காலாவதியானது ஹர்த்தாலா….? தமிழ்த்தேசிய அரசியலா.?(மௌன உடைவுகள் – 53)

காலாவதியானது ஹர்த்தாலா….? தமிழ்த்தேசிய அரசியலா.?(மௌன உடைவுகள் – 53)

  — அழகு குணசீலன் —

ஜேர்மன் மொழியில்  “வூர்ச்சல் வவும்”  என்று  அழைக்கப்படும். அதாவது வேர்மரம்.(WURZELBAUM –  ROOT TREE). தலைகீழாக நிற்கின்ற நிலையை இது குறிக்கிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரு மனிதன்/ மரம் தலைகீழாகவும் கால்மேலாகவும் நிற்றல் – குத்துக்கரணம்; ஒரு மரம் வேர் மேலாகவும் நுனி கீழாகவும் நிற்றல் வேர்மரம். இது உயிரியல் – தாவரவியல் இயற்கை நியதிகளுக்கும், மானிடவியல் இயற்கை நியதிகளுக்கும் முரணான நிலைப்பாடு.

நீதிபதி சரவணராசாவுக்கு ஆதரவாக தமிழ்த்தேசிய கட்சிகளால் நடாத்தப்பட்ட ஹர்த்தால் அப்பட்டமாக தோல்வியில் முடிந்திருக்கிறது. ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் அது வெற்றியடைந்தது என்றும், சர்வதேசத்தை ஒரு உசுப்பு உசிப்பி விட்டோம் என்றும் தலைகீழாக நின்று பட்டம் விடுகிறது. 

      இப்பத்தி எழுப்பும் கேள்வி  தோற்றது ஹர்த்தால் போராட்ட வடிவமா….? அல்லது தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் கையாள்கை  செயற்பாடா…? என்பதே.

HARTAL என்ற வார்த்தை குஜராத் மொழிக்கானது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் இப்படி பிரித்து நோக்கப்படுகிறது.

“HAR”  : என்பது எல்லாம்/ எப்போதும் என்ற கருத்தை கொண்டது.

“TAL”  : என்பது அடைப்பு/ மூடுதல் என்ற கருத்தை கொண்டது.

ஆக, ஹர்த்தால் என்ற வார்த்தையின் மறுவாசிப்பு எல்லாவற்றையும் இழுத்து மூடி -கதவடைப்பு செய்து வன்முறையற்ற வகையில் ஜனநாயக ரீதியாக, உடன்பாடற்ற ஒரு விடயத்திற்காக சமூகம் காட்டுகின்ற எதிர்ப்பு.

இது ஒரு பூரணமான வேலை நிறுத்தத்திற்கு சமமானது. ஒருநாள் எதிர்ப்பு தெரிவித்து சகல கடைகளும் , அரச, தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதும், மக்கள் தொழிலுக்கு செல்லாமலும், சந்தை செயற்பாடுகளில் ஈடுபடாமலும் இருத்தல்.  காந்தி அடிகள் உண்ணாவிரதம், பிராத்தனை போன்ற வற்றையும் சேர்த்துக்கொண்டார். இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில்  நீதிபதிக்காக நடாத்தப்பட்ட ஹர்த்தாலின் வெற்றி, தோல்வியை மதிப்பிடுவதே சரியான ஆய்வு முறை.

ஹர்த்தாலின் ஆரம்பம் காலனித்துவ ஆட்சிகாலம். இந்தியாவில் 

 1919 ம் ஆண்டு மார்ச் 18 ம் திகதி முதலாம் உலகயுத்தகால அவசரகால-அசாதாரண சூழ்நிலைச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதை ஆட்சேபித்து காந்தியின் அழைப்பின் பேரில் முதன்முதலாக ஹர்த்தால் இடம்பெற்றது. இரண்டாவது  ஹர்த்தால் இந்திய காங்கிரஸால் வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் Vlll இன் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1921 நவம்பரில் மேற்கொள்ளப்பட்டது.

