தொலைத்த இடத்தில் தேடுவோம்

தொலைத்த இடத்தில் தேடுவோம்

— சி. மௌனகுரு —

 முன்னுரை:

தலைவர் அவர்களே பேராசிரியர் சந்திரசேகரன் நினைவுவிழா குழுவினரே அவையோரே அனைவருக்கும் வணக்கம்

நண்பரும் தோழருமான சந்திர சேகரன் மறைந்துஇரண்டு வருடங்கள் ஆகிவிட்டன

1960களில் நடுப்பகுதியிலேயே நானும் அவரும் முன்பின்னாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்றோம். என்னைவிட மூன்று வருடங்கள் இளையவர்அவர். பல்கலைக்கழக பாசையில் சொல்வதானால் எனக்கு அவர் ஜூனியர். 

ஜூனியர் சந்திரசேகரனை இப்போது நினைக்கையில் எனக்கு அவருடைய வாலிபக் காலத்துடுக்குத்தனமும். குபீர் எனச் சிரிப்பூட்ட கூடிய அவருடைய கருத்தாழம் மிக்க பகிடிகளுமே ஞாபகம் வருகின்றன.   இடதுசாரிச் சிந்தனைகள்  முக்கியமாக  மார்க்ஸிஸ  சிந்தனைகள் பல்கலைக்கழக இளைஞர் மத்தியில் செல்வாக்குபெற்றிருந்த காலம்  அது. வேகம் மிகுந்த இளஞர் பலரை அச்சிந்தனைகள் அன்று ஆட்கொண்டன. மாக்ஸிஸ வகுப்புகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வெளியில் இருந்து வந்த மாக்ஸிஸ அறிஞர்களும் எங்களுக்கு நடத்த நாம் அந்த விரிவுரைகளுக்கு சென்றுவந்து கூட்டமாய் அமர்ந்து விவாதித்த காலம் அந்தக் காலம், உலக  நடப்புகள்  எங்களுக்கு   அறிமுகமான  காலம். தேடித் தேடி தீவிரமாக  நூல்கள்  வாசிக்க  ஆரம்பித்த காலம்.

அந்தப் பின்னணியில் தான் இந்தச் சந்திரசேகரன் எனக்கு அறிமுகம் ஆனார். புத்திசாலித்தனமான பகிடிக்கான திறமைகாரணமாக அவர் எம் மத்தியில் பிரபல்யமானார். அவர் விடும்பகிடிகளில் சமூக அங்கதம் நிறைந்திருக்கும். எதிரிக்கும் நோகாமல் பகிடிவிடும் வல்லமை மிக்கவர் அவர், அவரது பகிடிகள் பற்றியே தனியாகப் பேசலாம். 

நாம் தமிழைச் சிறப்புப்பாடநெறியாக மேற்கொண்டபோது அவர் கல்வியினை சிறப்புப்பாடநெறியாகச் செய்துகொண்டிருந்தார்.  இருவர் துறைகளும் வெவ்வேறு எனினும் அவர் இறக்கும் வரை நம்மிடையே நிலவிய ஒத்தகருத்தியல் எம்மை எப்போதும் இறுகப் பிணைத்திருந்தது. 

பின்னாளில் அவர் பல்கலைக்கழக  விரிவுரையாளரானர், பீடாதிபதியானார் பெரும் அறிஞராகவும் மேற்கிளம்பினார். மலையக மக்களின் பெரும் சொத் துக்களுள் ஒன்றாகவும் அவர் மதிக்கப்பட்டார்.

எவ்வளவு உயரப் பறந்தாலும் அவரது கால்கள் மண்ணிலேயே வேரூன்றி நின்றன.  மண்ணிலேயே வாழ்ந்த பேசப்படாத அந்த மக்களை, என்றும் இருட்டுக்குள் வாழ்ந்தவெளிச்சம்படாத அந்த மக்களே அவர் மனம் எங்கும் வியாபித்து நின்றனர்.  விசேடமாக  மலையக  மக்கள் பலராலும் அடக்கப்பட்டு குமுறிக்கொண்டிருந்தனர். அந்தச் சமூககொடுமை கண்டு

சந்திரசேகரன் மனம் எப்போதும் ஒரு கொதி நிலையிலேயே இருந்து கொண்டிருந்தது.அந்தக் கொதி நிலையின் ஒரு வெளிப்பாடுதான் அவருடைய கிண்டலான பேச்சு என நான் நினைக்கிறேன். 

அவர்  நல்லதோர் பாடகரும் கூட. அவருடன் பேசிகொண்டிருந்து  நாங்கள் போகப் புறப்பட்டால்

“இருங்க  இருங்க  இந்தப் பாட்டக் கேளுங்க’

  எனக் கூறி  அருகில் இருக்கும் மேசையில் தட்டிப்பாடவும்  ஆரம்பித்துவிடுவார். 

அப்படி  அவர்  பாடும் பாட்டுகளுள்  ஒன்று இது..

இருக்கும் இடத்தைவிட்டு  இல்லாத  இடம் தேடி

எங்கெங்கோ  அலைகிறார்  ஞானத் தங்கமே—இவர்

ஏதும்  அறியாரடி  ஞானத் தங்கமே

அவர்  என்ன நினைத்து அதனைப் பாடினாரோ தெரியாது, ஆனால் ஆயிரம்  அர்த்தங்களைத் தேக்கி வைத்திருக்கும்  அப்பாடலும் அதனைக் கண்சிமிட்டி  சிமிட்டி  அனுபவித்து அவர் பாடும் விதமும் அப்போது  முன்னால்  இருக்கும்  மேசைமீது  இரண்டு  கைகளாலும்  அவர் போடும் தாளமும் அவர் குரலும் கண்  முன்  தோன்றுகின்றன.

அவர்  நினைத்தை  நான் பேசுகிறேனோ  எனவும் நான் இக்கணம் நினைக்கின்றேன்

அந்தப் பெரும் மனிதரின் நினைவு நாளில் என்னைப் பேச அழைத்திருக்கிறீர்கள்.   முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்ளுகின்றேன். நண்பரையும் இப்போது. உணர்வு பூர்வமாக நினைவில்கொண்டு வருகிறேன்.

சந்திரசேகரன் மனதில் வியாபித்து நின்ற அந்தச்சாமானியரைப் பற்றித்தான் நான் இங்கு உரையாற்றவுள்ளேன். எனவே இதனைப் பழமையான கறாரான ஆய்வுமுறையில் அன்றி வேறு ஒரு முறையில் எடுத்துரைக்கவுள்ளேன்.

அந்த முறை என்ன?

சாதாரண  கிராமிய மக்களிடம் வழங்கும் ஒரு கதை கூறல்முறை அது. அங்கொன்று இங்கு ஒன்றாக கதைகளைக் கூறி, அதற்கு ஊடாக அவர்கள் ஒரு புது விஷயத்தை ஆழமான விஷயத்தைத்தருவார்கள். ஆழ்ந்த விடயங்களையும் எளிதாகக் கூறி விட வேண்டும் என்பது அவர்கள் பாணி. இந்தப்பாணி நான் அவர்களிடம் கற்றுக் கொண்ட பாணி. 

நான் இங்கு நான்கு கதைகள் கூறமுன் வந்துள்ளேன். முதலாவது கதை பின்வரும்  மூன்று கதைகளுக்குமான ஒரு முன்னுரை.

முதலாவது கதை

ஒரு முட்டாள்  கணவனும்  அவனுக்கு  வாய்த்த புத்திசாலி  மனைவியும்

—————————————————————————–ஆம்  இது ஒரு முட்டாள் கணவனதும் புத்திசாலி மனைவியதும் கதையாகும். ஒரு முட்டாள் கணவன் தனது விலை மதிப்பு அற்ற மோதிரம் ஒன்றைத் தொலைத்துவிட்டான். தேடிதேடிப் பார்த்தான் அது கிடைக்கவே இல்லை. எனினும் அவன் தேடுதலை நிறுத்தவில்லை .பகல் இரவு எல்லாம் தேடினான். ஊஹூம் கிடைக்கவே இல்லைஎனினும் அவன் தன்முயற்சியைக் கைவிடவில்லை.  அவனுடைய தேடுதல் அதிகமாக இரவு நேரத்தில் தான் நடந்தது. அப்போதுதான் அவனுக்கு  ஓய்வும் கிடைத்தது.

அவனுடைய வீட்டில் முன்னால் இருந்த கம்பத்திலே மின்சார விளக்கு இரவில் பிரகாசமாக ஒளியை  உமிழ்ந்தபடி இருக்கும். வழமை போல  ஒரு நாள்  அவன் அந்தமின்கம்ப   வெளிச்சத்தின் ஒளியில்  தீவிரமாகத்  தான் தொலைத்த  மோதிரத்தைத் தேடிக் கொண்டிருந்தான். தேடித் தேடித் தேடியும் மோதிரம் கிடைக்கவேயில்லை. அவனோ மிகவும் சோர்ந்து விட்டான். அவனது மனைவி மகாபுத்திசாலி வெளியே வந்தான். அவன்.  நிலைகண்டாள். அவன் தேடும் தீவிரத்தையும் புரிந்து கொண்டாள்.

“அது சரி மோதிரத்தை எங்கே தொலைத்தீர்கள் ஞாபகம்உண்டா?” எனக்கேட்டாள்.

சிறிது நேரம் யோசித்த அவன் , 

‘ ஆம்  அந்த மோதிரத்தை வீட்டுக்குள் தான் தொலைத்து இருக்க வேண்டும் இப்போதுதான் ஞாபகம் வருகிறது’என்றான்.

“தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும் அங்குசென்று தேடலாம் தானே”   என்று  சிரித்துகொண்டே  கூறினாள் மனைவி.

மனைவியை  ஒரு   கேலிச்சிரிப்போடு  பார்த்த அவன்

‘வெங்காயமே!! வீட்டுக்குள் நன்றாகப் பார்,  ஒரே இருட்டாக இருக்கிறது பார்த்தாயா,  இங்குதானே.வெளிச்சம் பிரகாசமாக இருக்கிறது. இருட்டுக்குள்  பொருள் தெரியுமா?   இருட்டுக்குள் யாரும் தேடுவார்களா?” என்று மனைவியை பார்த்து மேலும்  நகைத்தான். அவன்

‘வா இருவரும் தேடுவோம்’என்று வேறு மனைவியைத் துணைக்கும் இழுத்தான். அவளோ இவன் முட்டாள்தனத்தைப் பார்த்துச் சிரியோ சிரி என்று மனதுக்குள் சிரித்தாள்.

