— அழகு குணசீலன் —
இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லீம் தேசிய இனங்களின் பூர்வீக வரலாறானது மன்னர்களின் ஆட்சி-அதிகார ஆள்புல மோதலாக அதற்குள் வரி, வர்த்தக, நிலவுடமை பொருளாதார செயற்பாடுகளாக, சமூகம் சார்ந்த சாதி கட்டமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள கடந்த கால கதைகளில் இருந்து வேறுபட்டதாக, மானிடவியல் சமூகவிஞ்ஞான நோக்கில் கிட்டடியில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.
1. “இலங்கையில் சிங்களவர்கள்” : இந்த நூலின் ஆய்வாளர் தமிழ்நாட்டின் தலைசிறந்த மானிடவியல் சமூக விஞ்ஞானி முனைவர் பக்தவத்சல பாரதி. இதன் முக்கியத்துவம் சிங்கள இனத்தின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகும்.
2. ” வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்”: இதன் ஆய்வாளரும் தமிழ்நாட்டின் மற்றொரு மானிடவியல் ஆய்வாளர். பல தடவைகள் இலங்கைக்கு பயணித்து பெற்றுக்கொண்ட தகவல்கள் , அனுபவங்கள், கண்கண்ட சாட்சியங்களின் பதிவாக இந்த நூல் அமைகிறது. இதுவும் மரபு ரீதியான வரலாற்று ‘ஐதீக கதை’ ஆய்வுகளில் இருந்து வேறுபடுகிறது. இதை எழுதியிருப்பவர் தி. லஜபதி ராய்.
3. “மட்டக்களப்பு”: (வரலாறு -சமூகம் – பண்பாடு). இது 2024 ஏப்ரல் 20 & 21 ம் நாட்களில் இணைய வழியில் தொடர்ந்த ஆய்வரங்கின் தொகுப்பு. தொகுப்பாசிரியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவி ஆ.பாப்பா மற்றும் முனைவி மு.இறைவாணி ஆகியோர்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்குறிப்பிட்ட இணைய வழி ஆய்வின் தொகுப்பு இது. இந்த இணைய வழி நிகழ்வை ஆரம்பித்தும், முடித்தும் வைத்து பேராசிரியர் சி.மௌனகுரு ஆற்றிய இரு உரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பாய்வு -பகுப்பாய்வு செய்திருப்பவர் முனைவர் பக்தவசல பாரதி. இவர்களின் ஆய்வுரைகளோடு இணைய வழி மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்திய மட்டக்களப்பின் எட்டு இளம் தலைமுறை ஆய்வாளர்களின் அவர்களின் துறைசார்ந்த வெவ்வேறு தலைப்பிலான ஆய்வுரைகளையும் – கட்டுரைகளில் தாங்கி கிட்டதட்ட 200 க்கும் அதிகமான பக்கங்களில் வெளிவந்துள்ளது. இது மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை நவீன சர்வதேச மானிடவியல் ஆய்வு முறைகளை – பார்வைகளை உள்வாங்கி மட்டக்களப்பு மானிடத்தை பேசுகிறது.
கிழக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பில் 2014, ஆகஸ்ட் 2 &3 ம் திகதிகளில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிகழ்வுகளில் அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு வரலாறு என்ற இந்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. பன்னாட்டு மரபுவழி அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்ற இணையவழி ஆய்வரங்கின் தொகுப்பு இந்நூல். இதை மரபுவழி அறக்கட்டளை அமைப்பே வெளியீடு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத நிகழ்வுகளின் போது மட்டக்களப்பு வெபர் அரங்கில் இது வெளியிடப்பட்டது.
அகத்தார் ஆய்வுநூல் ஒன்று பெரும்பாலும் புறத்தாரை கொண்ட மேடையில் ‘அவசர அவசர’மாக வெளியிடப்பட்டது தொடர்பான மட்டக்களப்பாரின் ஆதங்கம் மழைவிட்டும் தூவானம் விடாத நிலையாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மறுவளத்தால் நிதியுதவி புறத்தார்தானே செய்தார்கள் என்றும் கேள்விகள் எழுகின்றன. இதுவல்ல இங்கு பேசுபொருள்.