ஹர்த்தால் -கதவடைப்புக்கு ஒரு இலக்கு இருக்கவேண்டும். முடிவில் அந்த இலக்கின் அடைவுவீதமே அதன் பெறுபேற்றை தீர்மானிக்கும். 

இங்கு சரவணராசாவுக்காக அடையாள எதிர்ப்பை காட்டுவது மட்டும் நோக்கமாக இருந்ததா?  நீதிபதியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து அவருக்கான பாதுகாப்பை வழங்கி நியாயம் பெற்றுக்கொடுக்கும் நோக்கம் இருந்ததா? அல்லது இனிமேலும் இப்படி ஒன்று நடக்காது இருப்பதை உறுதிப்படுத்துவது நோக்கமா? சர்வதேசத்திற்கு காட்டுவது நோக்கமா?  இவற்றில் ஒரு நோக்கத்தையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ இந்த ஹர்த்தால் எட்டவில்லை. அதனால்தான் அது தோல்வி. இது ஹர்த்தாலின் தவறா? கட்சி அரசியலின்  தவறா?

ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஹர்த்தால் சில சில இடங்களில் பகுதியாக நாளாந்த செயற்பாடுகளுக்கு தடையாக இருந்த போதும் பெரும்பாலான நகரங்களில், பிரதேசங்களில் அப்படி இருக்கவில்லை.கிழக்கில் முஸ்லீம் மக்களின் ஆதரவும் இதற்கு இருக்கவில்லை. இதனால்  ஜும்மாத் தொழுகை நாளான வெள்ளிக்கிழமைமையை தேர்வு செய்வது வழக்கமாகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மற்றைய பிரதேச சூழ்நிலைகளை கவனத்தில் எடுக்காது, சகோதர இனங்களின் விருப்பு, வெறுப்புக்களை கவனத்தில் எடுக்காது நடைமுறைப்படுத்தும் விடயமாக இது தொடர்கிறது.  அகிம்சை போராட்ட வடிவமான ஹர்த்தால் வடக்கு, கிழக்கில் வன்முறையின் உதவியுடனேயே ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது  .

போக்குவரத்து வாகனங்களுக்கு கல்லெறிதல், கண்ணாடியை உடைத்தல், பெற்றோல் ஊற்றி தீயிட்டுக்கொழுத்தல், அதிகாரிகளை அச்சுறுத்தல், அதிபர்களை -மாணவர்களை அச்சுறுத்தல், வியாபாரிகளை, மற்றும் தொழிலாளர்களை அச்சுறுத்தல்……, குழந்தையின் மண்டையை கல்லெறிந்து உடைத்தல் , வர்த்தக நிலையங்களுக்கு குண்டெறிதல், வீதியில் டயர்போட்டு எரித்தல், பட்டம் வழங்கி மின்கம்பத்தில் கட்டிவைத்து “பொட்டு” வைத்தல். — இவையே தமிழ்த்தேசிய ஹர்த்தால் பாணியாக இருந்தது /இருக்கிறது. இந்த நிலையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் சிலைக்கு ஏணி வைத்து ஏறி மாலைபோடவும், காந்திய குல்லா தொப்பி அணியவும் நாம் தவறுவதில்லை. 

சகல தரப்பு மக்களினதும் ஆதரவு இன்றி ஒரு ஹர்த்தால் வெற்றியளிக்க முடியாது .தமிழ்த்தேசிய கட்சிகளின் ஹர்த்தால்  அழைப்பு மக்களுக்கு  வெளியார் கல்யாண கார்ட்  கொடுப்பதாக இருக்கிறதேயன்றி சொந்தவீட்டு கல்யாணமாக மக்களின் பங்களிப்போடு  இடம்பெறுவதாக இல்லை. மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாட்டு அரசியலின் குணாம்சம் இதுவல்ல.