இவன் தேடிக்கொண்டே  இருந்தான். 

இந்தக்  கதையின் சாரம் என்ன?

  1. இழந்துபோன ஒரு பொருளைத் தேட வேண்டுமானால் முதலில் அதனைத்

தொலைத்த இடத்திலேதான் தேடவேண்டும்.

  1. வெளிச்சத்தில் மாத்திரமே பொருள் இருக்கும் என்ற பொதுக்கட்டமைப்புக்குள் இருந்து வெளியே வந்து இருட்டினிலும் பொருள் தெரியும் என்ற மாற்றுக்  கருத்தையும் ஏற்க வேண்டும். 
  2. இதன் செய்தி யாதெனில் ஆய்வாளர்கள் முக்கியமாக வரலாற்று ஆய்வாளர்கள் பண்பாட்டு ஆய்வாளர்கள், அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் தொலைத்துவிட்ட இடத்தில் தேடும் மனப்பக்குவத்தை முதலில் பெறவேண்டும்.
  3. இதன் சாரத்தை இன்றைய  எமது ஆய்வுகளுக்கும், விசேடமாக புற்றீசல்   போல  இன்று  புறப்பட்டிருக்கும் சில பல்கலைக்கழக ஆய்வுகளுக்கும் பொருத்திப் பார்த்துவிட்டு அடுத்த மூன்று கதைகளுக்கும் செல்வோம்

அதற்கு  முதல் தொலைத்த இடத்தில் தேட நான் சில ஆலோசனைகள் சொல்வேன் இவ் ஆலோசனைகள் ஆய்வுலகில் நான் கற்றவை அத்தோடு அனுபவங்கள் மூலம்பெற்றவை.

வரலாற்று  பண்பாட்டு  ஆய்வுகள்   செய்யும் முறை

——————————————————————————

  1. ஆய்வுகள்  செய்ய முதலில் பிரச்சனைகளை இனம் காண வேண்டும்
  2. பிரச்சனைகளை  முழுமையாக  அறிய சரியான தரவுகளைப்  பெற வேண்டும்
  3. முற்  கற்பிதத்தோடு  தரவுகளைத் தேடக் கூடாது.
  4. தரவுகள்  சேகரிக்கும் போது கிணறு வெட்டப் பூதங்களும்  புறப்படும்
  5. பூதங்கள்  புறப்படுகிறதே எனப்பயந்து வெட்டும் செயலை  நிறுத்தி  விடக் கூடாது
  6. பூதங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றோடு  உரையாடும் மனப்பக்குவம் பெறவும் வேண்டும்.  அந்த திறனையும் பெற  வேண்டும்
  7. பொதுவான தேடலில் முதலில் எல்லோருக்கும் பொதுவான தரவுகளே கிடைக்கும். அத்தரவுகளை  நோக்கி  வினாக்கள் எழுப்பத் தெரிந்திருக்க வேண்டும்.
  8. நீங்கள் கேட்கும் வினாக்களுக்கு ஏற்பவே தரவுகள்  விடை கூறும்
  9. ஆய்வாளர்கள், விசேடமாக பண்பாட்டு  ஆய்வாளர்கள் பல்துறைப் பரிச்சியமுடைவர்களாக இருக்க வேண்டும்.
  10. இந்தப் பல்துறை  ஆய்வுப் பரிச்சயம் அல்லது அணுகுமுறை (Multi Dicipilanary  approach) ஆய்வாளரை   ஆழமான கேள்விகள் கேட்க வைக்கும்.
  11. விடைகளின் நம்பகத்தன்மையை  அதன் பின் பல்வேறு முறைகளில் பரிசீலிக்க வேண்டும்.
  12. இந்த ஒழுங்கு முறை ஒரு நம்பகமான  ஆய்வுக்கு உதவி புரியும்.

இப்போது நான் முன்னரே அறிமுகப்படுத்திய குட்டிக்கதையின் பின்னணியிலும் பின்னால் சொன்ன ஆய்வுக் கோட்பாடுகளின் பின்னணியிலும் கதைகளை முதலில் நான் உங்களுக்கு அறிமுகம்  செய்கிறேன்.

இவை கதைகள்தான் ஆனால் கற்பனைகள் அல்ல, இட்டுக் கட்டியவை அல்ல.  நான் நேரிலே கண்டவை, கண்டு அனுபவித்தவை, இருட்டுக்குள் நாம்தொலைத்து விட்டவை, வெளிச்சம் படாதவை.

கதை 2 

இந்த  அனுபவம்

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாகப் பேசும் மக்கள் பற்றியது.

கிழக்கு மாகாணத்தில் வாழ் பழங்குடி மக்களான வேடர்களின் ஒரு

சடங்கு முறையினை கழுவன்கேணி எனும் ஒரு கிராமத்தில் நேரில் பார்த்த அனுபவம்  இது

கழுவன்கேணி மட்டக்களப்பில் பழங்குடிகளான வேடுவ குலமக்கள் வதியும் பூமி. வேடர் இலங்கையின் பூர்வீக குடிகள் மாத்திரமன்றி கிழக்கு மாகாணம் எங்கும் பரவி வாழ்ந்துள்ளனர். 

இயக்கர் எனஅழைக்கப்படும் பூர்வீக குடிகள் இவர்கள் என்பது பொது  அபிப்பிராயம். மஹாவம்சம் அவர்களை விஜயன் மனைவி குவேனி வழித்தோன்றல்களாகக் கூறும். அவர்களைப் பற்றி செலிக்மான், வில்லியம் ஹெய்கர் போன்ற ஆய்வாளர்கள் தந்த கருத்துக்கள் அவர்களை ஒரு பூர்வீகக் குடிகளாக, அநாகரிக மாந்தர்களாக,  கையில் வில்லுடன் வாழும் காட்டு மனிதர்களாகச் சித்திரிக்கும். 

அன்று ஆய்வாளர்களால் அவர்கள் கட்டமைக்கப்பட்ட விதம் அது. ஆனால் மானிடவியல் ஆய்வாளரான   பேராசிரியர் கணநாத் ஒபயசேகர இவ் வேடுவ குல  மக்களிடம் செழிப்பான  ஒரு புராதன பண்பாட்டினைக் காணுகிறார். கண்டி மன்னர் பிரித்தானியருடன் செய்த போரில்    மன்னனுக்கு உதவியவர்களாகவும்,   பெரும் நிலஉரிமை பூண்டவராகவும் காண்கின்றார். 

அவரிடம் இதற்கான  ஆதாரங்களும்  ஆவணங்களும் உண்டு  எனக் கூறுகிறார்.    ஆனால் கிழக்கு மாகாண வேடர் பற்றிய ஆய்வுகுறைவு. இந்தப்பின்னணியில்தான் இந்தக் கதையை நாங்கள் அணுகவேண்டும்.

என்னிடம் கற்ற மாணவன் ஒருவன் அக்குடியில் வந்தவன்

கழுவன்கேணி வேடர் நிகழ்த்திய சடங்கைக்காண என்னை அவன் அழைத் திருந்தான். மிகுந்த பிரயாணக் கஸ்டத்தின் பின் அவ்விடத்தை அடைந்தேன். 

அங்கு ஒரு அடர்ந்தகாட்டை வெட்டி, வெளியாக்கி துப்பரவு செய்து, பந்தல்கள் அமைத்து, மடைபரப்பி தம் முன்னோரை வரவழைக்க ஒரு பெரும் கூட்டம் நின்றுகொண்டிருந்தது.

இறந்து போனவர்கள் மீண்டும் வருவாரா? உரையாடுவார்களா? எப்படி உரையாடுவார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஆனால் அந்த பழங்குடிமக்களைப் பொறுத்தவரை சந்தேகத்திற்கே இடம் இல்லை. அவர்களுக்கு அது நிஜம், அசைக்க முடியாத உண்மை. 

நம் பார்வையில்  அதனைப்பார்க்காது  அவர்கள் பார்வையில்  அவர்கள் மனோநிலையில் பார்த்தால்தான்  அதனைப் புரிந்துகொள்ள முடியும். 

அங்கு சென்ற  என்னை அவர்கள் அன்போடு வரவேற்று இலைக்கஞ்சி தந்தனர், மதிய உணவும் தந்தனர். உணவு உறவை ஏற்படுத்தியது. அவர்களோடு அளவளாவினேன். பின்வரும்  தகவல்கள் கிடைத்தன. 

அவர்களின்  இறந்துபோன    மூதாதையர்கள் தினமும் காலையில் இருந்து மாலை வரை வடக்கிலிருந்து தெற்குநோக்கியும் தெற்கிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கியும் ஆவி உருவில் வான் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணில் வாழும் தம் சந்ததியாரின் நடவடிக்ககைகளைக் கவனித்தபடி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ நாங்கள் அவர்களின் பாதுகாப்பில் வாழ்கிறோம்” என்றார் ஒரு முதியவர்.

அவரிடம் அந்தப் பாதுகாப்பு  நம்பிக்கையைக் கண்டேன்.

கிழக்கிலங்கையில் வேடர் மத்தியில் ஏழு குடிகள் இருந்தன.

அவையாவன

1. பனுவளக்குடி

2. செல்லாப்பத்துக் குடி

3. திருதக்காகணி குடி

4. செல்லாயன் குடி

5. ஆக்கமுத்துக் குடி

6. வெல்லம்பாணன் குடி

7. வெரிஹடிகத்தே குடி

ஒவ்வொரு குடிக்கும் ஒரு ஆதித்தாய் உண்டு. அந்த ஆதித்தாயின் மரபுவழிப் புதல்வர்கள்தான் அந்தக்குடியினர். அங்கு  அந்த 7 குடிகளுள் ஒன்றான பனுவளக்  குடியினரே கூடி இருந்தனர். அக்குடியில்  வந்தவளும் இப்போது இருப்பவளுமான பொன்னி என்பவள் உடலில் அம் முன்னோர் வந்து புகுந்து தம்முடன் உரையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் அக்குடியினர் காத்திருந்தனர்.

