— வி. சிவலிங்கம். —
எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இணைவதை நினைவு கூருமுகமாக இக் கட்டுரை வெளியாகிறது.
இவ் வரலாற்றுச் சம்பவங்கள் என்பவை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் என்பதோடு அவரது அரசியல் வரலாறு வடக்கு, கிழக்கிற்கான மாகாணசபை உருவாக்கத்தோடும் இணைந்துள்ளதால் அவ் இணைந்த மாகாணசபையின் முதலாவது தேர்தல் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட தினமாகவும் நினைவூட்டப்படுகிறது.
தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் வரலாற்றுச் சம்பவமாக இவை இரண்டையும் இணைத்துப் பேச முடியும். ஏனெனில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபைகள் ஓர் பலமான ஜனநாயக அத்திவாரத்தை உருவாக்கவும், தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வினை அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையிலும் அணுகத் துணை புரிந்தன. 13வது திருத்தத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட மாகாணசபைகள் ஓர் நிறுவனமாக மாற்றமடைவதாயின் அதற்கான தேர்தல் நடத்தப்படுவது அவசியமாக அமைந்தது.
தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தமிழரசுக்கட்சியும், வன்முறை, அராஜகம் என்பவற்றின் மூலம் அரசியல் ஜனநாயக செயற்பாட்டை முடக்க முனைந்த விடுதலைப்புலிகள் ஆகிய இரு சாராரும் மாகாணசபைகளின் தோற்றத்தைத் தடுக்க வெவ்வேறு வகைகளில் முயற்சித்த வேளையில் மிகவும் சிறிய அமைப்பின் தலைவராக செயற்பட்ட பத்மநாபா அவர்கள் அத் தேர்தலில் பங்கு கொள்ள எடுத்த முடிவின் விளைவே மாகாணசபைகளின் தோற்றமாகும். இத் தேர்தலில் பங்குபற்றாமல் தவிர்த்திருந்தால் மாகாணசபை என்ற ஒரு நிறுவனம் தோற்றம் பெற்றிருக்குமா? தமிழ் அரசியல் எவ்வாறான சிக்கல்களுக்குள் அகப்பட்டிருக்கும்? போன்றவற்றை நாம் மீளாய்வு செய்வது அவசியமானது. குறிப்பாக, மிக மோசமான ஆயுத வன்முறைக் கும்பல்களின் அராஜகத்திற்குள் தமிழ் அரசியல் சிக்குண்ட நிலையில் தமிழ் மக்களின் ஜனநாயக அதிகாரத்தைத் தமது கையில் வைத்திருந்த தமிழரசுக்கட்சி அராஜகத்திற்குச் சரணடைந்து தனது மக்களைக் கைவிட்ட நிலையில் தமிழ் மக்களினதும், ஜனநாயகத்தினதும் அடிப்படைகளைப் பாதுகாக்கும் பொருட்டு தமது உயிர்களையும் பொருட்படுத்தாது தேர்தலில் குதித்து ஜனநாயத்தைப் பாதுகாத்த ஒரு மாபெரும் நிகழ்வு அதுவாகும்.
இன்றுள்ள அரசியல் நிலமைகளை அவதானிக்கும்போது நாட்டில் நிலவிய லிபரல் ஜனநாயக பாரம்பரியம் முற்றாக மாற்றமடைந்து இனவாதம், பெரும்பான்மைவாதம், ராணுவவாதம், குழுவாதம் கலந்த பாசிசத்தை நோக்கி நாடு திரும்பியுள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது ராணுவ வாகனங்கள் பாராளுமன்றத்தை அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு இரத்தம் சிந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக அமையும். ஆனால் இன்று தேர்தல் அரசியல் மூலம் இரத்தம் சிந்தாமல் ஆட்சியைக் கவிழ்க்கும் அளவிற்கு நிலமைகள் மாறியுள்ளன. அதாவது அரசியல் யாப்பு விதிகளை அப்பட்டமாக மீறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். பாதுகாப்பு என்ற பெயரால் நடத்தப்படும் சூழ்ச்சி அரசியலுக்கு மக்கள் இரையாகிறார்கள். அவ்வாறாயின் மக்கள் ஜனநாயகத்தை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னதான இலங்கையின் அரசியல் கட்டுமானம் சிவில் அல்லது குடிமக்கள் தேசியவாதத்திலிருந்து ( Civil Nationalism) அதாவது சட்டப்படியான ஆட்சி, அதிகாரப் பிரிப்பு, தனி நபர் உரிமை என்பவற்றிலிருந்து விடுபட்டு தற்போது இனத் தேசியவாதமாக ( Ethnic Nationalism )அதாவது ஒரு இனத்தின் மேலாதிக்கமாகவும், இதர தேசிய இனங்கள் அதன் ஆதிக்கத்திற்குள் கீழ்;ப்படிவனவாகவும், நாடு பல்தேசிய இனங்களின் தாயகம் என்பது மிகவும் அப்பட்டமாகவே மறுதலிக்கப்படும் நிலை என மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக, 1977ம் ஆண்டின் பின்னர் இலங்கை அரசியல் கட்டுமானம் படிப்படியாக ஒரு இனத்தின் பெரும்பான்மைப் பலத்தின் பக்கமாக மாற்றமடைந்துள்ளது. இவ்வாறான மாற்றத்தின் பின்னணியில் இதர சிறுபான்மை இனங்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பெற அல்லது அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஏனெனில் அங்கு சட்டப்படியான ஆட்சி, அதிகாரப் பிரிப்பு, தனி நபர் ஜனநாயக உரிமை போன்றன வலுவிழந்த நிலையில் பெரும்பான்மை இனப் பலமே ஜனநாயகம் என்பதாக விளக்கும் வகையில் மாறுகிறது.