‘அகத்தை’ ‘புறம்’ அள்ளிக்கொண்டோ, இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துக்கொண்டோ போகக்கூடாது என்ற ‘நீதியும், நியாயமும்’ தான் இந்த ஆதங்கத்தின் அடிப்படை. இந்த நூலுக்கு களம் அமைத்த பேராசிரியர் சி.மௌனகுரு, உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இது நடந்திருந்தால் அந்த ஆகஸ்ட் நிகழ்வு கொஞ்சமாவது அறிவு சார்ந்து பெயருக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும். அதன் கனதி அதிகரித்திருக்கும். அதனால் பத்தோடு பதினொன்றாக கரைந்து போனது .மட்டக்களப்புக்கு சம்பந்தப்பட்ட ஆளும் அரசியலும், அதிகாரமும் செய்த வரலாற்று தவறு.
இணையவழி ஆய்வரங்கில் “அகத்தார்” ,”புறத்தார்” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஆய்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டவை என்பதை விளங்கிக்கொள்ளல் முக்கியம். முனைவர் பக்தவசல பாரதி இந்த வார்த்தைகளை தனது தொகுப்புரையில் பயன்படுத்தினார். அதனை பேராசிரியர் மௌனகுருவும் தனது உரைகளில் உள்வாங்கி அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்.
மட்டக்களப்பை மட்டக்களப்பார் ஆய்வு செய்யும் போது அதன் உண்மைத்தன்மை உணர்வோடு, உறவோடு, உடலோடு, உளத்தோடு ஒட்டியதான ஒரு பண்பாட்டு விழுமிய பெறுமதியை அதிகரிப்பதாக இருக்கும். அதனால் தான் அது அகத்தவர் ஆய்வு. இல்லையா?
இந்த இணையவழி நிகழ்வை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலும், நூலிலும் பேராசிரியர் சி.மௌனகுருவினதும், முனைவர் பகவதசலபாரதியினதும் வார்த்தைகள் இவை .
“மட்டக்களப்பு வரலாறு இருட்டிற்குள் கிடக்கிறது. நாம் வெளிச்சத்தில் தேடக்கூடாது. இருட்டிற்குள் தேடவேண்டும். புறத்தாரும் பேசக்கூடாது இதனுள்ளே இருக்கின்ற மக்கள் இதனை வெளிக்கொணரும் பொழுதே வரலாறு முழுமை பெறும். அதையே ‘அகத்தவர்’ ஆய்வு என்கிறோம். அது இந்நூல் வழி நிறைவடைந்துள்ளது. எங்களை நாங்களே பேசவேண்டும், நாங்களே தேடவேண்டும் என்று உரத்துக்கூறும் வரிகள் இந்த ஆய்வுக்குரியவை, ஆய்வுக்கு உரம்சேர்ப்பவை. இதுவரை வெளிச்சத்திற்கு வராது இருப்பவற்றை இருட்டில் இருந்து மீட்டெடுங்கள் என்று பேராசிரியர் சி. மௌனகுரு தனது தோளுக்கு மேலால் வளர்ந்து விட்ட அன்றைய மாணவர்களுக்கு விடுக்கின்ற அறைகூவல்.
எங்களை -‘மட்டக்களப்பாரை’ வெளியில் இருந்து ஆய்வு செய்வதும், எழுதுவதும் உண்மையான உணர்வுகளை, உள்ளகத்தன்மையை வெளிப்படுத்தாது என்று கூறவருகிறார் பேராசிரியர் என்றே இந்த வார்த்தைகளை மீள் வாசிப்பு செய்யலாம். யாரையும் வாடகைக்கு அமர்த்தியும் அல்லது யாருக்கும் குத்தகைக்கு கொடுத்தும் செய்கின்ற விடயமல்ல உண்மையான வரலாற்று ஆய்வு என்பதை இந்த வார்த்தைகள் பேசுகின்றன.
