சாம்பல் மேட்டு அரசியல்!

சாம்பல் மேட்டு அரசியல்!

— கருணாகரன் —

இரண்டு நாட்களுக்கு முன், நாம் வழமையாகச் சிற்றுண்டி வாங்கும் கடைக்குச் சென்றேன். சமூக நிலவரங்களை அறிவதற்காகப் பொதுவாகவே நான் பல்வேறு தரப்பினரோடும் உரையாடுவது வழக்கம். இது தேர்தல் காலம் வேறு. என்பதால், “தேர்தலைப் பற்றிச் சனங்கள் என்ன சொல்லுகினம்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். 

“ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிக் கதைக்கினம். கொஞ்ச நாளுக்கு முதல்ல சஜித்துக்கும் ஜே.வி.பி (அநுர) க்கும்தான் போட்டி எண்டமாதிரிக் கதையிருந்துது. இப்ப ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டிபோலக் கிடக்கு” என்றார். 

“ஏன் அநுரவுக்கும் செல்வாக்கு இருக்கெண்டுதானே வெளியில கதையிருக்கு?” என்றேன்.

“அதைப்பற்றிச் சரியாத் தெரியாது. ஆனால், நம்மட்ட வாற ஆக்கள் ரணிலைப்பற்றியும் சஜித்தைப் பற்றியும்தான் கதைக்கினம்” என்றார். 

“அப்பிடியெண்டால் நீங்கள் என்ன முடிவில இருக்கிறியள்?” எனக் கேட்டேன்.

“இன்னும் நாட் கிடக்குத்தானே! பொறுத்துப் பாப்பம்” எனச் சொன்னார்.

நானும் விடவில்லை. “தமிழ்ப்பொது வேட்பாளர் எண்டு ஒருத்தர் நிறுத்தப்பட்டிருக்கிறாரல்லோ! அதைப்பற்றி ஆட்கள் என்ன கதைக்கினம்? நீங்கள் என்ன சொல்லுறியள்?” தொடர்ந்து கேட்டேன்.

“அதைப்பற்றிச் சிலர் கதைக்கினம்தான். ஆனால், நான் என்ன சொல்லிறது? உங்களுக்கு ஒண்டைச் சொல்லட்டே. உங்களிட்டக் கொஞ்சக் காசிருக்கெண்டு வையுங்கோ. அந்தக் காசை என்ன செய்வீங்கள்? ஏதாவது உருப்படியான வேலையைச் செய்யப் பயன்படுத்துவீங்கள். அல்லது தேவையான பொருள் எதையும் வாங்குவீங்கள். இல்லாவிட்டால், சொந்த பந்தங்களுக்குக் குடுத்து உதவுவீங்கள். அதுமில்லாவிட்டால், ஆராவது உதவி தேவைப்படுகிற ஆட்கள், கஸ்ரப்பட்ட சனங்களுக்குக் குடுப்பீங்கள். ஒண்டுமில்லையெண்டால் கோயில் உண்டியல்லயாவது போடுவீங்களல்லோ. சும்மா றோட்டில போட மாட்டீங்கள்தானே..!” என்றார்.

இதற்கு மேல் நான் எதுவும் கேட்க வேண்டியிருக்கவில்லை. 

00

தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைப் பற்றி நாம் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. அதற்காக நேரத்தைச் செலவழிப்பது வீண். இருந்தும்  அதைப்பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்றால் –

“பொதுவேட்பாளர் வந்து விட்டார்” 

“தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” 

“நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேந்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்”

“தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்”

“தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்”

 “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” 

போன்ற கருத்துகளை முன்வைத்துச் சனங்களைத் திசைதிருப்ப  முற்படுவதை காணும்போது பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. காரணம், அத்தனையும் தவறான புரிதலின் அடிப்படையிலானவை. 

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூடப் பார்க்கலாம். 

1.      “பொதுவேட்பாளர் வந்து விட்டார்” என்றால் அவரென்ன வானத்திலிருந்து குதித்தாரா? அல்லது வாராது வந்த மாமணியா? (இப்படித்தான் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தமிழ் மக்களின் மீட்பர், தமிழ்ச்சமூகத்துக்கு வராது வந்த மாமணி என்றார்கள்! இறுதியில் அரசியலில் அரிச்சுவடியே தெரியாதவர் என்பதை அவரே நிரூபித்தார்). அரியநேந்திரனைப் பொது வேட்பாளராக நிறுத்தியதற்குத்தான் இந்தப் பெரிய அமர்க்களமா? மலையகத்தில் மல்லியப்பு திலகர் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜூம்தான் போதுவேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரும் மலையக மக்களை, அவர்களுடைய பிரச்சினையை வெளிப்படுத்துவதற்காகவே போட்டியிடுகிறார். இரண்டையும் சமப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் சிங்களவரல்லாத தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறையும் அது சார்ந்த பிரச்சினையும் உண்டு. அப்படியென்றால், தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகள் இணைந்து ஏன் ஒரு பொது வேட்பாளரை அடையாளமாக முன்னிறுத்தவில்லை. அதற்கு ஏன் முடியாமற்போனது? மெய்யாகவே சிங்களத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவும் சர்வதேச சமூகத்துக்கு சிங்கள ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தால் அதைத்தான் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி அரியநேந்திரனைக் கொண்டு வந்து நிறுத்துவதல்ல. பொதுவேட்பாளர் என்பதற்கான அர்த்தம் ஓரளவுக்கு அப்பொழுதுதான் பொருந்தும். இது பொதுவேட்பாளரேயல்ல. தமிழ் வேட்பாளர். அதிலும் ஒருசாராருடைய தரப்பின் வேட்பாளர். அவ்வளவுதான். 

