பிரித்தானிய நியூஹாம் முன்னாள் நகரபிதா, காலம் சென்ற போல் சத்தியநேசன்

பிரித்தானிய நியூஹாம் முன்னாள் நகரபிதா, காலம் சென்ற போல் சத்தியநேசன்

 — விஸ்வலிங்கம் சிவலிங்கம் —

இலங்கையில் உரும்பிராய் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரித்தானியாவில் ஈஸ்ற்காம் ( East Ham) என்ற இடத்தை வதிவிடமாகக் கொண்டிருந்ததுடன் இதே இடத்தின் நியூகாம் நகரசபையின் மேயராகவும், உறுப்பினராகவும் மக்களுக்குத் தொண்டாற்றிய போல் சத்தியநேசன் துரைசாமி அவர்கள் புகலிடங்களில் வாழும் தமிழர்களின் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்பட வேண்டியவராகும்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் காரணமாக பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த அவர், கால் பதித்த நாள் முதல் மக்களுக்குத் தொண்டாற்றுவதே அவரது கடமையாக அமைந்தது. அவர் பிரித்தானியாவிற்கு வந்த சில காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்கள், சிவில் யுத்தம், சுனாமிப் பேரழிவுகளின் போது பலர் இடம்பெயர்ந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் பிரித்தானியாவுக்கு வந்தனர். பெருந்தொகையானவர்கள் குறுகிய காலத்தில் வந்ததால் அரசாங்கம் அவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் தேவைகளை மேற்கொள்ளும் ஆரம்ப ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாட்டுக்குள் அகதிகளாக அனுமதித்த போதிலும் போதிய முன்னேற்றபாடுகள் இல்லாமையால் ஏற்கெனவே அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், சில ஆலயங்கள்  என்போர்களின் ஆதரவை நாடவேண்டியிருந்தது. இவ்வாறான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் ஓர் இளைஞனாக அன்று அவர் செயற்பட்டார். இவரது செயற்பாடுகளை அங்கீகரித்த பிரித்தானிய அரசு பிரித்தானிய அகதிகள் சபை ( British Refugee Council ) என்ற அமைப்பை ஏற்கெனவே நிறுவியிருந்த போதிலும் இலங்கை அகதிகளின் வருகையின் பின்னரே அதன் செயற்பாடுகள் துரிதமடைந்தன. இதன் காரணமாக போல் அவர்கள் பிரித்தானிய அகதிகள் சபையில் முழு நேர சேவைகளை மேற்கொண்டார்.

அகதிகளின் அதிகரித்த வருகையும், அதன் காரணமாக எழுந்த வீட்டுத் தேவைகளும் மற்றும் பல பிரச்சனைகளும் தமிழர்களுக்கென தனிப் பிரிவை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் ‘தமிழ் அகதிகள் செயற்பாட்டுக் குழு’ ( Tamil Refugee Action Group ) என்ற பொது அமைப்பு தோற்றம் பெற்றது. இந்த அமைப்பின் காரணமாக பல வீடமைப்புத் திட்டங்கள் தோற்றம் பெற்றன. இச் செயற்பாடுகளின் பின்னணியில் இவர் செயற்பட்டார்.

இவர் வாழ்ந்த ஈஸ்ற்காம் பகுதி பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இப் பகுதி நியூகாம் என்ற நகரசபைக்குள் அமைகிறது. இந் நகரசபைக்குள் சுமார் 140 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். ஈஸ்ற்காம் நகரத்தின் பிரதான தெருவில் சுமார் 100 இற்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் தமிழர்களால் நடத்தப்படுகிறது. முதலாவது திருவள்ளுவர் தமிழ் பாடசாலை இங்குதான் நிறுவப்பட்டது. முதலாவது முருகன் ஆலயம் ஆகம முறைப்படி நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல பல்வேறு சமூகங்கள் வாழும் இந்த நகரத்தில் ஒரு இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் முதன் முதலாக இந் நகரசபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்பது வரலாற்றின் மிக குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறிப்பாக இவர் தமிழர்களால் மட்டுமல்ல ஏனைய சமூகங்களினதும் மதிப்பைப் பெற்றிருந்தார் என்பதே முக்கியமானதாகும்.

