— அழகு குணசீலன் —
இலங்கை ஊடகங்களில் அதிக நேரத்தையும், பக்கங்களையும் நிரப்புகின்ற செய்திகளாக தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர், மற்றும் தமிழ் பொதுவேட்பாளர் குறித்த செய்திகளே இன்னும் உள்ளன.
இவ்வார மௌன உடைவுகளின் கவனத்தை ஈர்த்திருப்பது தமிழ், சிங்கள தேசியங்களின் “குறியீடாக” அமைகின்ற இரு கருத்துக்கள். ஒன்று தேசிய மக்கள் சக்தியின் ( NPP/JVP) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா கூறியது. மற்றையது தமிழ்பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர் மாவை சேனாதிராஜா கூறியிருப்பது.
“இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்கவேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏன் இனவாதத்தை கொண்டு வருகிறார்கள்? என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாதவிடத்து, பிள்ளைகளுக்கு தொழில் ஒன்றை வழங்க முடியாதவிடத்து, மீனவர்களது பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், அவர்கள் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவார்கள். இந்த இனவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து சிங்கள மக்களுக்கான ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்வார்கள்” . இதை அநுரகுமார திசாநாயக்க கிழக்குமாகாணம் காரைதீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
“ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கிறார்கள் என்பதை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்சொல்வதற்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை ஒரு மக்கள் ஆணைபெறும் விடயமாக அல்லாமல் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை மீண்டும் தெளிவாக எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்”. இப்படி யாழ்ப்பாண ஊடகசந்திப்பொன்றில் மாவை சேனாதிராஜா கூறினார்.
இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு தேசியங்களும் தங்கள் இருப்பை தக்க வைப்பதற்கான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்த மாவையின் கருத்து இலங்கை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருந்து விலகி கரையில் ஒதுங்கிக்கிடக்கின்ற தமிழ்க்குறுந்தேசியவாதத்தின் அடையாளம். அநுரகுமாரவின் கருத்து ஒட்டு மொத்த இலங்கை தேசிய வாதம் என்ற தோற்றத்தை காட்டினாலும் உள்ளே ஒழிந்து கிடப்பது பெரும்பான்மை சிங்கள, பௌத்த பேரினவாத சிங்கள தேசியம்.
இந்த பெரும், குறும் தேசிய வாதங்களின் கருத்துக்கள் வெவ்வேறானவையாக தெரிந்தாலும் இருதரப்பிலும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான நிலைப்பாட்டை கொண்டவை. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினையை “பொருளாதார” கண்ணாடியை மட்டும் போட்டு பார்க்கிறார்கள். தமிழ்த்தேசிய பொதுவேட்பாளர் அணி சொந்த மக்களின் உரிமை சார் பிரச்சினைகளை பொருளாதாரத்தை விலத்தி வெறும் ” அடையாள” அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்கிறார்கள். அடிப்படையில் மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கெல்லாம் பொருளாதாரம் காரணமாக அமைகிறது. இலங்கையின் இனப்பிரச்சினையின் அடிப்படையே பொருளாதாரம் தான். இதை ஒருகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக்கோரிக்கை உறுதி செய்கிறது.
ஆனால் இன்றைய நடைமுறை உலகில் ஒன்றை ஒன்று விலக்கி -தவிர்த்து பார்க்க முடியாது. சமுக, பொருளாதார,அரசியல் ” கலப்பு” பிரச்சினைக்கு தீர்வாக ஒரு “கலப்பு” அணுகுமுறை தேவை. இங்கு பேசப்படுவது முதலாளித்துவ், சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளின் கலப்பு அல்ல. மாறாக சமூக அடையாள, பொருளாதார அரசியல் கலப்பு. உரிமை அரசியல், அபிவிருத்தி அரசியல் என்பவை சமுத்திரத்தில் தனித்தனியான இரு தீவுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. இரண்டையும் சமாந்தரமாக கையாண்டு காலப்போக்கில் ஒரு “போத்தல் கழுத்து” (Bottel Neck) நிலையை அடைவதன் மூலமே பிரச்சினைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க முடியும். பன்மைத்துவ சமூகங்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்தும். ஒரு புள்ளியில் சந்தித்து ஒன்றோடொன்று சங்கமாகி விடவேண்டும் என்ற தேவையும் இல்லை.
