இலங்கை  முன்னென்றும் காணாத  அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் 

இலங்கை  முன்னென்றும் காணாத  அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான  அரசியல்  சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றி பேசுகிறார்களா என்று கேட்கவேண்டியிருக்கிறது. 

 தேர்தல்களைப் பற்றி தினமொரு விசித்திரமான கருத்துக்களை  அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அந்த கருத்துக்களின் தகுதி எத்தகையதாக இருந்தாலும்  அதைப் பொருட்படுத்தாமல் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும் குறைவில்லை.

  இறுதியாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார  தேர்தல்கள் தொடர்பில் கருத்தை வெளியிட்டு கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தார். அவரது கருத்தை அவரது கட்சியே நிராகரித்த பின்னரும் கூட அவர்  தன்னை தொடர்ந்தும் நியாயப்படுத்தி வாதிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் மே 28 ஆம் திகதி செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ரங்கே பண்டார இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் அடுத்த வருடம் நடத்தப்பட வேண்டியிருக்கும்  பாராளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை இரு வருடங்களால் நீடிக்கவேண்டும் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார்.

  புத்தளம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரங்கே பண்டார அவ்வாறு பதவிக் காலங்களை நீடிப்பதற்கு பாராளுமன்றத்தில் சகல கட்சிகளினதும் ஆதரவுடன் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு  மக்களின் அங்கீகாரத்துக்காக சர்வஜனவாக்கெடுப்புக்கும்  விடப்படவேண்டும் என்று கூறினார்.

 உடனடியாகவே எதிரணி கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டதுடன் அவரின் யோசனையின் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டவும் தொடங்கின. ரங்கே பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சாதாரண உறுப்பினர் அல்ல. கட்சியின் பொதுச் செயலாளரான அவர் தன்னால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய அரசியல் முதிர்ச்சியைக் கொண்டவராக இல்வை என்றே தோன்றுகிறது.

  ஆனால், அவரின் கருத்துக்கள் தோற்றுவித்திருக்கும் சர்ச்சையினால் தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்த ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னை அதிலிருந்து  தூரவிலக்கிக் கொண்டார். அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே பல தடவைகள் கூறிவிட்டதால்  ரங்கே பண்டாரவின் கருத்து  குறித்து பிரத்தியேமாக எதையும் கூறவேண்டியதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

  பிறகு பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரியநேரத்தில் ஜனாதிபதி தேர்தலும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். 

  இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னரும் கூட கடந்த வாரம் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் மகாநாட்டைக் கூட்டிய ரங்கே பண்டார ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்ற தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

  சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பிலான அரசியலமைப்பு ஏற்பாட்டைப் பற்றி மாத்திரமே பேசியதாகவும் இந்த விடயத்தில் மற்றைய அரசியல் கட்சிகள் அவற்றின் நிலைப்பாடுகளை வெளியிடவேண்டும் என்று கேடடுக் கொண்டதாகவும் அவர் கூறினார். 

  அவரது கருத்தை கண்டனம் செய்த எதிரணி அரசியல்வாதிகளும் அவதானிகளும் 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்ற ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றியை அடுத்து அதன் அன்றைய தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தல் வரைபடத்தை இலங்கை அடுத்த 40 வருடங்களுக்கு சுருட்டிவைக்கமுடியும் என்று கூறியதையும்  பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களால் நீடிப்பதற்கு அவரது அரசாங்கம் 1982 டிசம்பரில் படுமோசமான மோசடிகளுக்கு மத்தியில் நடத்திய சர்வஜனவாக்கெடுப்பின் விளைவாக ஏற்பட்ட விளைவுகளையும் நினைவுபடுத்தத் தவறவில்லை.

   கடந்த இரு வருடங்களாக   ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளின் இதுவரையான பயன்களை தேர்தல் பிரசாரங்கள் பாதித்துவிடக்கூடும் என்ற அக்கறையே இரு தேசிய தேர்தல்களையும் ஒத்திவைக்கவேண்டும் என்ற  யோசனையை முன்வைப்பதற்கு ரங்கே பண்டாரவை தூண்டியிருக்கக்கூடும். ஏற்கெனவே தேர்தல்கள் ஒத்திவைப்பு குறித்தும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசிய அரசியல்வாதிகளும் இதே நியாயத்தையே கற்பித்தார்கள். 

  மக்கள் தேர்தல்களை அல்ல, மூன்றுவேளை உணவையை கேட்கிறார்கள் என்றும் ரங்கே பண்டார செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார்.

