‘தமிழர்கள் தாமே தமக்குள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்’  (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-12)

‘தமிழர்கள் தாமே தமக்குள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-12)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

 இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிக்க-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஆகியோரே முன்னிலை வகிக்கின்றனர்.

 இந்தக் கட்டத்தில் அரசியல் யதார்த்தபூர்வமாக தமிழ் மக்களின் அக்கறைக்குரிய விடயமாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கல்தான் விளங்குகிறது. அதற்கு மேலால் தமிழர்கள் ஆசைப்படலாம். ஆனால், அவற்றை உடனடியாக அடையச் சாத்தியமில்லை.

 ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய மாகாண சபை அதிகாரங்களை முழுமையாக அமுல் செய்யப் போவதாகப் பல தடவைகள் அறிவித்துள்ளார்.

 சஜித் பிரேமதாச சட்டத்தில் உள்ளபடி ‘பிளஸ்’ உம் இல்லாமல் ‘மைனஸ்’ உம் இல்லாமல் அப்படியே முழுமையாக அமுல் செய்வேன் என்று வடமாகாணத்தில் கிளிநொச்சியில் வைத்து வாக்குறுதி வழங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பின் பின்னர் அவரது கட்சிக்காரரே கொழும்பில் அதற்கு வேறு விதமாக வியாக்கியானங்களும் தெரிவித்துள்ளார்.

 அனுரகுமாரதிசாநாயக்காவோ 13 ஆவது திருத்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வல்ல. அது தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியலமைப்பின் ஊடாகவே இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும். எனினும் அதுவரைக்கும் 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் அமுல்படுத்தப்படும் என்கிறார்.

 ‘புதிய அரசமைப்பின் ஊடாகவே இனப்பிரச்சனைக்குத் தீர்வைக் காண முடியும். அவ்வாறு தீர்வு காணும்வரை மாகாணசபை முறைமை தொடரும்’ என்ற தேசிய மக்கள் சக்தியினரின் கூற்று தெளிவில்லாதது. புதிய அரசமைப்பின் ஊடாகத் தற்போதுள்ள 13 இற்கும் கூடுதலாக எதுவும் வரப்போவதில்லை.

 ஆக இந்த மூன்று பேருமே 13 ஆவது திருத்தத்தைப் பற்றிப் பிரஸ்த்தாபிக்கிறார்கள்.

 ஆனால், ஏற்கெனவே அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்செய்வதற்கு இவர்களில் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவந்துதான் அதனைச் செய்யவேண்டுமென்பதில்லை. தற்போது நிறைவேற்று ஜனாதிபதியாக அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க அவர் விரும்பியவாறு அதனை அமுல் செய்ய முடியும்.

 எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள சஜித் பிரேமதாசா 13 ஆவது திருத்தத்தை அதன் (அவர் கூறுகிறபடி) மூலச் சட்டத்தில் உள்ளவாறு அமுல் செய்யும்படி அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க முடியும்.

 அனுரகுமார திசநாயக்காவும் அவர் கூறுகிறபடி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும்வரை 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அரசியல் அழுத்தங்களைக் கொடுக்க முடியும்.

 ஆனால், இந்த மூவருமே இதனைச் செய்ய மாட்டார்கள். காரணம் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்வதில் மூவருக்கும் அதற்கான அரசியல் விருப்பமும் அர்ப்பணிப்பும் உளமார இல்லை.

 13 பற்றி இவர்கள் மூவருமே பேசுவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கும் சமகாலத்தில் இந்தியாவைத் திருப்திப்படுத்தி ஆசுவாசப்படுத்துவதற்காகவுமே.

 ஆனாலும் இந்த மூன்று பேருக்குள் ஒருவரைத்தான் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியுள்ளது என்பதே அரசியல் யதார்த்தமாகும்.

 இந்தியாவைப் பொறுத்தவரை 13 ஐ நீக்கி விடுவதற்கும் அது இடமளிக்கப் போவதில்லை. 13 க்கு மேல் எதனையும் அது இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப் போவதுமில்லை. 13 ஐ முழுமையாக அமுல் செய்யும்படி இலங்கை அரசாங்கத்தின் மீது உடனடியாக எந்த அழுத்தத்தையும் கொடுக்கப்போவதுமில்லை.

 காரணம், இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பெற்ற இப் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்யும்படி 1987 இல் இருந்து இன்றுவரை தமிழர் தம் அரசியல் தரப்பிலிருந்து காத்திரமான அரசியல் செயற்பாடுகள் எதுவும் நிகழவில்லை. தோழர் பத்மநாபா தலைமையிலான முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தலையும் மீறி முதலாவது மாகாண சபைத் தேர்தலில் பங்கு பற்றி தற்காலிகமாகவேனும் இணைந்த வட கிழக்கு மாகாண அரசை ஆரம்பத்தில் நிறுவியதைத் தவிர.

  தமிழர்களின் அரசியல் தரப்பு இது விடயத்தில் அசமந்தமாகவே இன்றுவரை இருந்துவருகிறது. ‘பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்’ என்பதற்கிணங்க அவ்வப்போது தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக 13.ஐ உச்சரித்துக் கொண்டதைத் தவிர வேறு எந்த உருப்படியான செயற்பாடுகளையும் ஜனநாயக ரீதியாகத் தேர்தல்களில் தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற தமிழ்க் கட்சிகள் எதுவும் முன்னெடுக்கவில்லை.

 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கம் தமிழ் மக்களுக்குத்தான் அவசரத் தேவையே தவிர இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது இந்தியாவுக்கோ அல்ல.

 எனவே, 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லையென்றால் அந்தப் பழியை இலங்கை அரசாங்கங்களின்மீதும் இந்தியாவின்மீதும் மட்டும் போட்டுவிடுவது நேர்மையாகாது. பழியின் பெரும் பங்கு தமிழர் தரப்பின்மீதே உள்ளது. ஆனால், தமிழர் தரப்பு இதனை இன்னும்தான் உணர்ந்தபாடில்லை.

 ஜனாதிபதி வேட்பாளர்கள் எவருமே சிங்களச் சமூகத்தின் வாக்குகளை இழந்து தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கப் போவதில்லை. அதனால் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நிபந்தனைகளை முன்வைத்துப் பேரம் பேசும் விடயம் வெற்றியளிக்கப் போவதுமில்லை. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ வாய்ப்பாடும் எந்த அற்புதத்தையும் நிகழ்த்திவிடப் போவதுமில்லை. இந்த அரசியல் யதார்த்தத்தின் ஊடாகத்தான் தமிழர்கள் பயணிக்க முடியுமே தவிர அதனை விடுத்துப் பெரிதாகப் பேசுவது எல்லாமே முடிவில் ‘ஏட்டுச் சுரக்காய்’கள்தான். தமிழ்ச் சமூகத்தை அரசியலில் ஆற்றுப்படுத்த எந்த ஆளுமையுள்ள அரசியல் தலைமைத்துவமும் இன்று இல்லை. ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்க் கட்சிகள் சொல்வதைக் கேட்கும் நிலையிலும் தமிழர்கள் இல்லை. எனவே தமிழர்கள் தலைமைகளை நம்பியிராது தாமே தமக்குள்ளே தீர்மானங்களை எடுக்கவேண்டும்.