— வீரகத்தி தனபாலசிங்கம் —
மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாட்டில் இருந்தவாறு பதவியைத் துறந்து நேற்றைய தினத்துடன் சரியாக இரு வருடங்கள் கடந்துவிட்டன.
அவரின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று அடுத்த ஞாயிற்றுக்கிழமையுடன் சரியாக இரு வருடங்கள் நிறைவுபெறுகின்றன.
இந்த இரு வருடங்களிலும் எம்மால் காணக்கூடியதாக இருந்த அரசியல் நிகழ்வுப் போக்குகள் இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் மூலமாக விடுக்கப்பட்ட ‘ செய்தியில்’ இருந்து எந்த பாடத்தையும் படிக்காமல் அரசியல் வர்க்கம் அதன் பழைய பாதைக்கு விரைவாகவே திரும்பியது என்பதை தெளிவாக வெளிக்காட்டி நிற்கின்றன.
‘ முறைமை மாற்றம் ‘ (System Change) என்பதே மக்கள் கிளர்ச்சியின் பிரதான முழக்கமாக இருந்தது. அது தற்போது சகல அரசியல்வாதிகளும் தங்களது வசதிக்கேற்ற முறையில் பேசுகின்ற அளவுக்கு அதன் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது.
பொருளாதார நெருக்கடிக்கு ஊழலும் முறைகேடுகளும் எந்தளவுக்கு முக்கிய காரணமாக இருந்தனவோ அதேயளவுக்கு அரசியல் மற்றும் சமூகச் சீரழிவுக்கு எதேச்சாதிகாரமும் அதிகார துஷ்பிரயோகமும் காரணமாக இருந்திருக்கின்றன.
இந்த இரு கெடுதிகளையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியவற்றில் மிகவும் முக்கியமானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகும். ஆனால், அதைப்பற்றி அரசியல் வர்க்கத்துக்கு தற்போது அக்கறை கிடையாது.
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை உரக்கப்பேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூட அடுத்த ஜனாதிபதியாக தெரிவாவதில் தான் குறியாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு வரப்போகும் முதல் தேசிய தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் பிரதான கட்சிகளிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை என்றே தோன்றுகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் நடுப்பகுதிக்கும் அக்டோபர் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட நாட்களில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலே இன்று அரசியல் விவாதத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அதிலும் கூட அந்த தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமா இல்லையா என்ற சந்தேகமே முனைப்பாக கிளம்பியிருக்கிறது.
தேர்தல்கள் ஒத்திவைப்பு என்பது விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு எப்போதுமே பேசுபொருளாக இருந்து வந்திருக்கிறது. கடந்த வருட முற்பகுதியில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளூராட்சி தேர்தல்களை நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்கம் காலவரையறையின்றி ஒத்திவைத்தது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு வெகு முன்னதாக அவர் பிரதமராக இருந்த அரசாங்க காலத்திலேயே மாகாணசபைகளை நடத்தமுடியாமல் சட்டச்சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக உள்ளூராட்சி தேர்தல்களும் இல்லை. ஆறு வருடங்களாக மாகாணசபை தேர்தல்களும் இல்லை.
தேர்தல்களில் மக்களிடம் செல்வதை தவிர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தன்னாலியன்ற சகல பிரயத்தனங்களையும் செய்யும் என்ற வலுவான சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது.
தேசிய தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தந்திரோபாயமாக கடந்த இரு வருடங்களில் அவ்வப்போது அரசாங்க அரசியல்வாதிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு, பாராளுமன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் என்றெல்லாம் பேசிய சந்தர்ப்பங்களையும் நாம் கடந்துவந்திருக்கிறோம்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க எண்ணற்ற தடவைகள் கூறியிருக்கின்ற போதிலும் கூட பொதுவெளியில் அந்த சந்தேகத்தைப் போக்க இயலாமல் இருக்கிறது.அதற்கு ஏற்றமாதிரியே அரசியல் நிகழ்வுப் போக்குகளும் அமைந்து விடுகின்றன.
உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விக்கிரமசிங்க நாட்டம் காட்டக்கூடும் என்று ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலத்தில் நான்கு வருடங்கள் கடந்த பிறகு தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மாத்திரமே இருக்கிறது என்ற அரசியலமைப்பு ஏற்பாடு அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.
பிறகு மிகவும் அண்மையில் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிப்பதற்கு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவந்து அதை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் யோசனை ஒன்றை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்தார். சர்ச்சை பெரிதாக கிளம்புவதற்கு முன்னதாகவே விக்கிரமசிங்கவும் கட்சியினரும் அந்த யோசனையில் இருந்து தங்களை தூரவிலக்கிக் கொண்டனர்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மிகவும் அண்மைய வாரங்களில் கிளம்பிய சர்ச்சை ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கின்ற நிலையில், தேர்தலுக்கு இடையூறாக வருமா என்ற ஐயத்துக்கு வழிவகுத்தது.