கொட்டு  எனப்படும்  பறையை  ஒருவர்  வாசிக்கத் தொடங்கினார், சடங்குச்  சூழல்   உருவாகிவிட்டது.. சடங்குகளும் ஆரம்பமாகின. குடாநீலி, மாநீலி, கரடித்தெய்வம் ஆகிய தெய்வங்கள் பொன்னி உடலுக்குள்புகுந்தன. மக்களை ஆசீர்வதித்தன. இவையாவும் பெண்தெய்வங்கள்.  அம்பு  வில்  பிடித்து ஆடின.  தேன் எடுக்கச் சென்றன. தேன் எடுப்பதில்  தங்களுடன் போட்டியிடும்  கரடியைச்  சாந்தப்படுத்தின. சடங்கு என்பது  நிகழ்ந்த ஒன்றை மீளவும்  நிகழ்த்திக்காட்டுதல்  எனப்  படித்த   வரிகள் ஞாபகம்  வந்தன,  இங்கே  அவர்கள் தமது புராதன  வாழ்வை  நிகழ்த்திக்காட்டியது போல  எனக்குப்பட்டது. அதன் பின் அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இறந்த முன்னோர்கள் ஒருவர் பின் ஒருவராக பொன்னியின் உடலுக்குள் புகுந்து அங்கிருந்த  மக்களுடன் பேச ஆரம்பித்தனர். அவர்களை அவர்கள் உத்தியாக்கள் என அழைத்தனர். 

கன்னட  மொழியில்   உத்தி என்றால் மேலே என்று அர்த்தம். முதன் முதலில் பொன்னி உடலில்  அக்குழுவின் ஆதித் தலைவன் கழுவன் வந்தான். தனது வாரிசுகளை அணைத்து மகிழ்ந்து ஆசீர்வதித்தான், உரையாடினான். அவன் மனைவி கந்தியும்  வந்திருக்கிறாள்   என்று கூறிச் சென்றான். இக்கந்தியே  அங்கு  சடங்கு  நடத்திகொண்டிருக்கிற   குடியின்  அல்லது குழுவின் ஆதித்தாய்.

கந்தி வந்து,  தனது  வாரிசுகளை அணைத்து ஆசிர்வதித்தாள்.  

அவர்கள் சென்றபின் இடைக்காலத்தில் அக்குடியின் தலைவனாக இருந்த தேவர் வந்தார். மக்களுடன் பேசி சுகபலம் விசாரித்தார். தன் மனைவி வந்திருப்பதாகக் கூறிச் சென்றார். அவளும் பொன்னி உடலில் புகுந்து மக்களுடன் பேசினாள். வந்தவள் பெயர்ஆச்சி.

அதன் பின்னர் பலகாலத்துக்கு முன்னே இந்தச் சடங்குகளைச் செய்த கணபதி என்பவர் வந்தார். அவர் ஒருதலை முறைக்கு முந்தி பூசைகளை நடத்திய பூசாரியாரான கப்புவனார்  என அழைக்கபடுபவர். 

 அதன் பின் காத்தமுத்து  என்பவர் வந்தார். இந்த காத்தமுத்துவின் மகன்தான் சாந்தலிங்கம், இவர் அண்மையில்தான் இறந்தவர். இந்த சாந்தலிங்கத்திற்கு ஒரு மனைவியுண்டு.  அவள் பெயர் இராசம்மா. அவர் உயிரோடு இன்றும்  வாழ்பவர்.  அவரும்  அச்சடங்கில் வந்து கலந்து கொண்டிருந்தார்.

அண்மையில் இறநதுபோன இந்தச்  சாந்தலிங்கத்திற்கு 14 பிள்ளைகள். அப்  பதினாங்கு பிள்ளைகளில் ஒரு பிள்ளைதான் இப்போது உருக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பொன்னி.

எனக்கு இது பெரும் ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருந்தது.

பண்டைக் காலத்தில் இருந்த கழுவன் அவனது மனைவி, இடையில் தலைவனாக இருந்த தேவர் அவரது மனைவி ஆச்சி, பின்னர் கப்புவனாக இருந்த கணபதி அதன் பின்னர் காத்தமுத்து, காத்தமுத்து மகன் சாந்தலிங்கம் என பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரையான ஒரு குடும்ம வரலாறு அங்கு எனக்கு தெரிந்தது. 

தமது  சமூக்த்தின்  வரலாற்றை (Family  History)   சடங்கிலே அவர்கள் இப்படித் தேக்கி வைத்திருந்தனர்.  மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தில் அல்லது  யாழ்ப்பாண  வைபவ மாலையில் மஹாவம்சத்தில்  எல்லாம் இலங்கையை ஆண்ட மன்னர்கள் பேசபடுகின்றனர். அவை ஏட்டிலும் எழுத்திலும் உள்ளன. 

இந்தச் சடங்கு மூலம் தம் முனோரின் பெயர்கள்  நினைவுகூரப்படும் இம்மரபு  அந்த  மரபுகளுக்குச்  சற்றும் குறைந்தது  அல்ல.  அதே  செயல் இங்கு சடங்கில்  நிகழ்கிறது.  அவ்வளவுதான்  சடங்கை  வாசிக்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

முன்னர்  சொன்ன  அந்தச்   சாந்தலிங்கம் இறந்தது வடிசராயம் குடித்து. அதனால்  மனைவி இராசம்மாவுடன் தகராறு.  இருவரும்  பேசுவதில்லை.  சாந்தலிங்கம்   இறக்கும் போதும்  இராசம்மா  அவருடன்  பேசவில்லையாம். அன்று தோன்றிய  இறந்த  ஆத்மா சாந்தலிங்கம் முதலில்கேட்டது  மனைவி இராசம்மாவைத்தான். அக் கிழ மூதாட்டியோ கணவன் முகம்பார்க்க மறுத்துவிட்டாள். அனைவரும் சமாதானம்  கூறி இராசம்மாவையும் பொன்னியின் உடலில் புகுந்து நண்பர்களோடு கதைத்த சாந்தலிங்கத்தையும் உரையாட விட்டனர்.

BA1B6234-505D-42E9-BFA2-2CF7BC6E5DFC.png

இது ஒரு உளநோய்ச் சிகிச்சைமுறை போல எனக்குப்பட்டது. இதற்குள்  இரண்டு விடயங்கள் மேற்கிளம்புகின்றன.

ஒன்று புரதான இனக்குழுவின் ஒரு விரிவான தொடர்ச்சியான வரலாறு, 

அடுத்து  அது  அவர்களுக்குள்  வாழும் நம்பிக்கையையும்  உள நோய்ச் சிகிச்யையும் அளிக்கும் முறை. 

அவ்வரலாற்றை அவர்கள் தம் நினைவுகளில் தேக்கிவைத்துள்ளனர்.

கல்வெட்டையும், புதைபொருளையும் தேடித்தேடி பூதக்கண்ணாடி கொண்டுதிரியும் தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மனித மனதில் ஆழ்ந்து புதைந்துள்ள இந்த நினைவுகளை கணக்கில் எடுப்பதில்லை. எடுத்தால் ஒரு பெரும் பழைய  சமூக வரலாறு  பண்பாடு கிடைக்கும் அல்லவா? 

கிழக்குப்பல்கலைக்கழகம் ஒரு பேராசிரியர் தலைமையில் அண்மையில்  கி.மு 2ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுகளையும், புதைபொருள் ஆய்வுகளையும் மட்டக்களப்பில் பலத்த பிரயாசத்தின் பின் கண்டெடுத்தனர். அதனடியாக அம்மக்கள் நாகர் என இனம் கண்டனர். நாகரே  இரும்புப் பாவனையையும்  வேளாண்மையையும்  மட்டக்களப்புக்குக் கொணர்ந்தனர்  என நிறுவினர். மட்டக்களப்பு வரலாறு   நாகருடன் ஆரம்பிக்கிறது.  என நிரூபித்தனர்.  பெரும் பெரும் நூல்களை  எழுதினர். அவர்கள் உழைப்பும் தேடலும்  மிகுந்த  வரவேற்பிற்குரியதுதான்.    எனினும்  நாகருக்கு முந்தியவரான இயக்கர் வழிவந்த பழங்குடியினரான வேடர்குலம்   கல்வெட்டு, புதைபொருள், எழுத்துச் சான்றுகளின்றி தம் வரலாற்றைத் தம் நினைவுகளிலும் சடங்குகளிலும்   பதித்து வைத்துள்ளதைக் கவனிக்கத் தவறி விட்டனர். இது அவர்களின் பிழையன்று  அவர்களின் முறையியல்  அவர்களை அப்படி வழி நடத்தியது. 

மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு இருட்டுக்குள் கிடக்கிறது. ஆய்வாளர்களோ வெளிச்சத்தில் தேடுகிறார்கள். இதைத்தான் தொலைத்த இடத்தில் தேடுவோம் என நான் குறிப்பிட்டேன்.

அடுத்த கதை.. 

இது உறங்க  விடாத  சுடலைமாடன் கதை

——————————————————————————–

கந்த கெட்டிய கண்டியிலுள்ள ஓர் தேயிலைத் தோட்டமலையாகும்.

150 வருடங்களுக்கு முன்னர் அங்கு  கொண்டுவரப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தம்மோடு தம் பண்பாட்டையும் கொண்டுவந்தனர். கால  ஓட்டங்கள்  அவற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தினும் இன்றுவரை தொடர்ச்சியாகச் சிலவற்றைப் பேணியும் வருகின்றனர். அதனுள் ஒன்றுதான் சுடலை மாடன் வழிபாடு. 

கந்தகெட்டிய மஹாவித்தியாலய அதிபர் ராஜகோபால் அர்ப்பணிப்பு மிக்க அதிபர். மலையக அடிமட்ட மக்கள் மீதும், அவர்களின் கலைகள் மீதும் அனுதாபமும் ஆர்வமும் கொண்டவர். அவர்  தனது பாடசாலை நாடகவிழாவுக்கு விருந்தினராக என்னை அழைத்து   இருந்தார்.

‘சேர் சுடலை மாடன் வில்லுப்பாட்டு நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்’; என்றார்.     ஏற்கனவே  காமன்  கூத்து,  அருச்சுனன் தபசு,  பொன்னர் சங்கர் ஆகிய  மலையக  நிகழ்த்துகைக்  கலைகளைப்  படித்தும்  பார்த்தும்  இருந்த  நானும் அதனைப்பார்க்க விரும்பினேன்.

