(கொல்லன் கத்தி தந்தான். குயவன் சட்டி தந்தான். ஆண்டவன் அறுக்கச் சொன்னான். என்மேல் பாவம் இல்லை என்கிறாரோ அரியநேந்திரன்?)
================
(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—
இவ்வருடம் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறப் போகின்ற இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஆகப் போட்டியிடுவதற்குரிய நபரையும் அவரைத் தேர்ந்தெடுத்தவர்களையும் பார்க்கும் போது ‘பரமார்த்த குருவும் சீடர்களும்’ எனும் அங்கதக் கதைதான் நினைவுக்கு வருகிறது எனச் சென்ற பத்தியில் (சொல் – 15) சொல்லித்தான் ஆகவேண்டியிருந்தது.
‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விவகாரத்தை ஆதரித்து அறிக்கை விடுகின்றவர்களைப் பார்த்தால் ஆளுக்கொரு காரணங்களை-கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது ‘யானை பார்த்த குருடர்கள்’ கதையைத்தான் ஞாபகப்படுத்துகின்றது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.
ஒருவர் சொல்கிறார், தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஐக்கியப்படுத்துவார்; ஒரு தேசமாகத் திரளவைப்பார் என்று. ( தமிழர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் ஒரு தேசமாகத் திரள வைப்பதற்கும் ஜனாதிபதித் தேர்தல்தான் தேவைப்படுகிறது போலும்.)
இன்னொருவர் சொல்கிறார் தமிழ்ப் பொது வேட்பாளர் மூலம் தென்னிலங்கை வேட்பாளர்களிடம் பேரம் பேச முடியும் என்று. (ஆனால் தமிழ்ப் பொதுவேட்பாளரோ பேரம்பேசி மீண்டும் ஏமாறத் தயாரில்லை என்கிறார்)
மற்றொருவர் சொல்கிறார் தமிழ் மக்களின் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லையென்பதை இந்த நாட்டு மக்களுக்கு (சிங்களவர்களுக்கு) உரத்துச் சொல்வதற்காக இத்தேர்தலைப் பயன்படுத்த முடியும் என்று.
வேறொருவர் சொல்கிறார் தமிழ் மக்களுக்குச் செலவில்லாமல் அரசாங்கத்தின் செலவிலேயே கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தித் தமிழ் மக்களின் உணர்வுகளை உலகுக்கு வெளிப்படுத்தலாம் என்று.
அப்படியானால் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 இல் இருந்து கடந்த 75 வருடங்களாகச் சிங்கள மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் உலகுக்கும் தமிழர்கள் எதனையும் உணர்த்தவில்லையா? இந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம்தான் உணர்த்தப் போகிறார்களா?
தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அரியநேந்திரனோ நான் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே போட்டியிடுகிறேன் (அதனால் எதனைச் சாதிக்கப் போகிறாரோ தெரியவில்லை.) என்று கூறியுள்ளதுடன் தன்னைத் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பே விளைவுகளின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமெனவும் கூறிப் பந்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏழு தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் பொது அமைப்புகள் எனக் கூறி ஒன்று சேர்ந்த தமிழ் மக்கள் பொதுச்சபை எனும் அமைப்பின் சார்பில் கையெழுத்திட்ட ஏழு தனி நபர்களும் இணைந்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் பக்கம் உருட்டி விட்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பு தன்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தான் தப்பி விடலாம் என்ற முன்னெச்சரிக்கை போலும். (கொல்லன் கத்தி தந்தான். குயவன் சட்டி தந்தான். ஆண்டவன் அறுக்கச் சொன்னான். என்மேல் பாவம் இல்லை.)
இவர்கள் எவரிடமும் தெளிவான திட்டவட்டமான அரசியல் நிலைப்பாடோ புரிதலோ இல்லை. இவர்கள் கூறுவதெல்லாம் வெறுமனே எடுகோள்களும் கற்பனா வாதங்களுமேயாகும். இவர்கள் எல்லோருமே இல்லாத அல்லது பெயர் தெரியாத ஊருக்கு வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, ஆக்கபூர்வமாக எந்த அடிப்படையுமற்ற தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது இம்மியளவு பயனைத்தானும் தமிழ் மக்களுக்குத் தரப்போவதில்லை. மாறாகச் சொந்தக் காசிலே சூனியம் வைத்ததாகவே முடியும்.
ஆக மொத்தத்தில், ‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இன்றைய உலக ஒழுங்கையோ – தென்னிலங்கை, பிராந்திய மற்றும் பூகோள அரசியலையோ புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள மறுத்துக் ‘குண்டுச் சட்டிக்குள்ளே குதிரையோடுகின்ற’ சமாச்சாரமேயாகும்.