தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? 

தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? 

 — கருணாகரன் —

தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? பலவீனப்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் இன்றைய ஈழத்தமிழரின் அரசியலில் முக்கியமானவையாக உள்ளன. ஏனென்றால், தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுக் கொண்டுபோகிறது. அதை எப்படியாவது பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு பலரும் உள்ளனர். இதில் ஒரு தொகுதியினர், “தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தப்படும்போது  சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசிய உணர்வும் திரட்சியடைந்து ஒன்றிணையும். அது தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் அரசியல் நிலைப்பாட்டையும் (உறுதிப்பாட்டையும்) எடுத்தியம்பும்” என்று சொல்கின்றனர். இதற்காக இந்தப் பூமியிலே ஒரு அதிசயமான பொதுவேட்பாளரைத் தேடிக் கொண்டுமிருக்கின்றனர். (தயவு செய்து சிரித்து விடாதீர்கள். இதை அவர்கள் மிகச் சீரியஸாகவே சொல்கிறார்கள் அல்லது கருதுகிறார்கள்). எனவே இதைப்பற்றிச் சுருக்கமாகவேனும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.  

1.      தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா?

தமிழ்த்தேசியக் கருத்துநிலையும் உணர்வும் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் தமிழ்நாட்டிலும் ஆழமாகவே உள்ளன. இதற்குக் காரணம், பிறமொழியினர், பிற ஆட்சியதிகாரத் தரப்புகள் தமிழர்கள் மீது மேற்கொள்ளும்  அல்லது மேற்கொள்ள முயற்சிக்கும் –  ஆதிக்கம் அல்லது ஒடுக்குமுறையே ஆகும். ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க தேசியவாத உணர்வு மேலோங்குகிறது. தேசியவாதத்தின் ஓரம்சம் இதுவாகும்.

கூடவே, தமிழர்கள் சமூக, பொருளாதார, அரசியற் பிரச்சினைகளிலிருந்து தம்மை விடுவித்து, தம்மை நிலைப்படுத்திக்கொள்ளும் நோக்கில் உருவாகிய கருத்தியலும் இதுவென்பதால், அந்தச் சிக்கல்களும் பிரச்சினைகளும் தீரும் வரையில் இது பலமாகவே இருக்கும். 

ஆகவே தமிழ்த்தேசியக் கருத்தியல் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும், அதற்கான அரசியற் திரட்சியைக் கொள்வதாகவும் இருக்கிறது. சமனிலையில்  சமூக, பொருளாதார, பண்பாட்டு, அறிவியல் நிலைப்படுத்தலையும் வளர்ச்சியையும் உள்ளடக்கி நிற்கிறது. 

இது தமிழர் செறிந்து வாழும்  நிலப்பரப்புகளில், மொழிஅடிப்படையிலான சமூகத்தைப்  பலமானமுறையில் இணைப்பதற்கான ஒரு கோட்பாடாக வளர்ச்சியடைந்திருக்கிறது. சுருக்கிச் சொன்னால்,  தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைப் பல வகையிலும் ஒரு தேசிய இனமாகத் திரட்டி, சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் வலுப்படுத்திக்கொள்வதற்கான ஒரு கருத்தோட்டம் எனலாம். 

“தமிழ்த்தேசியம்” என்ற சொல்லை அறிமுகமாக்கி, அந்தக் கருதுகோளை தமிழ்ப்பரப்பில் முதலில் விரித்தவர், “சிலம்புச்செல்வர்” ம.பொ.சிவஞானம். 1940 களின் முற்பகுதியில் அன்றிருந்த இந்தியச் சூழலில் ம.பொ.சி, இதைக்குறித்து விபரிப்பதற்காக சென்னையில் “தமிழ் முரசு” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அதில்  இதைப்பற்றி விளக்கி எழுதினார். ஆக, தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களை – தமிழக மக்களை மையமாகக் கொண்டே முதலில் இவ்வாறு சிந்திக்கப்பட்டது. இதற்காக ம.பொ.சி, தொடர்ந்து 1946 இல் “தமிழரசுக் கழகம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த உணர்வுநிலை வளர்ந்து 1969 இல் தமிழ்நாடு என்ற உருவாக்கமாக வெற்றியடைந்தது. இதில்  பெருஞ்சித்திரனாரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. தமிழ்த் தேசியத்தில் பெண் விடுதலை, சாதியப் பிரச்சினைகளை (தலித்தியம்) எப்படிக் கையாள்வது என பல விதமான உரையாடல்களும் போராட்டங்களும் நடந்தன. அவை கவனத்திற்குரியன.

இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட விலக்கல்களும் ஒடுக்குமுறையும் தமிழ்த்தேசிய உணர்வையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் 1930 களில் உருவாக்கியது. தமிழகச் சூழலை முன்னுதாரணமாகக் கொண்டு, “இலங்கைத் தமிழரசுக் கட்சி” 1949 இல் ஆரம்பிக்கப்பட்டது. மொழிவாரி மாநிலமாக “தமிழ்நாடு” உருவாகியதை அடிப்படையாகக் கொண்டு “தமிழீழம்” என்ற தனிநாட்டுக் கோரிக்கை 1970 களில் உருவாகியது. அதாவது தமிழ்நாட்டுச் சாயலுடன் இவை முன்னெடுக்கப்பட்டன. 

இதேவேளை தமிழ்த்தேசிய உணர்வையும் அதன் சமூகத் திரட்சியையும் இலங்கை அரசாங்கம் கடுமையான முறையில் ஒடுக்கியது. சட்டத்தின் மூலமும் படைகளின் மூலமும் இந்த ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டது. ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட தமிழ்த்தேசிய உணர்வும், தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையில் தமிழின விடுதலைப் போராட்ட உணர்வும் மேலோங்கியது. இது தமிழகச் சூழலை விடவும் ஈழச் சூழலில் தீவிரநிலைப்பட்டதாக மாறியது. இதனால் தமிழ்த்தேசியக் கருத்து நிலையை வலியுறுத்திய ஆயுதப்போராட்டம் உருவாகி, பெரு வளர்ச்சியடைந்தது. 2009 இல் ஆயுதப்போராட்டத்தை இலங்கை அரசு முறியடித்தது. ஆனாலும் இனவிடுதலை உணர்வும் தமிழ்த்தேசியக் கருத்து நிலையும் அதே கொதிநிலையில்தான் உள்ளன. 

இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் கூட்டுளம், சமூகத்திரட்சி, இனவிடுதலை போன்றனவற்றை உள்ளடக்கி நிற்கிறது. இந்த உணர்வு (தமிழ்த்தேசியம்) உலகளாவிய அளவில் தமிழர்களைப் பெரும்பாலும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் மாற்றமடைந்திருக்கிறது.

ஆக, சிங்கள பௌத்த பெருந்தேசியவாத ஒடுக்குமுறையே  ஈழத்தில் தமிழ்த்தேசியவாதச் சிந்தனையை வலுப்படுத்தி, அதைத் திரட்சியடைய வைத்துள்ளது. ஒடுக்குமுறை தீவிரமடையத் தீவிரமடைய தமிழ்த்தேசிய உணர்வும் கருத்துநிலையும் மேலும் மேலும் வலுப்பெற்றுக்கொண்டேயுள்ளது. இன்று ஈழத்தமிழ்ப்பரப்பில் உள்ள பெரும்பாலான ஊடகங்களும் அரசியற் கட்சிகளும் மக்களின் வாக்களிப்பு வீதமும் இதை உறுதியுரைக்கின்றன. 