சுடலை மாடன் வில்லுப்பாட்டு பார்க்க அன்று பின்னேரம் என்னை அதிபர் ராஜகோபால் வேனில் காகல மடவல டிவிசன் நலந்தன்ன எனும்  மலைக்கு     அழைத்துச்சென்றார்.,

பின்னேர இளவெயில், எம்மைச் சூழ மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையூடாகச் சென்ற வேன் ஓரிடத்தில் நின்றது.  நின்ற இடத்திலிருந்து மேல்நோக்கிச்சென்ற படிக்கட்டுகளூடே ஏறிச் சென்று மிகச்சிறிய ஒரு கோவிலை அடைந்தோம் . அக்கோவில் ஒரு பெரிய அகன்ற வாகை மரத்தின் கீழ் அமைந்திருந்தது. அது ஒரு மிகசிறியதோர் கிராமியக் கோவில்.  

அக்கிராமச் சனங்கள் எங்களை எதிர் நோக்கிக் க்காத்திருந்தனர்.

கோவில் விக்கிரகங்களாகக் கன்னங்கரேல் என்ற இரு உருவங்கள் இருந்தன.. 

அது  ஒரு மாடசாமி கோவில்.  கோவிலின் முன் வில்லுப்பாட்டுக்குரிய ஒரு பெரிய வில் இருந்தது.  மக்கள்  எங்களுக்கு வணக்கமுரைத்தார்கள். வில்லுப்பாட்டுப் பாடப்போகும் பாடகர்களும் வாத்தியக்காரர்களும் முதலில் கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். திருநீறு சந்தணம் வழங்கப்பட்டது.

‘சுடலைமாடன் பிணம் தின்னும் ஒரு தெய்வம். சுடலைக்குச்சென்று புதிய பிணங்களைத் தோண்டியெடுத்து அப்பிணங்களின் உடலைப் பிழந்து பிணத்தின் குடலைமாலையாகப் போட்ட படியும் பிணத்தின் உள்ளுறுப்புகளைச் சாப்பிட்டுக்க்கொண்டும்  வந்து தன்னை அது மக்கள்மத்தியில் நிரூபித்துக்கொள்ளும்’என ஒருத்தர் கூறினார். 

’21 வகையான மாடன்கள் இருக்கிறார்கள்’என்று சுடலைமாடன் பற்றி எனக்கு விளக்கம் அளித்தார். என்னருகில் இருந்த இன்னொரு  பெரியவர்,

‘பல மாடன்கள்  உண்டு சப்பாணி மாடன், நொண்டிமாடன்,சுடலை மடன் என  மாடன் வகையியினை ஒரு பட்டியல் தந்தார். இன்னொரு  பெரியவர்

‘முன்னாளில் எங்களின் இந்த ஊரில்  மாடன் திருவிழாஆரம்பமாவதற்கு ஒரு வாரத்துக்கு முன் ஒரு பிணம் கட்டாயம் விழும் அப்புதுப் பிணத்தின் குடலைத்தான் மாலையாகப், போட்டுக்கொண்டும் பிணத்தின் உள்ளுறுப்புக்களைச் சாப்பிட்டுக் கொண்டும் மாடசாமி இக்கோவிலுக்கு வருவார்’ என்றார். இன்னொருவர்

‘மாடனை இந்த மடச் சனங்கள் அன்று கேள்வி கேட்கப்போய் இந்த ஊருக்கு ஒரு பெரும் கொள்ளைவந்தது. நிறையச் சனம் செத்தது. பின் தமது தவறை உணர்ந்து மக்கள் மாடசாமியிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்ள  அப்பெரும் கோள்ளை நோய்நீங்கியது’என்று கூறினார். 

‘பின்னாளில் மக்கள் பக்தியுடன்  மாடசாமியிடம் பிணத்தின் குடலை மாலையாகப் போட்டுக் கொண்டு வருவதைக் காணப் பெண்களும் பிள்ளைகளும் பயங்கொள்கிறார்கள். எனவே பிணத்த்தின் குடலோடு வரவேண்டாம் என வேண்ட பிணத்திற்குப் பதிலாக மாடசாமி கோழியின் குடலை போட்டுக்கொண்டு வருவதும் கோழியின் உள்ளுறுப்புகளைச் சாப்பிட்டுக்கொண்டு வருவதும் வழக்கமாயிற்று’ என்றார் இன்னொருவர்.

மாடசாமி பற்றி மக்கள் நம்பிக்கையின் புற உரு  இவ்வாறு எனக்கு அவர்களால் தரப்பட்டது. அச்சாமி பற்றி எனக்குள்ளும் ஒரு படிமம் உருவாகியது.   மாடசாமி வில்லிசைக் குழு பற்றியும் என்னைப் பற்றியும் ஒரு அறிமுக உரையினை ராஜகோபாலும் அங்கிருந்த ஒருவரும் நிகழ்த்தினர். 

வில்லுக்கு பக்தியோடு தூப தீபம் காட்டப்பட்டு அதுவும் ஒரு தெய்வநிலையில் வைத்துப் பூஜிக்கப் பட்டது. பங்குகொள்ளும் அனைவருக்கும் வில்லுப்பாட்டுக்குழுத் தலைவர் திருநீற்றை  நெற்றியில் இட்டார்.  பக்தியோடு அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டனர்.  நம்பிக்கையும், பக்தியுமே அங்கு மேலோங்கி நின்றது. மதம் என்பது நமிபிக்கைதானே. வில்லிசைக் குழுவினர் பெரியவில்லைச் சுற்றி அமர்ந்தனர். உடுக்கடிக்கலைஞர்கள் இருவர், குடம் வாசிப்போர் ஒருவர், தபேலா வாசிக்க ஒருவர், பிரதான பாட்டுக்காரர், 

அவருடன் பாடப் பக்கப்பாட்டுக்காரர்கள்  சிலர் என ஒருபெரும் குழாம். 

சுடலை மாடன் கதை வில்லுப்பாட்டு ஆரம்பமாகியது.  பிரதான கதை சொல்லி மருதை என்பவரின் குரல் ஓங்கி ஒலித்தது.   பாக்கியனாதன் என்பவர் தன் முழு உடலையும் அசைத்து அசைத்து ஆடியபடி உடுக்கு அடித்தார். 14 பேர்வில்லைச் சூழ அமர்ந்திருந்து பக்கப்பாட்டுப் பாடினர்.  பிரதான பாடகர் பாடகர் பாட  இவர்கள் ஆம் ஐயா, ஆம் ஐயா என்று தொடர் குரல் எழுப்பினர். அனைவரின் இணைவும் குரல் ஓசையும், உடுக்கு ஒலியும் பாடல் மெட்டும் ஒருவித லய உணர்வைத் தந்து கொண்டிருந்தன. 

அந்த லயத்துக்குள் நாம் அனைவரும் ஈர்க்கப் பட்டோம். எமது உடல்களும் தாள லயத்துக்கு அசைந்தன. திடீரென ஒருவருக்கு பெரும் உரு வந்து விட்டது. 

இரண்டு கைகளையும் தரையில் அடித்து புரண்டு தவழ்ந்து ஆடியபடி அவர் கோவிகுக்குள் சென்று  மாடசாமி உடை அணிந்து வெளியில் வைத்திருந்த மணிகட்டிய பெரும் தண்டமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு,  நீண்டசாட்டைக் கயிறொன்றைத் தனது தோழைச் சுற்றிப்போட்டுக்கொண்டு தாளத்துக்கு ஏற்ப காலடி வைத்து ஆடியபடி கோவில் வீதியில் கம்பீர நடை பயில ஆரம்பித்தார். “மாடன் வந்துவிட்டான்” என்றார்கள். மாடன் என அவர் நிரூபிக்க வேண்டுமே. காளி அம்மன் பந்தலில் ஒருபெண் காளியம்மாள் உருவேறி ஆடிக்கொண்டிருந்தாள். 

அவளிடம் சென்று திரும்பிய மாடன், சுவாமி சிலைக்கு அருகில் வைத்திருந்த சிறிய சாரய போத்தலை எடுத்தார், குடித்தார், மற்றவர்க்கும் கொடுத்தார். குடிக்கத் தயங்கிவரின் தலைகள் மீது தண்ணீர் போலத் தெளித்தார். 

அருகில் கட்டியிருந்த கோழியை எடுத்தார். அதன் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தார். பின் கோழியை இரண்டாகக் கிழித்தார். 

கீழே இரண்டு கால்களையும் அகலப் பரப்பி  இருந்தவண்ணம் காலுகளுக்கு நடுவில் கோழியை வைத்து அதன் குடலை பிய்த்து எடுத்து மாலையாகக் கழுத்தில் போட்டுக்கொண்டார். இருந்த படியே கோழியின் ஈரலை வெளியே பிய்த்து வெளியே எடுத்தார். இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இரத்தம் வழிய அதனைச் சாப்பிட ஆரம்பித்தார். சனங்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர். வில்லுப்பாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது.  குழந்தைகளும், பெண்களும் இச்செயல்ளைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.  நானும் பார்வையாளர்களுள் ஒருவனாக.

கோழியின் குடலை மாலையாகப் போட்டுக்கொண்டு அதன் ஈரலைச் சாப்பிட்டுத் திருப்தி கொண்ட சுடலை மாடன் பரவச நிலையில் நின்று மீண்டு மீண்டும் எழுந்து தண்டத்தைத் தாங்கியபடி பக்தர்கள் மத்தியில் தாளத்திற்கு நடந்து உலாவர ஆரம்பித்தார். நடந்து சென்ற சுடலைமாடனார் ஒரு இளம் பெண் முன் நின்று ஏதேதோ கூறினார். தன் அருகில் வரும்படி அழைத்தார்.

அந்தப் பெண்ணோ நிர்த்தாச்சணியமாக அவ்வழைப்பை மறுத்து விட்டார். மாடன் அதனால் சற்றுக் குழம்பிப்போய் கோபமுற்றவர் போல விரலைக் காட்டி அப்பெண்னை ஏதோ எச்சரித்தார்’,!அந்தப் பெண்ணின் மீது சுடலை மாட சாமிகோபம் கொண்டு விட்டார் இன்று அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நடக்கும்’என்றார் என் அருகில் இருந்த ஒருவர். 

