சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை : பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்..!                     (பகுதி :6)

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை : பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி :6)

— அழகு குணசீலன் —

மட்டக்களப்பு பிரதேசத்தில் போர்த்துக்கேயர் கால பெரிய அளவிலான முஸ்லீம் மக்களின் குடியேற்றங்கள் கி.பி. 1605 ஐ தொடர்ந்தவையாயினும், ஏற்கனவே வியாபார நோக்கில் வந்தவர்கள் 1540 காலப்பகுதியில் கல்முனை -நற்பிட்டிமுனைப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். 1505 இல் போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோர மாகாணங்களை கைப்பற்றிய பின்னரான சிறியளவான குடியிருப்பாக இது இருந்துள்ளது. இது சிற்றரசன் எதிர்மன்ன சிங்கன் காலம் என்று கொள்ளப்படுகிறது. இதே போன்று போர்த்துக்கேயரின் வருகையைத்தொடர்ந்து இங்கு தொழில் நிமித்தம் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டதே இன்றைய மட்டக்களப்பு பறங்கியர் சமூகமாகும்.

மட்டக்களப்பு போர்த்துக்கேயர் வசம் வருவதற்கு முன்னரே யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமானது. யாழ்பாணத்தில் போர்த்துக்கேயரின் மதரீதியான தொடர்புகள் ஏற்பட்டு சுமார் கால் முதல் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னரே மட்டக்களப்பில் மதரீதியான தொடர்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு போர்த்துக்கேயர் வசம் 1622 இல் வந்ததாக கூறும் மட்டக்களப்பு வரலாறு, ஆனால் இதற்கு முன்னரே மத ரீதியான தொடர்புகள் போர்த்துக்கேயர் பாதிரிகளுக்கும் மட்டக்களப்புக்கும் இருந்ததாக கூறுகிறது. இது போர்த்துக்கேயர் கோட்டை அரசசோடு நல்லுறவில் இருந்தகாலம் .

இதற்கு ஆதாரமாக மட்டக்களப்பின் அரசியல்  வரலாற்று ஆய்வாளர் டி.சிவராமின் கட்டுரை ஒன்றை மட்டக்களப்பு வரலாற்றில் ஆசிரியர் வெல்லவூர்க்கோபால் மேற்கோள் காட்டியுள்ளார். இதன்படி, “மட்டக்களப்பு தனி இராச்சியமாக இருப்பதையும், மட்டக்களப்பு மன்னனைத் தான் சந்தித்ததாகவும், கோட்டை இராச்சியத்தில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக்கொள்ள பீரங்கி போன்ற உதவிகளை போர்த்துக்கல் மன்னனிடம் மட்டக்களப்பு மன்னன் கோரியதாகவும், பதிலாக கப்பல் கட்டும் மரங்கள் போன்றவற்றை பண்டமாற்றாகத்தர விரும்புவதாகவும் “குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக  கிறிஸ்தவ பாதிரியார் சைமாவே கோயம்பரா தலைமைக்கு எழுதிய கடிதங்களை ஆதாரமாகக்கொள்கிறார் சிவராம்.

ஒல்லாந்தர் காலத்தில் மட்டக்களப்பு போடிகளுடன் ஒரு நல்லிணக்கம் பேணப்பட்டு அவர்களுக்கு உள்ளூர் நிர்வாக ஆட்சிப்பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவர்கள் பதவிசார் போடி நிலமை, ஊர்ப்போடிகள் என அழைக்கப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய போடிகளுக்கும் நிர்வாகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் மத மாற்றங்களுக்குட்பட்ட நிலையில்  ஏழை, ஆநாதைச் சிறுவர்களுக்கு கல்வி, விடுதி, உணவு வசதிகளும் ஒல்லாந்தரால் அளிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் காணப்படும் “ஆர்மன் கோணர்” என்ற பகுதி இதற்கு சான்று பகர்கின்றது.