 நான்கு கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்க, ஆதரவு வழங்குகிறோம் என்று இன்னொரு கட்சி அறிவித்துவிட்டு, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு பாராளுமன்றத்தில் வரவு அலவன்ஸ்சிக்காக  சமூகமளித்ததுதான் மிச்சம். ஒரு வகையில்  இது கொழும்பு அரசுக்கு ஒத்துழைப்பு முகத்தையும், தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஒத்துழையாமையும் காட்டிய வழக்கமான தமிழ்த்தேசிய அரசியல் வரலாறு.  இது   மீண்டும் ஒருமுறை சுமந்திரனால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புறமுதுகு காட்டும் அரசியல் கட்சி காழ்ப்புணர்ச்சி ஒன்றும் புதிதல்ல.

இது ஒரு மட்டக்களப்பு பிரதேச  நடுநிலை (?) இணைய ஊடகச்செய்தி:

– பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தது, ஆசிரியர்கள் வருகைதந்தனர், மாணவர் வருகை 75வீதம்.

– அரச, தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெற்றன.

-சந்தை மூடப்பட்டது.

– வர்த்தக நிலையங்கள், வங்கிக் கிளைகள் இயங்கின. காலதாமதமாக திறக்கப்பட்டதுடன், வாடிக்கையாளர் வரவும் குறைவாக இருந்தது.

– மாவட்ட செயலகம் இயங்கியது.

இதுதான் இன்றைய ஹர்த்தால்களின்பொதுவான நிலை என்றால், இது தேவைதானா?  இந்த பெறுபேறு சர்வதேசத்திற்கு சொன்ன செய்தி என்ன? இலங்கை அரச இயந்திரத்திற்கு ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இலங்கையைப் பொறுத்தமட்டில் 1953  ஆகஸ்ட் 12ம்திகதிய “வர்ஜனய” (VARJANAYA) ஹர்த்தால் குறிப்பிடத்தக்கது. ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தில் டட்லி சேனநாயக்கா பதவியை இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது. லங்கா சமஜமாஜக் கட்சியும், இடதுசாரிகட்சிகளும் இணைந்து மேற்கொண்ட இந்த ஹர்த்தால் சாதி,சமய, இனங்களை கடந்தது. கொரிய யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தம், கடன் சுமை, விலைவாசி உயர்வு, மக்களுக்கான மானியக்குறைப்பு என்பனவற்றிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு அரசாங்க இயந்திரத்தைப் ஸ்த்தம்பிக்க செய்த போராட்டம். இதனை கொல்வின் ஆர்.டி. சில்வா வர்க்கப்போராட்டம் என குறிப்பிட்டிருந்தார். 

இதே போன்ற ஒரு நிலை காலிமுகத்திடல் “அரகலய” போராட்டகாலத்தில் இருந்தது. ஆனால் அதுவும் வன்முறைகளாலும், கட்சி அரசியல் போட்டியாலும் தோற்றுப்போக “கோத்தபாய கட்டையைப் பிடுங்கி  ரணில் முள்ளை அடித்த” கதையாக முடிந்தது. 

எனினும் கொரிய யுத்தகால பொருளாதார மந்தம் போன்று சாமானிய, நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஒன்றே சரவணராஜாவின் விவகாரத்தில்  நீதிக்கு ” தமிழ் இன சாயம்” பூசிய தால் ஏற்பட்ட தோல்வி. இது ஆரம்பத்தில் தென்னிலங்கையில் இருந்த ஆதரவையும் இல்லாமல் செய்துவிட்டது.

ஒரு அரச எதிர்ப்பு போராட்டத்திற்கு பொருளாதார காரணிகள் பலமாக இருப்பது போன்று எதுவும் இருப்பதில்லை. ஈழப்போராட்ட வரலாற்றில், சமூக ,பொருளாதாரப் பிரச்சினைகள் முதன்மைப்படுத்தப்படவில்லை. இன, மத வாத உணர்ச்சி அரசியலே முதன்மைப்படுத்தப்படுகிறது. நீதிபதி சரவணராசா தமிழராகவும், ஒரு தமிழனுக்கு சிங்கள அரசாங்கம் அச்சுறுத்தியது என்ற படமே தமிழ்த்தேசிய அரசியலில் காட்டப்பட்டது. ஆகக் குறைந்தது இது சமூக நீதிக்கான போராட்டமாகக் கூட காட்டப்படவில்லை. 

