— அழகு குணசீலன் —
“…………… அதனால்தான் கௌதம புத்தரை பலருக்கு பிடிப்பதில்லை” என்று அண்மையில் ஒரு வீடியோவில் சுகி.சிவம் சொல்லியிருந்தார். மற்றைய மதங்கள் “பாவங்கள்” மன்னிக்கப்படும் என்று கூறுகின்றன. ஆனால் புத்தரோ பாவங்களை செய்தால் அதற்கு மன்னிப்பு -பிராயச்சித்தம் இல்லை என்று போதித்தாதாக குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சமா பாதகங்களை செய்து விட்டு அதனை மன்னிக்குமாறு ஆண்டவனுக்கு நேர்த்தி வைத்து -த்துவா கேட்காது, பாவங்களை செய்யாதிருப்பதே புத்தரின் போதனை என்றும், செய்தால் அதற்கு மன்னிப்பு இல்லை தண்டனை தான் உண்டு என்பது சுகி. சிவத்தின் கருத்து. பஞ்சமா பாதகங்கள் நிறைந்த இன்றைய உலகிற்கு இதன் பொருத்தப்பாடு என்ன என்பதற்கு அப்பால் “பாவங்களை” நியாயப்படுத்தி நீதி கோர மதத்தை துணைக்கு அழைப்பதும் வழக்கமாகிவிட்டது.
ஒரு வேளை பாவங்களை செய்வதனால் தான் மதங்கள் மீதான நம்பிக்கையும், தேவையும் அதிகரிக்கிறதோ….? என்று எண்ணத்தோன்றுகிறது. செய்வதை எல்லாம் செய்து விட்டு என்னை மன்னித்து விடு என்று ஆண்டவனை வேண்டுவது வழக்கம். இதைத்தான் மௌலவியும் கேட்டிருக்கிறார்.
கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றில் குறித்த மௌலவி பரதநாட்டியம் குறித்து வெளியிட்ட வீடியோ பதிவு குறித்து ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. ஆனால் இக்கருத்துக்களில் பெரும்பாலானவை இந்து, இஸ்லாம் மதங்களின் தெய்வீகத் தன்மையை -புனிதத்தை பெண்களே காவ வேண்டும் என்ற கருத்தியலை பின்னணியாகக் கொண்டவை.
மௌலவியின் கருத்துக்கான மறுப்பை இந்து மதத்தில் தெய்வீக தன்மை கொண்ட பரதநாட்டியம் -அதன் தோற்றம் தொடர்பான கேள்விகளுக்கு -விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதமானது என்பது போன்று ஒருதரப்பும், அது இந்து மத, கலாச்சார பண்பாடு என்பதால் இஸ்லாமிய பெண்கள் அதை ஆடக்கூடாது, அது ஒழக்கக்குறைவானது என்ற கண்ணோட்டத்தில் மௌலவிக்கு ஆதரவான இன்னொரு தரப்பும் பதிவுகளை இடுகின்றனர்.
இந்த விவாதங்களின் அடிப்படையானது வெளிப்படையாக மதகலாச்சார பண்பாட்டை நிந்தித்தல் -அவமானப்படுத்தல் போன்று தெரிந்தாலும் உண்மையில் இந்து, இஸ்லாம் மதங்களில் இவற்றை பேணவேண்டிய சமூகப் பொறுப்பு பெண்கள் மீது பாரம்பரியமாக “திணிக்கப்பட்டுள்ளது”. இதனால் பெண்களை குறிவைத்ததாகவே இறுதியில் இது அமைந்துவிடுகிறது. இதனால்தான் பரதம் பெண்பால் என்று குறிப்பிடவேண்டிய தேவை ஏற்படுகிறது.
அரபுப்பண்பாடு, இந்துப் பண்பாடு, இஸ்லாமிய கலாச்சாரம், இந்து கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை அடுக்கி அவற்றிற்கு தெய்வத்தன்மையையும், புனிதத்தன்மையையும் புனைந்து வழிபாடாக்குகின்ற இந்த போக்கு பன்மைத்துவ சமூகங்களுக்கு இடையிலான சமூகவாழ்வியல் இணக்கப்பாட்டை – உறவை தகர்த்து விடுவதாகும். ஒன்று இன்னுமொன்றிலும் உயர்ந்தது என்ற நிலைப்பாட்டிற்கு அப்பால் இங்கு தேவையானது ஒன்றின் மீதான மற்றையதன் அங்கீகாரம்.
