்லாமல், சூறாவளியால் சேதமடைந்ததாகத் தனது பட்டியலில் உள்ளடங்கியிருந்த அத்தனை நீர்ப்பாசன வேலைகளையும் குளங்களையும் உடனே திருத்தும்படியாக அப்பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினரான கனகரட்ணம் நீரப்பாசன அமைச்சரைக் கேட்டுக் கொள்வதைப் போன்ற கடிதங்கள் சிலவற்றைத் தயாரித்துக் கனகரட்ணத்தின் கையொப்பத்தைப் பெற்றுத் தானே முகவரியிட்டு அவற்றைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ‘அரச சேவை’ச் சலுகையின் கீழ்த் தபாலில் அமைச்சருக்கு அனுப்பி வைத்ததுடன் அக்கடிதங்களின் பிரதிகளைக் கொழும்பிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களத் தலைமையத்திலுள்ள நீர்ப்பாசனப் பணிப்பாளருக்கும்-அம்பாறையிலுள்ள அம்பாறை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளருக்கும் தனித்தனியாக அனுப்பி வைத்தான். 

 கோகுலன் தயாரித்துக் கொடுத்த கடிதங்கள் அத்தனைக்கும் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கையில் அக்கடிதங்களை வாசித்துப் பார்க்காமலே கண்ணைமூடிக் கொண்டு கனகரட்ணம் கையொப்பமிட்டார். கையொப்பமிட்ட பின்னர்தான் அக்கடிதங்களின் உள்ளடக்கங்களைக் கோகுலனிடமிருந்து வாய் மொழியால் கேட்டு அறிந்து கொண்டார். பின்,

 “தம்பி! நல்ல வேலை செய்திருக்கிறாய். சூறாவளி அடிச்ச கையோட அதப் பயன்படுத்தி நம்மட பகுதியில தூர்ந்துபோய்க் கிடக்கிற எல்லாக் கிராமியக் குளங்களயும் ஒண்டும் விடாமல் கட்டிப் போடவேணும்” என்றார்.

 கனகரட்ணம் கோகுலனின் பார்வையில் ஓர் அபூர்வமான அரசியல் வாதியாகவே தோன்றினார். தன்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றாரே என்பதும் அவனுக்குப் பெருமிதமளித்தது. 

 கடிதங்களை அனுப்பிவைத்தகையோடு சற்றும் தாமதியாமல் அவற்றிற்குரிய மதிப்பீடுகளையும் தயாரித்துக் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் சமர்ப்பித்தான். அதற்காக இருவாரங்களாக எங்குமே செல்லாது கோமாரியிலே தங்கியிருந்து பகல் முழுவதும் கள வேலைகளுக்கு மோட்டார் சைக்கிளில் ஓடிஓடித் தரவுகளைப் பெற்றும் இரவில் கண்விழித்திருந்து மதிப்பீடுகளையும் வரைபடங்களையும் அறிக்கைகளையும் தயாரிப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் குவித்தான். வேலைகள் மேற்பார்வையார்களான தர்மலிங்கம், தியாகராசா, இலட்சுமணன், யேசுரட்ணம், பிராங்ளின், நமசிவாயம், சண்முகநாதன் அனைவருமே கோகுலனுக்கு உதவினர். இரு வாரங்களாகக் கோகுலன் கல்முனையிலிருந்த தன் தாய்வீட்டுக்கும் செல்லவில்லை. மட்டக்களப்பு முகத்துவாரத்திலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கும் செல்லவில்லை. 

 சூறாவளி அடித்துச் சுமார் மூன்று வாரங்கள் முடியப்போகிறதாகவிருந்தது. சூறாவளி நிகழ்த்திச் சென்ற சேதங்களிருந்து கிழக்குமாகாணம் மெல்லமெல்லத் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை வழமைக்குக் கொண்டு வருவதில் அரசாங்க அதிபர் டிக்சன் நிலவீர தலைமையிலான மட்டக்களப்புக் கச்சேரி நிர்வாகமும் கனகரட்ணம் தலைமையிலான மாவட்ட அமைச்சரின் அலுவலகமும் கைகோர்த்து அர்ப்பணிப்புடன் இயங்கின.

 கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கே டபிள்யு தேவநாயகமும் மட்டக்களப்புத் தொகுதியின் இரட்டைப் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசதுரையும் பரீத் மீராலெப்பையும் பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கணேசலிங்கமும் அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சருமான கனகரட்ணமும் அரசியல் கட்சி பேதங்களுக்கப்பால் காரியமாற்றிக் கொண்டிருந்தனர். 

 வேலைப்பளு காரணமாக நீண்ட நாட்களாகத் தாய்வீட்டிற்கும் மனைவி வீட்டிற்கும் செல்ல இயலாதிருந்த கோகுலன் ஒரு நாள் காலை கோமாரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுக் கல்முனை சென்று தாயைச் சந்தித்து – கல்முனை அலுவலகம் சென்று அங்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் நிறைவேற்றிவிட்டு மதியம் தாயாரிடம் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு பின்னேரமாக மனைவியைச் சந்திப்பதற்காக மட்டக்களப்புக்குப் பயணத்தைத் தொடர்ந்தான். 

 அன்று மாலை மட்டக்களப்பு முகத்துவாரத்தைச் சென்றடைந்த கோகுலனை மனைவி சுந்தரி முகம் மலர்ந்த முறுவலுடன் வரவேற்றாள். 

(தொடரும் …… அங்கம் – 50)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *