— அழகு குணசீலன் —
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் தொலைக்காட்சி அலைவரிசையில் அந்த நிகழ்ச்சியை பார்க்கக்கூடியதாக இருந்தது. நேரம் இடம் கொடுத்தால் மௌன உடைவுகள் அந்த நிகழ்ச்சியை தவறவிடுவதில்லை. உலகின் சமகால அரசியலை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கின்ற நையாண்டி நிகழ்ச்சி. ஒருவகையில் தமிழரசிக்கட்சியின் பொதுவேட்பாளர் நையாண்டியை – கேலிக்கூத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.
மட்டக்களப்பான் – அதுவும் படுவான்கரையான் ‘கூத்து’ என்றால் விடுவானா ? என்ன ?.
அந்த நிகழ்ச்சியில் தோன்றிய நகைச்சுவையாளர் ஒருவர் சொன்ன நகைச்சுவை இது .
“அம்மாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். ஒட்ட வேண்டிய முத்திரை காசுக்கு ஐந்து சதம் குறைந்து விட்டது, என்றாலும் அனுப்பிவிட்டேன். அடுத்த நாள் அம்மாவுக்கு அனுப்பிய தபால் எனது பெட்டியில் கிடந்தது. அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் சொன்னது ‘ஐந்து சதம் குறைய….’
அடுத்த நாள் புதிய என்வலப் ஒன்றை எடுத்து அனுப்புபவர் (FROM) அம்மா என்றும், பெறுபவர் (TO) நான் என்றும் விலாசமிட்டு முத்திரை எதுவும் ஒட்டாமல் தபால் பெட்டி ஒன்றில் எனக்கு நானே கடிதம் போட்டேன். அடுத்த நாள் கடிதம் அச்சொட்டாக அம்மாவுக்கு கிடைத்து விட்டது.
இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் தமிழரசுக்கட்சியின் பொதுவேட்பாளர் நையாண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. மட்டக்களப்பு வார்த்தைகளில் சொல்வதானால் மாப்பிள்ளை (வாக்கு) கேட்டு வடக்குக்கு ‘வட்டா’ கொண்டு வருகிறார்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள். வட்டாவை துணியினால் மூடியிருந்தாலும் அதற்குள் என்ன இருக்கிறது என்பது எல்லொருக்கும் தெரியும். தமிழரசுக்கட்சிக்கும்தான்…!
தமிழரசார் வார்த்தைஜாலம் செய்கின்ற சமஷ்டி, சுயநிர்ணயம், வடக்கு -கிழக்கு இணைப்பு, பொலிஷ், காணி அதிகாரங்கள் எதுவும் வட்டாவில் இல்லவே இல்லை. வீடு தேடி வந்தும், கட்சி காரியாலயம் வந்தும் மூடிய கதவுக்குள்ளும், பொது மேடைகளிலும் மூவேட்பாளர்களும் அரைத்தமாவையே திருப்பி, திருப்பி அரைக்கிறார்கள். இன்னும் அரைத்தால் வெறும் ‘தண்ணிக்கஞ்சிதான்’ அதுதானே தமிழர் அரசியலாகிவிட்டது.
அப்படியிருக்க அவர்களின் தேர்தல் அறிக்கையில் வட்டாவில் இல்லாத எதனை மேலதிகமாக எதிர்பார்க்கிறீர்கள். சிங்கள மக்களுக்கு தெரியாத மூடிய வட்டாவிலே இல்லையாம், வெளிப்படையான சிங்கள மக்களுக்கான தேர்தல் அறிக்கையில் தேடுவதற்கு உங்களுக்கு என்ன இருக்கப்போகிறது ?.
ஜனநாயகம் என்பது சுயவிமர்சனத்தையும் கொண்டது. அரசியலில் விட்ட தவறுகள், சறுக்கிய, தவறிய சந்தர்ப்பங்கள், அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பட்டறிவு. பாராளுமன்ற அரசியலில் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை பாலர் பாடம். . கடந்த 75 ஆண்டுகாலத்தை திரும்பிப்பார்த்து சுயவிமர்சனம் செய்யாமல் இன்னும் சுயநிர்ணயம் பற்றி பேசுகிறது தமிழரசுக்கட்சி. அதற்கான அரசியல் பலம் என்ன? அல்லது யாரை நம்பி?