இதற்கு மாறாக அங்கீகரிக்க மறுக்கும் போக்கு கிழக்கில் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. ஏதோ ஒரு காரணத்தை கூறி பாடசாலை சீருடை, பல்கலைக்கழக நடைமுறை போன்ற அதிகார -நிர்வாக நடைமுறைகளை முன்னிறுத்தி செய்யப்படும் இந்த நடைமுறைகள் சகோதர இன, மதங்களுக்கு எதிராக குறிப்பாக இரு சமூகங்களையும் சேர்ந்த பெண்களை பலிக்கடாவாக்குபவையாக – பாலியல் வக்கிரம் கொண்டவையாக அமைவது போன்று பரதநாட்டிய விவகாரமும் அமைகிறது.
திருகோணமலை சண்முகாவித்தியாலய சீருடை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் பெண்களின் ஆடை கலாச்சாரம் பேசுபொருளானது. ஒன்று மூடிய கலாச்சாரமாகவும், மற்றையது அரைகுறையாக திறந்த கலாச்சாரமாகவும் குறிப்பிட்டு இருதரப்பும் படங்களை ஏட்டிக்கு போட்டியாக பொதுவெளியில் உலாவிட்டனர். கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீட முஸ்லிம் மாணவன் விவகாரம் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்தது. இவ்வாறான விடயங்களை சிலர் தேடித்தேடியெடுத்து பிரச்சினையை வளர்ப்பவர்களாகவே உள்ளனர். இவற்றை அரசியலாக்கவும் முயற்சிக்கின்றனர்.
இந்து மதத்தில் உள்ள கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான விமர்சனங்கள் புதிதானவை அல்ல. இந்த விமர்சனங்களை மற்றைய மதங்கள் கடந்து நிற்கின்றன என்று சொல்லவும் முடியாது. பரதநாட்டியத்தின் தோற்றம் பற்றி ஏற்கனவே இந்து குரு ஒருவரால் குறிப்பிடப்பட்ட கருத்தையே தான் மேற்கோள் காட்டியதாக மௌலவி கூறுகிறார். ஆனால் அதை அவர் கூறிய முறையானது இந்து -தமிழ்ச்சமூகப் பெண்களை குறிவைத்து அவமானப்படுத்துவதாக அமைந்திருப்பதுடன், மத கலாச்சார பண்பாட்டு நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி நிந்திப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பரதத்தின் தோற்றம் பற்றி இதையே சொல்லி இருந்தால் அதற்கான பிரதிபலிப்பு வெறும் புனிதத்தைக்கடந்து பெண்ணிய நோக்கில் அமைந்திருக்க வாய்ப்புண்டு. இது போன்ற அரபு கலாச்சார ஆயிரத்தியொரு இரவு காட்சிகளையும், வயிற்று குலுக்கல் நடனங்களையும் வசதியாக மௌலவி மறந்து விடுவதும் ஒரு வகையில் துரதிஷ்டவசமானது. அது அவர் மீது இன, மத குரோத குற்றச்சாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இங்கு பேசப்படவேண்டியது பரதநாட்டியத்தின் தெய்வீகத்தன்மையும், புனிதமும் அல்ல. மாறாக அது அதன் ஆரம்பகால நோக்கிலும், பேசுபொருளிலும், இசையிலும், ஆட்டத்திலும் மாற்றங்களை உள்வாங்கி இருக்கிறது என்பதாகும். ஏனெனில் இந்த விவாதத்தின் ஆரம்பமே பரதநாட்டியத்தின் புனிதம் குறித்த ஆரம்பம் தான். இதன் மூலம் மௌலவிக்கு மட்டுமல்ல பரதநாட்டியம் குறித்து கேள்வி எழுப்புகின்ற மற்றையவர்களுக்கும் உதவியாக அமைந்திருக்கும். உதாரணமாக நாட்டுக்கூத்தில் அரசன் மந்திரியிடம் “மாதம் மூன்று மழை பொழிகின்றதா…? மக்கள் சாதி, சமய சடங்குகளை ஒழுங்காக பேணுகிறார்களா.” ? என்று கேட்கும் காட்சி சர்வசாதாரணமானது.
இந்த கேள்வியின் அன்றைய பின்னனியை இன்று எம்மால் நியாயப்படுத்த முடியுமா…? எனவே மௌலவி விவகாரத்தில் பேசப்படவேண்டியது அதன் அன்றைய தோற்றத்திற்கு அப்படியே நியாயம் கற்பிப்பதல்ல. மாறாக கடந்த காலங்களில் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து அன்றைய பரத்தையர் நடனம் அல்ல இன்றைய பரதம் என்றும், அதன் பின்னணியில் அமைகின்ற மதகலாச்சார பண்பாடுமாகும். மறு பக்கத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்திலும், புதிய கலாச்சார பரிமாணத்திலும் அதன் பேசுபொருள் சமகால சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்தது என்பதுமாகும். பரதநாட்டியம் ஒடுக்குமுறை,வர்க்கம், பெண்ணியம் , சமூக நீதி போன்ற கருத்துக்களை உள்வாங்கி ஆடமுடியாத ஒரு ஆடற்கலையா? கலை மக்களுக்கானது என்பதன் அர்த்தம் தனியே மதவழிபாடும், அழகிலும் அல்லவே.
முஸ்லிம் பெண்களிடம் இருந்து மௌலவி எதிர்பார்ப்பது ஒருவகையில் தலிபான், ஐ.எஸ்.எஸ் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத குணாம்ச கருத்தியலாக உள்ளது. இதை தங்கள் மீதான அடக்குமுறையாக, உரிமை மறுப்பாக பெண்கள் அரபுநாடுகளில் போராடுகிறார்கள் என்பதை இந்த மௌலவி அறியாது இருக்க முடியாது. அதுவும் அரபுலகுக்கு வெளியேயுள்ள ஷரியா சட்ட நடைமுறைகள் அற்ற பன்மைத்துவ இன, கலாச்சார சமூகங்களில் அவர் அதை எதிர்பார்பதன் பின்னணி சந்தேகத்திற்குரியது.
கிழக்கிலங்கையில் புத்திஜீவிகள், கலை, இலக்கிய படைப்பாளிகள், சமூகச்செயற்பாட்டாளர்களுக்கு இடையே உள்ள ஆரோக்கியமான உறவும், தொடர்பும் இனங்களையும், மதங்களையும் கடந்த ஒன்று. அதுவும் அம்பாறை மாவட்டத்தில் அது நடைமுறைச் செயற்பாடு கொண்டது. ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்கள் தங்கள், எழுத்துக்களையும், பேச்சுக்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வாளாவிருந்து விடுகிறார்கள். மதங்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து தமக்கு எதிராக பரப்பப்படும் என்று அஞ்சுகிறார்கள். ஆனால் இந்த மௌனங்கள் கலைக்கப்படவேண்டியவை. இதை பாம்புக்கும் நோகாமல், கம்புக்கும் நோகாமல் பதிவுகளை இடுவதன் மூலமோ, பரதநாட்டியத்தின் புனிதத்தை – தோற்றத்தை கேள்விகளுக்கு உட்படுத்தாமல் பூசிமெழுகி எழுதுவதன் மூலமோ, நூல்களை பட்டியலிடுவதன் மூலமோ சாதிக்க முடியாது.
இந்த நூல்கள் பல்கலைக்கழக நூல்நிலைய அலுமாரிகளுக்கு உரியவையே அன்றி சாமானிய மக்களின் தற்போதைய கேள்விகளுக்கு பதிலல்ல. பரதநாட்டியம் குறித்து – அதன் தோற்றம் குறித்த மாற்றுக்கருத்து ஆய்வாளர்களால், அதுவும் இன்று உரத்து பேசப்படும் பார்ப்பன -சனாதர்ம விமர்சகர்களால் , பகுத்றிவு இயக்கத்தினரால், மார்க்சிய, பின் நவீனத்துவவாதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு பின்னால் உள்ள வர்க்க அரசியலும், பின்நவீனத்துவ அணுகுமுறைகளுமே இன்றைய ஆய்வுமுறைகள். இவை தெய்வீகத்தை, புனிதத்தை அதுவும் அவற்றை பெண்கள் சுமக்க வேண்டும் என்ற புனைகதைகளை அடியோடு மறுப்பவை. புதிய கலாச்சாரத்தை வேண்டி நிற்பவை.
அதேபோன்றே மறுபக்கத்தில் இருந்தும் மௌலவியின் கருத்துக்கு எதிரான – இன, மத, கலாச்சார பண்பாட்டு, பாலியல் வக்கிரகத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படவேண்டும். இதைச் செய்வதற்கு கிழக்கில் ஆள்தட்டுப்பாடு இல்லை. சுவாமி விபுலாநந்தரின் கல்விப்பணி பற்றி,கிழக்கின் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவு பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை ஆற்றி வாரங்கள் கடக்காத நிலையில் விபுலாநந்தரின் பெயரைக் கொண்ட கிழக்கின் கல்வி நிறுவனமொன்றின் பரதநாட்டிய மாணவர்களும், மற்றும் முஸ்லிம் பெண்கள் -ஆசிரியைகளும் அவமதிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுக்கறை. எனினும் விபுலானந்த கற்கை நிறுவகத்தில் அழகியற்கற்கை நெறியில் முஸ்லிம் பட்டதாரி மாணவிகள் நிறைந்து இருப்பது எதிர்காலத்தில் கிழக்கில் சுவாமி விபுலாநந்தரின் கனவை நினைவாக்குவதில் பெரும் பங்காற்றமுடியும் என்ற வகையில் இந்த பட்டதாரி மாணவர்களுக்கும் இப் பணியில் பெரும்பங்குண்டு.