 டச்சு (ஒல்லாந்தர் மொழி), டொச் (ஜேர்மன் மொழி) இவை இரண்டுக்கும் இடையே நிறைய தொடர்புகள் உண்டு. பெரும்பாலும் உச்சரிப்பு தொனியில் ஒன்றாகவும், எழுத்து வழக்கில் சற்று வேறுபட்ட எழுத்துக்களை கொண்டதாகவும் இவை உள்ளன.  ARMEN என்பது டச்/டொச் மொழிகளில் வறியவர்களை குறிக்கின்ற வார்த்தையாக உள்ளது. எழுத்துவழக்கில் “ஆர்மன் கோணர்” என்பது “ARMEN KORNER” என்று எழுதப்படுவதே வழக்கம். ஆங்கிலத்தில் ‘C’ பயன்படுத்தப்படுகின்ற இடங்களில் ‘K’ பயன்படுத்தப்படுவது  இந்த இரு மொழி வழக்கிலும் உள்ளது. டச்சு/டொச் மொழிகளில் ARME / N  என்ற ஒருமை/ பன்மை வார்த்தைகள் வெறுமனே ஏழை என்பதற்கும் அப்பால் அனுதாபத்திற்குரியவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள், இரக்கத்திற்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் உள்ள “ஆர்மன் (ர்) வீதிகள்” இவற்றோடு தொடர்புபடுத்தி ஆராயப்படவேண்டியவை.

காலனித்துவ விதேசிகளுடன் இணங்கிப்போகாத மட்டக்களப்பு போடிகள் சமூகக்கட்டமைப்பினர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்றே ஆங்கிலேயர் வருகையையும் எதிர்த்துள்ளனர். 1803 ல் கண்டி இராச்சியத்திற்கு எதிராக பிரித்தானியர் படையெடுத்த போது மட்டக்களப்பு போடிகள் கண்டிக்கு தமது ஆதரவை வழங்கியிருப்பதை வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. இதனால் ஆங்கிலேயரால் போடிகளுக்கு சொத்து பறிமுதல், சிறைவாசம், மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. 

இந்த நிலையில் தமக்கு ஆதரவானவர்களை யாழ்பாணத்தில் இருந்து கொண்டு வந்து தமது அதிகாரத்தை பலப்படுத்தவேண்டிய தேவை ஆங்கிலேயருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு  சுதேசிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்  ஆங்கிலேயர்களுக்கு ஆதரவானவர்கள், கிறிஸ்த்தவ மதத்திற்கு மாறியவர்கள்  மிஷனரிகளினூடாக மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டு மட்டக்களப்பு சுதேச போடிகளின் ஆட்சி அதிகாரம், பொருளாதார பலம் என்பன பலவீனப் படுத்தப்பட்டுள்ளன. அதாவது மட்டக்களப்பு பாரம்பரிய குடிகளுக்கு எதிராக ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு காலனித்துவ கால பயனீட்டு அரசியலில் மட்டக்களப்பாருக்கு எதிராக பலன் பெறவும், பலம் பெறவும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

ஐரோப்பியர்களால் மட்டும் அல்ல, தமிழர்களாக, தமிழ் கிறிஸ்த்தவர்களாக வந்த  ஆதிக்க பங்காளிகளால் மேற்கொள்ளப்பட்ட  செயற்பாடுகளை வரலாற்றாசிரியர் வெல்லவூர்க்கோபால் தனது மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் என்ற நூலில் மிகத்தெளிவாக பதிவிடுகிறார்.