இப்போது கூட அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ்ப்பிரதேசங்களின் மீதான நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிங்கள வேட்பாளர்களின் இனப் பாரபட்சமான நிலைப்பாடு போன்றவற்றை முன்னிறுத்தியே தமிழ்த்தேசிய உரையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆகவே, தமிழ்த்தேசியக் கருத்தியலும் உணர்வும் வலுவானதாக உள்ளதென்றால், அது சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்குறையின் விளைவினாலேயாகும். மற்றும்படி, தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளான சமூக, பொருளாதார, பண்பாட்டு, அறிவியல் வளர்ச்சிகளையும் சமூக சமத்துவம்,  பெண் விடுதலை போன்றவற்றைக் கொண்டதாக அல்ல. 

ஆயுதப்போராட்டகால அரசியலுக்குப் பிறகு (2009க்குப்பின்)  தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த தரப்புகளும் கருத்துநிலையாளர்களும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, அறிவியல் அடிப்படையில் வளர்த்தெடுக்கவேண்டும் என்று சிந்திக்கவில்லை. மட்டுமல்ல, பால் சமத்துவம் (பெண் ஒடுக்குமுறை), சாதிய சமத்துவம், பிரதேச சமத்துவம் போன்றவற்றிலும் உரிய கவனத்தைக் கொள்ளத் தவறின. மேலோட்டமாக அனைத்துத் தமிழர்களும் ஒருமுகப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்பட்டாலும் (காட்டப்பட்டாலும்) உள்ளே இடைவெளிகளும் பாரபட்சங்களும் நிறைவின்மைகளோடு கொதித்துக் கொண்டேயிருக்கின்றன. இவற்றைக் குறித்த உரையாடல்கள் கூட குறைந்த பட்ச அளவிலேனும் நடக்கவில்லை. (தமிழகச் சூழல் வேறு. அங்கே உரையாடல்களும் விவாதங்களும் ஜனநாயக அடிப்படையிலான பொறிமுறைகளும் பலமாக உள்ளன. அறிவியல், பண்பாட்டு வளர்ச்சி, புத்தாக்கத்திறன், சமூக வளர்ச்சி  போன்றன கவனத்திற் கொள்ளப்படுகிறது. தமிழக அரசு மட்டுமல்ல, அதற்கப்பாலான சமூக நிலையிலும் இதைப்பற்றிய கரிசனைகள் வலிமையாக உண்டு). ஈழத்தில் சிங்களப் பௌத்த ஒடுக்குமுறையை முன்னிறுத்திப் பிரச்சாரப்படுத்தப்படும் ஒரு எதிர்ப்பு உள நிலையாகவே இன்றைய தமிழ்த்தேசியம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழ் மக்கள் பல  வகையான அரசியலிலும் சிதறுண்டுள்ளனர். பொருளாதாரத்தில் மிகப் பலவீனப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் பொருளாதாரப் பலத்தோடிருந்தாலும் ஈழத்தில் நிலவரம் அப்படியல்ல. ஈழ நிலவரம் தலைகீழானது. அதோடு அறிவுப் புலத்திலும் புத்தாக்கப் புலத்திலும் தமிழர் பின்னடைந்தேயுள்ளனர். கல்விச் சுட்டிகளைக் காட்டி இதைச் சிலர் மறுதலித்து விவாதிக்கலாம். அறிவு, புத்தாக்கம் என்பது தொழில்முறைக்கான கற்கை – கல்வி அறிவுக்கு அப்பால், சமூக, பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கான விஞ்ஞானபூர்மான அறிவாற்றலையும் புத்தாக்கத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது. அந்த வகையில் ஈழத்தமிழரின் அறிவுப்புலம் விருத்தியடையவில்லை. பண்பாட்டுப் புலத்திலும் பின்னடைவான நிலையே காணப்படுகிறது. 