2015 ஆண்டில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கிய சரத்தில் பொருத்தமான மாற்றத்தைச் செய்யாமல் ஆறு வருடங்கள் என்றே இருக்க விடப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதானால் அதற்கான அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படுவதுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களின் அங்கீகாரமும் பெறப்படவேண்டும். அது சம்பந்தப்பட்ட சரத்தில் ஆறு வருடங்கள் என்று இருப்பதை ஐந்து வருடங்கள் என்று மாற்றுவதானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு போகவேண்டும்.
சர்வஜனவாக்கெடுப்பை நடத்தாமல் 19 வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டிய அன்றைய அரசாங்கம் அந்த மாற்றத்தை செய்வதை தவிர்த்தது.
ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது குறித்து பாராளுமன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற விவாதத்தில் இதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற எம்.ஏ. சுமந்திரன் விளக்கிக் கூறியிருந்தார்.
சட்டரீதியான அந்த ‘குறைபாட்டை ‘ பயன்படுத்தி ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை ஒரு வருடகாலத்துக்கு நீடிப்பதற்கு முயற்சிக்கக்கூடும் என்று எதிரணி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் சந்தேகம் கிளப்பின.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மொரட்டுவையை சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார். அவரின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின.
அந்த மனுவை உயர்நீதிமன்றம் கடந்த வார முற்பகுதியில் நிராகரித்து நான்கு நாட்கள் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சட்டத்தரணி இன்னொரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் உகந்த முறையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதால் அதை பொருத்தமான முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு வசதியாக ஜனாதிபதி தேர்தலை நிறுத்திவைக்க உத்தரவிடுமாறு அந்த மனுவில் அவர் உயர்நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார்.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான நிபந்தனைகள் அரசியலமைப்பின் 83 (பி) சரத்திலேயே கூறப்பட்டிருக்கின்றன. அதில் ‘ ஆறு வருடங்களுக்கும் மேலாக ‘ என்பதை ‘ ஐந்து வருடங்களுக்கும் மேலாக ‘ என்று மாற்றுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை கடந்தவாரம் அங்கீகாரம் அளித்திருக்கிறது
ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அந்த சட்டத்தரணியின் நடவடிக்கையுடன் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ அது வேறு விடயம். எப்பாடு பட்டேனும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதிலேயே ஜனாதிபதி குறியாக இருக்கிறார் என்று பிரசாரம் செய்வதற்காக அவருக்கு எதிரான அரசியல் சக்திகள் கூட அந்த சட்டத்தரணியின் பின்புலத்தில் இருக்கவும் கூடும். அந்த அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் எவ்வாறு கையாளப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனு திங்களன்று நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தை ஜூலை 17 தேர்தல்கள் ஆணைக்குழு பெறுகிறது. தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு இனிமேல் இடையூறு இல்லை.
மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் 2019 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானத்தைக் கோரினார். 2015 ஜனவரியில் ஜனாதிபதியாக தெரிவானபோது ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்கள் என்றே அரசியலமைப்பில் இருந்ததால் ( பிறகு 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் அது ஐந்து வருடங்கள் என்று குறைக்கப்பட்டிருந்தாலும்) தன்னால் ஆறு வருடங்கள் பதவியில் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பில் (நப்பாசையில் ) தான் அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மாத்திரமே என்று உயர்நீதிமன்றம் அதன் தீர்மானத்தில் உறுதியாகக் கூறியது. அவ்வாறாக ஐந்து வருடங்களுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் கூறிவிட்டபோதிலும், பதவிக்காலம் தொடர்பில் அதுவும் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் நூறு நாட்கள் கூட இல்லாத நிலையில் ‘ பல்வேறு அரசியல் கூத்துக்கள் ‘ அரங்கேறுவதை காண்கிறோம்.
வெறுமனே ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் குறைகூறுவதைத் தவிர எதிரணி கட்சிகளினால் இந்த விவகாரத்தை உருப்படியாகக் கையாளமுடியவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் நடத்தவேண்டிய தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டிய தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இது இவ்வாறிருக்க, மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாக ஜனாதிபதி விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோரே களமிறங்கப் போகின்றனர். இவர்களில் பிரேமதாசவும் திசாநாயக்கவும் கடந்த வருடமே தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதை அறிவித்து பிரசாரங்களையும் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால், விக்கிரமசிங்க இன்னமும் வெளிப்படையாக தான் தேர்தலில் போட்டியிடப்போவதை அறிவிக்கவில்லை. அதற்கு அவர் தரப்பில் காரணங்கள் இருக்கலாம். அது வேறு விடயம்.
வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கண்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் தவிர்த்த அவர் மீண்டும் அவ்வாறு செய்துவிடக்கூடும் என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்களுக்கு இருக்கிறது போலும்.
சமூக ஊடகங்களில் ‘ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணிலை உற்சாகப்படுத்துவோம்’ என்று விசித்திரமான பிரசாரப் பதிவைக் காணக்கூடியதாக இருந்தது.