பிரிட்டன்: இது கடவுளற்ற நாடாளுமன்றமா?

பிரிட்டன்: இது கடவுளற்ற நாடாளுமன்றமா?

— மணிவண்ணன் திருமலை —

பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலை அடுத்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் எந்த மதப்புத்தகத்தின் மீதும் உறுதிமொழி ஏற்காமல்,  மதசார்பற்ற வகையில் உறுதிமொழி ஏற்றனர்.  

2) இதில் பிரிட்டிஷ் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களில் 50 விழுக்காட்டினர் இவ்வாறு மத சார்பற்ற உறுதி மொழியை எடுத்தனர்.  

3) பிரதமர் கியர் ஸ்டாமர் கடவுள் நம்பிக்கையற்றவர்,  இவரும்  மதசார்பற்ற உறுதிமொழியை எடுத்தார். ( 1924ல் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டனால்டுக்குப் பின்னர் இவ்வாறு மத சார்பற்ற பதவிப்பிரமாணத்தை எடுத்த பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் என்று  கன்சர்வேடிவ் கட்சி ஆதரவு இதழான “டெய்லி மெயில்” கூறுகிறது.).  ஆயினும் இறை நம்பிக்கை அற்ற பிரிட்டிஷ் பிரதமர்களில் இவர்கள் இருவர் மட்டுமில்லை.  போர்க்கால பிரதமர் சர்ச்சில்,  அவருக்குப் பின் வந்த ( இந்திய சுதந்திரத்தின் போது பிரதமராக இருந்த) கிளமெண்ட் அட்லீ, ஜேம்ஸ் கேலகன், நெவில் சேம்பர்லின்,  டேவிட் லாய்ட் ஜார்ஜ் ஆகியோரும் இறை நம்பிக்கை அற்றவர்கள்தாம் என்று Humanist UK என்ற அமைப்பு கூறுகிறது.  

4)  பிரிட்டிஷ் பிரதான கட்சிகளில் ஆளும் தொழிற்கட்சி உறுப்பினர்களில் 47% பேரும், மூன்றாவது முக்கிய கட்சியான லிபரல் டெமாக்ரட் கட்சியினரில் 47% பேரும் இவ்வாறு மதசார்பற்ற வகையில் பதவிப் பிரமாணம் எடுத்தனர். ஆட்சியை இழந்த பழமைவாதக் கட்சியினரில் ( கன்சர்வேடிவ்) 9% பேர் மட்டுமே இவ்வாறு மதசார்பற்ற வகையில் பதவிப் பிரமாணம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

5) இவ்வாறு மதசார்பற்ற வகையில் பதவிப்பிரமாணம் எடுத்த உறுப்பினர்கள் சதவீதம் என்பது 2019ல் 24% ஆகத்தான் இருந்தது. இப்போது அது ஏறக்குறைய இரட்டிப்பாகியிருக்கிறது.  

6) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இந்த “மத சார்பற்ற” போக்கு, ஏறக்குறைய பிரிட்டிஷ் சமூகத்தில் கடவுள்- மதம் போன்ற சிந்தனைகளின் தாக்கம் குறைந்து வருவதைக் காட்டும் பிரிட்டிஷ் சமூக அணுகுமுறைகள் சர்வே ( British Social Attitudes Survey) உடன் ஒத்துப்போவதைக் குறிக்கிறது. அந்த சர்வேயின் படி,  பிரிட்டிஷ் மக்களில் சுமார் 53 சதவீதத்தினர் தாங்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.  42% மக்கள் தங்களுக்கு இறை நம்பிக்கையே இல்லை என்றே குறிப்பிட்டிருந்தனர்.  

7) முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பல இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் பகவத் கீதை மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல முஸ்லீம் உறுப்பினர்கள் குரான் மீது உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.  

8) பிரிட்டிஷ் பாராளுமன்ற பதவிப் பிரமாணத்திற்கு மாறாக அமெரிக்காவில் காங்கிரஸ் உறுப்பினர்களில் 2 பேர் மட்டுமே வெளிப்படையாக நாத்திகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ( தகவல் Humanist UK அமைப்பு).  இந்தப் புள்ளி விவரங்களை செய்தியாக்கிய கன்சர்வேடிவ் ஆதரவு இதழான “டெய்லி மெயில்”  இந்த நாடாளுமன்றம் “கடவுளற்ற நாடாளுமன்றமா?” என்று தலைப்பிட்டிருந்தது !!!