2.      “தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” என்றால் நிச்சயமாக பொதுச்சபையினருக்கும் பொதுச்சபையினரின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பினருக்கும்தான். அவர்களுக்குப் பின்னின்று இயங்கும் சக்திகளின் விருப்பத்துக்குமாக. அதாவது இந்தத் தரப்பினருடைய தேவைக்காகவே தமிழ்ப் பொது வேட்பாளரும் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்குள் தங்களுடைய செல்வாக்கு மண்டலத்தை விஸ்தரிப்பதற்கு பொதுச்சபையைச் சேர்ந்தவர்களிற் சிலர் கடந்த காலத்திற் கடுமையாக முயற்சித்தனர். இதற்காக இவர்கள், ஒரு கட்டம் வரையில் மறைந்த சம்மந்தனுடன்கூட நெருக்கமாகப் பழகியதுமுண்டு. அவருடைய மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தம்மைப் பகிர்ந்ததுண்டு. ஆனால், என்னதான் நெருக்கம் காட்டினாலும் எப்படி அறிவுரை சொன்னாலும் எதற்கும் மசியாத சம்மந்தனுடைய நிலைப்பாட்டினால் இறுதியில் கசப்படைந்தனர். 

அந்தக் காய்ச்சலில் சிறிது காலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சம்மந்தனையும் வழிக்குக் கொண்டு வருவதற்காக – பழிதீர்ப்பதற்காக  தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கினர். இரண்டாண்டுகளில் பேரவை சத்தமில்லாமற் படுத்து விட்டது. பிறகு, கஜேந்திரகுமார் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடு சமரசத்துக்கு முயற்சித்தனர். ஒரு எல்லைக்கு அப்பால் இவர்களை உள்ளே நுழைவதற்கும் தலையீடுகளைச் செய்வதற்கும் கஜேந்திரகுமார் அனுமதிக்கவில்லை. இதனால், விக்னேஸ்வரனைச் சாரத் தொடங்கினார். விக்னேஸ்வரனும் இவர்களுடைய கட்டுக்குள் நிற்கும் ஆளாகத் தெரியவில்லை என்றவுடன் தொடங்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையானது  தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பேரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து (தமிழரசுக் கட்சியிலிருந்து) பிரிந்து சென்ற ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது. ஏற்கனவே இந்தக் கட்சிகள் பொதுச்சபையினரின் கட்டுப்பாட்டுக்குள் பாதிக்குமேல் வந்து விட்டனர். வரும்நாட்கள் இதை மேலும் நிரூபிக்கும். ஏனென்றால், சம்மந்தன், சுமந்திரன்போலச் சுயாதீனமாகச் சிந்திக்கக் கூடிய, தலைமைத்துப் பண்புடைய  ஆளுமைகளாக குறித்த கட்சியினர் இல்லை. என்பதால் பொதுச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் நிற்பது தவிர்க்க முடியாமற்போகும். 

3.      “நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேத்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்” என்பது. இதைப்படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் என்பது சரியானதே. ஆனால், இருவரையும் சமனிலைப்படுத்திப் பார்ப்பது தவறு. அநேகமாக வடக்குக் கிழக்கில் அரியநேத்திரனை விட ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவும் கூடும். அப்படியென்றால் நிலைமை? ரணில் தேர்தலில் தோற்றுப்போனால்? அதற்குப் பிறகு நாட்டின் தலைவிதி? சரி, அரியநேத்திரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால், அதற்குப் பிறகு என்ன அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாம் நடக்கும்? அதைத் திட்டவட்டமாக பொதுச்சபையினரோ, பொதுக்கட்டமைப்பினரோ, அரியநேத்திரனை ஆதரிப்போரோ சொல்வார்களா? 

இந்த மாதிரி மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளோடு தமிழ்ச்சனங்களை உச்சிக் கொப்பில் ஏற்றிய கதைகள் பலவுண்டு. ஒவ்வொரு தடவையும் கொப்பு முறிந்து விழுந்து இடுப்பு உடைந்ததே மிச்சம்.