இப் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தமிழர்களுக்கென தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது. இவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அத் தேவாலயத்தில் வாரம் தோறும் சென்று வழிபட்டார். இத் தேவாலயம் அகதிகளுக்கும், வயதானவர்களுக்கும் என பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. அத் தேவாலயத்தின் சேவைகளை மதித்து மாட்சிமை தங்கிய இளவரசர் சார்ள்ஸ் அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தபோது, போல் சத்தியநேசன் அவர்களும்; கௌரவிக்கப்பட்;டிருந்தார். அது மட்டுமல்ல காலம் சென்ற எலிசபெத் மகாராணியாரால் அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்ட ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பொதுவாகவே நத்தார் தினத்தின் போது பல்வெறு நகரங்களிலும் மின்சார விளக்குகள் ஒளியுட்டும். அவை புத்தாண்டு வரை நீடிக்கும். ஆனால் நியூகாம் நகரத்தில் மட்டும் அவை ஜனவரி 14ம் திகதி வரை நீடித்திருக்கும். ஏனெனில் தமிழர்களின் உழவர் புத்தாண்டு அதாவது தை பொங்கல் ஜனவரி மாதம் 14ம் திகதி வருவதால் அவ் விளக்குகள் இத் திகதி வரை ஒளிரும். இதன் பின்னால் செயற்பட்ட ஒரு பிரதான உறுப்பினர் எனில் போல் என்றே குறிப்பிட வேண்டும்.

இலங்கை அரசியலில் பல்வேறு தமிழ் இயக்கங்கள் செயற்பட்ட வேளையில் அவருடன் செயற்பட்ட பலர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ( PLOTE) ஆதரவாளர்களாக இருந்தனர். அதன் காரணமாக அந்த இயக்கத்தில் இணைந்து தனது இறுதி காலம் வரை இயங்கினார். சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் அக் கட்சியின் மாநாடு நடைபெற்றபோது அங்கு கலந்து கொண்டது மட்டுமல்ல, அவர் எப்போதும் நேசிக்கும், அமைதி, சமாதானம், ஒற்றுமை, அகிம்சை என்பவற்றை மையப்படுத்தியே அவரது உரைகள் அமைந்தன.

பிரித்தானியாவில் அவரது அரசியல் தொழிற்கட்சியின்பால் சென்றிருந்தது. பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள் பலர் தொழிற்கட்சியே தமக்கான பாதுகாப்பு என நம்புகின்றனர். அதன் அடிப்படையில் போல் அவர்கள் அக் கட்சியின் உறுப்பினர் மட்டுமல்ல, செயற்பாட்டாளராகவும் களமிறங்கினார். அவரது தளராத உழைப்பே அவரை நகரசபை வேட்பாளராக நியமிக்கும் அளவிற்குத் தரம் உயர்த்தியது. சகல சமூகங்களினதும் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதிலும் தனது தாயகத்து மக்களின் எதிர்காலச் சந்ததியின் வளர்ச்சிக்காக எப்போதுமே செயற்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அகதிகள் என்ற பெயரை நீக்கி ஐரோப்பிய தமிழர்கள் என்ற ஒரு குடைக்குள் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக வற்புறுத்தினார்.

அதன் அடிப்படையில் 2000ம் ஆண்டு பாரம்பரியங்களின் மாதம் ( Heritage month) என்ற பெயரில் நியூகாம் நகரசபை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. இம் முயற்சிகளின் பின்னால் இவரது உழைப்பு அமைந்தது.

எப்போதுமே மக்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு சமூக சேவகன் என நாம் கருத முடியும். தனது இறுதிக் காலம்வரை தனது பிறப்பிடமான உரும்பிராய் கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்களித்தார். கனடா மற்றும் பல நாடுகளுக்குச் சென்று தனது கிராமத்தின் வளர்ச்சிக்காகச் செயற்படும் பலரைச் சந்தித்துக் கௌரவப்படுத்தினார். புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றின் அடையாளமாக இவரது வாழ்வு அமைகிறது. இவரது நகரசபைப் பிரவேசத்தின் பின்னர் பலர் தேர்தலில் குதித்தனர். ஆனால் இவரது பணி சமூக சேவையில் ஆரம்பித்து, பின்னர் தொழிற்கட்சியில் இணைந்து தொழிலாளிகளின் விடிவுக்காக உழைத்து, அந்த அங்கிகாரம் காரணமாக தொழிற்கட்சி அவரை தனது வேட்பாளராக, நகரசபை உறுப்பினராக, நகர பிதாவாக கௌரவித்தது.

புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் அந்த மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணிக்கும் சேவகர்களாக மாற்றிக் கொண்டார்கள். போல் சத்தியநேசன் அவர்களின் சமூகப்பணி, தனது தாயக விடிவுக்காகவும், சமாதானம், அமைதி, வன்முறையற்ற வாழ்வு என்பவற்றிற்காக தனது இறுதி வாழ்வு வரை உழைத்த உன்னத போராளி அவராகும்.                

நினைவுக் குறிப்புகள்