எனவே உணர்வு நிலையிலும் கருத்து நிலையிலும் பலமாக இருக்கும் தமிழ்த்தேசியமானது, பிரயோக முறையிலும் (நடைமுறையிலும்) உள்ளடக்கத்திலும் மிகப் பலவீனப்பட்டே உள்ளது. இதை நிமிர்த்துவதற்கு எந்த வகையிலும் ஒரு சர்வரோக நிவாரணியாக தமிழ்ப் பொதுவேட்பாளர் இருக்க முடியாது. ஆனால், அப்படித்தான் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவோர் கருதுகின்றனர். ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் விழும் என. 

ஆ. தமிழ்த்தேசியக் கருத்தை – உணர்வை முன்னிறுத்திச் செயற்படும் – செயற்படுத்தப்படும் அரசியல்.

தமிழ்த்தேசியக் கருத்தை – உணர்வை முன்னிறுத்திச் செயற்படும் – செயற்படுத்தப்படும் அரசியலானது, அரச எதிர்ப்பு, சிங்கள பௌத்த எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்புவாதமாக இயங்குகிறது. இதனால்  பன்முகத்தன்மையைக் கொண்ட  ஜனநாயக அடிப்படைகளில் பலவீனப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுக் கொண்டவர்களைக் கொண்டாடுதல், அந்தப் பற்றோடு போராடி மரணத்தைத் தழுவிக் கொண்டோரைப் போற்றுதல், வழிபடுதல் என நிகழ்கிறது.  கூடவே மொழி, நிலம், பண்பாடு ஆகியவற்றை முன்னிறுத்திய சொல்லாடல்களில் அரசியல் உணர்வூட்டத்தைச் செய்தலாக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. மேலும் தமிழ்த்தேசியக் கருத்துநிலையைத் தொடர்ச்சியாகப் பேசுதல், இனரீதியாக அடையாளப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையைத் எதிர்க்க முற்படுதல், அதை வெளிப்படுத்துதல் என இது நீள்கிறது. 

ஆனால், இதற்குரிய வலுவான செயற்கட்டமைப்புகளும் வலுவான எதிர்ப்பு வடிவங்களும் எதிர்ப்பு நிலைகளும் திரட்சித் தன்மையும் தொடரியக்கமும் இன்றில்லாது போய்விட்டது. இதைப்பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் உரையாடல்களும் இல்லாதொழிந்து விட்டன. முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் கவனப்படுத்தல்களையும் திறந்த மனதோடு ஏற்கும் நிலையுமில்லை. அப்படி விமர்சனங்களை முன்வைப்போரை, சதிக்கோட்பாட்டாளர்கள், அரச ஒத்தோடிகள், துரோகிகள், இனவிரோதிகள் என எதிர்நிலையாளர்களாக நோக்கும் நிலையே வளர்ந்துள்ளது. இதனால், வெளிவிரிய வேண்டிய தமிழ்த்தேசியமானது, உட்சுருங்கும் தமிழ்த்தேசியமாகியுள்ளது.

2.      தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுள்ளதா?

மக்களின் உணர்வு நிலையில் தமிழ்த்தேசியக் கருதுகோள் பலவீனப்பட்டுள்ளதாகக் கருதமுடியாது. தேர்தல்களின்போது தமது கூட்டுணர்வை தமிழ்த்தேசிய அடையாளத்தின்பாற்பட்டே அநேகமாக ளெிப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் ஒடுக்குமுறை அரசையும் சிங்களப் பேரினவாதச் சிந்தனையையும் எதிர்த்தே கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் போராடியிருக்கிறார்கள். பேரிழப்புகளைச் செய்துள்ளனர். பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். ஆகவே தமிழ்த்தேசியம் மக்களின்  தளத்தில் பலவீனப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது. அரச ஒடுக்குமுறை இல்லாதொழிந்தால் இந்த நிலையில் மாற்றம் நிகழலாம்.

ஆனால் தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தோடு மேற்கொள்ளப்படும் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் அது சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் மந்த நிலையைப் பராமரிப்பதையும் கண்டு மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர். நிலமும் மக்கள் தொகையும் சுருங்கி வருவதையிட்டு மக்களுக்குக் கவலையுண்டு. ஒன்றாகத் திரட்சியடைந்து நின்று “விடுதலை அரசியலை” மேற்கொள்ள வேண்டிய அரசியற் சக்திகள், கட்சிகளாகப் பிளவுண்டு “தேர்தல் அரசியலில்” சிக்கிச் சிதறிக் கிடப்பதையிட்டு மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்தக் கட்சிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பிரகடனப்படுத்திய எதையும் நிறைவேற்றத் தவறியதும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை உண்டாக்கியிருக்கிறது.  சாதிய விடுதலை, பெண்ணுரிமை போன்றவற்றைச் சரியான முறையில் – பிரயோக முறையில் – தமிழ்த்தேசியம் தனக்குள் கொள்ளவில்லை. முஸ்லிம்கள், மலையக மக்கள் உட்படப் பிற சமூகத்தினருடனான உறவாடலுக்கான விரிபரப்பை இலங்கைத் தமிழ்த்தேசியம் கொள்ளத் தவறியுள்ளது என்ற கவலைகளும் மக்களுக்குண்டு.இவையெல்லாம் தமிழ்த்தேசியத்தின் சரிவைச் சந்திக்கும் அபாயநிலையே. தமிழ்த்தேசியத்தின் பலவீனங்களே!

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அயோத்திதாசப் பண்டிதர் முதன்முதலில்  தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்திருந்தார். ‘தமிழன்’ என்ற தேசிய இனப்பெயரை – அடையாளத்தை அதற்கான அரசியல் சமூகப் பொருளோடு பயன்படுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளரும் அயோத்திதாசப் பண்டிதரே. அப்பொழுது அவர் வலியுறுத்தியது, சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதாகும். அதற்குப் பிறகு நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனாலும் நிலைமையில் பெரிய மாற்றங்கள் இல்லை. இதுவும் தமிழ்த் தேசியம் பலவீனமடைவதற்கான பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

3.      தமிழ்த்தேசியம் பலப்படுத்தப்படுகிறதா?

தமிழ்த்தேசியத்தையும் அதற்கான அரசியலையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை இன்றைய தமிழ் அரசியற் சக்திகளோ, அவற்றை வலியுறுத்தும் அமைப்புகளோ முன்னெடுப்பதற்கு அக்கறை கொள்ளவில்லை. அல்லது அதில் நிறையப் போதாமையுண்டு. தமிழ்த்தேசியம் என்ற கருதுகோளைப் பலப்படுத்த வேண்டும் என்றால், அதற்கான  செயலூக்கமுள்ள செயற்றிட்டங்களும் செயற்பாடுகளும் தேவை. அவை எதுவும் இன்றுவரை வரையப்பட்டுச் செயற்படுத்தப்படவில்லை. அதற்கான உள்ளார்ந்த உரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய விமர்சனத்துக்கு இடமளிக்கப்படுவது அவசியம். மெய்யான அர்த்தத்தில் வலுவான தமிழ்த்தேசியம் அமைய வேண்டுமெனில், அதைப் பன்முகப் பரிமாணத்தோடு வளர்த்தெடுக்க வேண்டும். பெண்ணுரிமை, சாதிய விடுதலை, சமத்துவ அடிப்படைகள், பிற தேசிய இனங்களோடுள்ள ஜனநாயக அடிப்படையிலான சக்திகளுடனான உறவுகள் என இந்தப் பரிமாணம் அமையும்.

ஒரு எண்ணக்கரு மட்டும் முழு வடிவத்தைக் கொள்வதில்லை. அது செயலாகுமிடத்தே அதற்கான பெறுமான வலுவுண்டு. இந்தக் குறைபாட்டை மறைத்துக் கொள்வதற்கே “போட்டி இனவாதம்” (Competitive racism) வளர்க்கப்படுகிறது. போதாமைக்கு தமிழின  ஐக்கியம், ஒற்றுமை, தேசியம் எனத் தோற்ற மாயைகள்  (Ilusion of appearance)உருவாக்கப்படுகிறது. 