இந்த மட்டக்களப்பு வரலாற்று தொகுப்பில் அகத்தாரின் இன்னும் உறவோடு சொன்னால் ‘நம்மட ஆட்கள்’ எட்டு இளம் ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் இந்த மட்டக்களப்பு, மண்ணோடும், அதன் வாழ்வோடும், வரலாற்றோடும் ஒட்டியவர்கள். எவ்வாறு பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் ஒரு இலக்கிய திறனாய்வு இளைய தலைமுறையை தங்களது தொடர்ச்சியாக உருவாக்கி விட்டுச்சென்றார்களோ அவ்வாறே பேராசிரியர்கள் மௌனகுருவும், நுஃமானும் ஒரு இளைய தலைமுறையை மட்டக்களப்பில் உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். இது இனி இளைய தலைமுறையின் காலம். இதை மட்டக்களப்பு வரலாறு பதிவு செய்கிறது.
ஆனால் பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் முற்போக்கு இலக்கிய சக்திகளுக்கு முன்னோடிகளாக ஒற்றுமையுடன் பிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு எதிராக எழுதுகோல் ஏந்தி இலக்கிய போராளிகளாக நின்றனர். அவர்கள் ஒரு கொள்கை,கோட்பாட்டின் அடிப்படையில் முற்போக்கு கலை, இலக்கிய, பண்பாட்டு சமர் செய்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக சூழலில் இந்த ஒற்றுமையை தேடவேண்டி உள்ளது. இங்கு கொள்கை,கோட்பாட்டு ரீதியான இணக்கமும் இல்லை, முரண்பாடும் இல்லை. சுய தம்பட்ட போட்டியே இருக்கிறது. நானா? நீயா? என்ற கேள்வியே இருக்கிறது. இந்த நோய்க்கு மருந்து தேவை. இதற்கு இத் தொகுப்பில் உள்ள ஆய்வுகளுக்கு பங்களிப்பு வழங்கியுள்ள இளம் ஆய்வாளர்களும், அவர்களின் மாணவர்களும் வைத்தியம் செய்வார்களா என்பது கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் மீதான சமூக எதிர்பார்ப்பாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று இளம் ஆய்வாளர்களே இந்த சமூகத்தின் வைத்தியர்களாக தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர். இந்த ஆய்வு அவர்களுக்கு கட்டியம்கூறி எங்கள் முன் நிறுத்துகின்றது.
அவர்களில் ஒருவர் நூலக நிறுவனத்தைச் சேர்ந்த கள ஆய்வாளர் க.பத்திநாதன். “மட்டக்களப்புப் பூர்வ குடிகளின் சடங்கு சார் சமூகவலு ” என்ற ஆய்வைத் தந்துள்ளார். ஆய்வாளர் பத்திநாதன் ஏற்கனவே மட்டக்களப்பின் மூத்த குடி வேடர்கள் பற்றி ஆய்வுகளை செய்திருப்பவர்.
நாகர்கள் தான் மட்டக்களப்பின் மூத்த குடி என்று பேசியும், எழுதியும் வருகின்ற இன்றைய காலகட்டத்தில் வேடர்கள் தான் மட்டக்களப்பின் மூத்தகுடி என்று கூறுகிறார் ஆய்வாளர். இந்தியாவின் ஓரிசா ஆதிக்குடிகளுக்கும் , இலங்கை – மட்டக்களப்பு வேடர்களுக்கும் மரபணு உறவுகள் உண்டு என்று தனது ஆய்வின் மீதான ஆர்வத் தேடலுக்கு வாசகர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
“மட்டக்களப்பின் பூர்விக வரலாறு -வரலாற்று தொடக்க காலம் முதல் கி.பி. 4ம் நூற்றாண்டு வரை” அதாவது நாகர் வரலாறு மற்றும் அரசுகளின் தோற்றம் பற்றி ஆய்வு செய்துள்ளார் கௌரி லட்சுமிகாந்தன். இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை கலை கலாச்சார பீடத்தின் தலைவி. கல்வெட்டுக்காலம் முதல் 4ம் நூற்றாண்டு வரையான மட்டக்களப்பின் வரலாற்றை தருகிறது அவரது ஆய்வுக்கட்டுரை.
கிழக்கு பல்கல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் சு.சிவரெத்தினம், “மட்டக்களப்பின் பொருளியல் அமைப்பும் சமூக அமைப்பும்” பற்றிய ஆய்வைத் தந்துள்ளார். எல்லாவற்றையும் பொருளியல் நிர்ணயம் செய்கிறது அந்த வகையில் சமூகத்தையும் அதே நிர்ணயம் செய்கிறது என்ற மார்க்சியவாதத்தின் கருத்தியல் கட்டுடைப்பு செய்யப்படுகிறது. சமூக நிர்ணயிப்பில் பண்பாடு வலிமையானதா? என்ற மோதல் கேட்கிறது. முனைவர் சு.சிவரெத்தினம் மட்டக்களப்பு தொடர்பான பல வரலாற்று ஆய்வுகளை செய்திருப்பவர். அவரின் மிகப் பிந்திய படைப்பு ‘கூத்து அரசியல்’.
முனைவர் றமீஸ் அப்துல்லா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதுநிலைப் பேராசிரியர். “மட்டக்களப்பு முஸ்லீம்கள்: ஒரு சமூக பண்பாட்டு வரலாற்று நோக்கு” என்ற தலைப்பிலான ஆய்வில் சமூகங்களுக்கிடையிலான கலை, இலக்கிய பாலமாக அமைகிறது அவரதுபார்வை. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களையும்,சமூகங்களையும் ‘மட்டக்களப்பின் ‘மறு’ ஆக, அடையாளப்படுத்துகிறார் றமீஸ் அப்துல்லா. ‘மறு’ அடையாளத்திற்கு அருமையான ஜேர்மன் மொழிச் சொல் ‘MUTTERMAL’. இதன் அர்த்தம் தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே இருந்த அடையாளம். அது இடையில் ஏற்படுவதில்லை. குழந்தை வளர,வளர மெல்ல மெல்ல துலங்கத்தொடங்கும் . இதைவிடவும் மட்டக்களப்பின் தொன்மையை அடையாளம் காண முடியுமா? பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவின் பார்வை மட்டக்களப்பு சமூகங்களின் பன்மைத்துவத்தின் வெளிப்பாடாக மட்டும் அன்றி அந்த தொன்மைக்கான அங்கீகாரமாகவும் அமைகிறது.
மட்டக்களப்பின் பிற்கால வரலாறு : “பத்தாம் நூற்றாண்டு முதல் சமகாலம்வரை”. விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வெல்லாவெளி,போரதீவுப்பற்று உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றுபவர் இவர். வரலாற்று துறையில் ஆர்வமுள்ள வி.துலாஞ்சன் “அலகிலா ஆடல்”(சைவத்தின் கதை) மற்றும் மட்டக்களப்பு எட்டுப் பகுதி என்ற நூலையும் எழுதியுள்ளார். துலாஞ்சனின் நோக்கு சோழர்கால வரலாற்று கதைகளை அப்படியே பேசுகின்றதேயன்றி, சோழர்கால சமூகக்கட்டமைப்பை பற்றி பேசவில்லை. சமூகக் கட்டமைப்பு கட்டுடைப்பு செய்யப்பட்டிருந்தால் முழுமை பெற்றிருக்கும்.
“மட்டக்களப்பின் தனித்துவமான வாழ்வியல் பண்பாட்டுக்கோலங்கள்” பற்றி – மட்டக்களப்பின் பண்பாட்டு பன்மைத்துவத்தை ஆய்வு செய்திருப்பவர் பேராசிரியர் முனைவி சாந்தி கேசவன். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறை கலை கலாச்சார பீடத்தைச்சேர்ந்தவர். பெரும்பாலும் கண்ணகி வழிபாட்டை முதன்மைப் படுத்தியதாக அந்த ஆய்வு அமைகிறது. கஜபாகு மன்னனுக்கு முன்னரே கண்ணகியை மட்டக்களப்பில் தேடுகிறார் சாந்தி கேசவன்.