ஆனால் மேலே இரு தேசியங்களினதும் அரசியல் பிரதிநிதிகளாக அநுரவும், மாவையும் பேசுகின்ற அரசியல் இரு வேறு கோணங்களை தனித்தனியாக நோக்குகிறது. இதுவே சுதந்திரம் பெற்ற காலம் முதல் பேசப்படுகின்ற அணுகுமுறை. தமிழர் அரசியல் பேசுகின்ற அடையாள உரிமை அரசியலை தவிர்த்து, அல்லது சிங்கள தேசம் பேசுகின்ற பொருளாதார அபிவிருத்தி அரசியலை தவிர்த்து இந்த சமுக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வு கிடங்கை மூட முடியாது. இரு பக்க அணுகுமுறையாலும் மூடுவதற்கான அணுகுமுறைகள் தேவை.
கடந்த 75 ஆண்டுகளாக சிங்களத்தலைவர்களால் “ஏமாற்றப்பட்டோம்” என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் பட்டியல் ஒப்புவிக்கின்ற தமிழ்த்தேசிய அரசியல் தாங்கள் “ஏமாந்து”இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து மறு தரப்பை நோக்கி சுட்டு விரலை நீட்டுகிறது. 75 ஆண்டுகளாக ஏமாந்ததற்கான காரணங்களை ஆராயமறுக்கிறது. ஏமாந்ததை மறைக்கிறது. ஏமாற்றியது “கெட்டித்தனம்” என்றால் ஏமாந்தது “முட்டாள்தனம்” என்று தானே கொள்ளவேண்டும். இந்த தமிழ்தரப்பு பலவீனம் சுயவிமர்சனம் செய்யப்பட்டதாக இல்லை. மாறாக காலத்திற்கு காலம் கோரிக்கைகள் கடுமையாக்கப்பட்டு தேர்தல் வெற்றியே இலக்காக இருக்கிறது. அது மட்டுமின்றி கோரிக்கைகள், அணுகுமுறைகளுக்கு இடையே ஒரு தொடர்ச்சியை காணமுடியவில்லை. தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் கூட விடயதானமற்ற நாடாளுமன்ற “அச்சாறு கத்தாவ” சாயல் கதைகளே இடம்பெறுகின்றன. இதனால் தான் பலவீனமான அரசியலில் ஜதார்த்தத்திற்கு பொருத்தமற்ற, நடைமுறை சாத்தியமற்ற,அடைய முடியாத இலக்குகள் முன்வைக்கப்படுகின்றன.
மேலே குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் தமிழ் பொது வேட்பாளர் ஆதரவு கருத்து உண்மையில் பொது வேட்பாளரை பலவீனப்படுத்தும் ஒன்று. ” …. மக்கள் ஆணைக்கானதாக அதைக் கொள்ளத்தேவையில்லை” என்கிறார் அவர். 1977 நாடாளுமன்ற தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து பெறப்பட்ட தனிநாட்டுக்கோரிக்கை ஆணையைத்தான் அவர்கள் இன்னும் பேசுகிறார்கள். ஆனால் கடந்த 47 ஆண்டுகளில் அகிம்சை, ஆயுத அரசியல் தோற்றுப்போனதற்கான அல்லது உங்கள் வார்த்தைகளில் ஏமாற்றப்பட்டதற்கான அரசியல் பலவீனங்கள், தவறுகள் இவற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எவை அவற்றை தமிழ்த்தேசிய அரசியல் இதுவரை எங்கே உள்வாங்கி இருக்கிறது?
