— அழகு குணசீலன் —
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ்ஈழம் சார்பாக சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு 83 குடிசார் அமைப்புக்களும்(?), சமூகச் செயற்பாட்டாளர்களும் (?) உடன் பட்டிருக்கிறார்கள். இந்த நீண்ட பட்டியல் நீண்ட கால இழுபறிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இது தமிழ்த்தேசிய பொதுவேட்பாளர் அரசியலின் ஒரு பக்கம்.
இதற்கு எதிர்ப்பக்கம் ஒன்றும் இருக்கிறது. அதுதான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி என்ற அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் , எக்ஸ். ரி.என்.ஏ யின் பிரதானி தமிழரசுக்கட்சி. இவை பொதுவேட்பாளர் ஆலோசனையை வேறுபட்ட காரணங்களுக்காக எதிர்ப்பவை. மூத்தது பகிஷ்கரிப்பைககோருகிறது. இளையது வாக்களிப்பை கோருகிறது.
இன்னொரு அணியும் இருக்கிறது. அது எக்ஸ்.ரி.என்.ஏ.யின் போடுகாய்களாக இருந்து வெளியேறி இருக்கின்ற கட்சிகளின் அணி.
இவர்கள் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்று சொல்லும் அதே நேரம் தமிழரசுக்கட்சியின் இணக்கம் இன்றி பொதுவேட்பாளர் சாத்தியம் இல்லை என்றும் சொல்பவர்கள்.
ஆக, தமிழ்க் காங்கிரஸ்க்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது, பகிஷ்கரிப்பு. தமிழரசில் ஒரு நிலைப்பாடு தெரிகிறது, வாக்களிப்பு. குத்துவிளக்கு நிலைப்பாடு இரண்டுக்கும் இடையே இரண்டும் கெட்டான் நிலை. தனித்து அரசியல் முடிவுகளை எடுக்க முடியாத பலவீனம். கூட்டத்தில் கோவிந்தா…! கூட்டுப் புக்கையில் பங்கு….!
இந்த நிலையில் நூறு தமிழ்த்தேசிய கட்சிகள் இருந்தாலும் பொதுவேட்பாளரை பகிரங்கமாக எதிர்த்து நிற்கின்ற ஒரு கட்சியாக தமிழரசுக்கட்சியே கொடுக்குக்கட்டி நிற்கிறது. இதை “பொதுவேட்பாளருக்கு எதிராக தமிழரசுக்கட்சி பிரச்சாரம் செய்யும்” என்ற சுமந்திரனின் வேதவாக்கு உறுதிப்படுத்துகிறது. இந்த அறிவிப்பு கூட 83 குடிசார் பெயர் பட்டியலை நோக்கிவிடப்பட்ட சவால் மட்டும் அல்ல சைக்கிளையும், குத்துவிளக்கையும் நோக்கி விடப்பட்ட சவால். குத்துவிளக்குகாரர்களுக்கு இருக்கின்ற தேர்வு சுமந்திரனை ஆமோதிப்பதா? எதிர்ப்பதா என்பதுதான். 83 அமைப்புக்களை எதிர்த்து ஒரு கட்சி களத்தில் நிற்கிறது அதனால் 83: 01 என்று கூற வேண்டியுள்ளது.
சரியோ, தவறோ தமிழ்க் காங்கிரஸ் தலைமை திட்டவட்டமாகக் பகிஷ்கரிப்பு முடிவை அறிவித்துவிட்டது. தமிழரசுக்கட்சியின் நாடித்துடிப்பு தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதாகவே அமையும் என்பது படிப்படியாக உறுதியாகிறது. ஆனால் இது தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க முடியாமல் ரெலோவும், புளட்டும், பங்காளிகளும் திண்டாடுகின்றனர். இதன் தலைவர்களுக்கு முடிவு எடுக்கும் துணிச்சல், தலைமைத்துவ பண்பு இல்லை என்றால் இவர்களுக்காக முடிவு எடுப்பது யார்? என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. பொதுவேட்பாளர் விடயத்தில் வீட்டுக்காக மட்டுமல்ல குத்துவிளக்குக்காகவும் சுமந்திரனே முடிவு எடுக்கவேண்டி உள்ளது. அதனால்தான் தமிழரசுக்கட்சி இணங்காவிட்டால் பொதுவேட்பாளர் யோசனை வெற்றியளிக்காது என்று அடிக்கடி சொல்லி ரெலோ அடிசறுக்கிறது. ஆகவேதான் ஒட்டு மொத்த 83 பலத்தையும் விஞ்சி நிற்கின்ற ஒரே பலமாக தமிழரசுக் கட்சியும் -சுமந்திரனும் உள்ளனர்.
இங்கு 83 பெரியதல்ல 1 தான் பெரியது. ஒப்பீட்டளவில் சக்திமிக்கது, பலமானது, தமிழ்த்தேசிய அரசியலின் நகர்வு திசையை நிர்ணயிக்கக்கூடியது. இன்னும் சொன்னால் கட்சியின் ஒரு முக்கிய ஒரே உறுப்பினராக சுமந்திரனே இவற்றை நிர்ணயிக்கிறார். இது கட்சியின் ஜனநாயகம் குறித்து ஒரு கேள்வியை எழுப்பலாம். ஆனால் அந்த கேள்விக்கும் தனது முடிவை கட்சியின் முடிவாக ஜனநாயகப்படுத்துகின்ற வல்லமையும் சுமந்திரனால் முடியாத ஒன்றல்ல. 2010 முதல் தமிழரசுக்கட்சியின் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் சுமந்திரனின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல.