முனைவர் வ.குணபாலசிங்கம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட பீடாதிபதி. “பன்முக நோக்கில் மட்டக்களப்பு பகுதியில் இந்து வழிபாட்டு முறைகள்” பற்றியதாக அவரது ஆய்வு உள்ளது. பேராசிரியர் சி. சந்திரசேகரம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கற்கைகள் துறை தலைவர். “மட்டக்களப்பின் விவசாய சமூக அமைப்பினடியாக எழுந்த இலக்கிய மரபுகளும் அவற்றின் செல்நெறிகளும்” பற்றி எழுதியுள்ளார். மட்டக்களப்பின் வேளாண் பண்பாடு தனித்தும் மிக்கது. மட்டக்களப்பு சமூகத்தின் வாழ்வியலில் அதன் தாக்கம் அதிகமானது.
இந்த நூலில் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்யவேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. அது தான் மட்டக்களப்பு வரலாற்றின் அட்டைப்படம். எடுத்த எடுப்பிலேயே இந்த ஆய்வில் பங்கெடுத்த அறிஞர்கள், அகத்தார் அனைவரையும் புறந்தள்ளி இந்த அட்டைப்படம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அடித்துச் சொல்லமுடியும்.
இந்திய இந்துக் கோயில், யானை, பரதநாட்டியம் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றன. இங்கு எழுகின்ற கேள்வி மட்டக்களப்பின் சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, பண்பாட்டு கோலங்களில் இவற்றின் பங்கு என்ன. முனைவர் பக்தவசல பாரதி மட்டக்களப்பின் தனித்துவத்தை தமிழ்நாடு, யாழ்ப்பாணம் என்பனவற்றோடு ஒப்பிட்டு ஒரு வலுவை தந்திருக்கின்ற நிலையில் அவரது கருத்தை உதாசீனம் செய்வதாக இந்த அட்டைப்பட தேர்வு அமைந்துள்ளது. அத்தோடு மட்டக்களப்பின் பன்மைத்துவத்தை ஒருதலைப்பட்சமாக நிராகரிக்கிறது.
மட்டக்களப்பின் அடையாளம் கோயில், தேவாலயம், பள்ளிவாசல் என்று நாம் பன்மைத்துவம் அனுபவிக்கின்றபோது இந்திய இந்துக் கோயில் ஒன்று எவ்வாறு மட்டக்களப்புக்கு பொருந்த முடியும். இன்றைய இந்திய அரசியலின் இந்துத்துவ பின்னணி இதற்கு இருக்கிறதா.? மட்டக்களப்பின் தனித்துவ பண்பாட்டை ஒரு கண்ணகி கோயில் அல்லவா அட்டைப்படத்தில் பேசியிருக்க வேண்டும்.
சோழர்காலத்தை முதன்மை படுத்தும் நோக்கிலா யானை இடம்பிடித்தது? இது ராஜராஜ சோழனின் யானைப்படை குறியீடாகவா சேர்க்கப்பட்டுள்ளது? மட்டக்களப்பின் மகிமையை மீன்/ மீன்மகள் அல்லவா பேசியிருக்க வேண்டும். பரத நாட்டியம் மட்டக்களப்பின் பண்பாட்டு வாழ்வியலில் எப்போது இருந்து செருகிக்கொண்டது? பரதநாட்டியத்தின் இடத்தில் கூத்து அல்லவா பொருத்தமான எங்கள் பாரம்பரிய கலை.?
“நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ …..” அட்டைப்
படத்தினைப்பார்க்க மாகாகவி பாரதியார் நினைவில்
வருகிறார்.
அந்த ஏப்ரல் மாத இருநாள் ஆய்வரங்கையும் தொகுத்தும், பகுத்தும் அருமையான ஒரு மட்டக்களப்பு வரலாற்று ஓவியத்தை வார்த்தைகளால் வரைந்திருக்கிறார் பேராசிரியர் பக்தவசலபாரதி. அவரது வார்தைகளை வாசிக்கும் போது மட்டக்களப்பு ஒரு ஓவியமாக மனதில் விழுகிறது. “மட்டக்களப்பை மானிடவியலாக வாசித்தல்” என்பது தொகுப்புரையின் தலைப்பு.
