— இரண்டாம் விசுவாமித்திரன் —
கண்களைக் கசக்கினாள். கட்டிலில் இருந்து இரவுத் தூக்கம் கலைத்து எழுந்தாள். ஆடைகளைச் சரி செய்தாள். கூந்தலை முடிந்து கொண்டை போட்டுக் கொண்டாள். வீட்டை விட்டு இரகசியமாக வெளியேறப் போவதை எண்ணியவாறே கைத்தொலைபேசி வெளிச்சத்தில் கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு தடவை பார்;த்தாள். ஆம்.அவள்தான் இந்தக் கதையின் நாயகி. அனாமிகா என்று அழகிய பெயர். அனு என்று செல்லமாக அழைக்கப்படுபவள். கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். இருபத்தி மூன்று வயது இளசு.
பக்கத்து அறையில் அப்பாவும் அம்மாவும் நல்ல தூக்கம். துவாய்த் துண்டால் போத்தியபடி தம்பி விறாந்தையில் குப்புறப்படுப்பது தெரிந்தது.
ஓசைப்படாமல் கதவைத் திறந்து வெளியே வருகிறாள். தாழ்வாரத்தில் படுத்திருந்த நாய் தலையை உயர்த்திப் பார்க்கிறது. இரவு குளித்துவிட்டுப் போட்ட பாவாடை மாதுளம்செடியில் காய்ந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் நிலம் வெளிக்கத் தொடங்கும். அதற்கிடையில் வெளியேறிவிட வேண்டும்.
வேலித் துவாரத்தினுடாக வீதியைப் பார்த்தாள். தன்னை இரகசியமாக ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று திருமணம் செய்யப் போவதாகச் சொன்ன அவளின் அன்புக் காதலன் அரவிந்தன் இன்னும் வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் விழித்துக் கொண்டால் விபரீதமாகப் போய்விடுமே என்ற பயம் அவளை அப்பிக் கொண்டது. மீண்டும் அறைக்கு வந்தாள்.
கைத்தொலைபேசியில் வெளிச்சம் தெரிந்தது. வாசித்துப் பார்த்தாள். அரவிந்தன் வாசலடி ஓரத்து வீதியில் நி;ற்பதான செய்தி இருந்தது. தேவையான உடுப்புகள், கழுத்துச் சங்கிலி, ஒரு சோடி மோதிரம், கைப்பை என்பவற்றுடன் மெதுவாகக் கதவைச் சாத்திவிட்டு வாசலுக்கு வந்தாள். தாழ்வாரத்து நாய் இப்போது எழுந்து நின்றது. பாவாடை தரையில் விழுந்து கிடந்தது. கிணற்றைச் சுற்றியிருந்த வாழை மரங்களுக்கிடையில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதான மெல்லிய சத்தம். வாகனமொன்று விரைந்து செல்வதான ஒலி தூரத்தில் கேட்டது.
மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். அரவிந்தனோடு வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். தன்னோடு மூன்று வருடங்களாக தொடர்பில் இருப்பவன். பல தடவைகள் திருமணம் செய்வதாக வாக்குறுதி தந்தவன். அவனோடுதான் ஊரைவிட்டு ஓடிப்போகும் இந்தப் பயணம் ஆரம்பமாகின்றது. தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டு வருகின்றீர்களா என்று மட்டும் கேட்டான். தலையசைத்து “ஆம்” என்று பதில் சொன்னாள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய சாரதி அவன்பாட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.
அரவிந்தன் மெதுவாக அவளது கைகளைப் பற்றினான். அவள் அதிர்ச்சி அடையவில்வை. அவளுக்கு அது புது விடயமும் அல்ல. அவளின் அப்பா ஊரில் இல்லாத சந்தர்ப்பம் பார்த்து நடுநிசியில் தாய்க்குத் தெரியாமல் அவளிடம் வந்து போனவன். அப்படியான சிலநேரங்களில் எல்லை மீறியதும் உண்டு. ஆனால் இப்போது கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.
கடற்கரையோரப் பயணம். குன்றும் குழியுமான வீதி;. அடம்பன்கொடிகளுக்கு மத்தியில் சோடி சோடியாக முயல் கூட்டம்;. கடலுக்கும் வீதிக்கும் இடையில் காற்றுவாக்கில் தானாகச் சேர்ந்த குருத்து மணல் குவியல்கள். மீனவர்களின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இன்னும் தூரமா என்ற அவளின் கேள்விக்கு இல்லை என்று அரவிந்தன் தலையசைத்தான். பக்கத்து ஊரா என்று கேட்டதற்கு ஆம் என்று மீண்டும் தலையசைத்தான். போய்ச் சேருமிடம் சாரதிக்குத் தெரியக்கூடாது என்பதில் அவன் கவனமாகவிருந்தான். மழையிருட்டிலும் கொப்பிழக்கப் பாயாத நுட்பம். சற்று நேரத்தில் வாகனத்திலிருந்து இறங்கி பணத்தைக் கொடுத்தான். நடந்து போய்ச் சேரும் தூரத்தில் அரவிந்தனின் நண்பனின் வீடு இருந்தது.
