சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்.(பகுதி 10)

சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்.(பகுதி 10)

 — அழகு குணசீலன் —

சம்மாந்துறை -வீரமுனை மக்களுக்கு இடையிலான உறவு வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், உள்ளுக்குள் வேறு ஒன்றாகவும் இருந்துள்ளது – இருக்கின்றது. இது 1954 ‘காயங்கள்’ ஆறாத நிலையில் தொடர்ந்த ஓடும் புளியம் பழமும் உறவு. எனினும் இருதரப்பினரும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப ஒருவரை ஒருவர் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

வீரமுனைச்சமூகம் ஒப்பீட்டளவில் அயல் முஸ்லீம் கிராமங்களுக்கு அருகில் வாழும் மற்றைய தமிழ்க்கிராம சமூகங்களை விடவும் சற்று தனித்து ஓடும் இயல்பை கொண்டதாக இருந்தது என்று உள்ளூரார் தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துப்படி அடுத்த பெரிய கிராமமான காரைதீவு தமிழ்க்கிராமத்துடன் கூட சமூக உறவு போதுமானதாக இருக்கவில்லை. இங்கு தமிழர்களுக்குள் தனித்தும், முஸ்லீம்களுக்குள் தொடர்பற்றதுமான ஒரு சமூக வாழ்வியலை நாம் அவதானிக்க உதவுகிறது.

 இந்த  சொந்த, மாற்று சமூகங்களோடு ஒருங்கிணையாது தனித்து நிற்கின்றதற்கான பொறுப்பு மற்றவர்களை சார்ந்ததல்ல அது அவர்களையே சார்ந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு அயல் தமிழ், முஸ்லீம் கிராமத்தவர்கள் ஒரு உதாரணத்தை கூறுகின்றனர். 

இராமக்கிருஷ்ணமிஷன் ஆதரவுடனான ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லம் ஒன்று வீரமுனையில்  திறக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு , இராமக்கிருஷ்மிஷன்  பிரதிநிதிகளுடன் காரைதீவு, சம்மாந்துறை ஊர்களை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். 

கிடைக்கக்கூடிய தகவல்களின் படி சுமார் 500 பேருக்கு உணவு சமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200-250 பேர்வரை நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.ஆனால் 17 பேர் மட்டுமே சாப்பிட்டுள்ளனர். இது ஏன்? என்று கேட்டபோது இராமக்கிருஷ்ணமிஷன் மதம்/ கொள்கை வேறு எங்கள் மதம் வேறு என்று காரணம் கூறப்பட்டுள்ளது. இது ஒரு தவறான நிலைப்பாடு என்பதை சுட்டிக் காட்டி உங்கள் ஊர் பாடசாலைக்கு ஏன்?  இராமக்கிருஷ்ணமிஷன் பாடசாலை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று விழாவுக்கு சென்றவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். உள்ளும்,வெளியும் ஒட்டாத தனித்த உறவுக்கு இதுபோன்ற பல சம்பவங்களையும், நிகழ்வுகளையும் அவர்கள் கூறுகின்றனர்.

வீரமுனையார்  மத்தியில் தங்கள் காணிகளை சம்மாந்துறையார் குறைந்த விலைக்கு  திட்டமிட்டு வாங்குகிறார்கள் என்ற எண்ணம் உள்ளது. இதுபற்றி கேட்டபோது அவர்கள் ஏன் குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்று சம்மாந்துறையார்  கேட்கின்றனர்? அதற்கு வீரமுனை யார் சொல்லும் பதில் வாங்குபவர்கள் தங்களுக்குள் போட்டித்தவிர்ப்பை செய்து அதாவது காணிக்கான கேள்வியை திட்டமிட்டு குறைத்து விலையையும் குறைத்து விடுகின்றனர் என்று கூறுகிறார்கள். மறுபக்கத்தில் வீரமுனையின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் வேறு கிராமங்களைச்சேர்ந்த தமிழர்கள் அங்கு சென்று காணிவாங்கி குடியேறவோ, தொழிலில் முதலீடு செய்யவோ தயாரில்லை. இது ஜதார்த்தம்.

சம்மாந்துறையாரைப்பொறுத்தமட்டில் வீரமுனையார் விரும்பினால் சம்மாந்துறையிலும் காணி வாங்கலாம் என்கிறார்கள். ஆனால் இன்றைய சூழலில் இது எந்தளவுக்கு நடைமுறைச்சாத்தியமானது.? வீரமுனையைச் சேர்ந்த ஒருவர் சம்மாந்துறையில் காணிவாங்கி வியாபார நிலையம் ஒன்றை நடாத்தி வருவதை அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர். இது பெரும்பாலானோரால் சாத்தியமா? என்பது இன்னொரு கேள்வி.

இந்த இருதரப்பு கருத்துக்களையும் தராசில் போட்டு நிறுத்தால் இது இலங்கை முழுவதும் வேறுபட்ட சமூகங்களைக்கொண்ட பெரிய, சிறிய கிராமங்களில் நிலவுகின்ற பொதுவான நிலை. தென்னிலங்கையில் உள்ள சிங்கள, முஸ்லீம், தமிழ் கிராமங்களின் நிலையில் இருந்து இது ஒன்றும் வேறுபட்டதும் அல்ல,  சம்மாந்துறை,வீரமுனைக்கு மட்டுமே உரிய பிரச்சினையும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் பல்வேறு சமூகங்கள் அருகருகே வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் இது பொதுநிலை. இதை பல சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் நிர்ணயிக்கின்றன.