கிழக்கு சமூகத்தின் இருதரப்பு பெரியவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் பலர் மௌனம் சாதிக்கின்ற நிலையில் கணிசமான முஸ்லிம் பெண்கள் மௌலவியின் கருத்தை வன்மையாக கண்டித்து இருக்கிறார்கள். கற்றல் உளவியலில் ஆடல், பாடல்களின் முக்கியத்துவத்தை இடித்துரைத்து இருக்கிறார்கள். இன ஒற்றுமையை கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள். அவர்களின் பார்வையில் மௌலவியின் கருத்து பரநாட்டியம் ஆடுபவர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, பரதப்பண்பாட்டை கொச்சைப்படுத்தி, தங்களையும் மதத்தின் பேரால் கட்டிப்போட நினைக்கும் பெண்கள் மீதான கருத்தியல் வன்முறை. பெரியவர்கள் இந்த விவகாரத்திற்கு முகம் கொடுக்க அஞ்சி பிரதான வீதியை தவிர்த்து பக்க வீதியால்/ ஒழுங்கைக்கால் கடந்து செல்ல முனையும் போது இவர்கள் பிரச்சினையின் மையப்பொருளைப்பேசுகிறார்கள். சகோதரி, சகோதரர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மறுபக்கத்தில் பரதநாட்டிய மாணவர்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்பவேண்டி உள்ளது.
கிழக்கிலங்கை பல்கலைக்கழக சமூகம், மற்றைய பீட மாணவர்கள் பரதநாட்டிய பிரிவு மாணவர்களுடன் கைகோர்த்ததாக தெரியவில்லை.
எங்கோ எல்லாம் மழை பெய்கின்ற போது குடை பிடிக்க உங்களை கூப்பிடுகிறவர்கள் இப்போது உங்களுக்கு மழை பெய்கிறது வெறுங்கையோடு வேடிக்கை பார்க்கிறார்கள். மௌலவியின் கருத்துக்கள் பரதநாட்டியத்திற்கு ஊடாக பெண்களின் கல்வியை கொச்சைப்படுத்துவதாக உள்ள போதும் பெண்கள் அமைப்புகள், சர்வமத சங்கம், தமிழ் ஆயர்கள் அமைப்பு போன்றவை நமக்கேன் வம்பு என்று வாய்பொத்தி நிற்கின்றன.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்தும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்தும் காத்திரமான கருத்துக்களோ, செயற்பாடுகளோ வெளிப்படவில்லை. இதை இரு மதவிவகாரமாக பார்ப்பதும், கிழக்கின் பல்கலைக்கழகங்கள் இனத்தின் பெயரால் பிரிந்து நிற்பதும், பீடங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டின்மையும் இதற்கு காரணமாக இருக்கலாம். பிராந்திய அடிப்படையில் கிழக்கு, தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும், மாணவர் அமைப்புக்களும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமானது. ஏனெனில் கிழக்கு பிராந்திய பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகள் அதிகளவுக்கு பொதுமையானவை.
இருதரப்பிலும் இருந்து இந்த விவகாரம் குறித்து சிலர் வெளியிட்ட கருத்துக்கள் தீக்குச்சியாக இருந்த போதும் பல தமிழ் இளையோரும் மிகவும் நிதானமாக இந்த விடயத்தில் பதிவுகளை இட்டு இன உறவில் விரிசல் பாதிப்பை தடுத்துள்ளனர். தமிழ்த்தேசிய அரசியல் விவகாரங்களில் முன்னணி வகிக்கும் இளைய சந்ததியினர் கூட இந்த விவகாரத்தில் மௌலவியின் கருத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் கருத்தாக காட்டமுனைந்த தமிழ்த்தரப்பை அது தவறு என்று கூறி தடுத்திருப்பது இன்றைய சூழலில் காலத்தின் தேவை. இதை தமிழர் அரசியலின் ஒரு புது நகர்வாக கொள்ளமுடியும்.
சுவாஸ்திகாவும், குஷ்பும் மட்டும் அல்ல பரதமும் பெண்பால் தான்..!.
இதுவே மதங்களின் பெயரால் பேசப்படும் புனிதப்பண்பாட்டின் மறை பொருள்….!