பட்டுவேட்டிக் கனவில்  கோவணத்தையும் இழந்த  ஈழத் தமிழர்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-09)

பட்டுவேட்டிக் கனவில் கோவணத்தையும் இழந்த ஈழத் தமிழர்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-09)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

 சுதந்திர இலங்கையில் கடந்த 75 வருட கால அரசியல் இலங்கைத் தமிழருக்குக் கற்றுத்தந்துள்ள அனுபவப் பாடம் என்னவெனில் சொந்தக்காலை ஊன்றி நின்று எமது தனித்துவத்தைப் பேணிக்கொண்டு இலங்கைத் தேசிய அரசியல் (இலங்கைத் தேசியத்தினுள் தமிழ்த் தேசியமும் ஒரு கூறாக உள்ளடங்கும்) நீரோட்டத்துடன் ஒன்றித்துப் பயணிப்பதனூடாகவே இலங்கைத் தமிழ் மக்கள் தம்மைச் சமூக பொருளாதார ரீதியாக மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதே.

  இலங்கையில் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களென்று அடையாளப்படுத்தப்படும் இலங்கை முஸ்லிம் சமூகமும் மலையகத் தமிழர் சமூகமும் தந்திரோபாயமாகவும் புத்திசாலித்தனமாகவும் தேசிய அரசியல் நீரோட்டத்தை அனுசரித்துப் பயணித்த காரணத்தினால்தான் அவர்கள் சுதந்திர இலங்கையில் ஒப்பீட்டளவில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் முன்னேற்றகரமான சமூக பொருளாதார அடைவுகளைப் பெற்றுள்ளார்கள். அதற்கேற்றவாறு இச் சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவத்துவப்படுத்திய மக்களை சமூகப் பொறுப்புடன் அரசியல் நெறிப்படுத்தி வந்தார்கள்.

 இலங்கை முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் ரி.பி. ஜயா மற்றும் ராஸீக்பரீட் காலத்திலிருந்து இன்றுவரை அவர்களுடைய அரசியல் தலைவர்கள் அச்சமூகத்தை அறிவுபூர்வமாகவே அரசியலில் ஆற்றுப்படுத்தி வந்துள்ளனர். தேசிய அரசியல் நீரோட்டத்துடன் ஒன்றித்துச் செயற்பட்டதனால் இச்சமூகம் ‘இலங்கைச் சோனகர்’ என்ற தமது அடையாளத்தையோ இருப்பையோ இழந்து விடாமலே நேர்மறைக்கணிய சமூக பொருளாதார அடைவுகளைப் பெற்றுள்ளது..

 அதேபோல் மலையகத் தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொண்டால் தொண்டமான் மற்றும் அசீஸ் காலத்திலிருந்து இன்று வரை அவர்களுடைய அரசியல் தலைவர்கள் அச்சமூகத்தை அறிவுபூர்வமாகவே அரசியலில் ஆற்றுப்படுத்தி வந்துள்ளனர். அதனாற்தான் 1948/49 இல் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழந்த அவர்கள் இன்று அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழும் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் கீழும் பல இலட்சம் இந்திய வம்சாவளியினர் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்தும்கூட, தேசிய அரசியல் நீரோட்டத்துடன் அனுசரித்துப்போன அரசியல் பாதையால் இச்சமூகம் ‘மலையகத் தமிழர்’ என்ற தமது அடையாளத்தையோ இருப்பையோ இழந்து விடாமலே நேர்மறையான சமூக பொருளாதார அடைவுகளை அடைந்திருக்கிறார்கள்.

 ஆனால், ஒப்பீட்டுரீதியில் இலங்கைத் தமிழ்ச் சமூகமோ பட்டு வேட்டிக்குக் கனவு கண்டு இன்று இடுப்பில் கட்டியிருந்த கோவணத்தையும் இழந்துபோன நிலையில் நிற்கிறது.

 இதற்குக் காரணம் சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர் பொன்னம்பலம் அருணாசலம் காலத்திலிருந்து பின் ஜி ஜி பொன்னம்பலம் மற்றும் எஸ் ஜே வி செல்வநாயகம் காலத்தின் ஊடாக இன்று வரையுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தை அறிவார்ந்த அரசியலை நோக்கி ஆற்றுப்படுத்தவில்லை. மாறாகக் கற்பனாவாத இலக்குகளை நோக்கி உணர்ச்சியூட்டியும் உசுப்பேற்றியும் தத்தம் ‘வித்துவம்’ களை வெளிப்படுத்தியும் தாம் புகழடைந்தார்களேயொழியத் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கிவிடக் கூடிய அரசியல் பாதையைக் கட்டமைக்கவில்லை.

 ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் எத்தனையோ படித்த கல்விமான்கள் இருந்தும்-ஆற்றல் மிக்க ஆளுமைகள் இருந்தும்கூட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளும் தோல்வியுற்றுப் பின் அகிம்சைப் போராட்டமும் தோல்வியுற்று அதற்குப் பின் அதன் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டமும் தோல்வியுற்று இறுதியாக இராஜதந்திர நகர்வுகளும் தோல்வியுற்று தென்னிலங்கை அரசியலில்-இந்து சமுத்திரப் பிராந்திய அரசியலில்-சர்வதேச அரசியலில் ஒரு ‘வேண்டா பொண்டாட்டி’ யாக இலங்கைத் தமிழ்ச் சமூகம் வந்துநிற்கிறது.

 இன்றைய களநிலையில் இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையானது தேசிய அரசியல் நீரோட்டத்துடன் அனுசரித்து ஒன்றித்துப் பயணிக்கக்கூடியதோர் ‘மாற்று அரசியல்’ ஆகும்.

 இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ வாய்ப்பாடு அல்லது நிலைப்பாடு தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து மட்டுமல்லாமல், இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் நீரோட்டத்திலிருந்தும் பூகோள அரசியல் நீரோட்டத்திலிருந்தும் இலங்கைத் தமிழர்களைத் துருவப்படுத்திவிடும். இது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும்.

 எனவே, தத்தம் சொந்த நிகழ்ச்சி நிரல்களுடன் கூட்டிணைந்திருக்கும் ‘ஆசாடபூதி’களை நம்பி இலங்கைத் தமிழ் மக்கள் ஏமாறாமல் – உணர்ச்சி ஊட்டப்பெற்ற ‘போலி’ த் தமிழ் தேசியப் போதையில் மதிமயங்காமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய அரசியல் நீரோட்டத்துடன் ஒன்றித்துப் பயணிப்பதற்கான அறிவார்ந்த சாணக்கியமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார்களாக.