இன்றைய நிலையில் 1977 தேர்தலில் வடக்கு -கிழக்கில் பெற்றுக்கொண்ட வாக்குகளில் 50 வீதத்தை கூட தமிழ்ப்பொது வேட்பாளரால் பெறமுடியாது . தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் தன்னை கடந்த 47 ஆண்டுகளாக மாற்றிக்கொள்ள வில்லை ,திருத்திக் கொள்ளவில்லை என்பதற்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 1977 இல் நின்ற இடத்தில்தான் நிற்கிறார்கள் என்று நினைப்பது தவறான அரசியல் எடுகோள். தமிழச்சமூகம் இயங்குநிலை சமூக, பொருளாதார, அரசியலில் தமிழ்த்தேசிய அரசியலை ஒரு இடத்தில்-நடு வழியில் விட்டு விட்டு பயணிக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சந்தேகம் மாவைக்கு இருக்கின்ற காரணத்தினால் தான் “ஆணையாக கொள்ள வேண்டியதில்லை” என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
பொது வேட்பாளர் பெறும் ஆதரவை “தமிழ் மக்கள் மீண்டும் ஒன்று பட்டு ஓரணியில் நிற்கிறார்கள் என்பதை அனைத்து தரப்புக்கும் காட்டலாம்” என்பது மற்றும் ஒரு ஏமாற்று. தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு, மக்களையும் ஏமாற்றுவது. யார் அந்த அனைத்து தரப்பும்? கடந்த 75 ஆண்டுகளாக இந்த தரப்புக்களுக்கு காட்டிய தேர்தல் வெற்றிகளால் இது வரை அடையப்பட்டுள்ள அரசியல் இலக்குகள் எவை?
உண்மையில் சமகால, தேசிய, பிராந்திய, சர்வதேச ஒட்டு மொத்த சூழலை கணக்கில் எடுத்து, தமிழ்பொதுவேட்பாளர் ஆலோசனை “வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளப் பெறுவதற்கான மக்கள் ஆணை வாக்கெடுப்பு” என்று சொன்னால் 1977 இல் தனிநாடு கோரிக்கைக்கு அளித்த வாக்குகளை விடவும் அதிகமான வாக்குகளை தமிழ் மக்கள் அளிப்பார்கள். அதனை ஒன்று பட்ட, பிரிக்கப்படமுடியாத, ஒற்றையாட்சி இலங்கைத்தீவில் மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வுக்கு ஆவது பிரயோசனப்படுத்த முடியும்.
சிங்கள மக்களுக்கும், சிங்கள கடும் போக்காளர்களுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். மாவை கூறுகின்ற “அனைத்து தரப்புக்கும் காட்டமுடியும்” என்ற வார்த்தைகளுக்கு பின்னால் உள்ள சிங்கள மக்களுக்கான மறைமுக அச்சுறுத்தல் மூலம் எழுகின்ற அச்சத்தை போக்க முடியும். இந்த பாணியிலான “வெளியாரை காட்டி” அச்சுறுத்தும் அரசியல் போக்கு இதுவரை பெற்றுதந்த அரசியல் அடைவையும் பூச்சியமாக்கியவர்கள் யார். அது ஆயுதப்போராட்ட காலத்தில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்ததுடன், நோர்வே சமாதான முயற்சி காலத்தில் பேசப்பட்ட சமஸ்டி ஆலோசனையுடன் முடிந்த கதை.
“இனவாதம்” பற்றி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ள கருத்துக்கள் சிங்கள ஆட்சியாளர்களை மட்டும் பார்த்து சொல்லப்பட்டதல்ல. தமிழ்த்தேசிய, முஸ்லீம் தேசிய அரசியலைப்பார்த்தும் சொல்லப்பட்ட ஒன்று. அதே நேரம் தாங்கள் இனவாதிகள் அல்ல என்று அநுரகுமார காட்ட முயற்சிப்பதும் ஒரு அரசியல் ஏமாற்று. ஜே.வி.பி. இனவாதம் அற்ற அரசியலை தென்னிலங்கையில் செய்யக்கூடிய பலமான சக்தியாக இருந்தும், தென்னிலங்கை பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மாணவர் பேரவைகளை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தும், மற்றைய கட்சிகளில் நிலவுகின்ற “முற்போக்கு” சக்திகளின் தட்டுப்பாட்டிற்கு அப்பால் தாராளமாக சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வாளர்களையும், புத்தி ஜீவிகளையும் கொண்டிருந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றிற்கு ஆட்சியாளர்களை நகர்த்துவதற்கு அல்லது ஆதரவளிப்பதற்கு அது தவறிவிட்டது. இப்போது தேர்தல் வெற்றிக்காக சிறுபான்மை மக்கள் மத்தியில் முகமூடி அரசியல் செய்யத்தொடங்கியுள்ளது.