சுடலை மாடன் பின்னர் பெரிய சாட்டையை எடுத்து மளார் மளார் எனத் தன்னை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். பின்னர் மெல்ல மெல்ல உருத் தணிய சாதாரண மனித நிலைக்கு வந்து விட்டார்,

அவரை அப்போது பார்த்தால் இந்தப் பூனையா அந்தப்பாலைக் குடித்தது என்பது போல மிக மிகச் சாதுவாகக் கணப்பட்டார்.  திடீரென அங்கு நின்ற இன்னொருவருக்கு உரு வந்து விட்டது.

அவர் முன்னை மாடசாமிக்கு உருக்கொண்டு ஆடியவரைவிட இளைஞராகவும் தோற்றத்திலும் உடையிலும் சற்று நவீன உலகுக்குள் வாழ்பவபராகவும் இருந்தார். (பின்னால் விசாரித்தபோது கொழும்பில் ஒரு கம்பனியில் அவர் வேலை செய்பவரென அறிந்தேன்). 

இப் புதிய மாடன் இப்போது சுருட்டு ஒன்றைப் புகைத்தபடி வில்லுப்பாட்டுத் தாளத்திற்கு உருக்கொண்டு ஆடினார். 

பெரிய சாட்டையைத் தன் தோழில் போட்டுக்கொண்டார்.

சிலவேளைகளில் சாட்டையால் தன்னை மாறி மாறி அடித்தும் கொண்டார்.

சாராய போத்தலை எடுத்துக் கொண்டார்

தானும் குடித்தார். மற்றவர்க்கும் கொடுத்தார். 

வில்லுப்பாட்டு நிற்கவேயில்லை.

நடந்த நிகழ்ச்சிகள், புதிய பார்வையாளர்களாகிய எங்களுக்குத்தான், திகைப்பும் வியப்பும் தந்ததேயொழிய அங்கிருந்த மக்களுக்கு அது பழகிப்போன ஒரு நிகழ்வாகவே இருந்தது. 

அவர்கள் சர்வ சாதாரணமாக அந்நிகழ்வுகளைப் பார்த்தபடி இருந்தனர்.

இந்த மாடசாமியின் ஆட்டமும் முடிந்தது

வில்லுப்பாட்டும் வாழி பாடி முடிக்கப்பட்டது. 

பெரு நிகழ்வு ஒன்றுகண்ட மனநிலையினின்று மீண்டேன். 

இத்தகைய உருவேற்று ஆட்ட நிகழ்வுகள் எனக்குப் புதியனவல்ல. என் சிறு வயதில் என் கிராமத்தில் இத்தகைய உயிர்ப்பலி கொடுக்கும் கோவில் சடங்குகளைப் பார்த்திருக்கிறேன். 

பிற்காலத்தில் அங்கு மடைப்பலி கொடுக்கப்பட்டதையும் அவதானித்துள்ளேன். மடை என்பது கமுகம் பாழை,வாழைப்பழம் பாக்கு, வெற்றிலை வைத்துப் பூசாரியார் அதனை ஒரு உயிராக உருவகித்துக் கொடுக்கும் ஒரு பலியாகும்.

உயிர்ப்பலிக்குப் பதிலாக அதனை பெறச் சாமியைச் சம்மதிக்க வைதிருந்தார்கள். 

விழா முடிந்த பின் என்னைப் பேசும்படி கேட்டு மைக்கை என்கையில் ஒப்படைத்தனர். 

என்பேச்சை எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரிந்தது. 

நான் பின் வருமாறு பேசினேன்

‘மடவல டிவிசன் நலந்தன்ன மலையக மக்களே, வில்லுப்பாட்டுக் கலைஞர்களே, இதில் பங்குகொண்டோர்களே, எனக்கு இப்பெருவிழாவை அறிமுகம் செய்த ராஜகோபால் அவர்களே, 

மலையக மக்கள் 150 வருட காலத்துக்கு முன் தன் வாழ்வைவளமாக்கிக் கொள்ள தமிழகம் இருந்து இங்கு வந்தார்கள். வரும்போது தம்முடன் அவர்கள் தமது தனித்துவமான பண்பாட்டு அம்சங்களான சடங்குகள், விழாக்கள், கூத்துகள், வாழ்க்கை முறைகள், போன்றனவற்றையும் கொணர்ந்தார்கள்.

அவர்கள் இங்கு வறுமையிலும் துயரத்திலும், குளிரிலும் வாடிய போதெல்லம் அவர்களுக்கு உயிர்ப்புத் தந்தவை இந்தப் பண்பாட்டம்சங்கள்தான். இவற்றை நிகழ்த்தியபோது அவர்கள் உற்சாகம் பெற்றனர். சமூகமாக இணைந்தனர். பலம் பெற்றனர். அத்தகைய வாழ்வுப்பலம் தந்த சடங்குகளை இன்றும் தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகின்றனர். கால மாற்றம் அச்சடங்குகளில் சிற்சில மாற்றங்களையும் எற்படுத்தியும், பண்பாட்டடையாளமாக காமன் கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுனன்தபசு என்பனவே பரவலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

மலையகத்தில் நடத்தப்படும் காட்டேரியம்மன் சடங்கு அண்மைக்காலமாக வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மலையகப் பண்பாட்டுச் சடங்காகும்.   இவ்வகையிலின்றுதான் நான் முதன் முதலில் இந்த சுடலைமாடன் வில்லுப்பாட்டையும் அதனை ஒட்டி நடைபெறும் சுடலைமாடன் சடங்கையும் கேட்கிறேன்,பார்க்கிறேன்.  இது இன்னும் பொது வெளியில் பெரிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை.  இவ்வாற்றுகை எனக்கு பெருவியப்பையும் திகைப்பையும் எற்படுத்தியுள்ளது

பிணங்களைத் தோண்டி அவற்றின் குடல்களை மாலையாகப்போட்டு அவற்றின் உள்ளுறுப்புகளைச் சாப்பிடும் சடங்குமுறைகள் மானுட சமூகத்தின் மிகப் புராதனமான சடங்குவகைகளில் ஒன்று. மானிட வியலாளர்கள் இன்றும் எஞ்சி நிற்கும் இத்தகைய இனக்குழுக்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். 

மானுட வரலாற்றின் ஆரம்ப காலத்தில் சில மானிடக்குழுக்களிடையே மனித இறைச்சி சாப்பிடும் வழக்கம் இருந்துள்ளது.  இறந்தவர்களை உண்ணும் வழக்கம் முதலில் இருந்து பின்னர் அது ஒரு சடங்கு முறையாக மாறியிருக்கலாம். வாழ்வோடு ஒட்டியிருந்த சில பழக்கவழக்கங்கள் சடங்குகளாக மாறியமைக்கு நிறையச்சான்றுகள் உள்ளன.  தமிழ் மக்களிடமும் இத்தகைய வணக்க முறைகள் இருந்தமைக்குச் சான்றுகள் உண்டு.

சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் பற்றிப் பேசப்படுகிறது. இப்பேய் மகளிர் சுடலையில் பிணங்களையுண்ட பழைய பெண் மதகுருமார்களாக இருந்திருக்கலாம் எனஆராய்ச்சியாளர்கள் சிலர் யூகிக்கின்றனர்.

.மிகப் புராதன கலத்தில் பெண்ணே அக் குழுவுக்குத்தலைவியாக இருந்தாள். 

பெண்வழிச் சமூக அமைப்பு நிலவிய காலம் அது. அப்பெண்ணே மத குருவாகவும் இருந்தாள். தாயைத்தெய்வமாக வணங்கிய பெண்வழிச் சமூக அமைப்பு அது. கொற்றவை, காடுகிழாள் என்பன அன்றைய தமிழரின் பெண் தெய்வங்கள். கொற்றவை பின் காளியானாள்

இந்தக் காடு கிழாளின் இன்றைய எஞ்சிய வடிவம்தான் மலையகக் காட்டேரியம்மன் என நினைக்கிறேன். திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்கள் குழுவினரிடம் வழக்கிலிருந்த சுடலமாடன் வில்லுப்பாட்டை 1960 களில் பேராசிரியர் வானமாமலை கல்வி உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சுடலைமாடனை சிவனுடன் இணைக்கும் பண்பை அதில் கண்டேன். 

அன்று நான் வாசித்த அந்தச் சுடலை மாடன் வில்லுப்பாட்டை இன்று நிகழ்த்துகலையாகவும், சடங்காகவும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை நான் பெற்ற பாக்கியம்.   இச்சந்தர்ப்பத்தை எனது மாணவன் ராஜீவும், நண்பர் ராஜகோபாலும் எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்காவிட்டால் என் வாழ்நாளில் இந்த அரிய வாய்ப்பை இழந்திருப்பேன்.  மக்களே இவ்வகையில் நீங்கள் 3000 வருடங்களுக்கு முன்னர் தமிழர் மத்தியில் இருந்த ஒரு வணக்க முறையினை இன்றளவும் பேணும் பெருமையைக் கொண்டிருக்கிறீர்கள்.

அதற்கு தமிழ்ப் பண்பாடு பேசுவோர் உங்களுக்கு மிகுந்த நன்றி செலுத்த வேண்டும். உங்களுக்கு இது ஒருசடங்கு. நம்பிக்கையோடு செய்யப்படும் சடங்கு. நம்பிக்கையே இங்கு பிரதானம். இதில் நம்பிக்கையின்றிப் பார்ப்போருக்கு இது ஒரு கண்காட்சி அல்லது ஆற்றுகை. என்னைப் பொறுத்தவரை உங்கள்ஆற்றுகை என்னை இதில் ஒர் தீவிர ரசிகராக அல்லது பங்காளராக ஆக்கியது. 

வில்லுப்பாட்டுப் பாடிய அனைவரும் அதில் தோய்ந்து மிகுந்த ஈடுபாட்டுடன் பாடினர். அவர்களின் உடுக்கைகளின் ஒலியும், வில்லில் கட்டிய மணியின் ஒலியும், குடம் எழுப்பிய ஒலியும், பாடிய ஒவ்வொருவரின் லயம் தவறாத பெருத்த குரல் ஒலிகளும் ஒன்றாக இணைந்து என்னை உருவேற்றின.

இத்தகைய திறன் மிகுந்த கலைஞர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மலைக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் கலைஞர்கள் இவர்கள். ஏன் இவர்கள் இதுகாறும் வெளிக்கொணரப்படவில்லை?

 இந்தச்சடங்கு ஏன் வெளியுலகுக்குப் பிரபல்யப்படுத்தப்படவில்லை?