 அதுவும் தனிநபர்களால் முற்று முழுதாக அவர்களின் நலன் சார்ந்து தீர்மானிக்கப்படுகின்ற ஒன்று. இங்கு தனிநபர் பொருளாதாரநலன் முதன்மை பெறுகிறது. இதை இன, மத நல்லுறவின் ஊடாகவும், புரிந்துணர்வின் ஊடாகவுமே கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.

யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்வது பொதுவான பொருளாதார நியதி. இங்கு பொதுநலன் சார்ந்த சமூக நீதியை, நியாயமான விலையை போட்டி சந்தை அமைப்பு முறை ஒன்றில் எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்.

 வரவேற்பு வளைவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பநிலைக்கும் மேற்கூறிய மனநிலைகளும், புரிந்துணர்வு இன்மையும், விட்டுக்கொடுப்பற்ற போட்டி மனப்பான்மையும் காரணம். வளைவு அமைக்கப்பட இருந்த இடம்  “ஆண்டிச்சந்தி” என்று ஆரம்பகாலம் முதல் அழைக்கப்பட்டுவருகிறது. சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த முஸ்லீம் பெரியார் ஒருவர் ஊரவரால் ‘ஆண்டி’ என்று அழைக்கப்பட்டதால் அவர் வாழ்ந்த அந்த இடம் இந்த இடப்பெயரைப்பெற்றுள்ளது. இந்த சந்திக்கு அருகில் ஜமாலியா பெரிய பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தியின் பெயரை ஜமாலியாச்சந்தி என்று பெயர் மாற்றவேண்டும் என்ற கோரிக்கை ஒருதரப்பு முஸ்லீம்களால் முன்வைக்கப்பட்டபோதும் பெரும்பான்மையான சம்மாந்துறை மக்கள் அதை விரும்பவில்லை.  அது அந்த முதியவரின் வரலாற்று மறைப்பாக அமைந்துவிடும் என்று தடுத்து விட்டனர். ஜமாலியாசந்தி என்று மாற்றப்பட்டிருந்தால் அந்தச் சந்தி ஒரு இஸ்லாமிய மத, அரபு மொழி வரலாற்றை கொண்ட தாக மாறியிருக்கும். இந்த விபரங்கள் வீரமுனை தமிழர்களுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை.

இனி, சரியாக வளைவு அமைக்கப்படும் இடத்திற்கு வந்தால், வளைவின் ஒரு கால் தமிழர் நிலத்திலும், மறுகால் அக்பர் முதலாளி எனப்படும் ஒருவரின் தனியார் காணியிலும் நிலையம் எடுக்கப்பட்டுள்ளது என்று அறியக் கிடைக்கிறது. அப்படியானால் இந்த சர்ச்சைக்குரிய விடயம் எவ்வாறு கையாளப்பட்டு  இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. 

இது பொதுப் போக்குவரத்து வீதி ஒன்றிற்கு மேலாக அமைக்கப்படவுள்ள ஒரு கட்டுமானம். இங்கு சம்பந்தப்பட்ட அரச, உள்ளூராட்சி அமைப்புக்களிடம் இருந்து அனுமதி பெற்ப்பட்டதாகவோ, அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதா? அல்லது மறுக்கப்பட்டதா?  என்ற தகவல்கள் எதுவும் இது விடயத்தில் வெளிவரவில்லை. இது நீதிமன்ற விவகாரமாக மாறியிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

இராஜாங்க அமைச்சரின் சம்மாந்துறை விஜயம் குறித்து அவரின் பாதுகாப்பு பிரிவினர் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு வழக்கமான பாதுகாப்பு நடைமுறையில் அறிவித்தார்கள் என்றும், அந்தச் செய்தி அறிந்து பொலிஸ் அதிகாரி தன்னிச்சையாக செயற்பட்டு ஒரு தடையுத்தரவை பெற்றார் என்பதுமே வெளிவந்த தகவலாகும். இங்கு வீரமுனை மக்கள் வளைவு நிர்மாணத்திற்கான முறையான அனுமதியை பெற்றிருந்தும் பொலிஸார் தடுத்தனரா? அல்லது அனுமதி பெறப்படாததால் தடுத்தனரா?  

இப்போது ‘வளைவு’ நீதிமன்றத்தில் பிணை எடுப்பது யார்?  இரு சமூகங்களுக்கு இடையிலான உடன்பாடின்மையை சட்டம் தன் அதிகாரத்தை கொண்டு தீர்ப்பு சொன்னாலும் அருகருகே வாழ்கின்ற இரு சமூகங்களும்  தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இணக்கமின்றி  நிரந்தர தீர்வை காணமுடியாது. சட்டரீதியான நீதியும், நியாயமும் எங்கும், எப்போதும் சமூகங்களுக்கு இடையே சமாதானத்தை தருவதில்லை. சட்டங்கள் சமூக முரண்பாடுகளை வளர்த்த வரலாறே இலங்கையின் சமூகங்களுக்கு இடையிலான வரலாறு……

இன்னும் வரும்…..!