4.      “தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்” என்பது. நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் அப்படித்தான் ஆக்கப்பட்டுள்ளனர். இல்லையென்றால் தங்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத, மக்களிடத்திலும் சூழலிலும் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத, எந்த நெருக்கடியையும் தீர்க்காதவர்களையெல்லாம் இன்னும் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து கொண்டிருப்பார்களா? அடுத்தது, தமிழ் மக்களிடத்தில் புதிதாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தெடுப்போரை விட, பழைய பாதையில் பயணிப்போரையே அவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கிறது. என்பதால் இனரீதியாக அடையாளப்படுத்தப்படும் எந்த விடயமும் அவர்களிடத்தில் சட்டெனப் பற்றி எரியும். தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது அப்படிப் பற்றி எரியக் கூடிய ஒரு சங்கதி. ஒரு பொருளே! ஆகவே தமிழ் மக்கள் அவரை ஆதரித்தோ கொண்டாடியோ தீருவர். அதன் விளைவுகள் எப்படியென்று பார்க்கவே மாட்டார்கள். காலம் கடந்த பிறகு வரும் ஞானத்தினால் பிறகுதான் கவலைப்படுவார்கள். ஆகவே வழமையைப்போலத் தாம் முன்னுணரக் கூடியவர்களில்லை என்பதைக் காட்டுவர். 

5.      “தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்” என்றால், யாருக்கு வழிகாட்டுவார்கள்? எதற்கு வழிகாட்டுவார்கள்? அந்த வழி எத்தகையதாக இருக்கும்? அது எங்கே செல்லதற்கானதாக இருக்கும்? இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்களா? அப்படியென்றால் அது எத்தகைய வழி? அந்த வழியை சர்வதேச சமூகமும் இந்தியாவும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்களா? மனோ கணேசனே வெளிப்படையாகச் சொல்லி விட்டார், “உந்த விளையாட்டை எல்லாம் வடக்குக் கிழக்கிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். தெற்கிற்கோ கொழும்புக்கோ மலையகத்துக்கோ கொண்டு வரவேண்டாம். அது வேறு உலகம் என்று. ஆகவே தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள் என்று சொல்லித் தாம் தப்புவதற்கு பொதுச்சபையினரும் பொதுக்கட்டமைப்பிலுள்ள கட்சியினரும் முயற்சிக்கலாம். அது வரலாற்று நகைப்புக்குரிய ஒன்றேயாகும்.

6.      “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” என்பது. இவ்வாறு இப்பொழுது சொல்வோர், அன்று ஈரோஸ் அமைப்பையும் அதனுடைய அன்றைய நிலைப்பாட்டினையும் அது தேர்தலில் நின்றதையும் கடுமையாக மறுதலித்தோரே. சரி, அந்தத் தவறைப் பின்னாளில் உணர்ந்தவர்கள் என்றாலும் அந்தச் சூழலையும் அந்த அமைப்பையும் இன்றைய நிலையோடு தொடர்புறுத்திப் பார்ப்பது தவறு. அப்படிப் பார்க்கவே முடியாது. காரணம், அது போராட்டம் நடைபெற்ற காலம். போட்டியிட்டவர்களும் போராளிகள். என்பதால்தான் மக்களும் அந்த நெருக்கடிச் சூழலிலும் அன்றைய சுயேட்சைகளுக்கு வாக்களித்தனர். மக்களுடைய அந்த நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அடுத்து வந்த பொருத்தமற்ற சூழலில் தங்களுடைய பதவிகளைத் துறந்தனர் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். இவர்களோ (அதாவது பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சியினரோ) நெருக்கடிகளை உருவாக்கியவர்கள் மட்டுமல்ல, இறுதிப்போர்க்காலச் சூழலில் தம்முடைய பதவியை விடாது இறுகப்பற்றிக் கொண்டிருந்தவர்கள். தவிர, இன்றைய சூழலானது பல தெரிவுக்குரியது மட்டுமல்ல, யார் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடியதுமல்ல. மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்தும் தரப்புகள் ஒன்றும் மக்களிடம் மாபெரும் செல்வாக்கைப் பெற்றவையும் அல்ல. அதில் உள்ள ஒரு தலைவராவது அனைத்துத் தமிழ் மக்களையும் ஒரு நிலைக்குக்  கொண்டு வரக்கூடிய ஒரு அறிவிப்பையேனும் செய்து காட்டட்டும் பார்ப்போம். ஆகவே இந்தக் கருத்தை ஏற்கவே முடியாது. ஆனால், சிங்கள இனவாதத்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் இயல்பாக வாக்களிக்க முற்படலாம். 

என்பதால் மேற்படி வார்த்தைகளைப் படிக்கும்போது பாரதியின் பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன.

“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த 

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்…” 

உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைத்தான். 

சொந்த மக்களையே வைத்துச் சூதாடுவதைக் கண்டு எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

இதற்கு இவர்களுடைய மேலுமொரு உதாரணத்தைச் சொல்லுவது பொருத்தமாகும்.

“2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு (1939 இல்) யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது.தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது” என்று ஒரு ஒப்புவமை சொல்லப்படுகிறது. போதாதென்று “அந்த பகிஷ்கரிப்பின் (2005 இல் மேற்கொள்ளப்பட்ட ) விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்தப் பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்” என்று வேறு சொல்லப்படுகிறது. 

ஈஸ்வரா! 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்பின் விளைவுகள்தான் முள்ளிவாய்க்கால் முடிவுகளும் துயரமும் கூட. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? என்ன எண்ணுகிறார்கள்?

இதொன்றும் சாம்பல் அரசியல் அல்ல. சாம்பல் மேட்டு அரசியல்.