சுயநிர்ணயம் என்பது தங்களைத்தாங்களே நிர்ணயித்துக் கொள்ளுதல். ஆகக்குறைந்தது அரசியல் தீர்மானங்களுக்காக யாரிலும் தங்கியிருக்காமல் சுயமாக முடிவெடுத்தலும் சுயநிர்ணயம் தான். இதற்கு மாறாக பொதுவேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் வாயைப் பார்த்துக்கொண்டு, விடியும் வரை காத்திருப்பது அரசியலில் சோம்பேறித்தனம். இருக்கின்ற தீர்மானம் எடுக்கின்ற சுய உரிமையை இழந்து நிற்பது.
யாழ்.எம்.பி.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஒரு முடிவை அறிவித்தார். “பொதுவேட்பாளர் யோசனை ஒரு கேலிக்கூத்து, அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து தோற்கடிப்போம்”, என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த வசனம் ஒருமையில் அல்ல பன்மையில் பேசப்பட்டது.
சுமந்திரன் பேசிய அந்த மண்டபத்தில் முன்வரிசையில் வலமிருந்து இடமாக எட்டாவது கதிரையில் அமர்ந்திருந்த தமிழரசுக்கட்சியின் காலம் காலாவதியான தலைவர் மாவை சேனாதிராஜா அப்போது எதுவும் பேசவில்லை. இதைவிடவும் ஒரு கட்சியின் தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய தலைமைத்துவ பண்பும், ஆளுமையும், அதிகாரமும், சீத்துவமும் வேறென்ன தேவை? மூன்று நாட்கள் மௌன விரதம் இருந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊடகச்சந்திப்பு நடாத்தியிருக்கிறார்.
“சமஷ்டி கட்டமைப்பு முறையில் ஒரு அரசமைப்பு மாற்றத்தை கொண்டு வந்து, ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்கும் தீர்வுத்திட்டத்தை உங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் எந்த வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக, தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அந்த அதிகாரப்பகிர்வு முறை எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருக்கிறோம்.
அவர்கள் இது குறித்து எங்களுக்கு இதுவரை எந்த உறுதி மொழியையும் வழங்கவில்லை. ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்பதையும் அவர்களுக்கு கூறியிருக்கிறோம்”. இப்படி அந்த ஊடகச்சந்திப்பில் சொல்லியிருக்கிறார் மாவை.
இவற்றிற்கு இடையில் சம்பந்தரின் வீரகேசரிப் பேட்டி வேறு. வழக்கமான பாணியில் ‘தொடோம் தொட்டால் விடோம்’ என்ற வாய்ச்சவால் வேறு. மாவட்ட சபையில் இருந்து மாகாணசபைகளுக்கு கொண்டு வந்தது ஏதோ தமிழரசுக்கட்சியின் பலம், இராஜதந்திரம் தான் என்ற பாணியில் அமைகிறது அந்த பேட்டி. பாவம் ! இருக்கும் வரையும் கொழும்பில் அரசாங்க செலவில் வாழ்ந்து விட்டு – அரசியல், அதிகார, பொதுச்சொத்து துஷ்பிரயோகம் செய்து விட்டுப் போக வாய்ப்பாக மற்றொரு தென்னிலங்கை வேட்பாளரை தேடி காத்துக்கிடக்கிறார் ஐயா. அதற்குத்தான் இந்த இழுத்தடிப்பு. அவருக்கு என்ன…? அவருக்கும் சேர்த்து விலைகொடுப்பது மக்கள் தானே.
சஜீத்: “13 வது திருத்தத் சட்டத்தை ஏற்கெனவே அறிவித்தது போன்று அமுல் படுத்துவதில் பின்வாங்கப் போவதில்லை”.
அநுரகுமார: ” 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வல்ல. ஆனால் தற்காலிகமாக அதனை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை இயங்கச்செய்ய வேண்டும் “.
ரணில்: “சஜீத்தும் 13 வது திருத்தத்தைத்தானே அமுல்படுத்துவேன் என்கிறார். நானும் அதையே சொல்கிறேன். 13 வது திருத்த சட்டத்தை அமுல் படுத்துவேன் “.
இதற்கு பின்னரும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் இன்னும் எவற்றை எதிர்பார்க்கிறீர்கள்? ஆக, மூன்று வட்டாவிலும் உள்ளடக்கம் ஒன்றுதான்.