மெய்யான பொருளில் இதய சுத்தமாக ஐக்கியம், ஒற்றுமை, தேசியம் என இது இயங்குமானால், பன்மைத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துச் சக்திகளையும் உள்ளீர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  மற்றவர்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, பழியுரைத்து, தம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளும் மூடத்தனங்கள் நிகழாது.  துயரமான நிலை என்னவெனில், தமிழ்த்தேசியவாதத்தை விரிவும் ஆழவும் கூடிய பல்பரிமாணப் பெறுமானமாக்குவதற்கு எவரும் முயற்சிக்கவேயில்லை.

ஆக, வெறும் அரச எதிர்ப்பில் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்களும் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஒடுக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பைக் கண்டு ஒடுக்குமுறையாளரோ அரசோ நகைக்கிறதே தவிர, அச்சமடையவில்லை. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. என்பதால் எதிர்ப்பு அரசியலில் தமிழ்த்தேசியம் பலவீனமாகவே உள்ளது. 

கூடவே அரசியல் ரீதியாக தமிழ்த்தேசியக் கட்சிகள் தொடர்ந்து பிளவுண்டு சிதறிக் கொண்டேயிருக்கின்றன. தமிழ்த்தேசியம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல, தமிழ்த்தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவும் அவர்களை  மேம்படுத்தவும் வேண்டும். அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இதிற் கவனமில்லாத காரணத்தினால்தான் மக்கள் மண்ணை விட்டு வெளியேறுவது தொடக்கம், வடக்குக் கிழக்கில் இருக்கும் மக்கள் கூட பிற அரசியற் தரப்புகளின் பின்னால் செல்லக் கூடிய நிலை உருவாகியுள்ளது. 

என்பதால் தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படும் – பலவீனப்படுத்தும், காலம் கடத்தும் காரியங்களே நடக்கின்றன. தொகுத்துச் சொன்னால், ஏற்பட்டுள்ள – ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நிமிரக்கூடிய அளவுக்குச் செயற்றிட்டமும் சிந்தனையும் இல்லாத நிலையிலேயே, தமிழ்த்தேசியம் உள்ளது. இது அடுத்த பலவீனப்படுதலாகும். எனவே தமிழ்த்தேசியம் பலப்படுத்தப்படவில்லை. 

4.      தமிழ்த்தேசியம் பலவீனப்படுத்தப்படுகிறதா?

ஆம், நிச்சயமாக.  இருநிலைகளில் (தமிழ்த்தேசிய எதிர்ப்புத் தரப்பு – ஆதரவுத் தரப்பு) தமிழ் மக்கள் பலவீனப்படுத்தப்படுகின்றனர். இரட்டை அழுத்தத்துக்குட்படுகின்றனர்.

1.      தமிழ்த்தேசியத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசும் பேரினவாதச் சக்திகளும் தொடர்ச்சியாகவே  செய்து வருகின்றன. அரசோடு இணைந்த நிலையில் பிராந்திய – சர்வதேச சக்திகளிற் சிலவும் செயற்படுகின்றன. கூடவே தமிழ்த்தேசியத்துக்கு எதிரான – அரச ஆதரவுத் தரப்புகளும் (கட்சிகள் உள்ளடங்கலாக) இதைச் செய்கின்றன. கருத்துநிலைச் சிதைப்பாகவும் – பௌதீக ரீதியாக நிலத்திலும் சனத்தொகையிலும் சமூகப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும் இது நிகழ்த்தப்படுகிறது.