இனவாதம், பெரும்பான்மைவாதம் என்பன தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அம்சங்களாக மாறிய நிலையில் தேசிய சிறுபான்மை இனங்களின் அடுத்த அரசியல் நடவடிக்கை என்ன? என்பதே எம் முன்னுள்ள கேள்வியாகும். உதாரணமாக, இலங்கையிலுள்ள தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் அணுகுமுறைகள் பெருமளவில் லிபரல் ஜனநாயக அம்சங்களை அதாவது தொடர்ச்சியான ஜனநாயக மீறல்களைச் சுட்டிக் காட்டி லிபரல் ஜனநாயக அம்சங்களை அடிப்படையாக் கொண்ட கோரிக்கைகளையே முன் வைக்கின்றனர். ஆனால் ஆட்சியானது இனவாதம், பெரும்பான்மைவாதம் என்பவற்றின் அடிப்படையில் நகரும்போது வெறுமனே தூரத்தில் நின்று ஜனநாயகக் குரலை எழுப்புவதன் மூலம் அல்லது வெளிநாடுகளுக்கு முறையிடுவதன் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இனவாதத்தின் அப்பட்டமான ஜனநாயக மீறலைத் தடுக்க எந்த சமூக சக்திகளும் தயாராக இல்லை.
அத்துடன் இப் பெரும்பான்மை இனத் தேசியவாதம் என்பது படிப்படியாகவே இதர தேசிய சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழித்து வருகிறது. உதாரணமாக, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக அடையாளங்கள் என்பது நில ஆக்கிரமிப்பு, பொருளாதார ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாச்சார அடையாள அழிப்பு, அரச கரும மொழி என்ற பெயரில் சிங்கள மொழித் திணிப்பு, பாடநூல்களில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் வரலாற்று இருட்டடிப்பு, இன அடிப்படையிலான கலவரங்களை ஊக்குவித்தல், எல்லைக் கிராமங்களில் வன்முறைக் கும்பல்களைக் குடியமர்த்தல் எனப் பல அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல ஆட்சிக் கட்டுமானம் இனவாதம், பெரும்பான்மைவாதம் என்பதை நோக்கித் திரும்பியுள்ளதால் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி காரியாலயம் ஆகியனவும், அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் என்பனவும் இனவாதக் கருவிகளாக மாற்றம் பெற்றுள்ளன. இம் மாற்றங்கள் வெறுமனே தேசிய சிறுபான்மை இனங்களை மட்டும் பாதிக்கின்றனவா? என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கான பதில் பெரும்பான்மை சாமான்ய மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றே கூற வேண்டும்.
நாட்டு நிர்வாகம் இனவாத, பெரும்பான்மைவாத நிகழ்ச்சி நிரலுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசு யந்திரம் தவிர்க்க முடியாமல் ஊழலுக்குள் செல்கிறது. அத்துடன் பெரும்பான்மைவாதம் குழு மேலாதிக்கத்தை ( Crony capitalism) நோக்கி மாற்றமடைகிறது. இனவாத அரசியலே குழு ஆதிக்கத்தைத் தீர்மானிக்கிறது. இதுவே 2019ம், 2020ம் ஆண்டுத் தேர்தல் தந்த பாடமாகும். ஆனாலும் இக் குழு ஆதிக்கம் நீடிக்க முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாகவே மக்கள் தாமே தெரிவு செய்த ஜனாதிபதியை அகற்றுகிறார்கள். குழுவாத அரசியல் நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்க உதவியிருக்கிறது. நாட்டின் முக்கிய தலைவர்கள் பலர் இக் குற்றத்தின் காரணகர்த்தாக்கள் என நீதிமன்றம் அடையாளம் காட்டியிருக்கிறது.