வடக்கில் வந்து இதைச் சொல்லும் இவர்கள் தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் இதைச் சொல்லவில்லை. இதைக்கூடவா உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுடனான சந்திப்பில் உங்கள் எதிர்பார்ப்பான இவற்றை நீங்கள் ஏன்? எவரிடமும் நேரடியாக கேட்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் என்பவை விசுக்கோத்தும், வடையும், வாழைப்பழமும் தின்று, தேனீர்குடித்து கலைந்துபோகும் சமாச்சாரம் அல்லவே.
சந்திபுக்களின்போது நீங்கள் நேரடியாகவும், வெளிப்படையாகவும், ஒழிவு மறைவு இன்றியும் கேட்கவேண்டிய இவற்றை கேட்காமல் அவற்றை அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவேண்டும் என்று கேட்பதன் அரசியல் ‘திருகுதாளம்’ என்ன? தமிழரசுக்கட்சியும், மற்றைய பொதுவேட்பாளர் ஆதரவு/எதிர்ப்பு கட்சிகளும் பின்வரும் விடயங்களை கேட்காமல் சுற்றிவளைத்து மூக்கைத்தொடுவதே அரசியலாக உள்ளது.
வடக்கு -கிழக்கை இணைப்பீர்களா? இல்லையா?
காணி அதிகாரம் வழங்கப்படுமா ? இல்லையா?
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமா? இல்லையா?
மாகாணசபையில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளளிக்கப்படுமா? இல்லையா?
வழங்கப்பட்ட அதிகாரங்களை கொழும்பு மீளப்பெறாத வகையில் சட்டத்திருல்தம் செய்யப்படுமா? இல்லையா?
இவற்றை நீங்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்களோ மாற்று வழியில் தெற்கில் அரசியல் செய்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் மரிக்காரின் மறுப்பு அறிக்கையும், ஜே.வி.பி.யின் துண்டுப்பிரசுரமும்.
சஜீத்தின் வாயாக மரிக்கார் ஒரு திருத்தம் செய்திருக்கிறார் : ” பொலிஸ் அதிகாரம் என்று சஜீத் சொல்லவில்லை”. அவர் கருதியது சமூகப்பொலிஸாம். அது என்ன என்றால் நம்ம ஊர் கோயில் திருவிழாக்காலத்து தொண்டர்படை. ஆகக்கூடியது கையில் ஒரு பிரம்பு.
தமிழரசுக்கட்சி தேர்தல் அறிக்கையை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களை நம்பி காலத்தை வீணாக்க ஜே.வி.பி. தயாரில்லை. யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலுள்ள வாசகங்கள் இவை.
“உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து அரசியல் இருப்புக்களை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு இலகுவான ஒன்று. இம்முறை உணர்வு சார்ந்த அரசியலை தவிர்த்து அறிவுசார்ந்த அரசியலை செயல்படுத்துவது தமிழர், சிங்களவர் ஆகிய இரண்டு இனங்களுக்கும் தேவையான ஒன்று” என்று தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களோடு பேசுகிறது ஜே.வி.பி.
இந்த துண்டுப்பிரசுரம் யாரை நோக்கி சுட்டு விரலை நீட்டுகிறது என்பதைக்கூட புரியாமல் அரசியல் செய்கிறது தமிழரசுக்கட்சி. உங்கள் உணர்ச்சி அரசியல் தங்களிடம் பலிக்காது என்று பதிலளித்திருக்கிறது ஜே.வி.பி. தமிழ் மக்களும் இந்த உணர்ச்சி அரசியலில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். கிழக்கு தமிழர்கள் மத்தியில் அறிவுசார் அரசியல் 2008 இல் ஆரம்பித்து விட்டது. முஸ்லீம் மக்கள் கிழக்கிற்கான ஒரு தனி அரசியல் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம் முகவரிக்கு வந்த குறைந்த பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடிதத்தை ஏற்காவிட்டால் , தென்னிலங்கை FROM க்கு TO வும், TO க்கு FROM ஐயும் மாற்றி கடிதம் அனுப்பும். முழு முத்திரை செலவையும்- முழுவிலையையும் தமிழ்மக்கள் கொடுக்க வேண்டி இருக்கும்.
அவ்வளவுதான்……!