தேர்தல்களில்  மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்  என்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே  கூறியிருந்தார். 

 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நுவரேலியாவில் நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டு மக்களில் இளைஞர்கள் உட்பட அதிகப் பெரும்பான்மையானவர்கள் தேர்தல்களில் மாத்திரமல்ல அரசியல் கட்சிமுறைமையிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாக்குகளும் கூட மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

 அரசாங்கத்தின் பங்காளிகளான  ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியும் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகின்றன என்பது ஒன்றும் இரகசியமல்ல. எந்த தேர்தலையும் எந்த நேரத்திலும் சந்திக்க தாங்கள் தயார் என்று அடிக்கடி கூறுகின்ற ராஜபக்சாக்கள் கடந்த வருட முற்பகுதியில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவின்  அடாத்தான நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  தேர்தல்களுக்கு முகங்கொடுக்காமல் இருபபதற்காக  ஜனாதிபதியும் அரசாங்கமும் எத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் இறங்கத் தயங்கமாட்டார்கள் என்பது உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகள் தெளிவாக உணர்த்துகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி நிறுத்திவைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் அரசாங்கம் மீறியது.

‘ அறகலய ‘  மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களையும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான  அவர்களின் எண்ணத்தையும்  அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை உள்ளூராட்சி தேர்தல்கள் நிச்சயமாக  வழங்கியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை மக்களிடம் இருந்து பறித்தது  மாத்திரமல்ல மாகாணசபை தேர்தல்களையும் நீண்டகாலமாக நடத்தாமலும் இருக்கும்  அரசாங்கமோ அல்லது அதைச் சார்ந்த அரசியல்வாதிகளோ நாட்டு மக்கள் தேர்தல்களை விரும்பவில்லை என்று கூறுவதற்கு உண்மையில்  அருகதையற்றவர்கள்.

  ஆனால், ஒரு வித்தியாசம். மற்றைய தேர்தல்களைப் பற்றி பேசாவிட்டாலும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல்களைப் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்திருக்கிறார். அதற்கு காரணம் அவரின் அரசியல் எதிர்காலத்துடன் அந்த தேர்தல் சம்பந்தப்பட்டதாக  இருப்பதேயாகும்.

  ஆனால்,   ஜனாதிபதியாக விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான கடந்த இரு வருடகாலத்தில் அரசாங்க அரசியல்வாதிகள் தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் உள்நோக்கத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்தும் அடிக்கடி பேசிவந்திருக்கிறார்கள். ஆனால் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அவர்கள் அதைக் கைவிட்டார்கள்.

 சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இளம் சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதி பதவிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பது குறித்து எதுவும்  பேசுவதில்லை  என்று கூறியிருந்தார். அவர்கள் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பதற்கு முன்வந்தால் அதற்கான சட்டவாக்க செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு தேவையான கால அவகாசத்தைக்  காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் அவ்வாறு அவர் கூறினாரோ தெரியவில்லை.

 கடந்த வருட பிற்பகுதியில் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச பாராளுமன்ற தேர்தல்களை முன்னைய தொகுதி முறையையும் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் உள்ளடக்கிய கலப்புமுறையின் கீழ் நடத்துவதற்கான சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தது எமக்கு நினைவிருக்கிறது.

 ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்றத்தில் அதன் ஒரேயொரு உறுப்பினராகவும் இருக்கும் வஜிர அபேவர்தன  எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எவரும் களமிறங்காமல் அவர் போட்டியின்றி ஜனாதிபதியாக தெரிவாவதற்கு  வழிவிடவேண்டும் என்று ஒரு தடவை கேட்டிருந்தார். ஜனாதிபதி தேர்தலை இந்த வருடம் நடத்தினால் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும்  மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லாமல் போகும் என்றும் கூட அபேவர்தன கூறினார். தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கோருபவர்கள்  நாட்டை நிலைகுலைய வைக்கவே விரும்புகிறார்கள் என்று அவர் கூறியதும் பதிவில் இருக்கிறது.

 ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மேலும் பல வருடங்களுக்கு ஆட்சிசெய்ய அனுமதித்தால் ஐரோப்பிய பெண்கள் இலங்கைக்கு வந்து வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றக்கூடிய அளவுக்கு நாட்டை பொருளாதார சுபிட்சமுடையதாக மாற்றிக்காட்டுவார் என்று கூட ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கூறினார்.