இவ் வரலாறுகள் யாவும் நாட்டில் நிலவும் இனவாத, பெரும்பான்மைவாத அரசியலின் விளைவு என்பதாலும், இந்த மாற்றங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டில் உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. அவ்வாறாயின் மாற்றங்களை எங்கிருந்து ஆரம்பிப்பது? அல்லது மாற்றமே சாத்தியமில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கான பதிலை தமிழ் அரசியலின் பக்கத்திலிருந்து பார்ப்பது அவசியம்.
மாற்றங்கள் சாத்தியமே. ஆனால் தமிழ் அரசியல் தனது அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, நாடு மிக மோசமான இனவாத அரசியல் கட்டுமானத்திற்குள் சென்றுள்ளதால் அவ் இனவாத அரசியல் நடைமுறைகளின் தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வேலைத் திட்டங்களும், நீண்டகாலத் தீர்வுகளுக்கான வேலைத் திட்டங்களுமென இரண்டு அம்சங்களில் தொழிற்பட வேண்டும். நிகழ்கால பிரச்சனைகள் என்பது தீவிர இனவாத அரசியலின் தாக்கங்களைத் தடுப்பதற்கான செயற்பாடுகளாகும். உதாரணமாக, சனத்தொகைப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடரும் குடியேற்றங்கள், புராதன கல்வெட்டுகளைப் பாதுகாத்தல், அபிவிருத்தி போன்ற பெயர்களில் தொடரும் நில அபகரிப்புகள், பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நில கையகப்படுத்தல்கள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என்பவற்றிகான செலவினங்களில் காட்டப்படும் பாரபட்சங்கள், வெளிநாட்டு முதலீட்டிற்கான வாய்ப்புகளைத் தடுக்கும் விதத்திலான உட்கட்டமைப்புகளைப் புறக் கணித்தல், கல்வியில் பின்தங்கிய பிரதேசம் என்ற காரணத்தைக் காட்டி வடக்கு, கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகளைக் கட்டுப்படுத்தல் போன்ற பல அம்சங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை உடனடியாகவே பாதிக்கின்றன.
இவ்வாறான தாக்கங்களைச் சமாளிப்பதாயின் முதலில் பிரதேச அரசுக் கட்டுமானங்களின் செயற்பாடும், அவை வினைத் திறன் மிக்கதாகவும் தோற்றுவிக்க வேண்டும். அவ்வாறாயின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் அரசியல் மற்றும் அபிவிருத்திக் கட்டுமானமாக அமைந்துள்ள மாகாணசபைகள் செயல் வடிவம் பெற வேண்டும். எனவே மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுவது அவசியமாகிறது. மாகாணசபை நிர்வாகம் செயற்படுமானால் ஏற்கெனவே குறிப்பிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புகள் போன்றனவற்றைக் கணிசமான அளவு தடுக்க முடியும்.
இங்கு மாகாணசபைகள் அதிகாரம் அற்றவை என ஒரு சாராரும், இன்னொரு சாரார் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளையும் வற்புறுத்துகின்றனர். மாகாணசபைகள் போதிய அதிகாரம் அற்றன என்பதை ஏற்றுக் கொண்டாலும் ஒரு அரச நிர்வாகம் தொழிற்படுவதற்கும், அதன் அதிகாரங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. முதலில் நிர்வாகம் செயற்பட வேண்டும். செயற்பட்டால் மாத்திரமே அதிகாரங்களைக் கோர முடியும், எனவே பல்வேறு குறைபாடுகள் உள்ள போதிலும் தற்போது நிலவும் இனவாத, பெரும்பான்மைவாத தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான குறைந்தபட்ச மாற்றங்களை ஏற்படுத்த மாகாணசபைகள் செயற்படுவது அவசியமானது. சமஷ்டி தொடர்பான வாதங்கள் வெறுமனே தமிழர் தரப்பில் நிகழ்வதால் மட்டும் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. தமிழர் தரப்பில் மட்டுமல்ல, பெரும்பான்மைச் சிங்கள மக்களும் அதன் தேவையை உணர்வது மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அவ்வாறான புறச் சூழல்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாதுள்ள நிலையில் இவ்வாறான விவாதங்கள் கால விரயமாகவே அமையும்.