என்ற கேள்விகள் என்னுள்ளத்தில் எழுந்த வண்ணம் இருந்தன.

இவர்களைப் பற்றி அறிந்த இங்குள்ள மாணவர்கள் யாரையாவது வைத்து இச்சடங்கு பற்றிய ஓர் ஆய்வை மேற்கொள்ளவைத்து அதனை நூலுருவாகக் கொணரும் முயற்சியை நான் நிட்சயம் செய்வேன். 

இச்சமயம் எனது சிறிய ஆலோசனை ஒன்றையும் மிகுந்த தயக்கத்தோடு உங்கள் முன் வைக்கின்றேன்.

இது கட்டளையல்ல., உங்கள் மீது அன்பும் பரிவும் கொண்ட நெருக்கமான ஒரு நண்பனின் வேண்டுகோள் என நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

ஏற்பது விடுவது உங்களைப் பொறுத்தது

சுடலை மாடசாமி உங்களின் குல தெய்வம். உங்களைக்காக்கும் தெய்வம். 

ஆரம்ப காலத்தில் சுடலையில் பிணத்தைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டபடி சுடலை மாடன் வந்தபோது நீங்கள் இந்தக்கோலம் கண்டு குழந்தைகளும், கர்ப்பிணிப்பெண்களும் தாக்கமடைகிறார்கள் என்று வேண்ட

அவர் பிணத்தின் குடலை மாலையாகப் போடுவதற்குப்பதிலாக கோழியின் குடலைப் போட ஒப்புக்கொண்டதாக இங்கு ஒரு பெரியவர் என்னிடம் கூறினார். பக்தர்கள் சொன்னால் சுவாமிகள் கேட்பர். பக்தி எனும் வலைக்குள் கட்டுப்படாத சாமிகளே இல்லை. அன்பின் சக்தி அத்தகையது. அவரிடம் நீங்கள்

‘சுவாமி காலம் மாறி வருகிறது. கோழியைக் கிழித்துக்குடலை மாலையாகப் போடுவதைக் குழந்தைகள் பார்க்கிறார்கள். கோழிக்குபதில் பூக்களைக் குடல்கள் போலகட்டி வைக்கிறோம். அவற்றை மாலையாக அணிந்து, உள்ளுறுப்புகளாக நினைத்துச் சாப்பிடுங்கள்’ என வேண்டுகோள் விடுங்கள். உங்களைக் காப்பாற்றும் அச்சாமி அவசியம் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வார்.

எங்களூரிலும் நரபலிக்குப் பதிலாகப் பூசணிக்காய் வெட்டி அதன் மீது குங்குமம் தடவும் பழக்கமுண்டு.

உயிர்ப்பலிக்குப் பதிலாக மடைப்பலி கொடுக்கும் வழக்கமுண்டு  உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

என்று கூறி பேச்சை முடித்தேன். 

அவர்களின் பலத்த கைதட்டல் என் கருத்துககளை அவர்கள் உள்வாங்கியுள்ளனர் என்ற அபிப்பிராயத்தையே எனக்குத் தந்தது. 

பூசை புனஸ்காரம் முடிய அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு அழைதுச் சென்றனர். 

அங்கு மாலைத் தேனீர் அருந்திவிட்டு மாணவர்களுடன் விடுதிக்குப் பயணமானேன். அன்றிரவு எனக்குத் தங்க இன்னொரு விடுதி ஒழுங்கு செய்திருந்தனர். அது ஒரு அழகான விடுதி.

விடுதியிற் சிரம பரிகாரங்கள் முடித்தபின்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் மானிடவியல்,சமூகவியலில் இணைப்பேராசிரியராகக் கடமையாற்றும் என் மகன் சித்தார்த்தனுக்குப் போன்பண்ணி எனது அன்றைய அனுபவங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். 

போனில் எனது உரை ஒரு நீண்ட உரையாக இருந்தது. 

அரைமணி நேரம் நான் அவனுடன் தொடர்ச்சியாகப் பேசியிருப்பேன். 

அவனிடம் சொல்ல என்னிடம் நிறைய விடயங்கள் இருந்தன. 

எல்லாவற்றையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்ட அந்த மானிடவியலானான என் மகன் ஒரு கேள்வியை என் முன்வைத்தான்

மிக முக்கியமான கேள்வி அது. 

‘அப்பா அவர்களின் நம்பிக்கையில் கைவைக்க, அவர்களுக்குப் புத்திமதி கூற நீங்கள் யார்?’ ‘உங்கள் அறிவை அவர்கள் மீது திணிக்கிறீர்களா?’

அவனது அந்தக் கேள்வி ஒரு தடவை என்னை அதிரவைத்தது. 

‘மகனே நானும் அவர்களில் ஒருவன்’

எனப் பதில் தந்தேன்

அதனை மறுத்து அவன் தன் வாதங்களை முன் வைத்தான். 

மானிடவியலில் முறையான பயிற்சி பெற்ற அவனின் வாதங்கள் என்னைப் பல திசைகளில் சிந்திக்கவைத்தன. அவனுக்கும் எனக்குமிடையே ஒரு நீண்ட ஆய்வறிவு உரையாடலாக அது நீண்டது. 

ஒரு மணி நேரத்துக்கு மேல் நாங்கள் இருவரும் உரையாடியிருப்போம். 

அவன் கருத்துக்கு நான் வசப்படவில்லையாயினும்

தெளிந்த ஓடையில் ஒரு சிறிய கல்லை எறிந்தால் அது பல சிறிய தொடர் அலைகளை எழுப்பிச் செல்வது போல என்னுள்ளும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அந்த அதிர்வலைகளுடன் உறங்கச் சென்றேன். உறக்கம் வரவில்லை

அடுத்த கதை

ஒரு  சிறு இனக்குழுமம் தன்னை  நிலை  நிறுத்தி  தனித்துவம் பெற்று மேலெழுந்த  கதை

இந்த  மூன்றாவது  கதை இன்னும் சுவராஸ்யமானது. 

இக்கதையும் ஒரு கோவிலோடு தொடர்புடையது மட்டக்களப்பில்  புன்னைச்சோலை  எனும் இடத்தில் இன்று புகழ்பெற்ற  மக்கள்  அனைவரும் சென்று  வணங்கும் காளிகோவில்  அமைந்துள்ளது. அது அப்பகுதியில் வாழும்சிறுபானமைத தமிழருக்குச்  சொந்தமானது. அச்சாதிக்குழுமமே  அதனை இன்றுவரை தனித்துவம்கெடாமல் நடத்தி  வருகிறது,  அந்தக்கோவில்தான்  காளிஅம்மன் கோவில், அந்தக் காளி அம்மன் வளாகம்  மணல் நிரம்பிய வளாகம், ஏனைய  பெரும் கோவில்கள் பலவற்றில் சீமேந்த்,  மாபிள் நவீன  பாணியிலான கட்டிடங்கள்  எனநவீனம் புக  அந்தக் கோவிலின் உள்ளும் புறமும் மணலே பரப்பப்பட்டுள்ளது. 

அக்காளிகோவிலைச் சுற்றி  நாம் கேள்விப்படாத நீலசோதயன், மாறா, பிறதியங்கிரிக்காளி,  நீலி, வதனமார் முதலான சிறுதெய்வக் கோவில்கள்  உள்ளன, அக்கோவிலின் உள் மண்டப  முழுவதும் மேல்விதானத்திலும்  காளியின் பல்வேறு அவதாரங்கள்  மிககடுமையான  வர்ணங்கலில் கோர முகத்தோடு  காட்சி தருகின்றன. 

அரக்கர்களை  அழித்து  அறம் நிலை நாட்ட  ஆயுதம்  ஏந்திய காளி மாதாவின்  பல்வேறு  ரூபங்கள்  பல்வேறு  சிலைகள் வடிவில்  நம் மனம் கவருகின்றன. 

வ்ருடாவருடம் கதவு திறந்து  ஆகம முறை சாராது மந்திரமுறையில்  வழிபாடு  செய்யப்படும் கோவில் இது.  

காளி, மாரி, நீலா, சோதயன், மாறா போன்ற தெய்வங்கள்  அங்கு  நின்று ஆடும் மனித உடலுக்குள்  வந்து பக்தர்களுடன்  உறவாடுவதுபோல  சடங்குகள் நடக்கும் கோவில் இது. 

இறுதி நாள்  அங்கு நடைபெறுவது தீ மிதிப்பு ஆகும். தெய்வங்களும் பூசாரிமார்களும் ஊரவரும் தீயில் இறங்கித் தம் கடன் தீர்ப்பர். 

இதனைத் தீக்குளித்தல்  என்பர்.  நீரில் குளிப்பதைத்தான் கேள்விப் பட்டுள்ளோம்.  இங்கே தீக்குளித்தல் எங்கிறாரகள்]

தீப்பாய்தல், தீக்குளித்தல் எனும் சொல்லால் இவ் உற்சவம் அழைக்கபடுகிறது. 

இவ்விரு  சொற்களும் ஆழ்ந்த  அர்த்தங்க்ள் கொண்டவை. 

இக்கோவில் குறிப்பிட்ட ஒரு  சாதியினருக்குரிய கோவிலாயினும் இதன் வளர்ச்சிக்கு ஒரு வரலாற்றுக் காரணமும் உண்டு. 

மட்டக்களப்பில்  அமிர்தகளியில்  அமைந்துள்ள மாமாங்கப் பிள்ளையார் கோவிலில் இச்சமூகத்தினருக்கு ஒரு திருவிழா  இருந்தது.  மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில்  குருக்கள்  இவர்களுக்கு  திருவிழா உபயகாரருக்குக் கொடுக்கும் காளாஞ்சி  கையில் கொடுக்கமறுத்து, அதனை படியிலே  வைத்ததை  எதிர்த்து, அந்த வரிசை  வழங்கும் முறையில் காணப்பட்ட   ஒதுக்கல் மனப்பாங்கை எதிர்த்து  இப்படியாயின் அந்த திருவிழா எங்களுக்குத் தேவையில்லை  என  சுயமரியாதையுடன் அங்கிருந்து  வருகையில்  அங்கிருந்த  ஆலமரத்தின் ஒருகிளையக் கோபத்தோடு  ஒடித்துகொண்டு வந்து  ஏற்கனவே தம் ஊரில் இருந்த  இந்தக் காளி கோவில்  முன்னால்  நட்டு, அங்கேயே  ஒரு பிள்ளையார்  கோவிலையும் உருவாக்கினர் என்று அங்குள்ள  பெரியவர்கள்  சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.  