” இன்று தமிழர்களின் நிலப்பரப்புகளாக விளங்குபவை தமிழ்நாடு, யாழ்குடா, மட்டக்களப்பு. இம் நிலங்களில் மட்டக்களப்பை நாம் ஏன் வாசிக்கவேண்டும்? இம்மூன்று பிரதேசங்களையும் மானிடவியலாக வாசிக்கும் போது மட்டக்களப்பில் மட்டுமே மிகத் தொன்மையான தமிழ்ச்சமூகக்கூறுகள் பலவும் உள்ளன என்ற பேருண்மை வெளிப்படுகிறது.இவ்வளவு காலத்திற்கு பிறகும் அவை அச்சு அசலாக உயிர்ப்புடன் உள்ளன. இவற்றை மானிடவியல் அதிசயம் என்பேன்” என்று பதிவிடுகிறார் பேராசிரியர் பக்தவசலபாரதி.
” மட்டக்களப்பில் சாதியச் சமூகம் மேலாதிக்கம் பெறவில்லை. மாறாக ஆட்சி அதிகாரம், சமூக அதிகாரம், நீதி நிர்வாகம், குலவிருதுகள் பெற்ற குடி வழிப்பிரிவினைகளே அதிகாரம் சார்ந்து இயங்குகின்றன. இதுவே யாழ்ப்பாணச் சமூகத்தில் இருந்து மட்டக்களப்பை பிரித்துக் காட்டுகிறது.”
“துளு நாடு தொடங்கி இலங்கை வரை பார்க்கும் போது மட்டக்களப்பில் மட்டும் தான் ‘குடி’ அமைப்பு காணப்படுகிறது. மட்டக்களப்பில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட சாதிகள் இருந்தாலும் குடியே பிரதானமாகும். தென்கிழக்காசிய சமூகச் சூழலில் மட்டக்களப்பில் மட்டுமே சாதியை விட குடி வலிமை பெற்று விளங்குவது ஒரு இனவரைபியல் வியப்பு. ( ETHNOGRAPHIC SURPRISE).”
கலிங்க மன்னன் மாகோன் காலத்து ஏழு குடிகள், ஏழு வன்னிமைகள் பற்றி அவர் இவ்வாறு பதிவிடுகிறார். “மாகோன் மதவழித்தேசியத்தை (RELIGIOUS NATIONALISM) கட்டமைத்தான். மாகோன் மட்டக்களப்பில் கட்டியமைத்த சமூக முறை சங்ககாலத்தின் தொடர்ச்சி, அப்படி அச்சு வார்த்தது போல், மீண்டும் பதியம்போடப்பட்டதுபோல் உயிர் பெற்றதாகும்.”
பண்பாடு என்பது CULTURE. நிலப்பண்படுத்தலில் இருந்து CULTIVATION இல் இருந்து பிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்று “பதியம் போடுகிறார்” பேராசிரியர் பகவத்சல பாரதி. ‘பதியம் போடுதல்’ வாழையடி வாழையாக – தலைமுறை தலைமுறையாக தொடரும், வாழும் மட்டக்களப்பின் மாறாத வரலாறு.
“சங்காகால குடி முறையும், சங்கமருவியகால கண்ணகை வழிபாடும் கிழக்கில் இன்னும் உயிரோடு இருக்கின்றன. துளு நாடு தொடங்கி குடகு,கேரளம் தமிழ்நாடு, யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு வரையான பிரதேசங்களில் மட்டக்களப்பில் மட்டுமே கண்ணகை வழிபாடு ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலை பெற்றுள்ளது.” என்று கூறும் பேராசிரியர், கண்ணகை கேரளாவில் பகவதி அம்மன் ஆனாள், கர்நாடகத்தில் சந்திரா ஆனாள், மங்களூரில் மங்களாதேவி ஆனாள், தமிழ்நாட்டிலும், யாழ்ப்பாணத்திலும் இராஜராஜேஸ்வரி , புவனேஸ்வரி போன்ற பல்வேறு பெயர்கள் பெறலானாள்” . மட்டக்களப்பிலே கண்ணகை கண்ணகையாக உள்ளாள். இதை விட வேறு என்ன மதிப்பெண் மட்டக்களப்பின் தொன்மை மிகு பண்பாட்டுக்கு தேவை.