மாகாணசபைத் தேர்தல் என்பது நாடு தழுவிய அடிப்படையிலான ஜனநாயக மாற்றம் ஒன்றைக் கோருகிறது. நாட்டில் நிலவிய ஜனநாயக அடிப்படைகள் படிப்படியாக அகற்றப்படும் சூழலில் நாட்டின் சகல பிரிவினரும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான பொதுவான அணியில் இணைவதற்கான வாய்ப்பை மாகாணசபைத் தேர்தல் கோரிக்கை அளிக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல ஒரு புறத்தில் இனவாத, பெரும்பான்மைவாத அதிகாரக் கட்டமைப்பின் தாக்கங்களிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுபடுவதற்கான வழிமுறையாகவும், அதேவேளை தேசிய அடிப்படையில் நாட்டின் ஜனநாயக அடிப்படைகளைப் பலப்படுத்துவதாகவும் இக் கோரிக்கை அமைகிறது.
தமிழ் அரசியல் தென்னிலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் விவாதங்களை ஆழ்ந்து நோக்குதல் அவசியமானது. குறிப்பாக, நாட்டின் அரசியல் கட்டுமானம் இனவாதம், பெரும்பான்மைவாதம் ஆகியன இணைந்த மைய விசையால் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதன் போக்கினை மாற்றுவதாயின் புரட்சி ஏற்பட வேண்டும். இல்லையேல் ஜனநாயக பாரம்பரியங்களான சட்டப்படியான ஆட்சி, சுயாதீனமான அதிகாரப் பிரிப்பு, மனித உரிமைகளைப் பேணுதல் போன்ற அம்சங்கள் ஆட்சிக் கட்டுமானத்தின் பிரதான கூறுகளாக அமைவது அவசியமானது. இதற்கான கோரிக்கைகள் சிங்கள பிரதான அரசியல் கட்சிகளின் விவாதங்களில் தற்போது பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, பிரதான கட்சிகள் பலவும் புதிய அரசியல் யாப்பின் அவசியத்தையம், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பின் தேவையையும் வற்புறுத்தி வருகின்றன.
நாட்டின் தற்போதைய நவ-தாராளவாத பொருளாதாரக் கட்டுமானம் ஏற்படுத்தியுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், அரசியல் கட்டுமானம் தொடர்ந்து புறக்கணித்துச் செல்லும் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக அடிப்படைகள் குறித்தும் மிக விரிவான விவாதங்கள் சிங்கள அரசியலில் இடம் பெறுகையில் தமிழ் அரசியலில் பெரும் தேக்கம் காணப்படுகிறது. சிங்கள அரசியல் இனவாத அரசியலிலிருந்து விடுபட்டுச் செல்ல முனைகையில் தமிழ் அரசியல் அம் மாற்றங்களைத் தனதாக்கி தம்மையும் அம் மாற்றங்களில் இணைத்துக் கொள்ளத் தயங்குகிறது. இத் தயக்கத்தில் சில நியாயங்கள் காணப்படினும், இத் தயக்கங்கள் மாற்றத்தைத் தடுப்பதாக அமைவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? சிங்கள அரசியலில் தற்போது பாராளுமன்ற ஜனநாயகம், ஊழல் ஒழிப்பு, மதச் சார்பற்ற அரச நிர்வாகம், தனிமனித உரிமைப் பாதுகாப்பு என பல அம்சங்கள் பற்றிய பல விவாதங்கள் நிகழ்கின்றன. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அவற்றிற்கும், தமக்கும் சம்பந்தம் இல்லை என கையை விரிக்கின்றனர். ஒரு ஜனநாயக மாற்றத்திற்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் இணைவதை இவ் அரசியல்வாதிகள் தடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வைத்திருந்த இச் சக்திகள் எவ்வித அரசியல் மாற்றத்தையும் வழங்காதது மட்டுமல்ல, அம் மக்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதையும் தடுத்துள்ளனர்.
எனவே இலங்கையில் அரசியல் வரைபடம் மாற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் இனவாத அரசியல் தாக்கங்களிலிருந்து விடுபடவும், தேசிய அளவில் ஏற்பட்டு வரும் ஜனநாயக அடிப்படை மாற்றங்களைக் கோரும் அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைப்பதற்கும் தேர்தல் ஒன்றைக் கோருவது மிகவும் அவசியமானதே.