83 : பட்டியல் நீளம். ஆனால் பின்னால் உள்ள அரசியல் பலம், மக்கள் ஆதரவு, அங்கீகாரம் குறைவு. பட்டியலே இல்லை ஒன்றே ஒன்று. ஒன்றுக்கு மேற்பட்டால்தான் பட்டியல். ஆனால் ஒப்பீட்டளவில் பின்னால் உள்ள கட்சி பலம், மக்கள் ஆதரவு, அங்கிகாரம் அதிகம். இதை வடக்கில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியநிலை. இதைத்தான் சுமந்திரன் அண்மையில் யாழ்பாணத்தில் 83 க்கும் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லியிருக்கிறார்.
“குடிசார் அமைப்புக்கள் ஆலோசனை சொல்லலாமே அன்றி முடிவு எடுக்க முடியாது. அரசியல் முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம், அங்கீகாரம் அவர்களுக்கு இல்லை. அதை மக்கள் குடிசார் அமைப்புக்களுக்கு வழங்கவில்லை”. சுமந்திரன் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது? கேட்க வேண்டிய கேள்வி தான்!
சுமந்திரன் எம்.பி.க்கு தெரியும் இவர்கள் எல்லாம் இறுதியில் தனக்கு பின்னால் வருவார்கள் என்றும், வந்தவர்கள் என்றும். நல்லாட்சியில் சுமந்திரன் எடுத்த தீர்மானங்களுக்கு பின்னால் போனவர்கள் இவர்கள். ஜனாதிபதி தேர்தலில் சஜீத்பிரேமதாசவை ஆதரித்தது, தளஸ் ஆழகப்பெருமாவை ஆதரித்தது, இறுதியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வை செல்லுபடியற்றதாக்கியது போன்ற அனைத்து முடிவுகளுக்கும் பின்னால் சுமந்திரனே இருந்தார். இப்போது வெள்ளம் தலைக்கு மேலால் ஓடுகிறது.
வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் பத்துப்பேர் கூடி ஒரு அமைப்பைக்கட்டி, ஆளுக்கோர் பதவியைப்பங்கிட்டுக்கொண்டு, பதவிக்காக ஒன்றுக்கு பத்து அமைப்புக்களையும் உருவாக்கிக்கொண்டு , கடிதத்தலைப்பு, தபால் பெட்டி அமைப்புக்களாக செயற்படும் நிலையில், குழுக்களும், தனிநபர் செயற்பாட்டாளர்களும் மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்க முடியுமா? அதற்கான சட்டரீதியான உரிமையும் அங்கீகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? இந்த கேள்வியை தமிழ்த்தேசிய அரசியலில் 2009 க்கு பின்னர் எழுப்பியிருக்கிறார் யாழ்.எம்.பி.சுமந்திரன்.
தமிழ்த்தேசிய அரசியலில் இது புது விடயம் அல்ல. பொது அமைப்புகள் எதுவும் கட்சிகளை கட்டுப்படுத்திய வரலாறு கிடையாது. போர்க்காலத்தில் ஆயர்கள் கூட புலிகளை வழிக்கு கொண்டு வரமுடியவில்லை. 2009 க்கு பின்னர் எத்தனையோ அமைப்புக்கள் அமைக்கப்பட்டன. இவை எதுவுமே கட்சிகளின் போக்கில், செயற்பாட்டில், தலைமையில் எந்தமாற்றத்தையும் செய்யமுடியவில்லை. இந்த 83 உம் இதற்கு விலக்கல்ல. விடுதலைப்புலிகளின் காலத்திலும் இதே நிலைதான். ஒரு வித்தியாசம் அன்று புலிகளின் தாளத்திற்கு வாயையும், கண்களையும், காதுகளையும் பொத்திக்கொண்டு ஊமை நடனம் ஆடியவர்கள் இந்த அமைப்புகள். இன்று தங்களின் தாளத்திற்கு கட்சிகளை ஆடச் சொல்லி கேட்கிறார்கள்.
இந்த அமைப்புக்கள் 2009 க்கு முன்னர் என்ன செய்தவை? புலிகளின் முகவர்களாக செயற்பட்டு அனைத்து ஜனநாயக, மனித உரிமை மறுப்புக்களையும், கொலைகளையும் நியாயப்படுத்தியவை. ஏகபோகம் என்று எல்லாவற்றையும் குத்தகைக்கு எடுத்து, உடமையாக்கி எதுவுமே இல்லாமல் மக்களை நந்திக் கடலில் தள்ளுவதற்கு துணைபோனவர்கள். இப்போது தான் இவர்களுக்கு ஆள் வாய்த்திருக்கிறது.
தமிழ் பொது வேட்பாளரா ? அதுதான் நடக்காது என்கிறார் யாழ்.எம்.பி. சுமந்திரன். இனி என்ன? அவருக்கு தென்னிலங்கையில் ஒரு வேட்பாளர் கிடைக்காமலா போகும். அவரும் பொதுவேட்பாளர் தானே.
இப்போதுள்ள கேள்வி? சுமந்திரனை எதிர்த்து – தமிழரசுகட்சியை எதிர்த்து , தமிழரசு ஆதரிக்கவுள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளரை எதிர்த்து தமிழ்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சியின் முடிவுகளை நிராகரிக்குமாறு தமிழ்மக்களை கோரும் துணிவு இந்த 83 இல் எத்தனைக்கு உண்டு? இரண்டும் கெட்டான் நிலையில் உள்ள குத்துவிளக்கு பூனைக்கு மணிகட்ட தயாரா?
ஆக, எல்லாம் அவன் செயல்….!
அவனின்றி ஓரணுவும் அசையாது….!
இது தமிழ்த்தேசிய அரசியல் வறுமை… ஆனால் இதுதான் ஜதார்த்தம்!