இந்த நிலையில் மக்களிடம் இருந்து பிரிந்து, பட்டம் பதவி, அந்தஸ்த்துடன்  தடுப்பு சுவர்கட்டி வாழ்ந்த சரவணராசாவுக்காக எப்படி அவர்கள் களத்தில் இறங்குவார்கள்.  பாரம்பரிய குடும்ப வாழ்வியலில்  “ஒழுக்கத்தை” முதன்மைப்படுத்தும் சமூகம் இவரை எப்படி நோக்கும்?  தமிழர் அரசியலில் தனிப்பட்ட வாழ்க்கையும், பொதுவாழ்க்கையும்  பிரித்து நோக்கப்படுவது இல்லை. இது வரை மக்கள் நடாத்திய போராட்டங்களில் சரவணராஜாவின் பங்களிப்பு என்ன? ஒரு சாதாரண அரசாங்க உத்தியோகத்தருக்கு அரசாங்கத்தால் இது நடந்திருந்தால் இவர்கள் ஹர்த்தால் போட்டிருப்பார்களா? இதனை மக்கள் தனிநபர் பிரச்சினையாகவே பார்த்தனரே அன்றி சமூகப்பிரச்சினையாக -இனரீதியான ஒடுக்குமுறையாக பார்க்கவில்லை இது ஹர்த்தால் மீதான குற்றம் அல்ல. கட்சி அரசியல் மீதான குற்றம் 

இருபது ஆண்டுகள் கழித்து இந்த போராட்ட முறையில் சிங்கள இடதுசாரி இளைஞர்கள் இழந்த நம்பிக்கை ஜே.வி.யின் ஆயுதக்கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. அதே இருபது ஆண்டுகள் கழித்து தமிழ் இளைஞர்கள் அகிம்சை போராட்ட வழிமுறையில் நம்பிகை இழந்து ஆயுதப்போராட்டம் பரிணமித்தது. இந்த வகையில் நோக்கும்போது ஹர்த்தால்  கடந்த கால்நூற்றாண்டுக்கு முன்னரே செயற்திறன் அற்று – காலாவதியான போராட்ட வடிவமா? என்ற கேள்வியை எழுப்புவதுடன், இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழலுக்கு அது பொருத்தமற்ற போராட்ட முறையா? என்ற கேள்வியையும் எழுப்பவேண்டிய தேவை இருக்கிறது. எப்படியாயினும்  இது ஆயுதப்போராட்டத்திற்கு சமாந்தரமாக நகர்த்தப்பட வேண்டிய மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாட்டு அரசியல். இதை ஒரு இனவிடுதலைப்போராட்டத்தில் தேடவேண்டியிருப்பது துரதிஷ்டவசமானது. 

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராகவும், ராஜபக்ச ஆட்சிக்கு எதிராகவும் ஜே.வி.பி. பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் வன்முறை கலந்தவை. விடுதலைப்புலிகளாலும், மற்றைய அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டவையும் இந்த குணாம்சத்தில் இருந்து விடுபடவில்லை. மக்களுக்கான ஒரு போராட்ட வடிவமான ஹர்த்தாலை  மக்களை அச்சுறுத்தி செய்யும் நிலைப்பாடு குறுங்கால அரசியலில் ஒரு மாயமான் மட்டுமே. அந்த மானைப் பிடித்து தருவதாக கூறி தமிழ்த்தேசிய அரசியல் மக்களை ஏமாற்றி நகர்கிறது.

மக்களின் இலக்கு மானாகவும், கட்சி அரசியலின் இலக்கு மாயமானாகவும் இருக்கும் வரை இது தவிர்க்க முடியாதது. இது போராட்ட வடிவத்தின் தவறல்ல மாறாக கட்சி அரசியலின் தவறு.