“போர்த்துக்கீசராலும் ஒல்லாந்தராலும் படிப்படியாக அதிகார வலுவிழந்து போன இவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கீழ் சொத்து இழப்புக்களுக்கும் முகம் கொடுக்கலாயினர். அவர்களது ஆட்சிக்கு அனுசரணையாளர்களாக செயல்பட்ட சுதேசிகள் சிலரும், மதம் மாறியவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கிறித்தவ மிசனறிகள் ஊடாக இங்கு வந்து சேர்ந்தவர்களும் ஆதிக்க நிலையில் உயர்ந்தனர். கால ஓட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தின் முன்னெடுப்பாளர்களாக மாறிய இவர்கள் மட்டக்களப்பின் வரலாற்று புகழ் மிக்க ஆதிக்க சமூகத்தினரை சகல நிலையிலும் புறம் தள்ளி கல்வி, அரசு உத்தியோகம் என சகலதையும் ஆக்கிரமித்ததோடு முற்குகப் போடிமாரின் பறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலபுலங்களை கொள்ளை விலைக்கு ஆங்கில அரசிடமிருந்து அபகரித்தும் கொண்டனர். கிறிஸ்த்தவ மிசனறி ஒன்றுக்கு தலைமைப்பொறுப்பை ஏற்றுவந்த ஒருவர் மட்டக்களப்பு நகரப்பகுதியில் பெருமளவு சொத்துக்களை உடமையாக்கியதோடு புறநகர்ப்பகுதியில் நூறு ரூபாய் பணத்துக்கு நூறு ஏக்கர் காணியை பெற்றுக்கொண்டமைக்கான வரலாறும் மட்டக்களப்பில் உண்டு ” என்று அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி இராச்சியத்திற்கு கீழ் மட்டக்களப்பு இருந்த போது கடமையில் இருந்த நிலமைபோடிகள் பற்றிய விபரங்கள் இவை.  இது ஒல்லாந்தர் ஆட்சிக்கும், ஆங்கிலேயர் ஆட்சிக்கும் இடையிலான நிலைமாறுகாலப்பகுதியாக இருக்க வாய்ப்புண்டு.

1. நிலமை வேலாப்போடி ( திமிலதீவு)

2.நிலமை பாலிப்போடி (படையாண்டவெளி)

3.நிலமை கதிராமப்போடி (மகிழடித்தீவு)

4.நிலமை பெரியகரவாகுப்போடி (சாய்ந்தமருது)

5.நிலமை வைகாளிப்போடி (சம்மாந்துறை)

6.நிலமை வீமாப்போடி (சம்மாந்துறை)

7.நிலமை கதிராமப்போடி (புதுக்குடியிருப்பு)

8. நிலமை சின்னத்தம்பிப்போடி (எருவில்)

பின்னர் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் தங்களுக்கு சார்பாக செயல்படக்கூடிய நம்பிக்கைக்குரியவர்களை வன்னியர்களாகவும், உடையார்களாகவும் நியமித்துள்ளனர். இதில் கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தலைமைப் பொறுப்பில் மூன்று மதத்தவர்களும் இருந்துள்ளனர்.

1. சம்மாந்துறை -நாடுகாடுபற்று : டானியல் கதிராமப்போடி வன்னியன்.

2.அக்கரை, நிந்தவூர்,பாணமை பற்றுக்கள் : தம்பையா வன்னியன்.

3.மண்முனைப்பற்று : றொபேட் குஞ்சிளையாப்போடி வன்னியன்.

4.ஏறாவூர்-கோறளைப்பற்று :அகமது லெப்பை வன்னியன்.

5.எருவில்-போரதீவு-கரவாகுப்பற்று: சின்னத்தம்பி வன்னியன்.

6.விந்தனைப்பற்று: வில்லியம் ஜேம்ஸ் சுப்பிரமணியம் வன்னியன்.