அந்த  ஆலமரக்கிளை இப்போது பருத்துச்சடைத்து வளர்ந்து பலருக்கும் நிழல் தருகிறது. 

அக்கோவிலின் முன்னால் அந்த ஆலமரத்தின் முன்னால் மாமாங்கப் பிள்ளையார் கோவிலளவு ஒரு பெரும் கோபுரம் எழுந்து முடியும் தறுவாயிலிருக்கிறது, ஆலமர நிழலில் ஒரு பிள்ளையார் கோவிலும்  அமைந்துள்ளது. பிள்ளையார் கோவிலிலிருந்து  கோபித்துக் கொண்டு  வருகையில்  பிள்ளையாரும்  தம்மோடு  வந்து விடுவார்  என்ற அதீத  தெய்வ நம்பிக்கை. சிறு தெய்வக்கோவில்  மரபில் கோபுரத்திற்கு இடம் இல்லை அல்லவா ஆனால்  இங்கோ  வழமை மாறுகிறது. 

இன்னொரு  சுவராஸ்யமான  அம்சம் யாதெனில்  நான் அண்மையில்  மட்டக்களப்பின் கோவில் வழிபாடுகளையும் சமூகங்களையும்  அறிய  வந்த மேற்கு நாட்டாய்வாளர்கள் மூவரை  அங்கு அழைத்துச் சென்றேன். 

எழுந்து  நிற்கும் பெரு கோபுரவாசல் கடக்கையில் முன்னாலிருந்த நான் முன் குறிப்பிட்ட பிள்ளையார் கோவிலிலிருந்து  சமஸ்கிருத மொழியில்  அர்ச்சனை கேட்டுகொண்டிருந்த்து, பிராமணர்கள் அங்கு வர வாய்ப்பில்லையே  என நான்  எண்ணிகொண்டு பிள்ளையார் கோவிலினுள் நுழைந்து அவர்கள் பூசனையைப் பார்த்துகொண்டிருந்தேன்.   

மிக அழகான உச்சரிப்பில் இரு அர்ச்சாகர்கள் சமஸ்கிருத மொழியில்  பிள்ளையாரை அர்ஜித்துக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனை முடிய  வந்து  பக்தர்களுக்குத் திருநீறு சந்தனம்  வழங்கினர். எனக்கும்  வழங்கினர்.   நான் அவர்களைப் பற்றி விசாரித்த்போது  அவரக்ள்  பிராமணர்கள் அல்ல என்றும்  அச்சமூகத்தைச் சேர்ந்தவரக்ளே சம்ஸ்கிருதம் கற்று, பூணூல்  அணிந்து அங்கு  சமஸ்கிருத சுலோகம் சொல்லி  பூசை செய்கிறாரகள் என்ற செய்தியும் கிடைத்தது. 

சமஸ்கிருத  மயமாக்கம்  மேநிலையாக்கம் என்ற கோட்பாட்டின் பின்னணியில்  இத்னைச் சமூகவியலாளர்கள் விளக்குவாரெனினும் இங்கே ஒரு பெரும் வரலாற்றை  முக்கியமாக  சமூகவரலாற்றைக் காணுகிறோம். 

அசமத்துவத்திற்கு  எதிராகக் கொதித்தெழுந்து  சுய  மரியாதை பேண எழுந்த  தமிழ்சமூகத்தின் ஒரு பிரிவினரின்  வரலாற்றையும்  அவர்களது  உளவியகையும்  காணுகிறோம். 

ஒரு முறை  விஸ்வாமித்திரர்  என்ற  ஒரு  சத்திரிய  வம்ச முனிவர்  அரசானான திரிசங்கு எனும் மன்னனைத் தன் தபோவலிமையினால்  தேவலோகம் அனுப்பினாராம் இங்கு தேவருக்கு  மட்டுமே  இடம் உண்டு என தேவேந்திரன் திரிசங்குவைக் கீழே தள்ளிவிட்டானாம். அவன் விஸ்வாமித்திர மகரிசியே  விஸ்வாமித்திர  மகரிசியே    எனக்கத்தியபடி உலகம் நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கும் போது நில் அங்கேயே என அவனை  வானத்தில் நிறுத்தி விஸ்வாமித்திரர் அவனுக்காக ஒரு தேவ உலத்தை  அங்குபடைக்கத் தொடங்கினாராம்  என புராணத்தில் படித்துள்ளோம்.

இங்கே  நிஜ  வாழ்வில்  அக்கதை  நிகழ்ந்திருக்கிறது. எனக்கு அந்தக் கதைதான்  ஞாபகம் வருகிறது. 

ஒரு பெரும்பான்மை  சமூகம் சமமாக நடத்தாமல்  புறம்தள்ளிவிட  அச்சமூகமே  தமக்கான பெரும் கோவிலை பிள்ளையார்  கோவில் அடங்கலாக உருவாக்கிக் கொள்கிற்து, அங்கு  விஸ்வாமித்திரர்  என்ற  பெரும் ரிசி  வந்தார். இங்கோ  அந்தச்சத்திரி குல ரிசியைக் காணவில்லை. ரிசிக்குப் பதிலாக  மக்களே  அதனைச் செய்துமுடிக்கிறார்கள். 

இப்படி நூற்றுக் கண்கான கதைகள்  என்னிடமுண்டு மலையக  மக்கள் வணங்கும் ரோதைமுனி,  கவ்வாதுச் சாமி, போன்ற  தெய்வ வழிபாடுகளின்  பின் இருட்டில் வாழும் அச்மூகங்களின் பெரு வரலாறுகள் மறைந்துகிடக்கின்றன. 

இவ்விடத்தில் வரலாறு பற்றியும் வரலாற்று   எழுதியல் பற்றியும் சிறிது நோக்குவோம் வரலாறு என்பது வரலாற்றைக் கூறுவது   அல்லது  வரலாற்றை  ஆராய்வது ஆகும் . வரலாற்று எழுதியல் என்பது வரலாற்றை எழுதிய முறை பற்றியும் எழுதியவர்களையும் எழுதப்பட்ட விடயங்களையும் ஆராய்கின்ற ஒரு புதிய நெறியாகும். 

வரலாற்று ஆசிரியர்களுள்   தலையாயவராக மதிக்கப்படுபவர் ஹெரோடக்ஸ் ஆவர். அவரே கிரேக்க வரலாற்றை எழுதினார். மேற்கத்தேய  வரலாறு எழுதும் முறை வேறு   கிழக்கத்திய நாடுகளிலே வரலாறு  எழுதும் முறை வேறு என்பர்.

கீழைத்தேயங்களில் வரலாறுகள்   புராணங்களாக பாடல்களாக  நாமாவளியாகக்  கூறப்பட்டுள்ளன.   ஒவ்வொரு நாடுகளுக்கும் இவ்வகையில் தனித்தனி வரலாறுஉண்டு, பல விதமாக இந்த வரலாறுகள் எழுதப்பட்டு இருக்கின்றன  என்பதே நாம் இங்குபெற வேண்டிய செய்தியாகும். 

18 ஆம் நூற்றாண்டுகளில் தான் வரலாறு ஒரு இறுக்கமானதுறையாக வளர்ச்சி அடைந்தது, இந்த வரலாறுகளைஆராய்ந்த பலர் ஆள்பவர்களின் வரலாறே    அதிகாரப்பூர்வமான வரலாறாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆள்பவர்களே செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் அவர்கள் வரலாறு அங்கு எழுதப்படுகிறது

ஆளப்படும் மக்கள் வரலாறு எழுதப்படவில்லை ஆள்பவர்கள் தங்கள் சாதனைகளைக் கல்வெட்டுகளிலே பொறித்துவைத்திருப்பார்கள். பின்னால் தொல்பொருள்  ஆய்வு அகழ் ஆய்வு   தோன்றுகின்ற பொழுதும் அவர்கள் வாழ்ந்த இடங்களே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. 

இதனால் வரலாற்று ஆசிரியர்கள் அரசர்களின்ஆள்பவர்களின்  வரலாற்றையே எழுதும்  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு  நம்பகமான வரலாறு எழுத தொல்பொருள், புதைபொருள் எழுத்தாவணங்கள் என்பன அவசியமாக பண்டைய வரலாற்று ஆசிரியர்களால் கருதப்பட்டன.   

இந்த  வரலாற்றுப்  பின்னணியில் நலம் நீலம் என்பவர் வாய்மொழி வரலாறு என்ற கருத்தியலைத் தோற்றுவித்தார். அவரே இதன் பிதாகவராக கருதப்படுகிறார், வாய்மொழிக் கதைகளில் வரலாற்றுண்மைகள்  புதைந்து கிடப்பதனால் அவற்றையும்  வரலாற்று  ஆதாரங்களாகப் பயன்படுத்தலாம் என்ற  கருத்தும்  வலுப்பெறலாயிற்று. 

அவருடன் பணிபுரிந்த எம் ஸ்டார்  என்பவர்  ஒலிப்பதிவுசாதனங்களின் துணையுடன் திட்டமிட்டு நிகழ்த்திய நேர்காணல்களையும் வாய்மொழித் தகவலாக அவர் கொண்டார்.  

இவ்வாறு முறையியலாகவும் கருவியாகவும் அறிவுத்துறையாகவும் வாய்மொழி வரலாறு வளர்ந்தது. 

இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் ஆளூவோர் உருவாக்கிய தரவுகளின் படி அவர்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எழுதிய வரலாறாகவே அமைந்தது. அந்த ஆய்வுகள் எழுந்த அளவு சாதாரண பொது மக்களின் வாழ்வை அவர்கள் எடுத்துரைக்கவில்லை.  எனவே  என்ன வரலாற்றை  நாம் எழுதப்போகிறோம் என்ற வினாக்கு விடைகாண வேண்டும். 

கல்வெட்டு  புதிபொருள்  எழுத்தாவணங்கள் என்ற  ஆதாரங்கள் இல்லை என்பதற்காக என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சமூகத்திற்கு வரலாறு இல்லாமல் போய்விடுமா? 

அம்மக்களுக்கு  வரலாறே  இல்லையா  என்ற  குரல்கள்  பலத்து  ஒலிக்கவும் ஆரம்ப்பித்தன. 