பொழுது விடிவதற்குள் அனாமிகாவோடு அரவிந்தன் ஓடிவருகிறான் என்பது முதல்நாளே நண்பனின் வீட்டாருக்குத் தெரியும். அதனால் ஆரவாரமில்லாமல் ஏற்பாடுகள் நடந்தன. அனாமிகாவுக்குத் தனியறை. அரவிந்தனுக்கும் நண்பனுக்கும் வேறு அறை. அனாமிகா குளித்து வெளிக்கிட்டு கொஞ்சமாக அலங்கரித்துக் கொண்டாள். ஓரே மேசையில் அமர்ந்து உணவு உண்டார்கள். அறையினுள் போய் கட்டிலில் சாய்ந்தாள். தூக்கம் வரவில்லை. வேறென்ன? வீட்டாரின் நினைவுதான்.
தாயின் தவிப்பை கற்பனை பண்ணினாள். கறார்த்தனமான அப்பா உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் கோலத்தை மனதுக்குள் எண்ணிப் பார்த்தாள். தவறு செய்து விட்டோமே என்று தலையணைக்குள் முகம் புதைத்து அழுதாள். முதன்முதலாக அம்மாவிடம் தனது காதலைச் சொன்னது ஞாபகம் வந்தது. அப்பா ஏற்றுக் கொள்ளவே மாட்டார் என்று அம்மா உறுதியாகச் சொல்லிவிட்டாள். நாமே நல்லதொரு வரன் தேடிக் கொடுக்கும்வரை காத்திருக்கட்டும் என்று கண்டிப்பாகச் சொன்னாராம். அப்பாவைப்பற்றி அம்மாவுக்குத்தானே நன்கு தெரியும். பாவம் அம்மா.என்ன பாடோ என்று சங்கடப்பட்டாள்.
அவளின் வீட்டின் ஆரவாரம் கண்முன்னால் வந்து நின்றது.
மகளின் அறைக்கதவு பூட்டப்படாமல் இருப்பது தாய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அனு என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனவளுக்கு அதிர்ச்சி. பதறியடித்துக் கொண்டு வீடு முழுவதும் தேடினாள். வாசலுக்கு வந்து வீட்டுக்கு பின்புறமும் தேடிப் பார்த்தாள். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தாள். மகள் இல்லை. கண்ணீர் பனித்தது. ‘ஓ’ வென்று அலறினாள். முந்தானையால் முகத்தைத் துடைத்தாள். அக்காவைத் தேடுமாறு மகனிடம் சொன்னாள். ஒருத்தருக்கொருத்தர் விரும்பினால் கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே என்று கணவன்மீது குற்றம் சாட்டிக் கண்ணீர் விட்டாள். வயசுக்கு வந்த பிள்ளை. தாய்தானே கவனமாக இருக்க வேண்டுமென்று மனைவிமீதான குற்றச்சாட்டுகள்.
அனாமிகாவின் வீட்டுக்கு அரவிந்தன் அடிக்கடி இரவு நேரத்தில் வந்து போவதாக அரசல் புரசலான கதை உண்டு. அப்பா இல்லாத ஒரு இரவில் அவன் அனாமிகாவைச் சந்தித்துப் போனதை தாயும் கண்டிருக்கிறாள்.
தொலைபேசியில் பேசுவதைவிட நேரடியாகக் கதைக்கும் விருப்பத்தில் வந்து செலகிறான் என்று அவள் நினைத்துக் கொண்டாள். இதுபற்றி சில பெண்கள் அவளிடம் மறைமுகமாகச் சொன்னதுமுண்டு. பழி பாவத்துக்கு அஞ்சாத சில பெண்கள் ஓடுகாலி என்று பேர் வாங்குவாள் என்று முகத்தில் அறைந்தாற்போல் சொன்னதுமுண்டு.
மகளிடம் இவற்றையெல்லாம் சொல்வதற்கு அவள் தயங்கினாள். அனுவைப் பற்றி அவளுக்குத் தெரியும். தாறுமாறாக ஏதாவது முடிவு எடுத்தால் விபரீதமாகப் போய்விடுமே என்று ஒரு தாய் பயப்படுவது நியாயம் தானே. ஆனாலும் இரண்டொரு நாட்களுக்குள் சொல்ல வேண்டுமென்று தீர்மானித்திருந்தாள். அதற்கிடையில் விபரீதம் நடந்து விட்டது.