ஏற்கனவே இருந்த நிலைமை போடிகளுள் சின்னத்தம்பி நிலமை போடி மட்டுமே வன்னியனாக நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தவர்கள் மிஷனறிகளோடும், நிர்வாகத்தோடும் ஒத்தோடி, பட்டம் பதவிகளையும், உயர்கல்வி வசதிகளையும் பெற்றுக்கொண்ட நிலையில் மட்டக்களப்பு சமூகத்தில் அதற்கு மாறான ஒரு நிலை காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் மேலாண்மை சமூகம் எனக்கருதப்பட்டவர்கள் அந்நியரையும், அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மதமாற்றம், கல்வி, மற்றும் வசதிவாய்ப்புக்களையும் நிராகரித்தவர்களாக உள்ளனர். இந்த நிலையானது இன்று வரை மட்டக்களப்பின் -கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுதேசிய போடிகளின் எதிர்ப்புகள் குறைந்த நிலையில் இவற்றில் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒல்லாந்தர் கால நீதிபரிபாலனத்தில் அவர்களின் குற்றவியல் சட்டத்துடன், குடியியல் சார்ந்து முற்குகர் சட்டம் வழக்கில் இருந்துள்ளது. அப்போது  அவர்களின் நீதி நிர்வாகத்துறையிலும் உள்ளூர் போடிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். பிரித்தானியர் காலத்தில் முற்குகர் சட்டம் புறக்கணிக்கப்பட்டு தேசிய சட்டம் முதன்மை பெற்றதனால் மட்டக்களப்பின் நீதி நிர்வாகம் காலப்போக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஆங்கிலக்கல்வி கற்றவர்களின் கைக்குமாறியதை அறியமுடிகிறது.

வழக்காளியும் எதிரியும் இப்பிரதேசத்தை சார்ந்தவர்கள். இவர்கள் ஆங்கில அறிவு அற்றவர்கள். நீதிபதி, சட்டத்தரணிகள்,நீதிமன்ற அலுவலர்கள் எல்லோரும் ஆங்கில மொழிமூலம் கடமையாற்றும் இப்பிரதேசம் சாராதவர்கள்.  டச்சு, ஆங்கிலேய சட்டங்களை பயின்றவர்கள், யாழ்ப்பாண தேசவழமைச்சட்டத்தையும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் மட்டக்களப்பின் மரபுகளையும், வழக்காறுகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் வன்னியர்களால் அவர்களின் பிரதேசங்களில் “கிராமக் கோர்ட்டுகள்” கிராமிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளூர் விசாரணைகள் இடம்பெற்றிருப்பதை பல்வேறு வரலாற்று தகவல்களில் இருந்தும் அறிய முடிகிறது.

 பண்டைய ஈழ வரலாற்று காலத்தை தவிர்த்து, 1505  போர்த்துக்கேயர் வருகையுடன் ஆரம்பித்து  இலங்கை சுதந்திரம் பெற்ற  1948 வரையான 433 ஆண்டுகளில் மட்டக்களப்பு சுதேசிய சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பு அந்நியர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற போது  பிரித்தானிய ஆட்சியின் அரசாங்க சபை அங்கத்துவ. நிர்வாகப் பிரிவாக மட்டக்களப்பு பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்ப்டிருந்தது. கல்லடிப் பாலத்தை  மையப்படுத்தி  பிரிக்கப்பட்ட இந்த பிரிவில்  கல்லடிப்பாலம் முதல் வெருகல் ஆறு வரையான பிரதேசம் மட்டக்களப்பு வடக்கு என்றும், கல்லடிப்பாலத்திலிருந்து குமுக்கன் ஆறுவரை நீண்ட தென்பகுதி மட்டக்களப்பு தெற்கு என்றும் அழைக்ப்பட்டது. மட்டக்களப்பு வடக்குக்கு வி.நல்லையா அவர்களும், தெற்கிற்கு தருமரெத்தினம் அவர்களும் இருந்தனர்.

பண்டைய ஈழத்தில் சம்மாந்துறை – மட்டக்களப்பை மையப்படுத்திய மட்டக்களப்பு வடக்கு, மட்டக்களப்பு தெற்கு செப்பேட்டு திசை குறியீடு அல்ல இது.  மாறாக புளியந்தீவு -மட்டக்களப்பை மையப்படுத்திய  திசைக்குறியீடு .

* இன்னும் வரும்……..!