அந்த ஆவணத்தை மன்னர் வரலாற்றை எழுதியரின் எழுத்துக்களில் மாத்திரமன்றி அதிகார மயப்படாத வாய்மொழி மரபினடியாகவும் சிலர் தேட ஆரம்பித்தனர். 

அம்மக்கள் நடத்தும் சடங்கு முறைகள் வழிபாட்டு முறைகள்சமூக நடைமுறைகள் ஆகியவற்றிலும் அவர்களின் வரலாறும் பண்பாடும் மறைந்துள்ளது என சிலர் சுட்டிக்காட்டினர். இதனடியாக வரலாற்று எழுதியது சில புதிய போக்குகள் எழுந்தன. அதில் மூன்று போக்குகளை இங்கு நான் கூறுகின்றேன்.

1. History from below

2. Sabaltern studies

3  New history

  1. History from below

இதனை  நாம் தமிழில் அடிநிலை மக்கள் வரலாறு என அழைக்கலாம். 

அடிநிலை மக்களின் பார்வையில் இருந்து வரலாற்றை பார்ப்பது என்பது இதற்கு அர்த்தமாகும். 

இந்த பார்வையிலே அரசர்களையும் தலைவர்களையும் விடமக்கள் அதிக முக்கியம் பெறுவார்கள. இது ஒருவகையில் அரச வரலாறு அன்று சமூக வரலாறாக 1960களில் இது பிரபல்யமானது.     இத்தகைய  சிந்தனைப் போக்கு  அறிமுகமாகி உழைக்கும் மக்களின் வரலாற்றை லூசியன்பேப்ரி ஜோசன் என்பவர் ஆரம்பித்தபோது இது தொடங்கியது. பிரான்சில் அரசியல் புரட்சிக்கு பின்னர் ருசிய சோசலிச புரட்சிக்கு பின்னர் சுரண்டை பற்றி பேசாஅரம்பித்ததில் இது வரலாற்றுக்கு அறிமுகம்செய்யப்பட்டது. அரசியல் வரலாறு அல்ல சமூக வரலாறு என்பது இதன் காரணமகும்.

2,  Sabaltern  Studies

முழுமையிலே மக்கள் வரலாறு என்பது.  காலனித்துவம் மக்களை எவ்வாறு பாதித்ததது என்பதை விளக்குகின்ற ஒரு வரலாறு இது. ஆரம்பித்து வைத்தவர் ரஞ்சித் குகா என்பவர். சமூகத்தில் ஓரம் கட்டப்பட சமூகத்தின் வர்க்கம், சாதி, பால்,    பால்நிலை  சமத்துவம், வானிலை பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களைப் பற்றியவரலாறு. வரலாறு என்பதைதன் ஆய்வுகளை இரண்டுதொகுதிகளாக இவர் வெளியிட்டதொகுதி விவசாய மக்கள் பொதுமக்கள் பற்றிய எழுச்சி கிளர்ச்சி என்பன பற்றி கூறுகின்றது இரண்டாம் தொகுதி அவரின் சுவாதீனத்தையும் உரிமையையும் கூறுகிறது. 

இவர் இப்படி இந்த கோட்பாட்டை உருவாக்குவதற்கு அந்தோணியார் என்னுடைய சிந்தனைகள் உதவியாக இருந்தன . அந்தோணியார் என்பவர் கருத்து நிலைப்ச்ற்றியும் பண்பாட்டு மேலாதிக்கம் பற்றியும் நிறைய விளக்கங்கள் தந்துள்ளார்.

3 New  History

புதிய வரலாறு என்பது அண்மைக்காலமாக மேலெழுந்த வரலாற்று சிந்தனை முறை ஒன்றாகும். பழைய வரலாறு பழைய பிரதான நிகழ்வுகளையும் தூய்மையும் கொள்கிறது. ஆனால் புதிய வரலாறு சமகால பிரச்சனைகளில் வரலாற்றை சமகாலத்துக்கு உரியதாக அது பார்க்கிறது. 

இது சரித்திரம் பற்றிய ஆவணங்களுக்கு மேல் விளக்கங்கள்அளிக்கின்ற முறையிலே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. 

புதிய வரலாற்றிலே

அரசியல் வரலாறு  

பண்பாட்டு வரலாறு

சமூக வரலாறு 

பொருளியல் வரலாறு  

ராஜதந்திர வரலாறு

என பல்வேறு வரலாற்று பிரிவுகளையும் காணலாம். 

இந்தப் பின்னணியில் தான் இந்த மூன்று கதைகளையும் நாங்கள் அணுக வேண்டி உள்ளது. 

நான் சொன்ன கதைகளுள் முதலாவது கதை வேடர் சமூகம் சமூகம் தங்களுடைய இறந்து போனவர்களுடன் மூதாதையுடன் நடத்திய உரையாடல் சம்பந்தமானதாகும். 

இரண்டாவது கதை பிணத்தை உணவாக உண்ட சுடலைமாடசாமி பின்னர் கோழியை உணவாக கொண்ட மாற்றத்தையும் அந்த சமூகத்தின் வளர்ச்சியையும் கூறுவதாகும். 

மூன்றாவது  கதை விழிம்பு  நிலைச்  சமூகம் ஒன்று  ஏனைய சமூகத்துடன் போராடி தனது தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டதோடு மேல்நிலை ஆக்கம் பெற்றுவரும் கதையும் ஆகும். 

இந்த மூன்று கதைகளும் சடங்கு மயப்பட்டவை. 

ஒன்று உத்தியாக்கள் சடங்கு. அதிலே ஒரு குடும்ப வரலாறு தொடர்ச்சியாக பேணப்படுவது காட்டப்படுகின்றது. 

இரண்டாவது சுடலைமாடன் சடங்கு -அதிலேயே அந்த சமூகமாக அந்த சடங்கு முறைகளும் மாறுவதுகூறப்படுகின்றது. 

மூன்றாவது காளியம்மன் கோயில் சடங்கு -அச்சடங்கு செய்யும் அச்சமுகம் பெரும்பான்மை சமூகத்திலிருந்து பிரிந்து வந்து தமது தனித்துவத்தை பேண போராடிய கதையை கூறுவது. 

இந்த மூன்று கதைகளும் வரலாறு இல்லையா பண்பாடு இல்லையா வாழ்க்கை இல்லையா என்று கேட்கத்தோன்றுகிறது.

இவர்கள் வேறு  யாரும் இல்லை, தமிழ்  மொழி பேசி  தமிழ் வாழ்வு  வாழும் இலங்கைத்  தமிழர்கள்தான் 

இலங்கைத் தமிழர்களில் இந்த மூன்று  சமூகத்தினரும் அடங்குகிறார்கள். 

 ஆனால்  இவர்கள் பழகிப்போன  சமூகப்  பார்வையில் விழிம்பு நிலை மக்கள், இம்மக்களுக்கும்  வாழ்வுண்டு.  பண்பாடுண்டு  வரலாறுண்டு

மேட்டுக்குடி தமிழர்களின் கலையே கலை என்றும் மேட்டுக்குடி மக்களின் வரலாற்றையே வரலாறு என்றும் அவர்களின் பண்பாடே தமிழ்ப் பண்பாடு  என்றும்  வழமைபோல வெளிச்சத்திலே தேடிக் கொண்டிருக்கின்ற நமது பெரும் வரலாற்று ஆய்வாளர்களும் பண்பாட்டியல் ஆய்வாளர்களும்  பல்கலைக் கழகக் காரர்களும் சற்றுத்திரும்பி இருட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அல்லது ஏற்கனவே நாங்கள் வரலாற்றில்   தொலைத்துவிட்ட இவர்களையும் தேட வேண்டும். 

மரபு மரபான  வெளிச்சத்தில்  தேடும்  பார்வையில்  இவை கிடைக்காது.   இவர்களும்  தெரியமாட்டார். இவை  நமது  பார்வையில் இருட்டுக்குள்  கிடப்பவை. இருள் படர்ந்து  கிடக்கும்  வீட்டிற்குள் வாழுகின்ற இந்த மக்களின் மனங்களுக்குள் தான் இந்த வரலாறும் பண்பாடும் புதைந்துகிடக்கின்றன. 

அவர்களின்  மனங்களை  அகழ்ந்து   தோண்டுவதற்கானஒரு திறனும்  மனமும் நமது வரலாற்றாய்வாளருக்கும்  பண் பாட்டய்வாளருக்கும் சமூகவியலாளர்களுக்கும் தேவை. 

எனவேதான் வெளிச்சத்தில் தேடாதீர்கள் இருட்டுக்குள்தேடுங்கள் என்று ஆரம்பத்திலே கேட்டுக் கொண்டேன். 

நாம் அனைவரும் நமது வரலாற்று ஆசிரியர்களும் மீண்டும்மீண்டும் பிரமிக்கத்தக்க சான்றுகளையும் தாங்கள் மனதில் நினைத்ததை வெளிப்படுத்தக்கூடிய சான்றுகளையுமே தேடிக் கொண்டிருக்கிறோம் . இன்னொரு வகையில் சொன்னால் வெளிச்சத்திலேதான் தேடுகிறோம். நம்மை அதிர்ச்சியடைய செய்யும் கதிகலங்க வைக்கும் கோபம்கொள்ள வைக்கும் பல்வேறு தரவுகளையும் சான்றுகளையும் தேடி வரலாறு மீள் கட்டமைக்கப்படுகின்ற பொழுது  அதிகாரம் இல்லாத பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு பார்வையும் எல்லாரையும் இணைத்துப் பார்க்கின்ற போக்கும் நம் ஆராய்வாளிடம் உருவாகும். 

கணியன் பூங்குன்றன் கூறிய ஒரு வார்த்தை  இங்கு ஞாபகம் வருகிறது 

தீதும் நன்றும் பிறர் தர வாரா. 

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

அனைவரையும் சமமாகக் கருதி  ஏற்றத் தாழ்வு  அற்ற ஒருபுதிய சமூகத்தை உருவாக்கும் ஞானம் நமது அறிவாளர்களுக்கு வர வேண்டும். சிறிதாகத் தெரியும்  அச்சிறு  நெருப்பு  பெரும் பொறியாகமாற வேண்டும். 

ஒன்று பட்டால் இங்கு  வாழ்வே – அன்றி

ஒற்றுமை நீங்கிடில் அனைவ்ர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த

ஞானம் வந்தால் பின் நமக்கு என்ன வேண்டும் 

,