2.       தமிழ்த்தேசியவாதத்தைப் பேசும் இன்றைய  அரசியல் – ஊடகத்தரப்பினரும் தமிழ்த்தேசிய அடையாளத்தையும் அந்தக் கருதுகோளையும் (உணர்வையும்) கொண்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் செயற்படுகின்றனர். நம்பிக்கை இழப்பைச் செய்கின்றனர். “விடுதலை அரசியலைச் செய்கிறோம், ஒடுக்குமுறையை எதிர்க்கிறாம், மக்களை மேம்படுத்துகிறோம்” எனச் சொல்லிக் கொண்டே இனவாதப் பொறிக்குள் மக்களைச் சிக்க வைக்கின்றனர். 

இதனால்  மக்கள் தீராச் சுமைகளுக்குள்ளாகின்றனர். நெருக்கடிகளால் சுற்றியிறுக்கப்படுகின்றனர்.  கூடவே தமது ஆட்சி அல்லது அதிகாரத்துக்குட்பட்ட உள்ளுராட்சி சபைகள், மாகாணசபை உள்ளிட்ட அடுக்குகளில் மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பியோகம், வினைத்திறனின்மையான செயற்பாடுகள், ஊழல், பாரபட்சம், தூரநோக்கின்மையான திட்டங்கள், தனிநபர் அல்லது குழு நலன்சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றால் சமூக ரீதியான பாதிப்பைப் பலமான முறையில் ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே தமிழ்த்தேசியம் இரு நிலைகளில் பல்வேறு தரப்புகளால் பலவீனப்படுத்தப்படுகிறது.

இறுதியாக – தமிழ்த்தேசியத்தைப் பிற்போக்கான – தமிழ் மக்களுடைய வளர்ச்சிக்கு எதிரானதாகவும் மாறானாதாகவும் பார்ப்போரின் பார்வையிலிருந்து நோக்கினால்,

1.      இன, மொழி, மத, பிரதேச உணர்வுகளைத் தூண்டி அல்லது அதை மறைமுகமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தமிழ்த்தேசியம் தன்னைத் தனிமைப்படுத்தியே வைத்துள்ளது. இதனால்தான் அது வடக்குக்கிழக்கில் உள்ள முஸ்லிம்களுடன் கூட பொது வேலைத்திட்டத்தில் இணைய முடியாதுள்ளது. சமவேளையில் இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களோடு ஒருங்கிணைந்து செயற்பட விதியற்றிருக்கிறது.

2.      பெண்களுக்கும் ஒடுக்கப்படும் நிலையில் உள்ள சாதியினருக்குமான சமநிலைகளை இன்னும் வழங்க முடியாத குறைநிலைத் தமிழ்த்தேசியமாக உள்ளது. நாளாந்த வாழ்வின் முதல் பிரச்சினையான பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றி அதனால் கவனம் கொள்ளமுடியவில்லை.  மொழியை முன்னிறுத்தி முற்போக்கான போராட்ட சக்திகளை வீணடிக்கின்றது. மனிதரிடையே காணப்படும் ஏழ்மை, ஏற்றதாழ்வுகள், வேலையின்மை போன்ற அடிப்படை பொருளாதார சிக்கல்களுக்கு தகுந்த முக்கியத்துவம் தராமல் தமிழ்த் தேசியம் கவனத்தை சிதறடிக்கின்றது. முக்கியமாகச் சமூகப் பாதுகாப்பை அது கவனத்திற் கொள்ளவில்லை.

3.      தமிழ்த் தேசியமானது, தமிழ் உயர்நிலை மக்களின் கருத்தியலாகவே இருக்கின்றது. நுண்கலைகள் தொடக்கம், நிர்வாக அதிகாரம் வரையில் சராசரித் தமிழருக்கு அப்பாலேயே இருக்கின்றன.

4.      இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க முடியாத பிரச்சினையாகச் சாதியம் இருக்கிறது.  காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை  – ஜனநாயகமின்மையை மழுப்பியே இதுவரையான தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது.

எனவே இங்கே முன்வைக்கப்பட்டுள்ள விவாதப்பொருள்களை மனங்கொண்டு புதிய நிலைக்கு ஈழத்தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. இது காலத்தின் வலியுறுத்தலாகும்.