இவ்வாறாக ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவித்துவரும் தொடரில் பிந்தியதாக ரங்கே பண்டாரவின் யோசனை வந்திருக்கிறது. ஒருபுறத்தில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும் அதேவேளை மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் தேர்தலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

  உண்மையிலேயே ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியிலான ஆதரவையும் கட்சி ஒழுங்கமைப்புகளையும் பொறுத்தவரை மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதே அதன் அரசியல்வாதிகளின் குழப்பகரமான கருத்துக்களுக்கு பிரதான காரணமாகும். ஐக்கிய தேசிய கட்சியின்  வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தனது தலைமையின் கீழ்  மூன்று தசாப்தங்களாக இருந்துவரும் கட்சியின் இன்றைய நிலை பற்றிய அவரின் தெளிவான புரிதலை பிரகாசமாக வெளிக்காட்டியது.

  தற்போதைக்கு தனது கட்சியை மீளக்கட்டியெழுப்ப முடியாது என்று நன்றாக உணர்ந்துகொண்டதன் காரணத்தினாலேயே பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய பரந்தளவிலான கூட்டணி ஒன்றின் சார்பிலான சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதே புத்திசாலித்தனமானது என்ற முடிவுக்கு விக்கிரமசிங்க வந்தார். 

 ஆனால், அந்த பரந்தளவிலான கூட்டணியை அமைப்பதற்கான அவரின் முயற்சிகள் இதுவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை. பலதரப்பினரதும் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை திறந்துவைத்த வேளையிலும் கூட அவரிடமிருந்து அந்த அறிவிப்பு வரவில்லை.

பொருளாதார நிலைவரத்தில் ஏற்பட்டு வருகின்ற மேம்பாடு காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் தனக்கு கணிசமான ஆதரவு வளர்ந்திருப்பதாக ஜனாதிபதி நம்புகிறார். அவரது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்  பயனாக பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்பது உண்மையே. ஆனால் கிடைக்கக்கூடியதாக இருக்கும் பொருட்களை வாங்கக்கூடிய வசதிபடைத்த சமூகப் பிரிவினர் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் நாட்டுமக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்களினால் பெரும்பாலான பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லை.

 பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக மாத்திரம்  அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் அவருக்கு அமோகமான ஆதரவை வழங்கி மீண்டும் ஜனாதிபதியாக்கிவிடுவார்கள் என்று கூறமுடியாது. தேர்தல்கள் என்று வரும்போது அதில் கட்சி அரசியல்,  வாக்கு வங்கி போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துவது வழமை. 

 அவரது கட்சி தொடர்ந்தும் பலவீனமானதாக  இருப்பதே பரந்தளவிலான கூட்டணியை அமைப்பதற்கான அவரது முயற்சிகள் பெருமளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணமாகும். அவரை ஆதரிக்க முன்வரக்கூடிய வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது எதிர்கால  பாராளுமன்ற  வாய்ப்புக்களையும் மனதில் கொண்டுதான் வியூகங்களை வகுப்பார்கள்.

  பலவீனமான ஒரு கட்சியின் தலைவர் சுயாதீனமான பொது  வேட்பாளராக களமிறங்கி  மற்றைய கட்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிய ஆதரவின் மூலமாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடியதாக இருக்குமேயானால், அது  இலங்கை அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையிான  ஒரு பெரும் அரசியல்  சாதனையாகவே இருக்கும்! 

  ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் முன்னைய எந்த அரசியல்வாதியும் செய்திராத ஒரு புதிய பரிசோதனையில் இறங்கியிருக்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க.

  ராஜபக்சாக்கள் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவர்கள் தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிக்கப் போவதாகவும் அடிக்கடி கூறிக்கிறார்கள். அதற்கு மேலதிகமாக தங்களது ஆதரவுடனான வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாவார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கான வியூகத்தில் மாத்திரம் அக்கறை செலுத்தும் ராஜபக்சாக்கள் இறுதியில் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்பது தெளிவில்லாமல்  இருக்கிறது. 

 அதேவேளை, ராஜபக்சாக்களின் ஆதரவு விக்கிரமசிங்கவுக்கு கிடைக்குமானால் அது அவருக்கு அனுகூலமாக இருக்குமா என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவார் என்பது நிச்சயம். ஆனால் அவரைச் சுற்றியுள்ள அரசியல் நிலைவரம் குழப்பகரமானதாகவே இருக்கிறது.