மட்டக்களப்பு சமூகத்தின் தாய்வழிச்சமூகம் பற்றிய சமூகவிஞ்ஞானி பேராசிரியர் பக்தவத்சல பாரதி அவர்களின் கருத்துக்கள் ஆர்வத்திற்குரியவை.
மட்டக்களப்பு சமூகத்தின் மற்றொரு தொன்மைக்கூறு உண்மையான தாய்வழிச்சமூகம். அங்கு முக்கிய நான்கு அம்சங்கள் உண்டு.
1. வம்சாவளி தாய்வழியானது ( MATRILINEAL)
2.திருமணத்தின் பின்னர் மணமக்கள் மனைவியின் தாயகத்தில் வாழ்வர். ( MATRILOCAL)
3. குடும்பநிர்வாகமும் பேணுகையும் (MATRIARCHY)
4. சொத்துரிமை பெண் வழியில் செல்லும்.(MATRI-INHERITANCE)
மட்டக்களப்பின் இத்தகைய தனித்துவத்தில் இலங்கையர்களும் ஒன்று படுகின்றனர். மட்டக்களப்பு முழுவதும் சாதி,மத பேதமின்றி தாய்த்தாயம் பரவி நிற்கிறது. நீக்கமற நிறைந்துள்ளது.
மட்டக்களப்பு தமிழர்களைப்போலவே இஸ்லாமியரும் ஒரு கட்டத்தில் ஏழு குடிமுறையைப் பின்பற்றினர், தாய்த்தாய முறையை கொண்டிருந்தனர். இன்று குடிகளின் எண்ணிக்கை மாறினாலும் தாய்த்தாயம் தொடர்கிறது.
மட்டக்களப்பு பற்றிய இதுவரையான ஆய்வுகளிலும் இது ஒரு சமூகவிஞ்ஞானம் சார்ந்த முழுமையான மானிடவியல் ஆய்வு என்று கொள்ளலாம். சமூக விஞ்ஞானி பேராசிரியர் பக்தவத்சல பாரதி பதிவிடுவதுபோல் மட்டக்களப்பின் வரலாறு ஒரு மானிடவியல் ஆச்சரியம்,அதிசயம்.
அதைச்சாதித்த அகத்து ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அதற்கு களம் அமைத்த தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவி க.சுபாஷிணி அவர்களும், ஒருங்கிணைப்பு செய்த பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் குறித்த விமர்சனங்கள் ஆய்வரங்கம், மட்டக்களப்பு வரலாறு ஆய்வுநூல் தொடர்பானவை அல்ல. முற்று முழுதாக ஆகஸ்ட் மாநாட்டு ஒழுங்கமைப்பு, நடைமுறை தொடர்பானவை. இந்த நூல் மட்டக்களப்பின் வரலாற்றில் ஒரு மைல்கல். ஒரு வகையில் மட்டக்களப்பு மண்ணை ஏர் பூட்டி உழுது புரட்டிப்போட்டு ‘பதியம் போட’ தயார்படுத்தி உள்ளது.
தொல்காப்பியம் புறநூனூறு கூறும் பண்டைய ‘குடி’ சமூகத்தைக்காண வேண்டுமா ?
மட்டக்களப்புக்கு வாருங்கள்…! வாசியுங்கள்…! என்று அழைப்பிதழ் வைக்கிறார் மானிடவியல் விஞ்ஞானி பக்தவத்சல பாரதி.
இந்த மண்ணில் ….!
…………….அவ்வளவும் நடந்தும்
…………….அத்தனையும் நடந்தும்,
இன்னும் பூ பூக்கிறது…!
நூல்: மட்டக்களப்பு : (வரலாறு -சமூகம் – பண்பாடு.)
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை. 2024 .
விலை: ரூ: 280/- யூரோ:05.