ஜே.வி.பி.யின் ஆரம்பகால ஐந்து விரிவுரைகளின் உள்ளடக்கம், மலையக மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பிரகடனம் செய்தமை, இந்திய மேலாதிக்கத்தின் அடையாளமாகவும் மலையகத்தொழிலாளர்களை பார்த்தவை போன்ற மன்னிக்க முடியாத பாரிய “சிவப்பு” அரசியல் குழறுபடிகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பார்த்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுவிவகாரங்களில் மாத்திரம் இதுவரை ஜே.வி.பி. எந்த கரத்தையும் சிறுபான்மை மக்களை நோக்கி நீட்டியதில்லை. இனியும் தமிழ்த்தேசியம் எதிர்பார்க்கின்ற அதிகாரப்பகிர்வுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
இதனால்தான் அவர்கள் இருக்கின்ற மாகாணசபை தற்காலிகமாக இயங்க வைப்பது பற்றி பேசுகிறார்கள். அரசியலமைப்பு மாற்றம்/திருத்தத்திற்கு தேவையான பாராளுமன்ற பெரும்பான்மையை ஜே.வி.பி. எங்கிருந்து பெறுவது? அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றத்தில் அவரின் சிந்தனைகளுக்கான கதவுகள் அகலத் திறந்திருக்கப்போவதில்லை.
ஜே.வி.பி.யின் நோக்கம் மாகாணசபை முறைமையை இல்லாமல்செய்து மொழி, காணி, மத உரிமைகளில் சில திருத்தங்களை செய்வது மட்டும் தான். இது அதிகாரப்பகிர்வுக்கு இடமளிக்காத மிகக்கடுமையான, நெகிழ்ச்சி அற்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறையாக அமையும். இது வரையான ஜே.வி.பி.யின் வரலாற்றில் இருந்து சிறுபான்மை தேசிய இனங்கள் இவற்றையே கற்றுக்கொள்ள முடிகிறது.
அறகலய அரசாங்க எதிர்பைத் தொடர்ந்து அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்தும், ஆதரவும் அதிகரித்த போதும் ஆகக்குறைந்தது கடந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஜே.வி.பி. சிறுபான்மை மக்கள் மீது தனது அக்கறையை வெளிப்படுத்தவில்லை. அதை வெளிப்படுத்துவதற்கான,போராட்டங்களை நடாத்துவதற்கான வாய்ப்பும், வளங்களும் அவர்களுக்கு இருந்தும் அதை அவர்கள் செய்யவில்லை. இதனால்தான் வடக்கு கிழக்கு தொல்பொருள் ஆராய்ச்சி, காணிப்பிரச்சினைகள், பௌத்த தலங்கள் அமைப்பு, மேய்ச்சல் தரை விவகாரங்களில் , நினைவேந்தல் நிகழ்வுகள், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் எல்லைப்புற பிரச்சினைகளில் ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ , அல்லது அதற்கான ஒரு தீர்வை முன்வைக்கவோ, சிறாபான்மை பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் செயற்படவோவில்லை.
பொதுவாகவும், சிங்கள மக்களின் விவகாரங்கள் குறித்துமே அவர்கள் பேசி வந்துள்ளனர். அறகலயவிற்கு பின்னர் ஜே.வி.பி. அரசியல் ஜனாதிபதி தேர்தல் அரசியலாகவே இருக்கிறது.
வடக்கு,கிழக்கு மாகாணங்கள் குறித்து ஜே.வி.பி. சாதிக்கும் மௌனம் அவர்களின் சிங்கள மேலாதிக்க அரசியலின் வெளிப்படைத்தன்மை அற்ற அரசியலைக் குறிக்கிறது. ஆட்சியாளர்கள் சிங்கள மக்களுக்கான ஆட்சியை வழங்குவோம் என்று சொல்வார்கள் என்று சொல்லும் அநுரகுமார அவரின் செயற்பாடுகளின் மூலம் -உடல்மொழியின் மூலம் அதையே செய்துவருகிறார். இந்த வெளிப்படைத்தன்மை அற்ற அரசியல் சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் ஜே.வி.பி. குறித்த சந்தேகத்தையும், நம்பிக்கையில்லாத்தன்மையையும் அதிகரித்திருக்கிறது. இனவாதத்தை பற்றி பேசும் அநுரகுமார பாராளுமன்ற விவாதங்களில் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான சிங்கள கடும்போக்காளர்களுக்கு எதிராக எத்தனை தடவைகள் பேசியிருக்கிறார். ?
இது மௌனமே சம்மதமா……?