ஊரடங்கிய நேரத்தில் அரவிந்தன் அடிக்கடி வந்து போவதை அம்மாவோ அப்பாவோ அறிந்தால் ஏற்படும் சங்கடங்களை எண்ணிப்பார்த்தே வீட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு அனாமிகா வந்திருப்பாள் என்று அவள் ஊகித்தாள்.
அரவிந்தனுக்கு தூரத்து உறவுமுறையான ஒருத்தி மலைநாட்டுப் பக்கம் இருந்து அனாமிகாவுடன் அடிக்கடி கதைப்பாள். முதல்நாள் தொலைபேசியில் மகள் பேசும்போது எல்லாம் சரி என்றும் நாளைக்கு எதிர்பாருங்கள் என்றும் யாருடனோ மறைத்து மறைத்து கதைத்தது இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.
மலைநாட்டுப் பக்கம் போயிருக்கலாம் என்று ஊகித்தாள். அங்குள்ள தனது சகோதரி முறையான உறவுமுறைக்காரியிடம் விசாரித்ததில் அனு இன்னுமொருவருடன் இங்கு ஓடி வந்திருப்பதான தகவல் அறிந்தததாக பதில் கிடைத்தது.
கணவருடன் கலந்துரையாடினாள். வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறும் தான் மகனுடன் மலைநாடு போய்; அங்குள்ள தகவலைத் தெரிவிப்பதாகவும் அதன் பின்னர் பேசலாம் என்று சொல்லி பயணத்துக்கு தயாரானாள்.
குன்றும் குழியுமான மலைப்பாறைகளின் ஊடான பயணம். பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்கள். தாங்கக் கூடிய குளிர். எவற்றையும் இரசிக்கும் மனோபாவத்தில் அவள் இல்லை. மனசெல்லாம் மகளின் கவலை. முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
முன்னர் ஒரு தடவை இதே வீட்டுக்கு வந்து போயிருக்கிறாள். அந்த வீதிகள் ஞாபகத்தில் இருந்தன. ஒற்றையடிப் பாதைவழியாக நடந்து வந்து சேரவேண்டிய இடத்தை அடைந்து விட்டாள். அங்கிருந்தவர்களிடம் எல்லா விசயத்தையும் கொட்டித் தீர்த்தாள். மனதுக்கு நிம்மதி தரும் பதில் கிடைத்தது. அனாமிகா இருக்குமிடத்தை அறிந்து கொண்டாள்.
தகவலை கணவனுக்குத் தெரிவிக்கிறாள். ஆனால் இங்கே வந்து விசயத்தைக் கெடுத்து விடவேண்டாமென்றும் வெளியில் யாருக்கும் ஒன்றும் சொல்ல வேண்டாமென்றும் கணவனை எச்சரிக்கிறாள். என்ன சொன்னாலும் எதிர்க் கருத்துச் சொல்லும் தனது கணவன் தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் முதல் சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்த்தாள். தனது தங்கையின் வீட்டிலிருந்து சாப்பாடு ஒழுங்கு செய்திருப்பதாகச் சொன்னாள். கூட்டுக்குள் நிற்கும் கோழிக் குஞ்சுகளுக்கு தவறாமல் தீனி வைக்குமாறும் சொன்னாள்.
அனாமிகா வெளியில் வருகிறாள். அவளுக்;குப் பின்னால் அரவிந்தன். பரபரப்பான சூழ்நிலை.
அனாமிகா அம்மாவைச் பார்க்கிறாள். தாய் தனக்கு நேர்ந்த அவமானம் மறந்து போய் மகளைக் கட்டிப் பிடித்து அழுகிறாள்.
நடந்தது நடந்ததுதான் இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று தீர்மானிக்கிறார்கள்.
அருவும் அனுவும் கோயிலுக்குப் போய் மாலைமாற்றித் தம்பதிகளாக மாறினார்கள். கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் இன்னுமொரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி புதுமணத் தம்பதியினருக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தனி அறைகள் சமையல் குளிப்பு வசதிகள் எல்லாம் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
முலைப்பாலில் குளிசை கரைத்துக் குடித்த காலம் மலையேறிவிட்டது இன்றைய உலகில் கைத்தொலைபேசிகளில் பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. ஓடுகாலி என்றெல்லாம் பட்டம் சூட்டி ஊரால் விலக்கி வைக்கும் உதவாக்கரை கோட்பாடுகளைத் தூக்கியெறிந்து அனாமிகாவிற்கு திருமணம் செய்து வைத்ததன்மூலம் தன்னை சமூகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் அவளின் தாய் என்ற செய்தி அவளின் ஊருக்கு பறந்து கொண்டிருக்கிறது.